பட்டம்மாள் மறைவு

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே.
மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள்.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்எல் வசந்தகுமாரிக்கு மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார் பட்டம்மாள்.
அமெரிக்கா,ஜெர்மனி, பிரிட்டன் என உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியவர் பட்டம்மாள். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமல்ஹாஸனின் ஹேராம் படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியுள்ளார் பட்டம்மாள்.
இந்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும்,சங்கீத நாடக அகாடமி விருது,சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றவர் பட்டம்மாள். இவரது சகோதரர் டி.கே. ஜெயராமனும் மிகப்பெரிய கர்நாடக இசைக் கலைஞர்.பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவருக்கு பேத்தி ஆவார்.
பட்டம்மாள் அவர்கள் மறைந்தாலும் அவரது இசை என்றும் எம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பட்டம்மாள் பற்றிய முழுமையான பதிவை எதிர்பாருங்கள்.......
0 comments:
Post a Comment