Pages

Monday, August 31, 2009

அமெரிக்காவில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
டென்னிஸ் தொடர்களில் அவுஸ்ரேலிய, பிரெஞ்ச்,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடர்கள் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்தைப் பெற்றவை. இதில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் உள்ள மெடோஸ் பார்க்கில் இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆண்கள் பிரிவு
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர்,5 முறை(2004-2008) பட்டம் வென்றுள்ளார். இவர் 6ஆவது முறையாக பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகமுள்ளது. இதைவிட,16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்புமுண்டு.அண்மையில் "நம்பர்-2' இடத்தை பிடித்த இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பெடரருக்கு கடும் போட்டியைக் கொடுக்கலாம். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பெடரரிடம் வீழ்ந்த முர்ரே, இம்முறை பெடரரை வீழ்த்தக் காத்திருக்கிறார்.

காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் முதன் முறையாக அமெரிக்க பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.இவர்களைவிட செர்பியாவின் ஜோகோவிக்,அமெரிக்காவின் அன்டி ரொடிக்,ஆர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்டோ,ரஷ்யாவின் டேவிடென்கோ, பிரான்ஸ் வீரர் வில்ஃப்ரெட்சொங்கா ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களத்தில்.


பெண்கள் பிரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,12 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங் சாதனையை சமன் செய்வார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாமல் "நம்பர்-1' இடத்திலுள்ள ரஷ்யாவின் டினாரா சபினா, இம்முறை பட்டம் வெல்ல சிறப்பாகப் போராடுவார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,செர்பியாவின் ஜான்கோவிக், இவானோவிக்,ரஷ்யாவின் மரியா ஷரபோவா,குஸ்னட்சோவா,எலீனா டெமன்டிவா,பிரான்சின் அமலி மொரிஸ்மோ, பெலாரசின் விக்டோரியா அஸரென்கா போன்றோர் ஏனைய வீராங்கனைகளுக்குக் கடும் சவாலைக் கொடுப்பார்கள்.


கடந்த 2 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகுக்குத் திரும்பியிருக்கும்,2005ஆம் ஆண்டு சாம்பியன் பெல்ஜியத்தின் கிம்கிளைஸ்டர்ஸ், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா பெரிதாக சாதிக்க வாய்ப்புக்கள் குறைவு.இரண்டாம் சுற்று வரை முன்னேறலாம்.


கடந்த 7 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சுற்றில் நுழையும் முதல் இந்தியர் என்ற பெருமையை சோம்தேவ் பெறுகிறார்.இதற்கு முதல் 2002ஆம் ஆண்டு இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடியிருந்தார்.உலகின் முன்னணி வீர,வீராங்கனைகள் இம்முறை இப்போட்டியில் பங்கேற்றுள்ளதால் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.


அதிர்ச்சிகளும் உண்டு.......ஆச்சரியங்களுமுண்டு.....

Sunday, August 30, 2009

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று.....

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று......

அள்ளிக் கொடுத்த வள்ளலாக நகைச்சுவைப் பேராசானாக சிந்தனைத் தென்றலாக தமிழ் திரையுலகில் மகுடம் சூடி வாழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்.நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிரிப்பு,சிந்தனை இரண்டின் சங்கமமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவரிவர்.

அப்படிப்பட்ட உன்னத கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று...... அவருக்காக இந்தப் பதிவு. கலைவாணர் பற்றிய சில தெரிந்த தவல்களோடு.......
நாகர்கோவில் சுடலைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட கிருஷ்ணன் (என்.எஸ்.கே) கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி என்ற இடத்தில். சுடலையாண்டி பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக1908 நவ.29 இல் பிறந்தார்.

17 வயதில் நாடகக் கம்பனியில் நடிகராக இணைந்து கொண்டார்.நாடகங்களில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே.நாடகங்களில் கலைவாணர் படைத்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்.

என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் படம், "சதிலீலாவதி'. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமல்லாது பல பிரபலங்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்,எம்.ஜி.சக்கரபாணி, எம்.கே.ராதா,டி.எஸ்.பாலையா, கே.வி.தங்கவேலு,எம்.வி.மணி,ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.என்றாலும், முதலில் வெளியான படம், டி.கே.எஸ்.சகோதரர்களின், "மேனகா' படம் தான்.

நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப்பறந்த கலைவாணர் நடித்த படங்கள், சமூக கருத்துக்களை பரப்பின. சிந்தனையைத் தூண்டின.


தனது திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை தானே எழுதி இயக்கிய சந்தர்ப்பங்கள் பல.என்.எஸ்.கிருஸ்ண நடித்த அநேக படங்கள் வெற்றி பெற்றன. வசந்தசேனா,திருநீலகண்டர், சதிலீலாவதி,பூலோக ரம்பை,ரம்பையின் காதல், தாஸி அபரஞ்சி, ஹரிதாஸ்,ஆர்யமாலா,பவளக்கொடி,வனசுந்தரி,யார் பையன்,மதுரை வீரன்,நல்லதம்பி போன்றன சில.தமிழில் மட்டுமன்றி கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. என்.எஸ்.கிருஸ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த காலகட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமாகக் கனிந்தது. டி.ஆர்.ஏ.மதுரத்தை இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார்.தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம்.தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்புப் பெறாததை உணர்ந்து மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.பின்னர் மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

1944 ஆம் ஆண்டு நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சிறைவாசமும் அனுபவித்ததார்.


சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். கூத்தாடிகள்' என்ற வார்த்தையை ஒழித்து, "கலைஞர்கள்' என்ற சொல்லை உருவாக்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்ட சொத்துக்களை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். தனது இறுதிக் காலத்தில் வறுமையில் இவர் வாடியபோது இவருக்குக் கை கொடுக்க யாருமில்லை.
1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

கலைவாணர் மறைந்தாலும் அவரது சிரிப்பு இன்னும் எம் மனதிற்குள் நிழலாடுகிறது

Friday, August 28, 2009

17 + முர

17 + முரளி


சுழல் நாயகன் முரளி இன்றுதான் சர்வதேச ரீதியில் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள்.அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முரளி தனது சுழலின் தன்மையை கிரிக்கெட் உலகிற்கு உணர்த்தினார்.அறிமுகப்போடியில் முதல் இனிங்சில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அந்த விக்கெட் அவுஸ்ரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான கிரேக் மக்டெர்மெட்.


முரளி சுழல் பந்துவீச்சில் குறுகிய காலத்தில் பல உலக சாதனைகளைப் படைப்பாரென்று யாருமே நினைத்திருக்கவில்லை.ஏன் முரளி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் முரளி அறிமுகமாகி இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி.

முரளியின் கிரிக்கெட் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள் ஏராளம்.கிரிக்கெட் வீரர்களால்,நடுவர்களால் என பல்வேறு சந்தர்ப்பங்களில் முரளி மீது,அவரது பந்து வீச்சு மீது ஏராளமான சர்ச்சைகள்.முரளியின் அசுர வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய மேலை நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் தான் முரளி பந்தை வீசுவதில்லை எறிகிறார் என்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.இருந்தும் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சாது தனது மாயாஜால சுழலினால் இவற்றுக்கு பாடம் கற்பித்தார்.


கிரிக்கெட் உலகில் முரளி பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன்.

* டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (780)
*ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (66)
*ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (22)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓட்டமற்ற ஓவர்களை அதிகம் வீசியமை (1770)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (161)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியமை (3 மைதானங்கள்)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வீரர்களை நேரடியாக bowld முறையில் வீழ்த்தியமை (162 )
*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் களத் தடுப்பாளர்களிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த வீரர்கள் (376)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரால் ஸ்ரம்பிங் முறையில் ஆட்டமிழந்த வீரர்கள் (46)

*ஒருநாள் சரவதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (511)


முரளியின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.

கிரிக்கெட் உலகில் முரளி படைத்த சாதனைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் நானே நீண்ட ஒரு பதிவை தர வேண்டும்.நேரமோ இப்போது என்னோடு வில்லத்தனம் புரிவதால் இப்போதைக்கு இவ்வளவும்தான்.மிக விரைவில் முரளியைப் பற்றிய சாதனைப் பதிவை எதிர்பாருங்கள்.

சாதனை நாயகனுக்கு இனிய வாழ்த்துக்கள்.இன்னும் பல சாதனைகள் தொடரட்டும்.

Thursday, August 27, 2009

பிதாமகனுக்காக....


கிரிக்கெட்டுக்காக பல பதிவுகளைத் தந்த நான்,இன்று ஒரு பதிவு தராவிட்டால் நீங்கள் என்மீது கொஞ்சம் கோபப்படுவீர்கள். ஏன் கோபப்படவேண்டும் என ஒரு சிலர் நினைக்கலாம்....

இன்று கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்,கிரிக்கெட்டின் பிதாமகன் என அழைக்கப்படும் சார் டான் பிராட்மேன் பிறந்தநாள். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரரிவர்.கிரிக்கெட்டில் என்றென்றும் முதல்வன்.


தனது அறிமுகப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஐந்தாவது வீரராக களமிறங்கி முதல் இனிங்ஸில் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.இரண்டாவது இனிங்ஸில் ஒரு ஓட்டம் மட்டுமே.


தனது 2 ஆவது போட்டியில் கவனத்துடன் விளையாடி,முதல் இனிங்ஸில் 79 ஓட்டங்களைக் குவித்தார்.2 வது இனிங்ஸில் 112 ஓட்டங்களைக் குவித்து,இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை வீரரானார்.


தனது 6 ஆவது போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு உரிமையுள்ள வீரர் பிராட்மேன்.1928 முதல்1948 வரையான காலப்பகுதியில் 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6996 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிராட்மேன் கிரிக்கெட்டின் பிதாமகன்.........

Wednesday, August 26, 2009

300

நியூசிலாந்து அணித் தலைவரும் சுழற் பந்துவீச்சாளருமான டேனியல் வெட்டோரி, இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் சங்ககாரவை ஆட்டமிழக்க செய்ததன் மூலம்,டெஸ்ட் அரங்கில் தனது 300ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


நியூசிலாந்து சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் முன்னாள் வீரர் சேர் ரிச்சர்ட் ஹாட்லி.இவர் 431 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் கிடைத்தது டேனியல் வெட்டோரிக்கு.இதற்கு முதல் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் டெரிக் அண்டர்வூட் 86 டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சம். வெட்டோரி தனது 94ஆவது டெஸ்டில் 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டதிலும் இவர் 'கிங்' தான் டெஸ்ட் போட்டிகளில்(3 சதங்கள்,20அரைச்சதங்கள்)உட்பட 3,329 ஓடங்களையும் குவித்துள்ளார்.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள்,3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 8ஆவது சகலதுறை வீரர் என்ற பெருமையைப் பெற்றார் வெட்டோரி.
இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ், நியூஸிலாந்தின் சேர் ரிச்சர்ட் ஹாட்லி, அவுஸ்ரேலியாவின் ஷேன் வார்ன், இங்கிலாந்தின் இயன் பொத்தம், தென்னாபிரிக்காவின் பொலாக், பாகிஸ்தானின் இம்ரான்கான், இலங்கையின் சமிந்த வாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 8ஆவது வீரராக தற்போது இணைந்துள்ளார் வெட்டோரி.


தனது 18ஆவது வயதில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான இளவயது வீரரான இவர்,1997 இல் இங்கிலாந்து அணிக்கெதிரான தனது அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார்.
2000 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிராக ஒக்லன்டில் நடைபெற்ற போட்டியில் 87 ஓட்டங்களைக் கொடுத்து 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.

சிறந்த சகலதுறை வீரராக வலம் வரும் வெட்டோரி இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் அதிகம்.

Monday, August 24, 2009

மகுடமிழந்த அவுஸ்‌ரேலியா


இங்கிலாந்து - அவுஸ்‌ரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையே வரலாற்றுப் புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றமை நீங்கள் அறிந்ததே. 2 ஆண்டுகளுக்கொருமுறை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

65ஆவது 'ஆஷஸ்' டெஸ்ட் தொடர் கடந்த மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமானது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன. 2 போட்டிகள் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவடைந்திருந்தன.
இதனால் தொடர் சமநிலை.ஆஷஸ் கோப்பையை வெல்வது யார் என்பதை தீர்மாணிக்கும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் திகதி ஆரம்பமானது. இங்கிலாந்து அணியின் சகல துறை வீரரான பிளின்டாப் விளையாடும் கடைசிப் போட்டி என்பதால் இன்னும் விறுவிறுப்பு அதிகமானது.


இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ஓட்டங்களும் அவுஸ்‌ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 373 ஓடங்களையெடுத்து தமது ஆட்டத்தை இடைநிறுத்தி 546 ஓட்டங்களை அவுஸ்‌ரேலிய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.


கடினமான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்‌ரேலிய அணி 348 ஓட்டங்களுக்குள் சகல ‌வி‌க்கெ‌ட்டுகளையுமிழந்தது.
மைக் ஹஸி மட்டுமே சிறப்பாக துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து இறுதியாக ஆட்டமிழந்தார்.121 ஓட்டங்களைப் பெற்றார் ஹஸி. 197 ஓட்டங்களால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற அடிப்படையில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.


முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதைப் பெற, இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ்,அவுஸ்‌ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் ஆகியோர் தொடர் நாயகன் விருதைப் பெற்றனர்.

இந்த வெற்றிக் களிப்புடன் இங்கிலாந்தின் பிளின்டாப் டெஸ்ட் கிரிக்கெட்டும் விடை கொடுத்தார்.


2005ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது மீண்டுமொரு டெஸ்ட் தொடரை பாண்டிங் தலைமையில் அவுஸ்‌ரேலிய அணி இழந்துள்ளது. இதற்கு முன் முர்டாக் தலைமையில் இரண்டு ஆஷஸ் தொடர்களை இங்கிலாந்தில்அவுஸ்‌ரேலியா இழந்தது 1890ஆம் ஆண்டு.இந்த தோல்வியின் மூலம் அவுஸ்‌ரேலிய அணி முதன்முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்து 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல் முதலிடத்திலிருந்த அவுஸ்‌ரேலியா முதன்முறையாக இப்படி வீழ்ச்சியடைந்துள்ளது.
வார்த்தைகளால் ஜாலம் காட்டும் அவுஸ்‌ரேலிய வீரர்கள் துடுப்பினால் ஜாலம் காட்டத் தவறிவிட்டனர்.
எதனை பேரின் தலைகள் உருளப்போகிறதோ....

Sunday, August 23, 2009

ஆரம்பமே அசத்தல்


லங்கை வலைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது.தமது மொழி நடையால் பலரது மனங்களைத் தொட்ட பதிவர்கள் பலரின் தெரியாமலிருந்த முகங்களைப் பலரும் தெரிந்து கொண்டனர்.

பல நிகழ்ச்சிகள் பல இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறுவது அரிது.ஆனால் இந்த ஒன்றுகூடல் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பமானது.ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஒரு சபாஷ்.

சிறுவன் முதல் பெரியோர் வரை பதிவிடும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். புல்லட் அறிமுகவுரை நிகழ்த்த,அதன் பின் சுபானு, ஆதிரை என உரைகள் தொடர்ந்தன.
Blogger ஆரம்பித்து 10 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி இலங்கைப் பதிவர்கள் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியமையும் சிறப்பானது.முதன் முதலில் இப்படி
கொண்டாடிய பெருமையும் நமது இலங்கைப் பதிவர்களையே சேரும்.

இந்த ஒனறுகூடலில் சில மூத்த எழுத்தாளர்களும்(அந்தனி ஜீவா,கவிஞர் மேமன் கவி) கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.எழில்வேந்தன் கலந்து கொண்டார்.


ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அனைவரும் தமது அறிமுகத்தை தாமே மிகவும் விரைவாகவும் சிறப்பாகவும் கொடுத்தனர்.


எஸ்.எழில்வேந்தனின் சிறப்புரை,மருதமூரான்,சேரன்கிரிஷ்,லோஷன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து சூடான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன.

புனைபெயர்களில் எழுதுவது,இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது,இந்திய மொழி நடையைக் கையாள்வது, தமிழில் தட்டச்சு செய்யும் கீ-போட்வகை,Unicode முறை,எழுத்துப் பிழைகள்,யாழ்தேவி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திரட்டி பற்றி காரசாரமான கருத்துக்கள் ஒன்றுகூடலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.


புல்லட்டின் குறும்புத்தனமான பேச்சு எல்லோரையும் துளைத்தெடுத்தது.4 மணித்தியாலங்களை எடுத்துக்கொண்டது இந்த ஒன்றுகூடல்.
'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் இந்த ஒன்றுகூடல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.இதை வெளிநாடுகளில் இருந்து பார்த்த பல பதிவர்கள் தமது வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

பதிவர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.சில ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.


இறுதியாக வந்தியத்தேவனின் நன்றியுரையோடு ஒன்றுகூடல் இனிதாய் நிறைவேறியது.

சொன்னதைப்போல சிற்றுண்டிகளும் நெஸ்கபேயும் கொடுத்தனர்.

இவைதான் என் நினைவுக்குள் நிழலாடுபவை. ஏதாவது குறிப்பிடாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே.


இலங்கைப் பதிவர் ஒன்றுகூடலில் நானும் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இலங்கைப் பதிவர்களின் ஆரம்பமே அசத்தல்தான்.இலங்கைப் பதிவர்களின் சாதனைப் பயணம் தொடரும்.........

Saturday, August 22, 2009

முதல் சந்திப்பு


இலங்கையில் உள்ள வலைப்பதிவாளர்களை சந்திக்கும் இந்த நாள்(நாளை) முக்கியமான ஒரு நாளாகும்.முகம் தெரியாத பல வலைப்பதிவாளர்கள் நாளை சந்திக்கப் போகிறோம் எனும்போது ஒருவித மகிழ்ச்சி.


தமது திறமையான மொழி நடையால் எம் மனதை வென்ற வலைப்பதிவாளர்கள் பலர். இப்படியான வலைப்பதிவாளர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்த அனைவருக்கும் முதலில் நன்றிகள்.


அவசர உலகில் நேரம் கிடைப்பது அரிது.சனி,ஞாயிறும் வேலை.இருந்தாலும் கட்டாயம் வரவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாகவே சிறகடிக்கிறது.


நாளை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேரில் சந்திப்போம்.


இலங்கைப் பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி.இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,

இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்)கொழும்பு 06.

Friday, August 21, 2009

மின்னல் வேக சாதனை நாயகன் உதித்த நாள்

உலகின் அதிவேக மனிதன் என்று வர்ணிக்கப்படும் ஜமைக்காவைச் சேர்ந்த 100மீ,200மீ தடகள உலக சாதனை மன்னன் உசைன் போல்ட்டுக்கு இன்று 23 ஆவது பிறந்தநாள்.


2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 வினாடிகளில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலக சாதனை புரிந்தார்.அத்துடன் 200 மீ ஓட்டம் (19.30 வினாடி) போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தார்.தன் நாட்டு சக வீரர்களுடன் இணைந்து 4 x 100 மீ தொடரோட்டத்தில் 37.10 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்தார். இவை அனைத்தும் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நிகழ்த்திய சாதனைகள்.


பெர்லினில் நடைபெறும் உலக தடகள அமைப்பின் உலக சம்பியன்ஷிப் 200மீ ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் ஓடி முடித்து மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.ஏற்கனவே பெர்லினில் 100மீ. சம்பியன் பட்டத்தை உலக சாதனையுடன் வென்றார் உசைன்போல்ட்.

சரியாக ஒரு ஆண்டிற்கு முன் உசைன் போல்ட் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 200மீ. ஓட்டத்தில்19.30 வினாடிகளில் உலக சாதனையை நிகழ்த்தினார்.ஆனால் நேற்று மேலும் 11 வினாடிகளை மிச்சம் பிடித்து தனது சாதனையை தானே முறியடித்ததார் உசைன் போல்ட்.

தனது பிறந்தநாள் பரிசாக புதிய உலக சாதனைகளைப் படைத்தது ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார் உசைன் போல்ட்.

Wednesday, August 19, 2009

ஆஷஸ் யாருக்கு

ங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகிறது.


லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. ந்தத் தோல்வியிலிருந்து மீண்ட அவுஸ்ரேலியா ஹெடிங்லியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.


இரு அணிகளும் 1-1 என வென்றுள்ள நிலையில் கடைசி டெஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


2006-07இல் ஏற்கெனவே தொடரை வென்றுள்ளதன் மூலம் இந்த டெஸ்டை வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தாலே ஆஷஸ் கோப்பையை அவுஸ்ரேலியா தக்கவைத்துக் கொள்ளும்.
அதேசமயம், கோப்பையைக் கைப்பற்ற வேண்டுமானால், இந்த டெஸ்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது.ஹெடிங்லியில் வெற்றி பெற்ற அதே அவுஸ்ரேலிய அணியே கடைசி டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு அதிகம்.

இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ரவி போபராவுக்கு பதிலாக புதுமுக வீரர் ஜொனாதன் டிராட் சேர்க்கப்படுவார்.

காயம் காரணமாக 4ஆவது டெஸ்டில் விளையாடாத பிளின்டாஃப் இந்த டெஸ்டில் விளையாடுவார்.பிளின்டாஃப் விளையாடும் கடைசி டெஸ்ட் என்பதால் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி அவருக்கு.

ஆஷஸ் யாருக்கு?

Tuesday, August 18, 2009


வீணாகிய எதிர்பார்ப்பு
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் கோலூன்றிப்பாய்தல் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.


ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.கோலூன்றிப்பாய்தல் போட்டியில் ரஷ்யாவின் எலினா இசின்பயேவா கலந்து கொண்டார்.கடந்த இரண்டு ஒலிம்பிக் தொடர்களிலும் தங்கம் வென்று, பல சாதனைகளை படைத்த இவருக்கு தான் இந்த தொடரிலும் தங்க பதக்கம் கிடைக்குமென எதிர்பார்ப்பு. ஆனால் அந்த எதிர்பார்ப்பு வீணாகிப்போனது.

பீஜிங் ஒலிம்பிக்கில் 5.05 மீ உயரம் தாண்டி கோலூன்றிப்பாய்தல் மகாராணியாக முடிசூடிக் கொண்ட இவருக்கு இத்தொடரில் வெண்கலம் பதக்கம் கூட கிடைக்கவில்லை.3 முறையும் இலக்கை எட்ட முடியாமல் பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார். 4.75 மீ. தாண்டிய போலந்தின் அன்னா ரொகோவ்ஸ்கா தங்கப்பதக்கதைப்பெற 4.65 மீ தாண்டிய அமெரிக்காவின் செல்சியா ஜான்சன் வெள்ளிப்பதக்கதைப்பெற்றார். வெண்கலத்தை போலந்தின் மோனிகா பிரக் தட்டி சென்றார்.

1982 ஜூன் மாதம் 3 ஆம் திகதி பிறந்த இவரின் உயரம் 1.74 மீட்டர். ஒலிம்பிக்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த இவர் விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்.

Sunday, August 16, 2009

அன்வரின் சாதனை தகர்ந்தது

கிரிக்கெட் உலகில் இன்று புதிய சாதனை.கிரிக்கெட் வீரர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.சிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியிலே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியின் சார்ள்ஸ் கவன்ட்ரி என்ற வீரரே அந்த சாதனை நாயகன். இந்திய அணிக்கெதிராக 1997ஆம் ஆண்டு சயீட் அன்வர் படைத்த சாதனையே 12 ஆண்டுகளுக்கு பின் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. இவர் 156 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 194 ஓட்டங்களைப் பெற்றார்.

சிம்பாப்வே வீரரொருவர் ஒரு இன்னிங்சில் பெற்றுக்கொண்ட கூடுதல் ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முதல் கிரேக் பிரைன் விஷார்ட் 2003 ஆம் ஆண்டு நமிபியா அணிக்கெதிராக ஆட்டமிழக்காமல் 172 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.


இவர் கஷ்டப்பட்டு சதமடித்தும் சிம்பாப்வே அணியால் பங்களாதேஷ் அணியை வெல்ல முடியவில்லை. இதேநேரம் பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் தானும் ஒரு சாதனை வீரன் என்பதை இன்று கிரிக்கெட் உலகுக்கு தனது அதிரடி மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இவர் 154 ஓட்டங்களைப் பெற்றார். பங்களாதேஷ் வீரர் ஒருவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங்சில் பெற்ற கூடுதலான ஓட்டங்கள்.


சிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேஷ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று 4வது போட்டி நடந்தது.
சிம்பாப்வே அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 312ஓட்டங்கள் .
பங்களாதேஷ் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்களை எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இதன் மூலம் பங்களாதேஷ் அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தவிர, அந்நிய மண்ணில் தொடர்ந்து 2வது முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதித்தது. முன்னதாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரை வென்றது பங்களாதேஷ்.

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தும் பங்களாதேஷ் வீரர்கள்.

ட்ராவிட் உள்ளே...ஷேவாக் வெளியே....

இலங்கையில் நடைபெறவுள்ள மும்முனை கிரிக்கெட் போட்டி,மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் ராகுல் ட்ராவிட்.காயம் காரணமாக முன்னணி வீரர் ஷேவாக் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்புகிறார் ட்ராவிட்.கடைசியாக 2007ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ட்ராவிட் விளையாடியிருந்தார்.இந்திய துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் நோக்கில் ட்ராவிட்டுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்ட சச்சின், 6 மாதங்களுக்குப் பின் மீண்டும் களமிறங்க உள்ளார். காம்பிருடன் இணைந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அசத்த காத்திருக்கிறார் சச்சின். காயத்திலிருந்து மீண்டுள்ள சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு வருகிறார்.

இந்திய அணியில் 8 துடுப்பாட்டவீரர்கள், 4 வேகப்பந்து வீச்சாளர்கள்,2 சுழற்பந்து வீச்சாளர்கள்,1சகலதுறை வீரர் உட்பட 15 வீரர்கள் தெரிவாகியுள்ளனர்.

மொத்தத்தில் இந்திய அணி பலமான அணியே. ட்ராவிட் வருகையால் இந்திய எழுச்சி பெறுமா..........

Saturday, August 15, 2009

இசையால் இணைவோம்

வலைப்பதிவில் பதிவிட இப்போது நேரம் எனக்கு வில்லத்தனம்.இருந்தாலும் ஏதோ சண்டை போட்டு இன்று வென்றுவிட்டதால் இந்தப்பதிவு.இது கொஞ்சம்... ஏன் வழக்கத்திற்கு மாறான பதிவு.விளையாட்டு சம்பந்தமான பதிவுகளை அடிக்கடி தந்த நான் இசையைப்பற்றி தரப்போகும் பதிவிது.


இசையின் ஆரம்பத்தைத் தேடுவது மனிதனின் ஆரம்பத்தைத் தேடுவதற்கு ஒப்பானது.மனதிற்கு இதமான ஒலிகளின் சங்கமம் இசை என்றும் சொல்லிக்கொள்ளலாம்.உலகம் முழுவதும் இசையாலே சூழ்ந்துள்ளது என்று சொன்னால் கூட மிகையாகாது.

இலங்கையிலிருக்கும் இசைத்திறமை கொண்ட இளம் சமுதாயத்தின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் உருவானதே"சக்தி வானொலி நட்சத்திரம்".2005இல் சக்தி fm இனால் நடத்தப்பட்ட"சக்தி வானொலி நட்சத்திரம்"போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றினர்.இதில்'பிரஷாந்தி'"சக்தி வானொலி நட்சத்திரம்"என்ற மகுடத்தை சூடிக்கொண்டார்.


2007 இல் இசையுலகில்"சக்தி சூப்பர் ஸ்டார்"மாபெரும் வரலாறு படைத்தது.பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுக்கிடையில் 'சசிகரன்' "சக்தி சூப்பர் ஸ்டார்" என்ற மகுடத்தை சூடினார்.இந்த போட்டியில் பங்குபற்றிய பலரது குரலிலும் பல பாடல்கள் வெளிவந்து அவை இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டன.

இதன் தொடர்ச்சியாய் 2009இல் இசை இளவரசர்கள் போட்டியில்"கீரவாணி"குழு'இசை இளவரசர்கள்'என்ற மகுடத்தை சூடிப் பெருமைகொண்டது.

இப்போது மற்றுமொரு அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள்"சக்தி சூப்பர் ஸ்டார்'என்ற பட்டத்துக்காக களத்தில்.யார்"சக்தி சூப்பர் ஸ்டார்...".சிறிது காலம் பொறுத்திருங்கள்.நீங்களே பதில் சொல்லப்போகிறீர்கள்.

இசையுலகில் பல புதுமைகளைப் படைக்கும் சக்தி ஊடக வலையமைப்பின் இந்தத் தேடலில் இனங்காணப்பட்ட பலர் இன்று இசையுலகில் பல்வேறு தடங்களில் தம் திறமைகளை வெளிக்காட்டி ஜொலிக்கிறார்கள்.


இம்முறையும் போட்டியிடும் பலர் இசையுலகில் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான இடத்திலிருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை.

Thursday, August 13, 2009

ாகிஸ்தானிடம் சுருண்ட இலங்கை
கொழும்பில் நடந்த 20௦-20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஃப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை 52 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்.

நேற்று நடந்த போட்டியில்,பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல், குலசேகர வீசிய முதல் பந்திலே வெளியேறினார்.எனினும் இம்ரான் நசீர் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்தார். அணித்தலைவர் அஃப்ரிடி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.இதில் 2 சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் திலான் துஷாரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

173 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கையணியின் சனத் ஜெயசூர்யா 23 , சங்ககார 38 ஓட்டங்கள்.ஏனைய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 18.1 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சயீத் அஜ்மல்,நவீத் உல்ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்களில் தோல்வியடைந்த பாகிஸ்தான் 20௦-20 ௦போட்டியில் அஃப்ரிடி தலைமையில் வெற்றி வாகை சூடியது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஃப்ரிடி தெரிவானார்.

இதேவேளை,இந்தப் போட்டியில் சங்ககாரவின் விக்கெட்டைக் கைப்பற்றிய சயீத் அஜ்மல், சங்ககாரவைப் பார்த்து ஆடுகளத்தை விட்டு செல்லுமாறு சைகை செய்ததால் அவரது போட்டித் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

எது எப்படியாயினும் பாகிஸ்தான் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் பலவீனம் மத்திய வரிசை துடுப்பாட்டமே. மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடும் வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தமையே இலங்கை அணியின் தோல்விக்குக் காரணமெனலாம்.
சரியான தலைமைத்துவத்தை நிறைவேற்றிக் காட்டினார் அஃப்ரிடி.

Wednesday, August 12, 2009லக நாயகனுக்காக
இன்றைய நாள் சினியுலகில் பொன்னான நாள். இன்றுதான் கலைஞானி கமல்ஹாசன் கலையுலகில் காலடி எடுத்து வைத்த நாள். இன்று அவருக்கு பொன்விழா நாள்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆறு வயதில் "களத்தூர் கண்ணம்மா" என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார். ஜெமினி கணேசன்-சாவித்ரி தம்பதிகளுக்கு மகனாக அந்தப் படத்தில் நடித்தார். நடித்த முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஜனாதிபதி விருது பெற்றார் கமல்.
களத்தூர் கண்ணம்மாவைத் தொடர்ந்து "பாதக் காணிக்கை","வானம்பாடி","ஆனந்த ஜோதி","பார்த்தல் பசிதீரும்" போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அற்புதமாக நடித்து தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

1967 இல் டி.கே.எஸ் நாடகக் குழுவில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.கதகளி,குச்சுப்பிடி நடனங்களைக் கற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினார்.

"நான் ஏன் பிறந்தேன்","அவள் ஒரு தொடர்கதை" படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்த கமல், "உணர்ச்சிகள்" படத்தில் கதாநாயகனாக நடித்தார்.படம் பாதியில் நின்றுவிட்டது. அதன் பின் "அரங்கேற்றம்"படத்தில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார். அதன் பின் "சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் வில்லன் பாத்திரத்தில் அசத்தினார். இதே காலத்தில் மலையாளப் படங்களிலும் நடித்தார்.அங்கும் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது.கமல் கதாநாயகனாக நடித்து முதல் வெளிவந்த படம் "பட்டம் பூச்சி"." மேல் நாட்டு மருமகள்" படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார். இதே படத்தில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமான மும்பை நடிகை வாணியை காதலித்து மணமுடித்தார் கமல்.25 படங்கள் நடித்த பின்னும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் "அபூர்வ ராகங்கள்" படத்தில் நடிக்க இயக்குனர் பாலச்சந்தரிடமிருந்து அழைப்பு வந்தது. அதில் நடித்த பின்னர் இவர் எங்கோ சென்று விட்டார்.


"மன்மத லீலை","மூன்று முடிச்சு" படங்களும் இவரது நடிப்பால் பேசப்பட்டன. இதைத் தொடர்ந்து கமல் நடித்த "16 வயதினிலே" படம் வெள்ளி விழா கொண்டாடியது. பல படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து தன நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் கமல்."மூன்றாம் பிறை" இவருக்கு மற்றுமொரு அத்தியாயம் என்றே சொல்லலாம்.

படங்களில் நடித்தது மட்டுமன்றி சில திரைப்படங்களை இயக்கியுமுள்ளார்.பாடகராக பல பாடல்களைப் பாடியுமுள்ளார். மொத்தத்தில் கமல் சகலகலா வல்லவன். இந்திய அரசின் தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்று சாதனைகள் படைத்துள்ளார் உலக நாயகன்.


உலக நாயகனுக்கு ஒரு பதிவு போதாது.பல பதிவுகள் தேவை. இன்னொருமுறை கமலின் பதிவில் சிறப்பான மேலும் பல விடயங்களை எதிர்பாருங்கள்.உலக நாயகனுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கூறுங்கள்.

Monday, August 10, 2009

எகிப்து நாட்டு இளவரசியின் மறுபிறவியா மைக்கேல் ஜாக்சன்

ஜாக்சன் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள். ஜாக்சன் இறந்த பின்னரும் அது ஓயவில்லை. நாள் தோறும் புதிய புதிய தகவல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

இன்று புதிய பரபரப்புத் தகவல் ...............
ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்பதே அந்த தகவல்.இது ரசிகரகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றனர்.ஏன் தெரியுமா? இந்த சிலை ஜாக்சனைப் போல அசலாக இருக்கிறதாம். அந்த சிலையின் படத்தை நீங்களும் பாருங்கள். உங்களுக்குளே விடை தேடிக்கொள்ளுங்கள்.
என்ன உங்களுக்கும் குழப்பமா....சரி இன்னுமொருமுறை நன்றாக உற்றுப் பாருங்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறது? படத்தைப் பார்த்த உங்களுக்கே இப்படிக் குழப்பமென்றால் சிலையை நேரில் பார்த்தோருக்கு எப்படியிருக்கும்?

இந்த சிலையை நேரில் பார்த்த ஜாக்சன் ரசிகர்கள் எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று புதிய தகவலைப் பரப்பி வருகின்றனர்.சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட இந்த சிலை 3000 ஆண்டுகள் பழமையானது.

இதனால் இந்த அருங்காட்சியகத்திற்கு ரசிகர்கள் குவிந்தவண்ணமுள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

கல்லறையில் தூங்கும் ஜாக்சன் இதைக் கேட்டால்.......
தொடரை வென்றது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில்,பாகிஸ்தான் அணி132 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆறுதலை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிது.


இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களை எடுத்தது. இம்ரான் நசீர் 35,முகமது யூசுப் 43,யூனிஸ் கான் 76,மிஸ்பா 73*
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளையிழந்து தடுமாறியது.
மகேல 31,கண்டம்பி 42*,மலிங்க பண்டாரா 31. இவர்களைத் தவிர ஏனைய வீரர்களனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 34.2 ஒவரில் சகல விக்கெட்டுகளையுமிழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஆட்டநாயகனாக பாகிஸ்தானின் நவீதும், தொடர் நாயகனாக இலங்கையின் திலன் துஷாராவும் தெரிவாகினர். முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை வெற்றி கொண்டுள்ளது.

Sunday, August 9, 2009

தடுமாறிய அவுஸ்ரேலியா தலை நிமிர்கிறது

இங்கிலாந்து,அவுஸ்ரேலிய அணிகள் வரலாற்று சிறப்புமிக்க 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றன.

நான்காவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்102ஓட்டங்கள்,அவுஸ்ரேலியா 445 ஓட்டங்கள். பின்னர் இரண்டாம் இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி தடுமாறியது. ஸ்டூவர்ட் பிராட்,ஸ்வான் இணைந்து அதிரடியாக ஆடினர். இவர்களது துடுப்பாட்டத்தால் அவுஸ்ரேலிய அணியின் வெற்றி கொஞ்சம் தாமதமானது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 263 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.அவுஸ்ரேலிய அணி ஒரு இன்னிங்சினாலும் 80 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. மூன்று நாட்களுக்குள் இந்தப் போட்டி முடிவடைந்தது.

ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையிலுள்ளதால் 20ஆம் திகதி ஓவலில் ஆரம்பமாகும் 5வது டெஸ்ட் முக்கியத்துவம் பெறப்போகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரைக் கைப்பற்றலாம். அவுஸ்ரேலியாவா, இங்கிலாந்தா அசதப்போகிறது?

Friday, August 7, 2009

இந்தப் பதிவு வித்தியாசமானது

இந்தப் பதிவு வித்தியாசமானது.இருவரைப் பாராட்டி விருது கொடுக்கப்போகிறேன்....அவர்கள் யார்?தொடர்ந்து வாசியுங்கள்..........

தற்போது உலகெங்கிலும் இருக்கும் நண்பர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர வலைப்பதிவுகள் துணை நிற்கின்றன.அந்த வகையில் நாள்தோறும் புதிய புதிய வலைப்பதிவுகள் அறிமுகமாகின்றது. தங்கள் சொந்தக் கருத்துக்களை சுயமாக வெளியிடுகிறார்கள். இது எதிர்காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள் சாதனை படைக்கப்போகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. வாசிப்புக் குறைந்துவரும் இக்காலகட்டத்தில் இந்த வலைப்பதிவுகள்மூலமாக வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்து.

வலைப்பதிவுகளில் தற்போது உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" விடிவெள்ளி என்ற வலைப்பதிவை வைத்திருக்கும் பதிவுலக நண்பரான கார்த்திகன் கோபாலசிங்கம் மூலம் கடந்த ஜூலை கடைசி வாரம் எனது வலைப்பதிவுக்குக் கிடைத்திருந்தது. அந்த விருதினை 6 பேருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எழுதாத விதி ஒன்று இருக்கிறது. அந்த"சுவாரஷ்யபதிவர் விருதினை" 2 பதிவாளர்களுக்கு நான் கொடுக்கப்போகிறேன்.(எனக்கு வீசப்பட்ட பந்தினை இவர்களுக்கு நான் வீசப் போகிறேன்)

முதலாமவர் 'டயானா'.என்னுடன் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகப் பணி புரிபவர். இவர் இசை சம்பந்தமான பல பதிவுகளைத் தந்துள்ளார்.யாரும் அதிகம் தெரிந்திராத விடயங்களைத் தேடி அறிந்து பதிவுகளைத் தருவதில் வல்லவர். இவரது வலைப்பதிவு முகவரி http://wisdomblabla.blogspot.com/ நான் வலைப்பதிவில் பதிவுகளை பதிவிட முக்கிய காரணமாக அமைந்தவர் டயானா.எனக்கு "சுவாரஷ்யபதிவர் விருது" கிடைக்க முன்னர் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

இரண்டாமவர் 'ரமணன் சந்திரசேகரமூர்த்தி'. இவரும் ஊடகத்துறையோடு சம்பந்தப்பட்டவர்.ஒலிபரப்புத் துறையில் அறிவிப்பாளராக பணி புரிந்தவர்.தனது ஒலிபரப்புத் துறையில் ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமன்றி சிறந்த பதிவுகளைத் தனக்கேயுரிய மொழி நடையில் ஆழமாக சிந்திக்க வைக்கும வகையில் தருபவர். இவரது வலைப்பதிவு முகவரி http://ramanansblog.blogspot.com/. நல்ல பதிவுகளை தரும் ரமணன் இன்னும் பல பதிவுகளைத் தரவேண்டும்.

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். (பந்து வீசியாச்சு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்) உங்கள் பதிவுகள் தொடரட்டும். அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, August 5, 2009

மர்லின் மன்றோ

கடந்த இரண்டு நாட்களாக விளையாட்டுலகில் பெரிதாக ஒன்றுமில்லை.நொறுக்குத் தீனி போல பதிவுகள் தந்து பழக்கப்பட்ட எனக்கு பதிவொன்று தர மனம் துடித்தது. இன்று ஓய்வு நாள்(எனக்கு வேலை) உங்களுக்கு. எண்ணங்கள் சிறகடித்தன. என்ன பதிவை கொடுக்கலாம் சரி வாசித்தே பாருங்கள் புரியும்.


உலகிலேயே கவர்ச்சியின் மூலம் சினிமா உலகில் புகழின் உச்சியைத் தொட்டவர் மர்லின் மன்றோ.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.
உலக இளைஞர்களின் கவர்ச்சிக் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம்,இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.


மர்லினின் அபிரிதமான அழகும்,பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும்,36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை,ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.


மர்லினின் இளமைப் பருவம் கொடியது.பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்புப் பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள்.பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள்,வெவ்வேறு வளர்ப்புப் பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட,அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்
அனாதை விடுதியில்தான் வளர்ந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.


ஆரம்பத்தில் தனது 16ஆவது வயதில் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் அழகியாகத்தான் பணி புரிந்தார். இவரது படங்கள் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் புகைப்படங்கள்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக்களை ஏற்படுத்தின.ஆரம்பத்தில் 125 டாலரை சம்பளமாகப் பெற்ற மர்லின் மன்றோ பின்னர் 3500 டாலர்கள் வரை சம்பளத்தைப் பெற்றார்.


உலக ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த இவர் பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.


தனது 16 ஆவது வயதில் 1942ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டார்.
முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை.வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 4ஆண்டுகளின் பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின் இரண்டாவது திருமணம்.
இரண்டாவது திருமணமும் மன நிறைவானதாக அமையவில்லை.

இந்த காலகட்டத்தில் மதுவும் நோயும் மர்லினை வாட்டி எடுத்தன. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியுடனான அறிமுகம் மர்லினுக்கு கிடைத்தது. ஜனாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது,அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி.ஜான் கென்னடி மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்று பலராலும் கூறப்பட்டது.


இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 தனது அறையில் இறந்து காணப்பட்டார். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இவரது உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ,காதலனோ,உறவினர்களோ யாருமில்லை.இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தார்.


மர்லின் சிறந்த பாடகி."லேடீஸ் ஆ·ப் தி கோரஸ்" படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். மொத்தமாக ௩௦ இற்கும் மேற்ப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. இதைவிட 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


என்றென்றும் சர்வதேச திரைப்பட ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த இந்தக் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோ, தனது 36ஆவது வயதில் மரணத்தை அணைத்துக்கொண்டார். இவரது மரணம் இன்னும் மர்மமே.........


இன்று இவரது 47 ஆவது நினைவு தினம்.

Monday, August 3, 2009

பாகிஸ்தானின் பரிதாபம்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இலங்கை தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.

தம்புள்ளையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. கம்ரான் அக்மல் 45, யூனிஸ் கான் 44, உமர் அக்மல் 66 ,அப்ரிதி 32.
289 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு இலங்கையணி துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்தது.உபுல் தரங்க, மகேல ஜோடி அதிரடியைக் கொடுக்க இலங்கையணி இலகுவாக வெற்றி பெற்றது. மகேல 123,தரங்க 76, சங்ககரா37*
இலங்கை அணி 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

முரளியின் மோசமான பந்துவீச்சு
முரளி 10 ஓவர்கள் பந்து வீசி 64 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இலங்கை ஆடுகளத்தில் பந்துவீசி கூடுதல் ஓட்டங்களைக் கொடுத்த 2ஆவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதற்கு முதல் 2009 ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டியில்10 ஓவர்கள் பந்து வீசி 66 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.ஒரே நாளில் தம்புள்ளையில் சாதனைமிகு ஓட்டங்கள்

தம்புள்ளை மைதானத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் ஓட்டங்களைப்(288)பெற்ற அணியாக மாறி சாதனை படைக்க,சில மணித்தியாலங்களில் இலங்கை அந்த சாதனையை(289 ஓட்டங்கள்) முறியடித்தது. இதற்கு முதல் இந்த மைதானத்தில் இலங்கையணி இந்தியாவுக்கெதிராக 2004 ஆம் ஆண்டு 282 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே கூடுதல் ஓட்டங்களாக இருந்தது.

மகேல அசத்தல்
மகேல, உபுல் தரங்கவுடன் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அதிரடியாக சதமடித்தார். 2 ஆண்டுகளின் பின்னர் மகேல பெற்ற முதல் சதமிது. இது அவரது 11ஆவது சதம். மகேல 123ஓட்டங்களைக் குவித்தார். இது தம்புள்ளை மைதானத்தில் ஒரு வீரர் எடுத்த கூடுதலான ஓட்டங்களாகும். ஆட்ட நாயகன் விருதும் மகேல வசமானது.சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரையும் தன் வசப்படுத்திய குமார் சங்ககார தலைமயிலான இலங்கை அணி,சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரையும் வென்று வரலாறு படைத்துள்ளது.கடந்த 1985/86,1994,2005/06இல் நடந்த தொடர்களில் தோல்வியடைந்த இலங்கை அணி இம்முறை சாதித்துள்ளது.
குமார் சங்ககார தலைமயிலான இலங்கையணி இன்னும் சாதிக்கும்.....

Sunday, August 2, 2009

நட்புக்கு ஒருநாள் போதுமா

உலகில் உன்னதமான உறவு எது என்று கேட்டால் நட்பு என்பார்கள் பலர். உணர்வுகளோடு சங்கமிக்கும் உன்னதமான உறவு இது.
உலகில் தாய் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன் அல்லது நண்பி காட்டும் தூய்மையான அன்புதான். அன்று முதல் இன்று வரை விலைமதிப்பற்ற சொத்தாக நட்பு போற்றப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் சொந்த உறவுகளே நம்மை வெறுக்கும்போது நட்புள்ளம் கொண்ட நண்பர்களே எம்மை அரவணைக்கிறார்கள்.


ஒவ்வொரு தினத்தைக் கொண்டாடவும் ஒரு காரணம் இருக்கும். அதற்கு இந்த நட்பு தினமும் விதிவிலக்கல்ல.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில்,ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து,அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும்,நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல
வரவேற்பிருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ மாட்டார்கள். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது.

ஒ‌‌‌‌வ்வொரு மனிதனுக்கும் அவனது வா‌ழ்‌க்கை‌யி‌ல் நண்பர்களின் தேவை அவசியமாகிறது. பெற்றோருக்கு அடுத்ததாக மகிழ்ச்சி, துக்கம் இவற்றில் நண்பர்களின் பங்குபற்றல் அதிகமாகவே உள்ளது. பெற்றோரிடம் கூற முடியாத விடயங்களை நண்பர்களிடம் கூறி தீர்வுகளைக் கண்டவர்கள் நம்மில் பலர்.

இ‌ன‌‌ம்,மொ‌ழி,பால் பாகுபாடின்றி அன்பின் அடையாளமாக மலர வேண்டும் நட்பு. நட்பு விசித்திரமானது.விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது.

நட்பு உன்னதமானது.அதனை மதித்து அதனை கௌரவித்து நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவோம்.

"எனக்கு முன்னால் நடந்து செல்லாதீர்கள்.உங்களைப் பின்பற்றி வர நான் விரும்பவில்லை.என் பின்னால் நடந்து வராதீர்கள்.உங்களுக்கு முன்னோடியாக இருக்க நான் விரும்பவில்லை.என்னுடனே நடந்து வாருங்கள் என் ந‌ண்ப‌ர்களாக‌"


 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates