Saturday, March 10, 2012

கிரிக்கெட்டில் தனி ரகம்

கிரிக்கெட்டுலகில் அநேகரின் மனங்களில் இடம் பிடித்த வீரர்களில் ஒருவர் குமார் சங்ககார.

கிரிக்கெட் வீரர்களில் இவர் தனி ரகம்.ஒரு வீரராக மட்டுமன்றி ஒரு மனிதாபிமானம் மிக்கவராகவும் விளங்குகிறார்.போட்டிகளில் தான் ஆட்டமிழந்ததை தனக்குள் உணர்ந்து கொண்டால் நடுவரின் முடிவை எதிர்பாராது தானாகவே ஆடுகளம் விட்டு அகல்வது இவரின் தனிச் சிறப்பு.இது ஆட்டமிழந்தும் ஆடுகளம் விட்டகலாத ஏனைய வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரராய் அறிமுகமாகி பின் விக்கெட் காப்பாளராயும் செயற்பட்டு குறுகிய காலத்தில் அணித் தலைவராகவும் மாறினார்.2009-2011வரை அணித் தலைவராக செயற்பட்டார்.இக் காலப் பகுதியில் இலங்கை அணி பல வெற்றிகளை பெற்று வந்தது.பல அழுத்தங்களுக்கு மத்தியில் அணியை சிறப்பாக வழிநடத்திய இவர்,2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

2009 -2011வரை அணித் தலைவராக செயற்பட்ட காலத்தில் 47.45 என்ற சராசரியில் 1756 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 10000 ஓட்டங்களைக் கடந்த10 ஆவது வீரராகவும் 3ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார் குமார் சங்ககார. அதேவேளை குறைவான (315) போட்டிகளில்10000 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரராகவும் பெருமை பெற்றார்.


பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளின் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான சங்ககார முதல் போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்றார்.தனது கன்னி சதத்தைப் பெற மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது 85 போட்டிகளின் பின்னரே 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக ஷார்ஜாவில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.அந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றார்.

34 வயதான சங்ககார இதுவரை 322 போட்டிகளில் விளையாடி 13 சதங்கள்,69 அரைச் சதங்கள் உட்பட 10330 ஓட்டங்களைப் பெற்றுள்ள சங்ககார,315 பிடிகளையும் 80 ஸ்டம்பிங்களையும் மேற்கொண்டு 395 வீரர்களை ஆட்டமிழப்பு செய்துள்ளார். வாழ்த்துக்கள் சங்ககார...
உங்கள் ரன் வேட்டை தொடரட்டும்..
ஆசியக் கிண்ணத் தொடரிலும் அசத்துங்கள்............

Monday, November 7, 2011

வேகத்தின் வடிவம் லீ

லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு

கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில், தலைசிறந்த வீரர்களிலொருவராக அனைவராலும் போற்றப்பபடுபவர் பிரட் லீ.சர்ச்சைகளில் சிக்காமல் வேகத்தால் சாதித்து அவுஸ்ரேலிய அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர்.அவுஸ்ரேலிய அணியில் கடந்த 12 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் பிரட் லீ, பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவர் என்றே சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக காலம் விளையாடவும்,உடல் நலனைக் கருத்திற் கொண்டும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2008 இல் ஓய்வு பெற்றார் அவுஸ்ரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ.கடைசியாக கடந்த 2008 இல்,மெல்ர்பேனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியே இவரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

1999 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியாவுக்கெதிராக அறிமுக வீரராகக் களமிறங்கிய பிரட் லீ, மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில், முதல் டெஸ்டிலே முதல் இனிங்சில் 47 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் போட்டியிலே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார். இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஆடுகளத்திலிருந்து விரைவாக வெளியேற்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டார்


டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்ரேலிய வீரர்கள் வரிசையில்,ஷேன் வோர்ன் (708), க்ளென் மெக்ராத் (563),டெனிஸ் லில்லி (355) ஆகியோரைத் தொடர்ந்து நான்காமிடத்திலுள்ளார்.
அதிவேகமாக (160.8 கி.மீ./மணி) பந்துவீசிய முதல் அவுஸ்ரேலிய வீரர், இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.

டிசம்பர் 2008 இல் தென்னாபிரிக்காவுடனான தொடரில் காலில் காயம் ஏற்பட்ட பிரட் லீ அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.மீண்டும் ஆஷஸ் தொடருக்கு முன் கடும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூர் அணிக்கெதிரான போட்டியில் 158 கி.மீ வேகத்தில் பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரட் லீ, மீண்டும் காயமடைந்தார். இதனால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பையிழந்தார்.அதன் பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பல தொடர்களில் பங்குபற்ற முடியாமல் போனது.


அவுஸ்ரேலிய அணிக்கு, நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை மிகப் பெரும் கௌரவமாக கருதும் பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட்போட்டிகளில் 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள்.ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, ஒரு தடவையேனும் ஒரு போட்டியில்கூட 10 விக்கெட்டுகளை கைப்பற்றவில்லையென்பதும் ஆச்சரியமே.பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 1451 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில்,தென்னாபிரிக்க அணிக்கெதிராக 14 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 18 போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 12 போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 8 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான்,பங்களாதேஷ், சிம்பாப்வேஅணிகளுக்கெதிராக பிரட் லீயால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அவுஸ்ரேலிய மண்ணில் 41 போட்டிகளில் 186 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 35 போட்டிகளில் 124 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
லீ விளையாடியுள்ள போட்டிகளின் அடிப்படையில் 20 இனிங்சில் விக்கெட் எதனையும் கைப்பற்ற முடியவில்லை.அத்துடன் 2 தடவைகள் டெஸ்ட் போட்டியின் 2 இனிங்சிலும் விக்கெட் எதனையும் வீழ்த்தவும் முடியவில்லை.2002 இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஷார்ஜா மைதானத்திலும் 2008 இல் தென்னாபிரிக்க அணிக்கெதிராக மெல்பேர்ன் மைதானத்திலும் ஒரு விக்கெட்டைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.இது லீயின் கிரிக்கெட் வாழ்வில் கொஞ்சம் கசப்பானதாகவே இருந்திருக்கும்.

26 டிசம்பர் 1999 இல் ஆரம்பித்த டெஸ்ட் வாழ்வு அதே திகதி அதே மாதத்தில் (26 டிசம்பர்) 2009 அதே மைதானத்தில் (மெல்பேர்ன்) நிறைவுக்கு வந்திருக்கிறது.என்ன ஒரு அதிசயம்.


205 ஒருநாள்போட்டிகளில் 357 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள லீயின், சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள். 5 விக்கெட்டுகளை 9 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, துடுப்பாட்டத்தில் 2 அரைச் சதங்கள் அடங்கலாக 957 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிரட் லீ, கிரிக்கெட் வீரனாக மட்டுமன்றி ஒரு இசைக்கலைஞனாகவும் பரிணமிக்கிறார். கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று வைதுள்ளாரோ அதேபோல் கிட்டார் மீது காதல் கொண்ட இசை ரசிகன் லீ.

வேகத்தின் நாயகனின் விக்கெட் வேட்டை இன்னும் தொடரும்.....

வாழ்த்துக்கள் லீ ...............

Tuesday, September 20, 2011

இந்திய அணியின் சுவர் ட்ராவிட்


இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படுபம் ராகுல் ட்ராவிட் கடந்த 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி,கடந்த 16 திகதி இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.
ஆரம்ப காலங்களில் ட்ராவிட்டின் ஆட்டம் ரசிகர்களை வெறுப்படைய வைத்தது.அதிரடி என்பதையே அவரிடம் பார்க்க முடியவில்லை. 3,4,3,11,13 இவை தான் முதல் 5 ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த ஓட்டங்கள்.

1998 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மட்டுமே பெற்றார்.மந்தமான துடுப்பாட்ட வீரரென்ற கூறப்பட்டு அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டார்.ஆனாலும் ட்ராவிட் மனம் தளராமல் தனது துடுப்பாட்டத் திறன் மேம்பட போராடினார்.உலகிற்கு சிறந்த நேர்த்தியான துடுப்பாட்ட வீரரென்பதை நிரூபித்தார்.


1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் வாழ்க்கையில் 210 போட்டிகளில் பங்கேற்று 10 சதங்கள்,53அரைச்சதங்கள் அடங்கலாக 7134 ஓட்டங்களைக் குவித்தார்.1999 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில் 461 ஓட்டங்களை குவித்தார்.துடுப்பாட்டத் திறன் மேம்பட அவருக்கு அணித் தலைமைப் பொறுப்பு தேடி வந்தது.79 ஒரு நாள் போட்டிகளில் தலைவராக பணியாற்றியுள்ளார். இதில் இந்திய அணி 42 வெற்றிகளையும் 33 தோல்விகளையும் பெற்றது.4 போட்டிகளில் முடிவுகளில்லை.

இதுவரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் 83 அரைச்சதங்கள் அடங்கலாக 10,889 ஓட்டங்களைப் பெற்றுளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏழாமிடத்திலுள்ள ட்ராவிட், பத்தாயிரம் ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் எட்டாமிடத்திலுள்ளார்


முதன்முதலில் முகமட் அசாருதினின் தலைமையின் கீழ் விளையாடிய இவர்,அதன்பின் அஜய் ஜடேஜா,சச்சின்,கங்குலி,டோனி ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார்.2005 இல் ஐ.சி.சி உலக அணியில் மூன்று போட்டிகளில் தென்னாபிரிக்க வீரர் பொலக்கின் கீழ் விளையாடியுள்ளார் ட்ராவிட்.

ஆறு அணிகளுக்கு எதிராக தலா ஆயிரம் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் (58 போட்டிகள் 1899 ஓட்டங்கள்).இலங்கை (46 போட்டிகள் 1662 ஓட்டங்ககள்),மேற்கிந்தியத் தீவுகள் (40 போட்டிகள் 1348 ஓட்டங்கள்),தென்னாபிரிக்கா (36 போட்டிகள் 1309 ஓட்டங்கள்),நியூசிலாந்து (31 போட்டிகள் 1032 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கு (30 போட்டிகள் 1082 ஓட்டங்கள்)

இதுவரை 73 போட்டிகளில் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு 71 பிடிகளைப் பிடித்துள்ள அதேவேளை,14 ஸ்டம்பிங் உட்பட 84 ஆட்டமிழப்புக்களை மேற்கொன்டுள்ளார்.

ட்ராவிட்,இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி சிறந்த களத்தடுப்பாளராகவும் சாதித்ததுள்ளார்.இதுவரை 196 பிடிகளைப் பிடித்துள்ளார்.இதில் விக்கெட் காப்பாளராக 71 பிடிகளையும் களத்தடுப்பாளராக 125 பிடிகளையும் பிடித்துள்ளார்.

துடுப்பாட்டம்,களத்தடுப்பில் அசத்திய ட்ராவிட் சுழல் பந்துவீச்சிலும் நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.1999ஆம் ஆண்டு,ஜெய்ப்பூரில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் தனது முதலாவது விக்கெட்டை பதிவு செய்தார்.அதன்பின்,தென்னாபிரிக்காவுக்கு எதிராக (2000), மூன்று விக்கெட்டைக் கைப்பற்றினார்.கொச்சியில் நடந்த போட்டியில் 43 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.இதுவே அவரது சிறந்த பந்துவீசுப் பெறுதி.


1999 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிராக ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் ட்ராவிட் (153) சச்சின் (186) சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்காக 331 ஓட்டங்களை சேர்த்தனர்.இதன்மூலம் ஒருநாள் அரங்கில்,எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிக ஓட்டங்களை சேர்த்த ஜோடி வரிசையில் சச்சின்-ட்ராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது.

1999 ஆம் ஆண்டு இலங்கைக்கெதிராக நடந்த உலக கிண்ண லீக் போட்டியில்,கங்குலியுடன் (183) சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்காக 318 ஓட்டங்களை சேர்த்தார் ட்ராவிட் (145).

1997இல் சென்னையில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கெதிராக தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ட்ராவிட்,கடைசியாக 2006 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் சதமடித்தார்.இதுவரை 12 சதங்களைப் பெற்றுள்ள ட்ராவிட் 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிராக ஹைதராபாத்தில் 153 ஓட்டங்களைப் பெற்று தனது அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2003இல், நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் 22 பந்தில் அரைச்சதம் அடித்த ட்ராவிட்,அதிவேக அரைச்சதமடித்த இந்திய வீரர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை கபில்தேவ், ஷேவாக் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 22 பந்தில் அரைச்சதம் அடித்துள்ளனர்.

இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்த ட்ராவிட் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்று இனி வரும் காலங்களில் டெஸ்டில் மட்டுமே பங்கேற்கவுள்ள நிலையில் ட்ராவிட்டுக்கு வாழ்த்துகள்....

Monday, April 4, 2011

உலகக் கிண்ணம் இந்தியா வசம் பத்தாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரு ஆசிய அணிகளான இலங்கை,இந்திய அணிகள் மோதிக் கொண்டன.இது உலகக் கிண்ண வரலாற்றில் முதன் முறையாகவும் அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கையணிஆரம்பத்தில் மந்தமாகவே ஓட்டங்களைப் பெற்றாலும் பின் வரிசையில் மஹேல,குலசேகர,திசர பெரேரா ஆகியோரின் துடுப்பாட்டத்தின் உதவியால் ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றது. (மஹேல-103*) 275 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா களமிறங்கியது. இந்தியாவுக்கு ஆரம்பத்திலே மாலிங்க அதிர்ச்சியைக் கொடுத்தார்.சச்சின்,சேவாக் விரைவில் வெளியேறினர்.கம்பீர்,கோலி இணைப்பாட்டம் ,கம்பீர் டோனி இணைப்பாட்டம் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்களைப் பெற்று இந்தியா 6 விக்கெட்டால் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலக சாம்பியனானது.(கம்பீர் 97,டோனி 91*) 28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா மீண்டும் உலக சாம்பியனானது.மீண்டும் இரண்டாவது தடவையாக இலங்கை இரண்டாமிடத்தைப் பெற்றது.


ஆட்ட நாயகன்: டோனி

தொடர் நாயகன்: யுவ்ராஜ் சிங். இந்த இறுதிப் போட்டியுடன் முரளியும் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.

சாதனை நாயகனான முரளி பற்றிய சிறப்புப் பதிவு விரைவில்.

Sunday, March 27, 2011

ஆசியாவிற்குள் உலகக் கிண்ணம் உலகக் கிண்ணக் காலிறுதிப் போட்டிகளின் நிறைவில் முதன் முறையாக மூன்று ஆசிய அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.இம்முறை அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று முதன் முறையாக இரு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுமென எதிர்பார்க்கப்படுகிறது.






4ஆவது காலிறுதியில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதின.ஆரம்பம் முதலே தடுமாறிய இங்கிலாந்து, ஜொனதன் ரொட்டின் (86) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டிழப்புக்கு 229 ஓட்டங்களைப் பெற்றது.230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அதிக ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற சாதனையைப் படைத்தது இலங்கை.

இலங்கையணி,நான்காவது முறையாக (1996,2003,2007,2011) அரையிறுதிக்கு முன்னேறியது.கடந்த 1996 இல் சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை,2003 இல் அரையிறுதி வரை முன்னேறியது.2007 இல் இறுதி வரை முன்னேறிய இலங்கை, 1975,1979, 1983, 1987, 1992, 1999 ஆகிய தொடர்களில் முதற் சுற்றோடு வெளியேறியது.
3ஆவது காலிறுதியில் நியூசிலாந்து தென்னாபிரிக்க அணிகள் மோதின.நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டிழப்புக்கு 221 ஓட்டங்களைப் பெற்றது. ஜெசி ரைடர் 83 ஓட்டங்கள். 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா நியூசிலாந்தின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 43.2 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையுமிழந்து, 49 ஓட்டங்களால் தோல்வியடைந்து உலகக் கிண்ண தொடரில் இருந்து வெளியேறியது.

கலிஸ் கூடுதலாக 47 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேக்கம் ஓரம் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நியூசிலாந்து,ஆறாவது முறையாக உலகக் கிண்ண (1975,1979, 1992, 1999, 2007, 2011) அரையிறுதிக்கு முன்னேறியது.

உலகக் கிண்ண 2ஆவது காலிறுதியில் நடப்பு சாம்பியனான அவுஸ்ரேலிய இந்திய அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டிழப்புக்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.பொறுப்புடன் ஆடிய பொன்ரிங் 104 ஓட்டங்களைப் பெற்று ஒரு நாள் போட்டிகளில் தனது 30 ஆவது சதத்தையும் உலகக் கிண்ணப் போட்டிகளில் 5ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தார்.இதன்மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார்.


261 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா ஓவர்களில் ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.பெரும் ஏமாற்றத்துடன் காலிறுதியுடன் வெளியேறியது அவுஸ்ரேலியா.

Wednesday, March 23, 2011

பணிந்தது பாகிஸ்தானிடம் மேற்கிந்தியத் தீவுகள்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் முதல் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 112 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்திய பாகிஸ்தான்,விக்கெட் இழப்பின்றி 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியானது.

மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் ஆரம்பத்திலிருந்தே பாகிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் ஆடுகளம் விட்டகன்றனர்.சந்தர்போல் மட்டும் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் கம்ரன் அக்மல்,மொகமட் ஹஃபீஸ் ஆகியோரின் துடுப்பாட்ட உதவியுடன் விக்கெட் இழப்பின்றி 20.5 ஓவர்களில் 113 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.
மொகமட் ஹஃபீஸ் 61 ஓட்டங்களையும் கம்ரன் அக்மல் 47 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமலிருந்தனர். ஹஃபீஸ் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் ஏழாவது முறையாக (1979,1983,1987, 1992,1996,1999,2011) காலிறுதிக்கு முன்னேறியது.

1979,1983,1987 ஆம் ஆண்டுகளில் அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான்,1992 இல் முதன்முதலில் உலகக் கிண்ணத்தை வென்றது.1999 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியது.இம்முறை பாகிஸ்தான் இறுதிவரை முன்னேறுமா?
மேற்கிந்தியத் தீவுகள் காலிறுதியுடன் வெளியேறியது.சமியின் அனுபவற்ற அணி தலைமைப் பொறுப்பும் தோல்விக்கு முக்கிய காரணம்.எதிர்காலத்தில் அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்பது இப்போது உறுதி.

Tuesday, March 22, 2011

கனவு மெய்ப்படுமா?

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாய் நடந்து வரும் நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவில் A குழுவிலிருந்து இலங்கை,நியூசிலாந்து,அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலகுவாக காலிறுதிக்குள் முன்னேறின.B குழுவிலிருந்து தென்னாபிரிக்கா,இந்தியா,இங்கிலாந்து,மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் முன்னேறின.

கென்யா,நெதர்லாந்து அணிகள் இம்முறை ஒரு போட்டிகளிலும் வெற்றி பெற முடியாமல் ஏமாற்றத்துடன் வெளியேறின. சிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் 2 வெற்றிகளை பெற்றுக் கொண்டன.
பங்களாதேஷ் 3 வெற்றிகளை பெற்றுக் கொண்டது.கனடா 1 போட்டியில் வெற்றி பெற்றது.


காலிறுதியில் மோதும் அணிகள்
பாகிஸ்தான் எதிர் மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா எதிர் அவுஸ்ரேலியா
நியூசிலாந்து எதிர் தென்னாபிரிக்கா
இலங்கை எதிர் இங்கிலாந்து
இம்முறை இந்தியா,பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த பிரிவில் இடம்பெற்றதால்,இரு அணிகளுக்குமிடையிலான மோதல் இல்லாமல் போனது.காலிறுதியிலும் இரு அணிகளும் மோதும் நிலையும் ஏற்படவில்லை.சில சமயம் அரையிறுதிப் போட்டியில் இரு அணிகளும் சந்திக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இம்முறை மூன்று ஆசிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியிருப்பது ஆசிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.
எட்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப் போகிறது.