Pages

Tuesday, February 22, 2011


இசை வேந்தனுக்காய்...

விளையாட்டுத் தொடர்பான பதிவுகளுக்கிடையில் இது ஒரு கலைஞனின் மறைவின் காரணமாய் நான் தரும் ஒரு அஞ்சலிப் பதிவு.

கடந்த 20 ஆம் திகதி பிற்பகல் 1.15மணியளவில் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மலேஷியா வாசுதேவன் அவர்கள் காலமான செய்தி அறிந்தோம்.அன்று தமிழ் திரையிசைத்துறைக்கு இன்னொரு இழப்பு.
ஒரு ஒலிபரப்பாளராக இருந்து இந்தப் பெயரை நாம் எத்தனை முறை உச்சரித்திருக்கிறோம்.அந்தளவு சிறப்பான இவரின் பல பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்பியிருக்கிறோம்.

மிகச் சிறந்த பாடகர்களுள் ஒருவரான இவர் சோக,காதல்,துள்ளிசைப் பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்திருந்தார்.

மலேஷியாவில் 15.06.1915 இல் பிறந்து,சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்து,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 'டெல்லி டு மெட்ராஸ்' படத்தில் தனது குரலின் ஜாலத்தை வெளிப்படுத்தினார்.பின்னர் இசைஞானி இளையராஜா இசையமைத்த பதினாறு வயதினிலே படத்தில் 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' பாடலைப் பாடி பிரபல முன்னணிப் பாடகரானார்.

இதன் பின் பல பாடல்களைப் பாடும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.''ஒரு தங்க ரத்தத்தில்'' ''பூங்காற்று திரும்புமா'' ''வான் மேகங்களே'' ''கோவில் மணியோசை'' ''ஆசை நூறு வகை'' ''காதல் வைபோகமே''போன்ற பாடல்கள் இவர் பெயர் சொல்லும் பாடல்களாக அமைந்தன.

தனது இறுதி அஞ்சலியை செலுத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி.

ரஜினி,கமல் படங்களில் பல பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் வாயை முணுமுணுக்க வைத்தார்.குறிப்பாக ரஜினிக்குப் பாடிய என்னம்மா கண்ணு (மிஸ்டர் பாரத்) சிங்கம் ஒன்று புறப்பட்டதே (அருணாச்சலம்) போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.

ஷங்கர் கணேஷ்,தேவா,ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள மலேஷியா வாசுதேவன்,ஒரு பாடகராக மட்டுமன்றி,முதல் வசந்தம்,ஊமை விழிகள்,ஒரு கைதியின் டயரி,ஜல்லிக்கட்டு,திருடா திருடா,அமைதிப் படை,பூவே உனக்காக புன்னகை தேசம் போன்ற 80 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

ஷங்கர் கணேஷ்,தேவா,ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர் போன்ற இசையமப்பாளர்களின் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ள மலேஷியா வாசுதேவன்,ஒரு பாடகராக மட்டுமன்றி,முதல் வசந்தம்,ஊமை விழிகள்,ஒரு கைதியின் டயரி,ஜல்லிக்கட்டு,திருடா திருடா,அமைதிப் படை,பூவே உனக்காக புன்னகை தேசம் போன்ற 80 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் இவரது பங்களிப்புகளுக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதினையும் பெற்றுள்ளார்.

இசையோடு வாழ்ந்த இவர் தனது தனது வழியில் பிள்ளைகளையும் இசையோடு இணைத்துள்ளார்.யுகேந்திரன் நடிகராகவும் பின்னணிப் பாடகராகவும், பிரஷாந்தினி பின்னணிப் பாடகியாகவும் இருக்கின்றனர்.

இசை வேந்தனின் உயிர் எமை விட்டகன்றாலும் அவரின் கானங்கள் என்றும் எங்கள் காதோரம் ஒலித்துகொண்டேயிருக்கும்.

இசை வேந்தனுக்கு இதய அஞ்சலிகள்!!!

Saturday, February 19, 2011

கணக்கைத் தொடங்கியது இந்தியா

பத்தாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய,பங்களாதேஷ் அணிகள் களம் கண்டன.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக சச்சின்,ஷேவாக் களமிறங்கி சிறப்பாக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.இவர்களிருவரும் 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்திருந்தபோது,கடினமாக ஒரு ஓட்டத்தை சச்சின் பெற முயற்சித்து ரன் அவுட் (ஷேவாக்கின் தவறினால்) முறையில் வெளியேறி ஏமாற்றினார்.

அதன்பின் ஷேவாக்,விராத் ஹோலி ஆகியோரின் அதிரடி ஆட்டம் தொடர மூன்றாவது விக்கெட்டுக்காக 203 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டது.உலகக் கிண்ணப் போட்டியில் பல சாதனைகளை முறியடித்து முன்னேறிய ஷேவாக்,தனிநபராக உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றவரான முன்னாள் தலைவரான கபில்தேவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முறியடிக்க முடியாமல்140 பந்துகளில் 175 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தனது அறிமுக உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் முதல் போட்டியிலே சதமடித்து அணியில் தனது தெரிவு சரியென்பதை நிரூபித்தார் விராத் ஹோலி.இதன்மூலம் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சுரேஷ் ரைனாதான். இவரடித்த சதத்தின் மூலம் ஹோலிமீது இப்போது அணிக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் அண்மைக் காலமாக ஓட்டங்களைப் பெறத் தவறிவரும் ரைனாவின் உலகக் கிண்ண எதிர்காலம் கேள்விக்குறியே.ஒரு சில போட்டிகளில் மட்டுமே இனி இவருக்கு வாய்ப்புக் கிடைக்கும் போலிருக்கிறது.


இந்தியா 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ஓட்டங்களைப் பெற்று பங்களாதேஷ் அணிக்கு வெற்றியிலக்காக 371 ஓட்டங்களை நிர்ணயித்தது.பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 9 விக்கெட் இழப்புக்கு 283 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. இதன் மூலம் 87 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்துள்ளது.
தமீம் இக்பால் 70 ஓட்டங்களையும் சாகிப் அல் ஹசன் 55 ஓட்டங்களையும் பெற்றனர்.முனாப் பட்டேல் 4விக்கெட்டை வீழ்த்தினார்.போட்டியின் சிறப்படக்காரர் ஷேவாக்.

பங்களாதேஷின் மிகப் பெரும் தவறு நாணய சுழற்சியில் வெற்றி பெற்றும் முதலில் துடுப்பெடுத்தாடாமையே.

Wednesday, February 16, 2011

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011

அணிகள் பற்றிய பார்வைகள்..........

இந்தியா
உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடுகளிலொன்று என்ற வகையில் அதிகம் சாதிக்கும் என்ற நிலையில் களமிறங்குகிறது.இது சச்சினின் கடைசி உலகக்கிண்ணத் தொடர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

துடுப்பாட்டம்: சேவாக்கின் அதிரடிஆரம்பம் அணிக்குத் தேவை.கம்பீர்,சச்சின்,யுவ்ராஜ்,டோனி,ரெய்னா, யூசுப் பத்தான் என வீரர்கள் களமிறங்கினால் அணிக்குப் பலம் அதிகமாகும்.டோனி,யுவ்ராஜ் ஆகியோரின் பழைய அதிரடி மீண்டும் தேவை.யூசுப் பத்தானின் துடுப்பாட்டம் எதிரணியினருக்கு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுக்குமென்று எதிர்பார்க்கலாம்.ரெய்னாவின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்.
தனது இறுதி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சச்சின் தனது அனுபவத்தையும் திறமையையும் சரியான தருணத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் அவருக்கு அழுத்தங்கள் அதிகம்.இதனால் துடுப்பாட்டத்தில் சோபிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

தனது இறுதி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் சச்சின் தனது அனுபவத்தையும் திறமையையும் சரியான தருணத்தில் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பதால் அவருக்கு அழுத்தங்கள் அதிகம்.இதனால் துடுப்பாட்டத்தில் சோபிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

பந்து வீச்சு:ஹர்பஜன்,சாகிர்,ஸ்ரீசாந்த்,முனாப் படேல் என்று பந்துவீச்சு பலமாகவுள்ளது.யூசுப் பத்தானைப் பகுதிநேரப் பந்துவீச்சாளராக உபயோகித்தால் பலனைப் பெறலாம்.நெஹ்ரா கடைசி நேரங்களில் ஓட்டங்களை கொடுப்பதால் இவருக்கு அனைத்துப் போட்டிகளிலும் வாய்ப்புக் கிடைப்பது சந்தேகமே. விராத் கோலி,யுவ்ராஜ்,ரெய்னா என சிறந்த களத் தடுப்பாளர்கள் அணியில் உள்ளத்தால் எதிரணி 300 ஓட்டங்களைப் பெறுவது கடினமே.
சகலதுறை வீரர்கள் பலர் அணியில் இருப்பதால் அதிகம் சாதிக்கும் அணிகளில் ஒன்றாய் இந்தியா விளங்கும்.

பங்களாதேஷ்,அயர்லாந்து,நெதர்லாந்து என்று பலவீனமான அணிகளை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு இலகுவாக முன்னேறும்.அரையிறுதி வரை இந்தியா வந்தால் இறுதிவரை முன்னேறலாம் டோனியின் உத்திகள் வெற்றிக்கு வழி சமைக்குமா
58 போட்டிகளில் வெற்றிகள் 32 தோல்விகள் 25.


அவுஸ்ரேலியா
உலகக்கிண்ண வரலாற்றில் அவுஸ்ரேலியா அதிக(4) தடவைகள்(1987,1999,2003,2007) சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.ரிக்கி பொன்டிங் தலைமையில் அவுஸ்ரேலியா தொடர்ந்து இரண்டு முறை (2003,2007) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ள நிலையில்,இம்முறையும் வென்றால் ஹாட்ரிக் அடிப்படையில் கிண்ணத் வென்று தந்த முதல் தலைவரென்ற புதிய வரலாறு படைக்க வாய்ப்புகளுண்டு.

உலகக்கிண்ணப் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள பொன்டிங் தனது தலைமையில் அவுஸ்ரேலிய அணிக்கு 100 சதவீத (22 போட்டிகள்) வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.22 போட்டிகளுக்கு தலைவராக செயற்பட்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.

உலகக் கிண்ணத் தொடரில் அதிக போட்டிகள் (39 ) அதிக பிடிகள் (25)அதிக சதம் பெற்ற வீரர்கள் வரிசை என முன்னிலை வகிக்கிறார்.
ஐந்தாவது (1996-2011) முறையாக உலகக்கிண்ணதொடரில் பங்கேற்குமிவர், இத்தொடரில்அதிகம் சாதிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.மோசமாகத் தோற்றால் தலைமைப் பதவியும் பறிபோகலாம்.

துடுப்பாட்டம்:ஷேன் வாட்சனின் அதிரடி ஆரம்பம் அணிக்கு மிகப்பெரும் பலம்.இவர் நிலைத்து நின்றால் அசத்தல் வெற்றிகளை பெறலாம்.மைக்கல் கிளார்க்,டேவிட் ஹசி,பிரட் ஹடின் ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்கு வலுவாக அமையும்.இருந்தாலும் மைக்கல் ஹஸி காயமடைந்து அவர் அணியில் இணைந்து கொள்ள முடியாமல் போனதால் அவரது இழப்பு அவுஸ்ரேலியாவுக்கு பெரும் பின்னடைவே.ஹஸியின் வெளியேற்றத்தால் நடுக்கள வரிசை பலவீனமாகக் காணப்படுகிறது.

பந்து வீச்சு:பிரெட் லீ,மிச்சல் ஜோன்சன்,போலிங்கர்,ஷோன் டைட் ஆகியோரின் வேகமும் ஸ் ரீபன் ஸ்மித்தின் சுழலும் அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
ஷேன் வாட்சனின் சகலதுறை ஆட்டம் இம்முறையும் அணிக்குக் கை கொடுக்கும்.இளம், னுபவம் வாய்ந்த வீரர்கள் அணியிலிருப்பது ஆரோக்கியமாக இருக்குமா என்பது கேள்விக் குறி.இரண்டு பயிற்சிப் போட்டியிலும் தோற்றுள்ள அவுஸ்ரேலியோஆரம்ப சுற்றிலும் சறுக்கும்போல் இருக்கிறது.
69 போட்டிகளில் வெற்றிகள் 51,தோல்விகள் 17.


நியூசிலாந்து
உலகக்கிண்ணப் போட்டிகளில்,நியூஸீலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் சாதாரண அணிகளிடம் தோல்விகளைத் தழுவியுள்ளமை அந்த அணியின் திறமையை குறைத்து மதிப்பிட வைத்துள்ளது

அண்மைக்காலமாக துடுப்பாட்டத்திலும்,பந்து வீச்சிலும் ஆக்ரோஷம் இல்லாத அணியாக விளங்குகிறது நியூசிலாந்து.
துடுப்பாட்டம்: பிரெண்டன் மெக்கல்லத்துடன் ஜெசி ரைடரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறக்கினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.அதன் பின் மார்டின் கப்தில்,வில்லியம்ஸன் ஆகியோரை துடுப்பாட்ட வீரர்களாக களமிறக்கலாம்.சகலதுறை வீரர்களான ஸ்டைரிஸ்,ஜேகப் ஓரம் ஆகியோர் அணியிலிருந்தாலும் சாதிப்பார்களா என்பது கேள்விக் குறியே.அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கலமும்,ரோஸ் ரெய்லரும் அணியின் பலங்கள்.

பந்து வீச்சு:ஜேம்ஸ் பிராங்கிளினின்,கைல் மில்ஸ்,டிம் சௌதி ஆகியோர் வேகத்தில் அசத்த,அணித் தலைவர் வெட்டோரியின் சுழற்பந்தில் அதிக விக்கெட்டுகள் வீழுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து,சிம்பாப்வே,கென்யா,கனடா போன்ற நாடுகளை வெற்றி கொண்டாலும் அவுஸ்ரேலியா,இலங்கை,பாகிஸ்தான்அணிகளிடம் கடினமான சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும்.

தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் நியூசிலாந்து.
இது வரை 62 போட்டிகளில் 35 இல் வென்று 26 இல் தோல்வியடைந்துள்ளது நியூசிலாந்து.


மேற்கிந்தியத் தீவுகள்
உலகக் கிண்ணப் போட்டிகளில் உறுதியாகக் கணிக்க முடியாத அணிகளிலொன்று மேற்கிந்தியத் தீவுகள்.கிறிஸ் கெய்ல் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஓரிரு அதிர்ச்சி வெற்றிகளைக் கூடப் பெறலாம்.
துடுப்பாட்டம்:அனுபவசாலிகளான சந்தர்போல்,சர்வானின் அனுபவம்,நடுக்கள வரிசையில் டேரன் பிராவோவின் வருகை இவை அணிக்குப் பலம் சேர்க்கும்.அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் 20-20 போட்டிகளில் விளையாடுவதைப் போல் ஒருநாள் கிரிக்கெட்டில் சாதிக்கவில்லை.

பந்து வீச்சு:கேமர் ரோச்,சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென்னைத் தவிர ஏனையோர் அதிகம் அறிமுகமில்லாதவர்கள்.
அணித் தலைவர் டரன் சமியின் அனுபவமற்ற தலைமைத்துவம் அணிக்கு சாதகமாக அமைவது கடினமே. மேற்கிந்தியத் தீவுகள்,பங்களாதேஷ் அணியிடம் தோற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.மேற்கிந்தியதீவுகள் அணிக்கு நெதர்லாந்தைத் தவிர அனைத்து அணிகளும் சவால் விடுக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது

அனுபவமில்லாத புதுமுக வீரர்கள் அணியின் பலவீனமாக இருந்தாலும் சிலவேளைகளில் முடிவுகள் தலை கீழாகவும் மாறலாம்.
57 போட்டிகளில் வெற்றிகள் 35,தோல்விகள் 21.


பங்களாதேஷ்
ஷகிப் அல் ஹசன் தலைமையில் அண்மைக் காலமாக வெற்றிப் பாதையில் செல்கிறது பங்களாதேஷ்.இளமையான வீரர்களின் செயற்பாடுகள் சிறப்பாகவே உள்ளது.சொந்த நாட்டில் அதிக ரசிகர்களின் ஆதரவுடன் போட்டிகளில் களமிறங்குவதால் அதிரடியான வெற்றிகளைப் பெறும்.
துடுப்பாட்டம்: தமீம் இக்பால் சனத் போல் அதிரடியில் இறங்கினால் ஓட்டங்கள் குவியும்.அஷ்ரபுல்,ஜுனைத் சித்திக் ஆகியோர் மனம் வைத்து விளையாடினால் அதிக ஓட்டங்களைப் பெற முடியும்.

பந்து வீச்சு:வேகப் பந்துவீச்சில் அதிக அனுபவமற்ற வீரர்கள் இருந்தாலும் மிக சிறப்பாகப் பந்துவீசி வருவதால் எதிரணிகள் சவாலை எதிர்கொள்ளலாம்.சுழலில் ஜாலம் காட்டும் ஷகிப் அல் ஹசன்,அப்துர் ரசாக் ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்துவர்.
வீரர்கள் அனைவரதும் கூட்டு முயசியுடன் சிறப்பாகஅவசரப்படாமல் நிதானமாக விளையாடினால் சிலவேளை காலிறுதிவரை கூட முன்னேறலாம்.
20 போட்டிகளில் வெற்றிகள் 05,தோல்விகள் 14.

கென்யா
உலகக் கிண்ணக் கிரிகெட் தொடர்களில் அதிர்ச்சிகளைக் கொடுத்து எதிர்பாராத முடிவுகளைப் பெற்று வரும் அணி.

2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு சிக்கலைக் கொடுத்து இலங்கையை வீழ்த்திய கொலின்ஸ் ஒபுயா இம்முறையும் அதிர்ச்சியைக் கொடுப்பார்.அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலர் அணியில் இருப்பது பலமே.

23 போட்டிகளில் வெற்றிகள் 06,தோல்விகள் 16.


சிம்பாப்வே
எல்டன் சிக்கும்புரா மசகட்சா,பிரெண்டன் ரெரெய்லர்,தைபு போன்ற வீரர்கள் துடுபாட்டத்தில் அணிக்குப் பலமாய் இருப்பர்.உட்செயா,ரேய் ப்ரைஸ்,மற்றும் ஏனைய வீரர்களின் பங்களிப்புடன் விக்கெட் வேட்டை தொடரும்.முதல் உலகக் கிண்ணக் கிரிகெட் போட்டியில் பலர் விளையாடுவதால் அழுத்தங்கள் அதிகம்.கனடா கென்யா அணிகளிடம் அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும்.

45 போட்டிகளில் வெற்றிகள் 08, தோல்விகள் 33.

ஏனைய அணிகளைப் பொறுத்தவரையில்,2003ஆம் ஆண்டு பாகிஸ்தானை முதல் சுற்றுடன் வெளியேற்றிய அயர்லாந்து 4ஆவது தடவையாகவும்,இரண்டாவது முறையாக நெதர்லாந்தும்,கனடா 4 ஆவது தடவையாகவும் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கின்றன.இந்த அணிகள் அதிக அனுபவமின்றி இத் தொடரில் விளையாடுவதால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளாகக் கணிக்க முடியவில்லை.இருந்தாலும் அண்மைக் காலமாக சிறப்பான பயிற்சிகளைப் பெற்று வருவதால் சில ஆச்சரியங்களும் நிகழலாம்.பயிற்சிப் போட்டிகளில் அந்தந்த அணிகளின் முக்கிய நட்சத்திரங்கள் சிறப்பாகப் பிரகாசித்துள்ளனர்.
கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.பல அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் இம்முறையும் அரங்கேறும்.முதற் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்குள் நுழையப் போகும் அணிகள் எவை அடுத்த பதிவில் சந்திப்போம்.

Saturday, February 12, 2011

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011

பத்தாவது உலகக் கிண்ணக் கிரிகெட் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு செல்கிறது.ஆசிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதால் ஆசிய அணிகள் அதிகம் சாதிக்கும் என்ற நிலை வலுவாகவுள்ளது.ஆனாலும் இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்கா நியூசிலாந்து போன்ற அணிகளும் எழுச்சி காணலாம்.பலம் பொருந்திய அணிகளுக்கு சில அதிர்ச்சிகளும் காத்திருக்கிறது.

இலங்கை,இந்திய அணிகளில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதால் இந்த அணிகள் எதிரணிகளுக்கு கடும் சவாலாக விளங்குமென்றும் எதிர்பார்க்கலாம்.
உலகக் கிண்ணப் போட்டியில் 14 அணிகள் களம் காண்கின்றன.இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள்.இதில் ஐந்து அணிகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மற்றைய இரண்டும் டெஸ்ட் அங்கீகாரம் பெறாத சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணைப்பு அங்கீகாரம் பெற்றவை.இவை ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அணிகள்.

A பிரிவு :அவுஸ்ரேலியா,கனடா,சிம்பாப்வே,இலங்கை,நியூசிலாந்து,கென்யா,பாகிஸ்தான்.
B பிரிவு : இந்தியா, இங்கிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள்,தென்னாபிரிக்கா,பங்களாதேஷ்,அயர்லாந்து,நெதர்லாந்து

14அணிகள் பற்றிய எனது பார்வை :
இலங்கை
உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடு உலகக்கிண்ணத்தை வென்றதில்லை என்ற நிலையை 1996ஆம் ஆண்டு மாற்றி புதிய வரலாறு படைத்தது இலங்கை.சொந்த மண்ணிலே இலங்கை அதிக போட்டிகளை விளையாடவுள்ளதால் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய அணிகளுள் ஒன்றாக விளங்கும் இலங்கை அணியை அனுபவமிக்க சிறந்த தலைவர் குமார் சங்ககார சிறப்பாக வழிநடத்துவார்.

துடுப்பாட்டம்:ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் டில்ஷான்,உபுல் தரங்க ஆகியோர் அதிரடியைக் காட்டினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம் அணிக்குப் பெரிய பலம்.
பின் களத்தில் அஞ்சேலோ மெத்யூஸ், கப்புகெதர,திசர பெரெரா போன்ற போன்ற இளமையான சகலதுறை வீரர்கள் கை கொடுத்தால் இலங்கை 300 ஓட்டங்களைப் பெறலாம்.


பந்து வீச்சு:பந்துவீச்சில் உலக சாதனையாளர் முத்தையா முரளிதரன் தனது இறுதி சர்வதேசஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறார்.எனவே எதிர்பார்ப்புகள் அதிகம்.இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைக்கும் அதேவேளை,அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்து வீச்சாளர் என்ற பெருமையும் கிடைக்கும்.
முரளிக்கு பக்க பலமாக ரங்கன ஹேரத்,அஜந்த மென்டிஸ் ஆகியோர் சுழலில் அசத்தலாம்.வேகப் பந்து வீச்சில் மலிங்கா,நுவன் குலசேகர,டில்கார பெர்னான்டோ,திசர பெரெராஆகியோர் மிரட்டுவர்.

இலங்கையின் பலவீனம் மத்திய அல்லது நடுவரிசை வீரர்களின் துடுப்பாட்டமே.இலங்கையின் மத்திய வரிசையை (மிடில் ஓர்டர்) தகர்த்தால் எதிரணி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.

1996 இல் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை,57 போட்டிகளில் 25 வெற்றி ,30 தோல்வி, ஒரு போட்டிசமநிலை.ஒரு போட்டி முடிவில்லை.
அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் சம பலத்துடன் களமிறங்கும் இலங்கை இம்முறை சாம்பியனாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

பாகிஸ்தான்
சர்ச்சைகளும் குழப்பங்களும் நிறைந்த அணியென்றால்,அது பாகிஸ்தான் அணியாக மட்டுமே இருக்கும்.அனுபவ வீரர்களின் ஒழுக்கமின்மையால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான்.அண்மையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக அணியின் ஏனைய வீரர்களுக்குள் உள ரீதியாக சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து சாதித்து அந்தக் கறைகளை அகற்றவேண்டிய நிலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

துடுப்பாட்டம்: அனுபவ வீரர்கள் யூனிஸ் கான்,மிஸ்பா உல் ஹக்,ஹஃபீஸ்,புதுமுக வீரர் ஷேஜாத் ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்குப் பலமே.அஃப்ரீடியின் ஆட்டம் சூடு பிடித்தால் எதிரணியின் நிலைமை கவலைக்கிடம்.சரிவை எதிர்நோக்கும் அணியை மீட்டு,வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை படைத்தவர்அப்துல் ரசாக்.உமர் - கம்ரன் அக்மல் சகோதரர்கள் மனம் வைத்து விளையாடினால் பாகிஸ்தான் அதிகம் சாதிக்கலாம்.அணியை வெற்றி பெற வைக்கவும் முடியும்.

பந்து வீச்சு: வேகப்பந்து வீச்சாளர்கள் அக்தார்,உமர் குல்,அப்துல் ரசாக்,சுழற்பந்து வீச்சாளர்கள் அஃப்ரீடி,அஜ்மல்,வஹாப் ரியாஸ் என்று தரமான பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எதிரணிக்கு சிக்கல் இருக்கும்.சிம்பாப்வே,நியூஸீலாந்து அணிகளை வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்ற போதும் அவுஸ்ரேலியா,இலங்கை அணிகளிடம் கடும் சவாலை எதிர்நோக்க வேண்டி வரும்.

ஒரு முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பாகிஸ்தான் 56 போட்டிகளில் 30 இல் வென்று, 24இல் தோற்றுள்ளது 2 போட்டிகள் முடிவேதும் தெரியாமல் கைவிடப்பட்டுள்ளன.
எழுச்சி கொண்டால் எழுச்சியும் வீழ்ச்சி கண்டால் வீழ்ச்சியும் அடையும் ஒரே அணி பாகிஸ்தான்.எப்படி விளையாடுமென்று இறுதிவரை கணிக்க முடியாத அணியும் இதுவே.

இந்த அணியின் பலமும் பலவீனமும் ஒன்றேயொன்றுதான்.அதுதான் அணி ஒற்றுமை. எழுச்சி கண்டால் இறுதி வரை முன்னேறும் பாகிஸ்தான்.

தென்னாபிரிக்கா
இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் கிண்ணம் வெல்லுமென்று எதிர்பார்க்கப்படும் அணிகளிலொன்றான தென்னாபிரிக்கா பலமான அணியாகக் களமிறங்குகிறது.
களத் தடுப்பு உத்தி,பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றில் திறமை படைத்த தலைவர் கிரஹம் ஸ்மித் தனது நிதானமான அதிரடியைக் காட்டினால் தென்னாபிரிக்கா இலகுவாக அடுத்த கட்டங்களுக்கு முன்னேறலாம்.

துடுப்பாட்டம்:அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வீரர்களிலொருவர் ஹஷிம் அம்லா.அண்மைக்கால டெஸ்ட்,ஒருநாள் கிரிக்கெட்டில் அபார திறமையை வெளிக்காட்டி வருமிவர் ஒருநாள் கிரிகிக்கெட்டில் அதிக (59.88)சராசரியுடன் களமிறங்குகிறார்.

அணியின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் இன்னொருவர் ஜாக் கலிஸ்.இவரது அனுபவம் வாய்ந்த அதிரடிஆட்டம் அணிக்குப் பலம் சேர்க்கும்.பந்து வீச்சிலும் இவர் கில்லாடி.259 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ள கலிஸ் மொத்தத்தில் தலை சிறந்த சகலதுறை வீரர்.
துடுப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஏ.பி.டீ.விலியர்ஸ்,டுமினி ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள்.இது அணிக்குக் கூடுதல் பலம்.
பந்து வீச்சு:வேகப் பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கெல்,சொட்சோபே ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைக்கின்றனர்.சுழலில் ஜோஹன் போத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவாரென்றே எதிர்பார்க்கலாம்.
சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத் தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.

அணியின் பலவீனம் மிகவும் நெருக்கடியான தருணங்களில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடுவது.இதை பல போட்டிகளில் கண்டிருக்கிறோம்.

இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லாத தென்னாபிரிக்கா 40 போட்டிகளில் 25 போட்டிகளில் வென்று 13 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.2 போட்டிகள் சமநிலை.

பி-பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா,இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள்,இங்கிலாந்து நாடுகளிடம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.காலிறுதியில் இலங்கை, அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் நாடுகளிலொன்றை எதிர்கொள்ள நேரிட்டால் கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனாலும் அரையிறுதி வரை இந்த அணி முன்னேற வாய்ப்புண்டு

இங்கிலாந்து
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் தலைமையில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள்,பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகத் திரண்டு எழுந்து அவுஸ்ரேலியாவை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய பலத்துடனிருக்கிறது இங்கிலாந்து. இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்றும் கருதப்படுகிறது.

துடுப்பாட்டம்: ஜொனதன் டிராட்டின் சமீபத்தியஅதிரடியான துடுப்பாட்டம்,கெவின் பீட்டர்சனின்,ஸ்ட்ராஸின் அதிரடி,இயன் பெல்,காலிங்வுட் ஆகியோரது துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து துடுப்பாட்டம் பலமாகவுள்ளது. மொத்தத்தில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் துடுப்பாட்டத்தில் கலக்குவர்.

பந்து வீச்சு: பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் சுழல் இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும்.டிம் பிரெஸ்னன்,ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசத்துவர்.அது மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்ப்பார்கள்.லூ க் ரைட்,யார்டி சகலதுறை வீரர்கள் பலர் இருப்பதால் ஜேம்ஸ் அண்டர்சன் அணிக்குள் வருவாரா என்பது கேள்விக்குறியே.விக்கெட் காப்பாளர் மேட் பிரையரை பின் வரிசையில் களமிறக்கினால் அதிக நன்மைகளை பெறலாம்.

இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள்,தென்னாபிரிக்க அணிகள் சவாலாக இருக்கும்.காலிறுதியில் இலங்கையை எதிர்கொண்டால் அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும். 59 போட்டிகளில் 36இல் வென்று, 22 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை

இங்கிலாந்தின் பலம் அணியிலுள்ள சகலதுறை வீரர்கள்.
காலிறுதியைக் கடந்தால் இறுதிப் போட்டி வரை முன்னேறி முதன் முறையாக உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் இங்கிலாந்து.
அடுத்த பதிவில் மிகுதி அணிகள்..................
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates