Pages

Friday, July 31, 2009

முந்தினார் பாண்டிங்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தஅவுஸ்ரேலிய வீரர் என்ற சாதனையை ரிக்கி பாண்டிங் படைத்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரரான அலன் பார்டர் எடுத்த 11,174 ஓட்டங்கள் என்ற சாதனையே முறியடிக்கப்பட்டுள்ளது.


அலன் பார்டர் 156 டெஸ்ட் போட்டிகளில் 11,174 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அலன் பார்டர் 156 டெஸ்ட் போட்டிகளில் நிகழ்த்திய சாதனையை பாண்டிங் 134 போட்டிகளில் முறியடித்துள்ளார்.


டெஸ்ட் போட்டிகளில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் சச்சின்,லாரா,பாண்டிங்,பார்டர்,ஸ்டீவ் வாஹ், ராகுல் ட்ராவிட்,ஜாக் காலிஸ்,சுனில் கவாஸ்கர்,கிரகாம் கூச்,ஜாவேட் மியாண்டட் ஆகியோர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

மிக விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற சச்சினின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ரிக்கி பாண்டிங்கிற்கு உள்ளது.

Thursday, July 30, 2009

முரளியிடம் சுருண்ட பாகிஸ்தான் வழமையாகப் பந்துவீச்சில் அசத்தும் சுழல் மன்னன் முரளிதரன் இன்றைய பாகிஸ்தானுடனான போட்டியில் தனது ஆக்ரோஷமான அதிரடியை தக்க தருணத்தில் வெளிப்படுத்தினார். இவரது துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் அபாரமான வெற்றியைப் பெற்றது இலங்கை.


தம்புள்ளையில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. 6 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது இலங்கை அணி. அண்மையில் அணியில் இடம் பிடித்த அஞ்சலோ மத்தியுஸ் 43 ஓட்டங்களைப் பெற, முரளி அதிரடியாக 15 பந்துகளில் 32ஓட்டங்களைப் பெற இலங்கை அணி50 ஓவர்களில் 232ஓட்டங்களைப் பெற்றது.

233ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் சகல விக்கெட்டுகளையும் இழந்து 196ஓட்டங்களை மட்டுமே பெற்று 36ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் முரளி2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இவரே போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியின் பின் கருத்துக் கூறியமுரளி 2010ஆம் ஆண்டுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 127 டெஸ்ட் போட்டிகளில் 770 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள முரளி, 330சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 507விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
முரளியின் சாதனைகள் தொடரட்டும் ....
தந்தை வழியில் மகன்

100 பதிவுகளைக் கடந்து 101ஆவது பதிவில் சாதனைத் தமிழனின் இசைப் பயணத்தில் அடுத்து நிகழப்போகும் முக்கியமான பதிவுடன் சந்திக்கிறேன்.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும்போது சாதனைத் தமிழன் ரஹ்மான் வீட்டு செல்லக்குட்டி பாட்டுப் பாடாதா? பாடும்தானே......


ரஹ்மானின் 6 வயது மகனான ஆலிம் ஒரு பாடகராக தனது தந்தையின் இசையில் மிக விரைவில் பாடப்போகிறார். ஆனால் தமிழிலல்ல.ஹாலிவுட்டில். ரஹ்மானின் இசையில் உருவாகிக்கொண்டிருக்கும் கப்பிள்ஸ் ரீட்ரீட்( Couples Retreat )எனும் ஹாலிவுட்
படத்திலே ஆலிம் பாடகராக அவதாரம் எடுக்கப்போகிறார். இந்தப் படத்தில் ஒரு முழுப் பாடலை ஆலிம் பாடுகிறார்.அந்த சூழலுக்கும் பாத்திரத்துக்கும் தனது மகனின் குரல் மிகப் பொருத்தமாக அமைந்ததால் மகனைப் பாடவைத்துள்ளார் ரஹ்மான்.

இதற்கு முதல் தனது சகோதரியின் மகனான ஜி.வி.பிரகாஷை தனது படங்களில் பாட வைத்து இப்போது அவரை இசையமைப்பாளர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தியவர் ரஹ்மான். இப்போது தனது மகனையும் பாட வைத்து மிக விரைவில் இசையமைப்பாளர் ஆக்குவார் என்பதில் ஐயமில்லை.


வாழ்த்துக்கள் தந்தைக்கும்(ரஹ்மான்) மகனுக்கும்(ஆலிம்)

Wednesday, July 29, 2009

சதம் அடிக்கும் எனது பதிவுகள்

ணக்கம் நண்பர்களே... இன்று நான் பதிவிடும் இந்தப் பதிவு 100 ஆவது பதிவு. மிகக்குறைந்த காலப்பகுதியில்100 பதிவுகளை பதிந்துள்ளேன் என்பதை நினைக்கும்போது மனதிற்குள் உற்சாகம்,மகிழ்ச்சி இரண்டும் சேர்ந்தே தாளம் போடுகின்றன.

100 ஆவது பதிவாக பதிவிடும் இந்தப் பதிவு என்றும் மறக்க முடியாத ஒரு பதிவு.தொடர்ச்சியாக எனது பதிவுகளுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இன்னும் பல பதிவுகளைப் பதிவிட உந்துதலாக இருக்கிறது. இந்தப் பதிவில் இன்னுமொரு மகிழ்ச்சி எனக்கு ..........

வலைப்பதிவுகளில் தற்போது உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" விடிவெள்ளி என்ற வலைப் பூவை வைத்திருக்கும் பதிவுலக நண்பரான கார்த்திகன் கோபாலசிங்கம் மூலம் எனக்குக் கிடைத்துள்ளது.விருதுகள் உன்னதமானது. ஒரு படைப்பாளியின் அல்லது ஒரு கலைஞனின் உள்ளத்து உணர்வுகளை இன்னொரு கலைஞனால்தான் புரிந்துகொள்ள முடியும்.அந்த வகையில் நான் தரும் பதிவுகளை வாசித்து அதற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.

தனது வாழ்வில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளை பதிவுகளாகத் தரும் கார்த்திகன் கோபாலசிங்கம் தனக்குக் கிடைத்த சுவாரஷ்ய பதிவர் விருதை இருவருக்குக் கொடுத்துள்ளார்.அந்த விருது கிடைத்த இருவரில் நானும் ஒருவன் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகார்த்திகன் கோபாலசிங்கம். இவர் தனது http://www.vidivu-carthi.blogspot.com/ இல் எனக்கு இந்தசுவாரஷ்ய பதிவர் விருது தருவது பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..... எனக்கு தரப்பட்ட இந்த விருதை 6பேருக்கு அளிக்கவேண்டுமாம். இருந்தாலும் இருவருக்கு அளிக்கின்றேன். முதலாமர் ஹிசாம் அண்ணா. அடுத்தவர் மயூரன் அண்ணா.சக்திFM வானொலியின் நீண்டகால அறிவிப்பாளர். வலைஉலகத்திற்கு புதியவர். MAYURAN என்ற வலைப்பதிவை எழுதி வருபவர். உலகத்தில் நடக்கும் எல்லா முக்கிய விசயத்தையும் முந்திக்கொண்டு பதிவிடுபவர்.சின்னச் சின்னதாக அளவான பதிவுகளில் அசத்துபவர். அடிக்கடி எழுதும் இவருக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறதோ?


நீங்கள் குறிபிட்டது உண்மைதான் நண்பரே.. நேரம் கிடைப்பது அரிது அப்படிக் கிடைக்கும் நேரத்தில்தான் பதிவிடுகிறேன். இன்னும் பதிவுகள் தொடரும்.

இதே நேரம் எனது பதிவுகளுக்கு ஊக்கம் தந்த சிலரைப் பற்றியும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்......

ஒலிபரப்புத்துறையில் பணிபுரிவோர்க்கு ஓய்வு நேரம் கிடைப்பது அரிது. அப்படி ஓய்வு நேரம் கிடைக்கும்போது பயனுள்ள வகையில் பலர் தமது ஆளுமைகளை தமது பதிவுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஆரம்பத்தில் எனக்கும் வலைப்பதிவில் பதிவுகளையிட ஆர்வம் இருந்தது.ஆனால் நேரம் கிடைப்பதில்லை.


வலைப்பதிவில்அதிக ஆர்வம் கொண்ட எனது சகஅறிவிப்பாளரும் சகோதரியுமான டயானாவின்(உங்களால் நல்ல பதிவுகளைதர முடியும் அண்ணா என்று கூறிய அந்த) வார்த்தைகளால் எனது பதிவுகள் தொடர்ந்தன. நன்றி டயானா. இதை விட சக அறிவிப்பாளர்களான கஜமுகன் (இன்னும் நல்லா எழுதுங்கையா என அடிக்கடி கூறும் கணாதிபன்,குணா,ராஜ்மோகன் ஆரம்பத்தில்wordpress இல் பதிவிடும்போது உதவிய ஹோஷியா,ஆரணி மற்றும் பிரஜீவ்,இதைவிட இணைய நண்பர்கள் ஆகியோரின் வாழ்த்துக்கள்,கருத்துக்கள்தான் இந்த 100 பதிவுகளுக்கு படிக்கற்களாக அமைந்தது எனலாம்.

அனைவருக்கும் எனது நன்றிகள். பதிவுகள் தொடரும் .உங்கள் கருத்துக்கள் எனது பதிவுகளுக்கு பக்கபலமாக அமையட்டும்....

சதமடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.மீண்டும் இன்னொரு பதிவில் சிந்திப்போம் ......

சொந்த மண்ணில் தடுமாறும் மேற்கிந்தியத்தீவுகள்
மேற்கிந்தியத் தீவுகளில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருந்த பங்களாதேஷ், இப்போது ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என்ற அடிப்படையில் தொடரை வென்றுள்ளது.
டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ள நாட்டுக்கெதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை பங்களாதேஷ் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 200 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ், நேற்று நடந்த போட்டியில்தான் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடி அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்ற முதல் ஒரு நாள் போட்டித் தொடர் இதுவே.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்திற்கும் இடையிலான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இப்போதைக்கு இது தீராது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ள பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள்.
சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தத் தெரிந்த வீரர்கள் அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவார்கள் என்பது எனது கருத்து.

Tuesday, July 28, 2009

மீண்டும் விகடன் பதிப்பில் எனது பதிவு

இந்தியாவின் முன்னணி சஞ்சிகையான விகடன் பதிப்பகத்தின் விகடனில், "டெஸ்டுக்கு விடை கொடுத்த வாஸ்! என்ற தலைப்பில் நான் பதிவிட்ட பதிவு பிரசுரமாகியுள்ளது. இதைப் பிரசுரித்த விகடன் குடும்பத்திற்கு நன்றிகள். எனது பதிவுகளை வாசித்து கருத்துக்களைக் கூறும் உங்களுக்கும் நன்றிகள்.

இன்னும் பல பதிவுகள் தொடரும். தொடர்ந்தும் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள். அவை இன்னும் பல பதிவுகளையிட உந்துதலாக அமையும்.

மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம் .

Monday, July 27, 2009

அப்பிளில் மெழுகு

அப்பிள், மனிதனுக்கு நல்ல ஊடச்சத்துக்களைக் கொடுப்பதாக அறிந்திருக்கிறோம். இன்று அதே அப்பிள் மூலம் நோய் வரும் என்று பலரும் பேசும் நிலை. காரணம் என்னவென்றால் மெழுகு தடவிய அப்பிள் கடைகளில் விற்பனையாவதாக கூறப்படுகிறது.

நானும் இதை ஆரம்பத்தில் நம்பவில்லை. கடந்த வாரம் ஒரு அப்பிளில் எனது பார்வை பட்டது. அதை எடுத்து தோலின் மேற்பகுதியை சுரண்டிப்பார்ததும் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. அப்பிளின் மேற்பகுதியில் இருந்த மெழுகு என் விரல்களில். புரிந்தது உண்மை. அந்தத் துகள்களை எரித்துப் பார்த்தல் எரிகிறது.
இப்படியான அப்பிளை உண்டு வீணான நோயினை வருந்தி அழைக்கவேண்டுமா நீங்களும் அப்பிளை வாங்கிப் பரீட்சித்துப் பாருங்கள். அதன் பின் சாப்பிடுங்கள்.

Sunday, July 26, 2009

ஜக்சனின் மூக்கு எங்கே?
மைக்கேல் ஜக்சன் உயிருடன் இருந்த நாட்களில் பேசப்பட்டதை விட,அவர் இறந்த பிறகு அதிகம் இப்போது பேசப்படுகிறார். நாளுக்கு நாள் புதிய புதிய பரபரப்புகள்.

ஜக்சன் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை.கொலை செய்யப்பட்டுள்ளார் என ஜக்சனின் சகோதரி பரபரப்புக்குற்றச்சாட்டைக் கூறி சில நாட்களில் இப்போது இன்னும் ஒரு பரபரப்பு. ஜக்சன் மரணம் அடைந்த பிறகு அவரது முகத்தில் மூக்கு இருக்கவில்லையாம். அதற்கு பதிலாக 2 துவாரங்கள் மட்டுமே இருந்தன என்பதே அந்தப் பரபரப்பு.

ஜக்சன் பிரபலம் அடையத் தொடங்கியதும் தனது உருவத்தை மாற்றி கொள்ள 6 தடவை அறுவைச் சிகிச்சை செய்து தனது முகஅமைப்பை மாற்றினார். தனது மூக்கு தந்தையின் மூக்கை போல் பெரிதாக இருப்பதாக கருதி மூக்கை சிறியதாக மாற்ற அறுவைச் சிகிச்சை செய்து தனது மூக்கை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக சிறிய செயற்கை மூக்கைப் பொருத்தினார். இது சிலருக்குத் தெரியும். ஆனால் ஜக்சன் இறந்த பிறகு அவரது உடலில் இருந்த செயற்கை மூக்கைக் காணவில்லையென்று அவரது வீட்டு வேலைக்காரன் கூறியுள்ளது புதிய பரபரப்பாக இப்போது பேசப்படுகிறது. மூக்கைப் போல அவரது உடலில் பொருத்திய செயற்கை உறுப்புகளும் மாயமாம்.
என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? ஜக்சனுக்குத்தான் உண்மை தெரியும். இறந்தும் இன்னும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறார் ஜக்சன்.
நாளை என்ன பரபரப்போ...........

Saturday, July 25, 2009

டெஸ்டுக்கு விடை கொடுத்த வாஸ்

இலங்கையணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளரான சமிந்த வாஸ்,பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணித் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிக்கலைக் கொடுக்கக்கூடியவர்.அதிக வருடங்கள் இலங்கை அணியின் ஆரம்ப,வேகப் பந்துவீச்சாளராகப் பந்து வீசி தனது முதலாவது பந்துவீச்சிலே பல விக்கெட்டுகளைப் பதம் பார்த்தவர்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 2தடவைகள் ஹட்ரிக் சாதனை படைத்தவர்.2001இல் சிம்பாபே அணிக்கெதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஹட்ரிக் உட்பட வாஸ்19 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுதான் ஒருநாள் சரவதேச போட்டி ஒன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. அதன் பின்னர் 2003 இல் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கெதிராக மீண்டும் ஹட்ரிக் சாதனை.முதல் மூன்று பந்துவீச்சுகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4ஆவது பந்துவீச்சாளர் வாஸ்.

வாஸின் சாதனைப் பக்கங்கள்
1993 : இலங்கையில் இடம்பெற்ற பி.சரவணமுத்து வெற்றிக்கிண்ண உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட் தேர்வாளர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

1993 : மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அணி சார்பாக விளையாடும் வாய்ப்பு.

1994 : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகம்.கண்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் வாஸ் விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

1995 : நியூஸிலாந்து கிரிக்கெட் பயணத்தின்போது இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட வாஸ்,அந்நிய மண்ணில் இலங்கை அணிமுதல் டெஸ்ட் வெற்றியைப் பெறக் காரணகர்த்தாவானார்.2 இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி,முதன் முதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் முதலாவது பந்துவீச்சாளரானார்.இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார் வாஸ்.

2001 : இலங்கையில் நடைபெற்ற மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்,இலங்கை அணி3-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள சிறப்பாக செயற்பட்டார்.ஒரு போட்டியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வாஸ் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2004 : இலங்கையணி,தென்னாபிரிக்க அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெறக் காரணமாக அமைந்தார்.

2004 : சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடாத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்,சர்வதேச டெஸ்ட்,ஒருநாள் சர்வதேச அணிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

2005 : இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 300ஆவது விக்கெட்டை வீழ்த்தி,300 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் இரண்டாவது பந்துவீச்சாளரானார்.

2007 : தனது 97ஆவது போட்டியில் கன்னி டெஸ்ட் சதத்தை பங்களாதேஷ் அணிக்கெதிராகப் பெற்றார்.

2007 : இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டியில் நடந்த போட்டியில் வாஸ் தனது100ஆவது போட்டியில் விளையாடினார். இதன் மூலம் 100 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது இலங்கை வீரரானார்.

2008 : மேற்கிந்தியத்‌தீவுகள் மண்ணில் இலங்கை அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியில் வாஸ் துடுப்பாட்டத்தில் 67 ஓட்டங்களைப் பெற்றதோடு 8 விக்கெடுகளையும் வீழ்த்தினார்.

2009 : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

டெஸ்ட் கிரிக்கெட்டில்,இலங்கை ஆடுகளங்களில்180 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு ஆடுகளங்களில் 175 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 12 தடவைகள் கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் மொத்தமாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 2 சந்தர்ப்பங்களில் கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 12 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளையும், பங்களாதேஷ் அணிக்கெதிராக 7 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கெதிராக 15 போட்டிகளில் 49 விக்கெட்டுகளையும், இந்திய அணிக்கெதிராக 14 போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணிக்கெதிராக 10போட்டிகளில் 42 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 18 போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும், தென்னாபிரிக்க அணிக்கெதிராக 11 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிராக 9 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், சிம்பாப்வே அணிக்கெதிராக 15 போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார், வாஸ்.

பந்துவீச்சு மட்டுமன்றி தனது சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை அணிக்குப் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்துள்ளார்.111டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3089ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 1சதம்,13 அரைச் சதங்கள். மொத்தத்தில் சமிந்த வாஸ் இலங்கையணிக்குக் கிடைத்த தலைசிறந்த சகலதுறை வீரர். வாஸ் போன்ற சகலதுறை வீரரை இலங்கையணி பெறுமா என்பது கேள்விக்குறியே.....

வாஸ் நீங்கள் கிரிக்கெட்டில் போஸ்.

Friday, July 24, 2009

இலங்கையிடம் பணிந்தது பாகிஸ்தான்

இலங்கை அணித் தலைவர் குமார் சங்ககாரவின் சதத்துடன் பாகிஸ்தான் அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவடைந்துள்ளது. கடைசிவரை போராடிய பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் மூலம் இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் வென்று,பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக சாதித்துள்ளது.

பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 299 ஓட்டங்களையும் இலங்கை 233 ஓட்டங்களையும் எடுத்தன. 2 ஆவது இன்னிங்சில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளையிழந்து 425 ஓட்டங்களை எடுத்து தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி இலங்கையணிக்கு 492 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் எடுத்தநிலையில் இரு அணித்தலைவர்களும் ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

சங்ககார சுமார் 7 மணி நேரம் நிலைத்து நின்று டெஸ்ட் அரங்கில் தனது 19ஆவது சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

இலங்கைமண்ணில்,பாகிஸ்தான் அணி மூன்று முறை (1994,2000,2005/06) டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இரண்டு முறை (1985/86,1996/97) டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி முடிந்துள்ளது.

ஆட்டநாயகனாக இலங்கை அணித்தலைவர் சங்ககாரவும் தொடர் நாயகனாக இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் குலசேகரவும் தெரிவாகினர். இந்த டெஸ்ட் போட்டியுடன் சமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இலங்கையணிக்கு வாழ்த்துக்கள்......

Thursday, July 23, 2009

பிதாமகனை முந்தினார் லங்கர்

கிரிக்கெட்டின் பிதாமகனான டொனல்ட் பிரட்மன் வசமிருந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை நாயகனாகத் தனது பெயரை மாற்றிக்கொண்டார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜஸ்டின் லங்கர்.

முதல்தர போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த பிராட்மனின் சாதனையே முறியடிக்கப்பட்டுள்ளது. பிரட்மன் 234 போட்டிகளில் 28067 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இந்த சாதனையை 354ஆவது போட்டியில் முறியடித்துள்ளார். இதன் மூலம் முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்ற ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனைக்கு உரித்துடையவரானார்.

சாதனைகள் தொடரட்டும்.....

Tuesday, July 21, 2009

மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் எதிர்காலம் ?

டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான டெஸ்ட் தொடர் ஒன்றை முழுமையாக அந்நிய மண்ணில் பதிவு செய்தது பங்களாதேஷ்.

இந்தப் போட்டித் தொடரில் வழமையான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் விளையாடவில்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய பண மீதி கொடுக்கப்படாமல் உள்ளதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாதென மேற்கிந்திய கிரிக்கெட் வீர‌ர்கள் சங்கம் கூறியது. இதனால் மேற்கிந்தியத்தீவுகள்அணி முற்றிலும் புதிய வீரர்களுடன் களமிறங்கியது. அனுபவம் இல்லாத இந்த வீரர்கள் பங்களாதேஷ் பந்துவீச்சில் சரிவு கண்டனர்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 95 ஓட்டங்களாலும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்4 விக்கெட்டினாலும் வெற்றி பெற்று 2-0 என்ற அடிப்படையில் தொடரைத் தன் வசப்படுத்தி அந்நிய மண்ணில் சாதனை படைத்தது பங்களாதேஷ்.
பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாகவும் போட்டித் தொடரின் நாயகனாகவும் தெரிவானார். இந்தத் தொடரில் ஷகிப் 159 ஓட்டங்களையும் 13 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.

இந்தத் தொடர் வெற்றிக்கு,மேற்கிந்தியத்தீவுகள் அணியின் விளையாடாத வீரர்களுக்குத்தான் பங்களாதேஷ் நன்றி கூற வேண்டும். சில நேரம் போட்டிகளைப் பகிஸ்கரித்த வீரர்கள் விளையாடியிருந்தால் பங்களாதேஷ் அணியின் நிலைமை என்ன ஆகியிருக்கும்......

பங்களாதேஷ் அணியிடம் தோல்வி அடைந்துள்ள மேற்கிந்தியத்தீவுகள் இனி வரும் போட்டிகளில் முழுமையான அணியாகக் களமிறங்கி வெற்றிகளைப் பெறுமா?

Monday, July 20, 2009

லோர்ட்சில் வீழ்ந்த அவுஸ்ரேலியா

லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்ரேலியாவை 75 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 75 ஆண்டுளுக்கு முன்னர் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேன் தலைமையிலான அணி இங்கிலாந்திடம் வீழ்ந்தது நினைவிருக்கலாம்.

லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்ரேலியாவை வெல்லவே முடியாத நிலையை தனது அபார பந்துவீச்சால் சாதித்துக் காட்டினார்பிளின்டாப் .கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தவரும் பிளின்டாப்தான்.

லோர்ட்சில் நடந்த இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 425 ஓட்டங்களைக் குவித்தது. அவுஸ்ரேலியா முதல் இன்னிங்ஸில் 215 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்களை எடுத்துத் தமது துடுப்பாட்டத்தை நிறுத்தி 522 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது. அவுஸ்ரேலியா வெற்றிக்காகக் கடுமையாக முயன்றும் பலன் இல்லை. பிளின்டாபின் பந்துவீச்சில் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வரிசை தகர்ந்தது. பிளின்டாப் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணியின் வெற்றி இலகானது. இங்கிலாந்து 115 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பிளின்டாப் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

இந்த நூற்றாண்டில் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்ரேலியாவை இங்கிலாந்து வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.

1934ஆம் ஆண்டு லோர்ட்சில் நடந்த டெஸ்டில் இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவை வென்றது. அதன் பின்னர் 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

அவுஸ்ரேலிய அணித் தலைவர் பாண்டிங் பாவம். வாய்ச்சொல்லால் வேடிக்கை காட்டும் அவுஸ்ரேலிய வீரர்கள் லோர்ட்சில் சாதிக்கத் தவறி விட்டனர். இனியாவது வாய்க்குப் பூட்டுப் போட்டுவிட்டு துடுப்பால் வேட்டுப் போடுங்கள்...

நிலவில் மனிதன்

நிலவு, இது கவிஞர்களின் உன்னதமான கருப்பொருள். தூரத்திலிருந்து பார்க்கும்போது அழகானது நிலவு. காதலன் காதலியை வர்ணிக்கும்போது நிலவைத்தான் துணைக்கு அழைக்கிறான். இந்த நிலவைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் இல்லை என்றே கூறலாம்.

உன்னதமான இந்த நிலவில் மனிதன் தடம் பதித்து 40 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் 40 வருடங்களுக்கு முன்னர் நிலவில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவில் தடம் பதித்த பெருமையைப் பெற்றனர். நிலவைப் பார்த்து கவிதை புனைந்த கவிஞர்கள் முதல் அனைவரும் வியந்தனர். கவிஞர்கள் சில நேரம் சென்றிருந்தால் நிலவைப் பற்றிய கவிதைகள் இப்போது வருமா என்பது எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான்.

அறிவியல் துறையின் முன்னேற்றத்தில் சாதனைக்குரிய விடயமாக மனிதனின் நிலவுப் பயணம் அமைந்தது.

விண்வெளிக்குச் செல்ல பல தடைகள் இருந்தபோதும் அவற்றைக் கடந்து அப்பல்லோ-11, 16-07-1969 இல் தனது பயணத்தை ஆம்ஸ்ட்ராங் குழுவினருடன் ஆரம்பித்தது. ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை தனதாக்கினார். ஆம்ஸ்ட்ராங் குழுவினர் நிலவில் அமெரிக்கக் கொடியை நாட்டி புகைப்படங்களையும் மண்ணையும் எடுத்துக் கொண்டே பூமிக்குப் புறப்பட்டனர்.

நிலவைப் பார்த்துக் கதை பேசிக்கொண்டிருந்த மனிதன் நிலவில் தடம் பதித்து சாதனை படைத்தான். இந்த சாதனை படைக்கப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ளன.

நிலவைப் பார்த்து கவிஞர்கள் பாடியதை பலவாறு கேட்டோம். நிலவு மனிதனைப் பார்த்துப் பாடியிருந்தால் என்ன பாடியிருக்கும்....

என்ன உங்களுக்கும் நிலவுக்குப் போக ஆசையா....

தனிமையாக இருந்து நிலவை உற்றுப் பாருங்கள்.... அதில் சில நேரம் உங்கள் அன்பிட்குரியவர் தென்படலாம். இப்போது சொல்லுங்கள் நிலவுக்குப் போக ஆசையா?

Sunday, July 19, 2009

வாஸ் ஓய்வு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
பாகிஸ்தான் அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள்,20-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் வாஸ் தெரிவித்துள்ளார்.
110 டெஸ்ட் போட்டிகளில் வாஸ் 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
வாஸ் பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் சாதித்துள்ளார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கவனத்தை செலுத்துங்கள் வாஸ் ......
வாஸ் பற்றிய முழுமையான பதிவு மிக விரைவில்...........

Saturday, July 18, 2009

நன்றி விகடன் குடும்பமே.....

இந்தியாவின் முன்னணி சஞ்சிகையான விகடன் பதிப்பகத்தின் youthful விகடனில், நான் அன்ட்ரூ பிளின்டாப் பற்றி பதிந்த பதிவு பிரசுரமாகியுள்ளது. இதைப் பிரசுரித்த விகடன் குடும்பத்திற்கு நன்றிகள்.

எனது பதிவுகளை வாசித்து கருத்துக்களைக் கூறும் உங்களுக்கு நன்றிகள். இன்னும் பல பதிவுகள் தொடரும். தொடர்ந்தும் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள். அவை இன்னும் பல பதிவுகளையிட உற்சாகமாய் அமையும். வாசிப்பு குறைந்து வரும் இக் காலகட்டத்தில் பதிவுகள் மூலமாக வாசிப்பு அதிகமாகட்டும்.

Friday, July 17, 2009

சதமடித்த ரூடி

என்ன இந்தப் படத்தைப் பார்த்ததும் யார் இவரென யோசனையா? அடிக்கடி இவரது சைகைகளை அடிக்கடி பார்த்திருப்பீர்களே...இவர்தான் தென்னாபிரிக்காவை சேர்ந்த சாதனை நடுவர் ரூடி கர்ட்சன் (Rudi Koertzen)

நேற்று லார்ட்சில் ஆரம்பமான அவுஸ்ரேலிய,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நடுவராக பணியாற்றி சாதனை புரிந்துள்ளார். இது ரூடி நடுவராகப் பணியாற்றும் 100ஆவது டெஸ்ட் போட்டி. இவர் 1992ஆம் ஆண்டு இந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் நடுவராக அறிமுகமானார்.

கடந்த வாரம் 200 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்நடுவராக பணியாற்றிய முதல் நடுவர் என்ற சாதனையை புரிந்த ரூடி,நேற்று ஸ்டீவ் பக்னருக்கு பின்100 டெஸ்ட் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

60 வயதைக் கடந்துள்ள ரூடி இன்னும் பல போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றி சாதனை படைப்பார் என்பது எனது கருத்து.

சதமடித்த 'ரூடி'க்கு வாழ்த்துக்கள்...

இசையுலகின் சகா‌ப்த‌ம் மறைந்தது

மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்ற க‌ர்நாடக இசை‌ப் பாடக‌ி யார் என்று கேட்டால் டி.கே.ப‌ட்ட‌ம்மா‌ள் என்று அனைவரும் சொல்வார்கள். டி.கே.ப‌ட்ட‌ம்மா‌ள் நேற்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இறக்கும்போது வயது 90. இறு‌தி‌ச் சட‌ங்குக‌ள் நிறைவு பெற்றுள்ளன.

பட்டம்மா‌ளி‌ன் இசை வாழ்வை பற்றிய சிறப்பான விடயங்களை உடனடியாக தர முடியவில்லை. காரணம் பதிவிட நேரம் கிடைக்கவில்லை. நானும் 8 வருடங்கள் சங்கீதம் பயின்றவன் என்ற வகையில் பட்டம்மாள் பற்றி அறிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்......

ப‌ட்ட‌ம்மா‌ளி‌ன் இசை வரலாறு

கர்நாடக இசைமேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டினர். அவருடைய தந்தையார் பட்டு என்று செ‌ல்லமாகஅழைத்ததே பின்னர் பட்டம்மாள் என்ற பெயராக நிலைத்தது.


ஆரம்பத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள் பின்னர் முறையாக இசையைக் கற்றார். தனது 10ஆ‌ம் வயதிலேயே இந்திய வானொலியில் க‌ர்நாடக இசை‌ப் பாடலை‌ப் பாடி ர‌சிக‌ர்களை‌க் கவ‌ர்‌ந்தா‌ர்.1932ஆம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏ‌றிய ப‌ட்ட‌ம்மா‌ள் கைத‌ட்ட‌ல்களை வா‌ரி‌க் கு‌வி‌த்தா‌ர். இதுவே இவரது இசை அரங்கேற்றம். ஆரம்பமே அசத்தலாக இருந்தது.

பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைக‌ளிட‌ம் இசை பயின்ற ப‌ட்ட‌ம்மா‌ள் ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரிகள் செய்துள்ளார். "பைரவி" ராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப்புகழ் பெற்றார்.

பாபநாசம் சிவன் மூல‌ம் டி.கே.பட்டம்மா‌ள் ‌திரை‌யிசை‌ப் பாட‌ல்களு‌க்கு அ‌றிமுகமானா‌ர்.தியாகபூமி என்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் அவ‌ர் பாடகியானா‌ர். இவரது பாட‌ல்க‌ள் அனேகமாக பாரதியாரின் பாடல்களாகவு‌ம் தேசபக்தி பாடல்களாகவு‌மே இரு‌ந்தன.

இ‌ந்‌தியா சுத‌ந்‌திர‌ம் பெற முன்னரே இசை உல‌கி‌ல் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். ஆ‌ங்‌கிலேய‌ர் ஆ‌ட்‌சிக்கால‌த்‌தி‌ல் பார‌தியா‌ரி‌ன் எழு‌ச்‌சி‌ப் பாட‌ல்களை‌ப் பாடி ம‌க்க‌ளிடையே சுத‌ந்‌திர உண‌ர்வை‌‌த் தூ‌ண்டிய பெருமையு‌ம் இவருக்குண்டு. மகாத்மா காந்தி,ஜவகர்லால் நேரு போன்ற பல தேசியத் தலைவர்களை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்துப் பாராட்டுகளையு‌ம் வா‌ழ்‌த்துகளையு‌ம் பெற்றுக்கொண்டார்.

இந்தியா 1947 ஆகஸ்டு 15ஆம் திகதி சுதந்திரம் அடைந்தது.சுதந்திரம‌டையும் சமயத்தில்,ஆகஸ்டு 14 இரவு பட்டம்மாள் இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடினார்.இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்திப் பாடல்களை பாடினார்.

இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் கர்நாடக இசைப்பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்தது.

பட்டம்மாளை தேடி வந்த விருதுகள்

கர்நாடக இசைக்கு பட்டம்மாள் அளித்த பங்கை கெளரவிக்கும் வகையில் அவருக்கு 1971ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் 1998ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது. இதை விட கலைமாமணி,கான சரஸ்வதி, சங்கீத சாகரரத்னா,சங்கீத கலாநிதி என 60 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை,கனடா,அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்‌ஸ்,சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த இவர் சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்த மூவரும் சங்கீத பெண் மும்மூர்த்திகளாகப் போற்றப்பட்டார்கள்.

பல திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களைப் பாடியுள்ளார்.பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை மேதை பட்டம்மாளின் மறைவு இசையுல‌கி‌ற்கு மிகப்பெரும் இழப்பு....

பட்டம்மாள் மறைந்தாலும் அவரது பாடல்கள் பார் முழுவதும் ஒலித்து அவர் நாமத்தை கூறிக்கொண்டேயிருக்கும் .............

Thursday, July 16, 2009

பட்டம்மாள் மறைவு
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில் காலமானார். தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம் நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின் தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே.
மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை. கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள்.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்எல் வசந்தகுமாரிக்கு மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார் பட்டம்மாள்.

அமெரிக்கா,ஜெர்மனி, பிரிட்டன் என உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியவர் பட்டம்மாள். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமல்ஹாஸனின் ஹேராம் படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியுள்ளார் பட்டம்மாள்.

இந்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும்,சங்கீத நாடக அகாடமி விருது,சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் பெற்றவர் பட்டம்மாள். இவரது சகோதரர் டி.கே. ஜெயராமனும் மிகப்பெரிய கர்நாடக இசைக் கலைஞர்.பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவருக்கு பேத்தி ஆவார்.

பட்டம்மாள் அவர்கள் மறைந்தாலும் அவரது இசை என்றும் எம் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
பட்டம்மாள் பற்றிய முழுமையான பதிவை எதிர்பாருங்கள்.......
அதிரடி ஓய்வு

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அன்ட்ரூ பிளின்டாப் சிறந்த சகல துறை வீரர். இங்கிலாந்து அணி கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். அண்மைக் காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பிளின்டாப் அடிக்கடி அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் பிளின்டாப் முதல் டெஸ்டில் பங்கேற்றார். இருப்பினும் மீண்டும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார் பிளின்டாப். இருந்தாலும் ஒரு நாள், "20-20" போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த பிளின்டாப் இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் இயன் பொத்தமுக்கு நிகராகப் போற்றப்பட்டார். மிக விரைவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற அவருக்கு, ஏற்பட்ட காயங்கள் அவரது செயற்பாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின.முழு உடற் தகுதியுடன் பிளின்டாப் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறைவு.

இங்கிலாந்து அணியின் சிறந்த சகலதுறை வீரரான பிளின்டாப் 76 டெஸ்ட் போட்டிகளில்,5 சதம், 25 அரைச்சதம் உட்பட 3708 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 141 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 3821 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 3 சதங்கள்,18அரைச்சதங்கள்.169 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பிளின்டாப் கிரிக்கெட்டில் தொடரும் காயங்கள்:

1999: தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதத்தில் காயம்.இதனால் தொடரின் அரைவாசியில் நாடு திரும்பினார்.

2000: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முதுகுப் பகுதியில் காயம்.

2002: குடலிறக்கம் காரணமாக "சத்திரசிகிச்சை".

2003: தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷ்,சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.

2005: இடது கணுக்காலில் முதல் "சத்திரசிகிச்சை".

2006: இடது கணுக்காலில் "சத்திரசிகிச்சை"செய்த இடத்தில் மீண்டும் பிரச்சினை. இதனால் இரண்டாவது முறையாக அதே இடத்தில் "சத்திரசிகிச்சை'.

2007: கணுக்காலில் மீண்டும் வலி.பங்களாதேஷ்,மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களிலிருந்து விலகல்.அடுத்தடுத்து இரண்டு முறை கணுக்காலில் "சத்திரசிகிச்சை'.

2008: முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.

2009: இடுப்புப் பகுதியில் காயம்.மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.

2009: ஆஷஸ் தொடரில் முழங்கால் காயம்.

பிளின்டாப் கிரிக்கெட் வாழ்வில் காயங்கள் ஏராளம். அந்தக் காயங்களுடன் அவர் கிரிகெட்டில் மிகக் குறைவான காலத்தில் சாதித்தவை ஏராளம்.

பிளின்டாப் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.

Wednesday, July 15, 2009

இங்கிலாந்து வீரர் பிளின்டாப் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுஇங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். இருப்பினும் ஒரு நாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளார். பிளின்டாப் பற்றிய சிறப்பு பதிவை நாளை எதிர்பாருங்கள்......
2011உலகக் கிண்ணக் கிரிக்கெட் சின்னம் "லோகோ" அறிமுக விழா
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 2011ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை,பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானிலும் 14 போட்டிகள் நடைபெறவிருந்தபோதிலும் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் போட்டிகள் நடைபெறாது என கூறியது ஐ.சி.சி.

இது இப்படி இருக்க உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா மும்பையில் நடந்தது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1975 மற்றும் 1979 உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் கிளைவ் லாயிட்,1983 இல் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் பல்வீந்தர் சிங் சாந்து, வெங்சர்க்கார்,1996 இல் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்ற, இறுதிப் போட்டியின் நாயகன் அரவிந்த டி சில்வா,1999 மற்றும் 2003 இல் கிண்ணத்தை வென்ற அவுஸ்ரேலிய அணியில் இடம்பெற்ற மைக்கேல் பெவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

14 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தானில் போட்டிகள் இல்லையென்பதால் மற்றைய மூன்று நாடுகளுக்கும் போட்டிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
2011 இல் உலகக் கிண்ணம் ஆசியா வசமாகுமா.....

Tuesday, July 14, 2009

பாகிஸ்தானுக்கு என்ன ஆச்சு........

அசத்தலான பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி இரண்டாவது டெஸ்டில் 7 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை வென்றது. நுவன் குலசேகர, ரங்கன ஹேரத் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் சுருண்ட பாகிஸ்தான் இலங்கை மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை இழந்தது.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 90 ஓட்டங்களும் இலங்கை அணி 240 ஓட்டங்களும் எடுத்தது.இரண்டாம் நாள்ஆட்டநேர இறுதியில் பாகிஸ்தான் அணி,இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பவாத் ஆலம் -102,யூனிஸ் கான்-35 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பித்தபோது ஆலம், யூனிஸ்கான் ஜோடி வேகமாக ஓட்டங்களைக் குவித்தது. இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்காக 200 ஓட்டங்களை சேர்த்த நிலையில்,யூனிஸ்கான் (82)சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். பாகிஸ்தானின் அறிமுக வீரரான பவாத் ஆலம் 168 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டவில்லை.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 285ஓட்டங்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் கடைசி 8 விக்கெட்டுகளை 35ஓட்டங்களுக்கு இழந்தது. பாகிஸ்தான் 2ஆம் இன்னிங்சில் 320 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

171ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வேகமாக ஓட்டங்களைக் குவித்து 3ஆம் நாளிலே 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டு சாதனை படைத்தது குமார் சங்ககார தலைமையிலான இலங்கை அணி.

பாகிஸ்தானின் பவாத் ஆலம் இலங்கையின் குலசேகர ஆகியோர் போட்டி நாயகன் விருதைப் பெற்றனர்.

அடுத்த போட்டியில் முரளி களமிறங்கினால் இன்னும் போட்டி சூடு பிடிக்கும். இந்தப் போட்டி எத்தனை நாட்களுக்குள் முடியப்போகிறதோ.............

அந்நிய மண்ணில் முதல் வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தான வெற்றி ஒன்றை அந்நிய மண்ணில் பதிவு செய்தது பங்களாதேஷ்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 95 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றி பெற்றுள்ளது. அந்நிய மண்ணில் பங்களாதேஷ் அணி பெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி இது.

இந்தப் போட்டியில் வழமையான மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் விளையாடவில்லை. மேற்கிந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொடுக்க வேண்டிய பண மீதி கொடுக்கப்படாமல் உள்ளதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாதென மேற்கிந்திய கிரிக்கெட் வீர‌ர்கள் சங்கம் கூறியது. இதனால் மேற்கிந்தியத்தீவுகள்அணி முற்றிலும் புதிய வீரர்களுடன் களமிறங்கியது. புதிய வீரர்களில் சிலர் மட்டுமே பிரகாசித்தனர்.

சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திய பங்களாதேஷ் வீரர்கள் மகத்தான வெற்றி ஒன்றைப் பெற்றனர். இதுவே பங்களாதேஷ் அணி அந்நிய மண்ணில் அடைந்த வெற்றி. 60 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பங்களாதேஷ் அணி பெற்றுக் கொண்ட 2ஆவது வெற்றி இது.

2ஆவது போட்டியிலும் பங்களாதேஷ் அணியின் வெற்றி அலை தொடருமா....

Monday, July 13, 2009

வைரமுத்துக்கு இன்று வயது 56

வைரமுத்து,எனக்குப் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். இன்றைய நிலையில் நா.முத்துக்குமார், பா.விஜய்,தாமரை,யுகபாரதி என புதிய பாடலாசிரியர்களின் பாடல்களில் மனது மயங்கினாலும் வைரமுத்துவின் பாடல்வரிகளை எப்போது கேட்டாலும் மனதை நிறைக்கத்தான் செய்கின்றது.

வைரமுத்துவும் இளையராஜாவும்.... வைரமுத்துவும் ரகுமானும் கூட்டணி அமைத்து சரணமும் பல்லவிகளும் எழுதி இசைத்த பாடல்கள் என்னைப் பொறுத்தவரை அருமையான காலங்கள். இசை உள்ளங்கள் காதலித்த (பாடல் வரிகள்,இசை) காலங்கள்.

அருமையான பாடல் வரிகளுடன் ரசிகர்களுக்குப் பரிட்சயமில்லாப் பழந்தமிழ்ப்பாடல்களையும் நேரடியாகவும் சிலநேரம் மறைமுகமாகவும் வைரமுத்து தந்துள்ளார். 'தீண்டாய் தீண்டாய்'(படம்- என் சுவாசக்காற்றே) பாடலில் ஆரம்பம் ஒரு சங்கப்பாடலே... இப்படிப் பல பாடல்கள்.....

வைரமுத்து,கவிதைகள் என்று எழுதியதை வாசிக்கும்போது சில சமயம் சில கவிதைகள் பிடிக்காமல் போவதுண்டு. அதுவே பாடலாகும்போது அதிகம் ரசிக்கப்படுவதுமுண்டு. 'என்னவளே அடி என்னவளே' 'நீ காற்று நான் மரம்' இவை சில.

ஜூலை 13-1953 இல் இந்தியாவின் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் பிறந்தார். 1984இல் நிழல்கள் திரைப்படத்தின் "இது ஒரு பொன் மாலைப்பொழுது" எனத் தொடங்கும் பாடல் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார்.இதுவரை 5500 க்கும் அதிகமான பாடல்களைத்தந்த இவருக்கு சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது ஐந்து முறை கிடைத்துள்ளது.

பாடல்கள் மட்டுமன்றி பல கவிதைத் தொகுப்புகளையும் தந்துள்ள வைரமுத்து இன்னும் பல பாடல்களைத் தரவேண்டும்.....

வைரமுத்து....தமிழ் கவிதைக்குக் கிடைத்த பெரும் சொத்து....

வாழ்த்துக்கள் வைரமுத்து........

Saturday, July 11, 2009

ஒரே நாளில் 309 இன்று ஜூலை 11.இதே திகதியில் 1930ஆம் ஆண்டு கிரிக்கெட் வரலாறு ஒன்று நிகழ்ந்தது.அதாவது கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக கருதப்படும் டான் பிராட்மேன் இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 309 ஓட்டங்களை எடுத்துஆட்டமிழக்காமல் திகழ்ந்தார்.ஒரே நாளில் முச்சதம் எடுத்த ஒரே வீரர் டான் பிராட்மேன்தான்.

இன்று வரை அவரது இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.அதே போல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாளில் அதிக ஓட்டங்களை எடுத்ததும் இந்த நாளில் இதே டெஸ்ட் போட்டியில் நிகழ்ந்தது.
டான் பிராட்மேன் 309ஓட்டங்களைக் குவிக்கஅவுஸ்ரேலியா இந்த ஒரே நாளில் 458 ஓட்டங்களைக் குவித்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. டான் பிராட்மேன் உணவு இடைவேளைக்கு முன் சதம் எடுத்து இந்த நாளில் சாதனை புரிந்தார்.
இன்று டான் பிராட்மேன் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் படைத்திருப்பார்.....

Friday, July 10, 2009

வினோத பஸ்

நாம் பஸ்ஸில் பயணிக்கும்போது சந்திக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகம். பாவனைக்கு உதவாத பஸ்கள் அதிகமாக வீதிகளில் ஓடுவதை கண்டிருக்கிறோம். இந்த பஸ் எப்படி இருக்கு.....

இந்த பஸ்ஸில் ஒரு ஆடம்பர வீடே இருக்கிறது

இப்படி பஸ் இங்கும் ஓடினால் பஸ்ஸில் ஒன்றுமே இருக்காது. ஏன் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.........


கவாஸ்கருக்கு இன்று 60 ஆவது பிறந்த நாள்


கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் இன்னொரு மைல்கல்லை எட்டுகிறார்.இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணியில் 1971இல் அறிமுகமான கவாஸ்கர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார்.

1971ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணியின் அச்சம் தரும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தலைக்கவசம் கூட இல்லாமல் இளம் வீரராக தன் கிரிக்கெட் வாழ்வை ஆரம்பித்த சுனில் கவாஸ்கர் அந்த தொடரில் 774 ஓட்டங்களைக் குவித்து கிரிக்கெட் உலகிற்கு தன் வரவை அறிவித்தார்.

"கிரிக்கெட் பிதாமகன்' சர் டொனால்டு பிராட்மேனின் 29 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பதே தன் கனவு என்று கூறிய கவாஸ்கர் அந்த சாதனையை முறியடித்து,10,000 டெஸ்ட் ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை எட்டினார்.கடைசி வரை அவரது டெஸ்ட் சராசரி 50 ஓட்டங்களுக்கு மேல் இருந்தது.

கவாஸ்கர் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள் அனைவரும் பயங்கரமானவர்கள்.அது போன்ற பந்து வீச்சாளர்களை எதிர் கொண்டு 16 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் நீடிப்பது கவாஸ்கர் போன்ற ஒரு சில வீரர்களுக்கே சாத்தியம்.

இந்திய அணியின் வெற்றியில் கவாஸ்கரின் பங்கு மகத்தானது.கடந்த 1971இல்மேற்கிந்தியத்தீவுகள் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்க முக்கிய காரணமாக இருந்தார்.பின்னர் 1976இல் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த போட்டியில் இவரது தலைமையிலான இந்திய அணி 400ஓட்டங்களுக்கு மேல் "சேஸ்' செய்து சாதனை படைத்தது.

1983இல் உலக கோப்பை மற்றும் அவுஸ்ரேலியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா கோப்பை வெல்ல பெரிதும் கைகொடுத்தார்.

கவாஸ்கர் அதிக சர்ச்சைகளையும் சந்தித்தார். 1975இல் நடந்த முதலாவது உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 174 பந்துகளில் வெறும் 36 ஓட்டங்கள் எடுத்தார். வெங்கட்ராகவன் அணித் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமை வேகத்தில் ஆடியதாக விமர்சிக்கப்பட்டார்.

கடந்த 1987 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் கவாஸ்கர் 4ஓட்டங்களுக்கு மும்பை ரசிகர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய இவர் 125 டெஸ்டில் 34 சதம் உட்பட 10,122 ஓட்டங்களை எடுத்துள்ளார்.108 ஒரு நாள் போட்டிகளில் 1 சதம் உட்பட 3,092 ஓட்டங்களை எடுத்துள்ளார். ஐ.சி.சி. பதவிகளை துறந்த இவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக தொடர்கிறார்.
இன்று 60வது பிறந்த நாள் காணும் கவாஸ்கருக்கு சச்சின் உட்பட உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எங்கள் வாழ்த்துக்களும் கவாஸ்கருக்கு......

நீச்சலில் மீண்டுமொரு உலக சாதனை நேற்றைய பதிவில் நீச்சலில் இனி உலக சாதனைகள் தொடரும் என குறிப்பிடிருந்தேன்.இன்றும் ஒரு உலக சாதனை....

அமெரிக்க தேசிய நீச்சல் போட்டித் தொடரில் 100.மீ பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவில் நட்சத்திர அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 50.22 வினாடிகளில் இந்தத் தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்க நீச்சல் வீரர் இயன் குரோக்கரின் முன்னைய உலக சாதனையான 50.40 வினாடிகள் என்பதை பெல்ப்ஸ் தற்போது முறியடித்து 100மீ பட்டர்ஃபிளை உலக சாதனையாளரானார். பெல்ப்ஸ் தற்போது 5 உலக சாதனைகளுக்கு சொந்தமானவராகிறார்.400 மற்றும் 200 மீ-மெட்லி,200 மற்றும் 100 மீ- பட்டர் பிளை,ஃப்ரீ ஸ்ட்ய்லெ ஆகியவற்றில் உலக சாதனைகளை தன் வசம் வைத்திருக்கிறார் பெல்ப்ஸ்.

நீச்சலில் இன்னும் தொடரட்டும் சாதனைகள்......

Thursday, July 9, 2009

நீச்சலில் உலக சாதனை
அமெரிக்க நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் நடந்த 100 மீ.பேக்ஸ்ட்ரோக் போட்டியில் மைக்கேல் பெல்ப்சின் உலக சாதனையை ஆரோன் பியர்சோல் முறியடித்துள்ளார்.

உலகின் முதல் நிலை வீரர் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் கடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் 8 தங்கம் வென்று அசத்தியிருந்தார். இவருக்கு அடுத்து வரும் போட்டிகளில் மற்றொரு அமெரிக்க வீரர் பியர்சோல் கடும் சவால் கொடுக்கக் காத்திருக்கிறார். அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீ.பிரேக் ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்ற பியர்சோல் 1 நிமிடம் 44.23 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து மைக்கேல் பெல்ப்சின் உலக சாதனை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
நீச்சலில் உலக சாதனைகள் இனித் தொடரும்......

Wednesday, July 8, 2009

ஆஷஸ் ஆரம்பம்
ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற இங்கிலாந்து,அவுஸ்ரேலிய அணிகள் வரிந்து கட்டிக்கொண்டுள்ள நிலையில் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகிறது. இங்கிலாந்து அவுஸ்ரேலிய அணிகளிடையே கடந்த 122 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வரும் ஆஷஸ் தொடரில் அவுஸ்ரேலிய அணியே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது.கடைசியாக கடந்த 2006-07இல் நடந்த ஆஷஸ் கோப்பையை 5-0 என்ற கணக்கில் முழுமையாக அவுஸ்ரேலியா கைப்பற்றி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தது.

கடந்த முறை ஆஷஸ் தொடரில் விளையாடிய அவுஸ்ரேலிய வீரர்களில் கில்கிறிஸ்ட்,ஹைடன், லாங்கர், மார்ட்டின், வார்னே,மெக்ராத் ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் அவுஸ்ரேலிய அணி அனுபவம் குறைந்த அணியாகவே தெரிகிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலமென்றாலும் அதுவே நெருக்கடியாகவும் கருதப்படுகிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலமென்றாலும் அதுவே நெருக்கடியாகவும் கருதப்படுகிறது. இம்முறை ஆண்ட்ரூ ஸ்டிராஸ் தலைமையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில்,பீட்டர்சன்,பிளின்டாஃப் இருவரும் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது. தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள்................

ஆஷஸ் வரலாறு:1882இல் லண்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியை மறக்க முடியாது. இதில் அசுர வேகத்தில் பந்துவீசிய பிரட் ஸ்போபர்த் 14 விக்கெட் வீழ்த்த அவுஸ்ரேலிய அணி, இங்கிலாந்தை 7ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இது குறித்து லண்டன் "ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகையில் ரெஜினால்டு ஷர்லி புரூக்ஸ் மிகவும் கேலியாக விமர்சனக் கட்டுரை எழுதினார்.அதில் "1882- ஆக- 29ஆம் திகதி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது.இதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ணியின் உடல் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் அவுஸ்ரேலியாவுக்கு எடுத்து செல்லப்படுகிறது என கண்ணீர் அஞ்சலி போல குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் 1882-83இ ல் இங்கிலாந்து அணி,அவுஸ்ரேலியா சென்றது.அப்போது இழந்த சாம்பலை(ஆஷஸ்) இங்கிலாந்து அணி மீட்குமா என்று ஊடகங்களில்

செய்திகள் வெளியாயின. இம்முறை இவோ பிளிக் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை 2-1 என வென்று பதிலடி கொடுத்தது. இதையடுத்து மெல்பேர்னில் இருந்த சில பெண்கள் சேர்ந்து மூன்றாம் டெஸ்டில் பயன்படுத்திய "பெயில்சை' எரித்து அதன் சாம்பலை சுமார் 6 அங்குல உயரமுள்ள செம்பழுப்புநிற மண்ணால் செய்யப்பட்ட கலசத்தில் போட்டு தலைவர் பிளிக்கிடம் கொடுத்தனர்.எரிக்கப்பட்ட பொருள் குறித்து பல்வேறு செய்திகள் கூறப்படுகிறது.சிலர் "பெயில்ஸ்' அல்ல பந்து என்கின்றனர். ஒரு பெண்ணின் முகத்தை மூடியிருந்த துணி எரிக்கப்பட்டு அதன் சாம்பல் தான் கலசத்தில் உள்ளதாக தலைவர் பிளிக்கின் மனைவி குறிப்பிட்டுள்ளார். தற்போது லார்ட்சில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கழக

அருங்காட்சியகத்தில் கோப்பை போன்ற அந்த சிறிய ஆஷஸ் கலசம் பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது. இதற்குப் பின் நடந்த இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள் ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடராக நடத்தப்படுகிறது.

என்ன இவ்வளவும் வாசித்து களைப்பாக இருக்கிறதா....அவ்வளவும்தான். ஆஷஸ் தொடரில் முடி சூடப்போவது யார்? சக்தி fm கேளுங்கள்.....
கங்குலிக்கு இன்று பிறந்த நாள்
இந்தியாவின் தலை சிறந்த கிரிக்கெட் அணித் தலைவர் என்று வர்ணிக்கப்படும் சௌரவ் கங்குலி இன்று தனது 37ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

1992 இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 16 சதங்கள்,35அரைச்சதங்கள். 311 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 11363 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 22 சதங்கள்,72அரைச் சதங்கள். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 11000 ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் 5ஆவது வீரராக உள்ளார்.
பல்வேறு தொடர்களிலும் அணியை சிறப்பாக வழி நடத்திய சிறந்த தலைவன்.
இன்றைய தினத்தில் அவர் ஒரு புதிய திட்டத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார். வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியிடலாம். மேலும் "கொல்கட்டா இளவரசன்' என்று செல்லமாக அழைக்கப்படும் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் பதவிக்கும் பரிந்துரை செய்யும் முயற்சிகளும் நடைபெறுகிறது.

கிரிக்கெட் வர்ணனையாளர், பயிற்சியாளர், கிரிக்கெட் சபைத் தலைவர்.... இதில் கங்குலியின் 2ஆவது இன்னிங்ஸ் எதில் அசத்தலாக இருக்கும்? கங்குலியே தீர்மானிக்கட்டும்.............
ஜாக்சனின் பிரியாவிடை
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் மல்கி விடை கொடுக்க பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன் பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் நேற்று இரவு பிரியாவிடை பெற்றார்.

இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாதென்று கூறுமளவுக்கு மிகப் பிரமாண்டமாக ஜாக்சனின் இசையை சுவாசித்தபடி அவருக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் அவரது ரசிகர்கள்.
ஜூன் 25ஆம் தேதி மரணமடைந்த ஜாக்சனின் உடல் தங்க முலாம் பூசப்பட்ட பிரேதப் பெட்டியில் வைக்கப்பட்டு பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால் குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை.அதன் பின்னர் மைக்கேல் ஜாக்சனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவு நிகழ்ச்சி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து 20 ஆயிரம் பேர் இந்த நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி,கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்சன்,கோபே பிரையன்ட்,ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.ஜாக்சனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்சனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்சனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.உலகம் முழுவதும் ஜாக்சனின் நினைவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யபப்ட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.

ரசிகர்கள் கண்ணீர் மல்கி விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்சன்.......ஜாக்சன் மறைந்தாலும் அவரது இசை உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்...............

Tuesday, July 7, 2009

தோனிக்கு வயது 28

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான தோனிக்கு இன்று 28 ஆவது பிறந்த நாள். கிரிக்கெட்டுக்கு வந்த வேகத்தில் வளர்ச்சி கண்ட வீரர் இவர். இந்திய அணியின் வெற்றித் தலைவராக தோனி ஜொலிக்கிறார்.இவரது தலைமையில் இந்திய அணி, 55 போட்டிகளில் விளையாடி 33 வெற்றிகளை பெற்றுள்ளது. வெற்றி சராசரி 66.00. ஏனைய இந்திய முன்னாள் தலைவர்களைவிட தோனியின் வெற்றி சராசரி அதிகம்.

இந்த ஆண்டு இதுவரை தோனி 12 ஒரு நாள் போட்டி களில் விளையாடி 6 சதம் உட்பட 632 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.சராசரி 90.28.

139 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 4567 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்டிகளின் வீழ்ச்சிக்குப் பின் கரீபிய மண்ணில் தோனி தலைமையில் எழுச்சி கண்டுள்ளது இந்திய அணி.

தற்போதைய நிலையில் ஏராளமான பெண் ரசிகைகள் இவர் பக்கமே .....

வாழ்த்துக்கள் டோனி....'போல்ட்' ஆகாமல் இருந்தால் சரி ..........

Sunday, July 5, 2009

சாதனை நாயகன்ஃபெடரர்

ஜூலை-5.....இது ரோஜர்ஃபெடரர் எழுச்சி கொண்ட நாள்......

தனது நீண்ட நாள் டென்னிஸ் கனவை விம்பிள்டன் டென்னிஸ் சாதித்துக் காட்டினார். விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் அன்டி ரொடிக்கை 5-7,7-6,7- 6,3- 6,16-14 என்ற செட்களில் போராடி வீழ்த்தி 15ஆவது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை சுவீகரித்து சாம்ப்ராஸ் முன்னிலையில் உலக சாதனை புரிந்தார்.பீட் சாம்ப்ராஸ் இதற்கு முன்னர் அதிக பட்சமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உலக சாதனை படைத்திருந்தார். இந்தப் போட்டியைக் காண வந்த சாம்ப்ராஸ் தனது சாதனையை ஃபெடரர் முறியடிப்பதை நேரில் கண்டு ரசித்தார்.

கடைசி செட் ஆட்டம் இதுவரையிலான விம்பிள்டன் வரலாற்றில் மிக நீண்ட நேரம் நடைபெற்றதாக அமைந்தது. இந்த இறுதிப்போட்டி 4மணி 16நிமிடம் நீடித்து டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகவும் விருந்து படைத்தது.

இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலிடமிருந்து உலகின் நம்பர்-1 வீரர் என்ற அந்தஸ்தையும் ஃபெடரர் பெற்றார்.

இதுவரை ஒரே ஒருமுறை மட்டும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை (2003 அமெரிக்க பகிரங்க பட்டம்) வென்றுள்ள ரொடிக் 2004,2005 ஆகிய ஆண்டுகளில் நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியிலும் ஃபெடரரிடம் தோல்வியுற்றார்.

பெடரரின் சாதனை சில:

15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றி உலக சாதனை.

6ஆவது விம்பிள்டன் பட்டம்.

விம்பிள்டன் டென்னிசில் தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிக்கு முன்னேறிய முதல் வீரர்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 20ஆவது முறையாக (விம்பிள்டன்-7,அமெரிக்க-5,ஆஸி-4,பிரெஞ்ச்-4) இறுதிக்கு முன்னேறியமை.

இப்படி சாதனைகள் பல பல.....

விம்பிள்டன் பட்டம் வென்று உலக அளவில் தனது ரசிகர்களை ஆனந்தத் தாண்டவமாட வைத்துள்ள ஃபெடரர் தான் இன்னும் சாம்பியன் தான்,இன்னும் தன் பயணம் முடியவில்லை என்பதை இன்னும் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார்.

தன் சாதனைகளைக் குறிப்பிடும் பெடரர் வாழ்க்கையில் ஒரு முறையாவது விம்பிள்டன் சாம்பியனாக வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு,ஆனால் 6 முறை வென்றுள்ளேன்."நான் என்னால் சிந்திக்க முடியாத அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்".அனைத்து சாதனைகளையும் முறியடிக்க வேண்டும் என்ற வெறி இருந்ததில்லை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத தகுதியும் திறமையும் இவரிடம் உள்ளது. தற்போது அவரின் வயது 27. தற்போதைய நிலையில் தன் ஆட்டத்தை இன்னும் நிலை நிறுத்தினால்,டென்னிஸ் உலகம் இதுவரை கற்பனை செய்திட முடியாத உயரத்தை தொடுவார் இது எனது மனதில் தோன்றும் கருத்து.

சாதனை நாயகனே உனக்கு இனிய வாழ்த்துக்கள்...தொடரட்டும் சாதனைகள்.....

Saturday, July 4, 2009

செரீனாவிடம் பணிந்தார் வீனஸ்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதன்மையான விம்பிள்டன் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் திகதி ஆரம்பமானது. நாளையுடன் போட்டிகள் நிறைவுபெறவுள்ளன.

இன்று நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனும் தனது மூத்த சகோதரியுமான வீனசை எதிர்கொண்டார் செரீனா. அதில் 7-6,6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று,சம்பியன் பட்டத்தைப் பெற்றார். இதற்கு முன்னர் 2002,2003 ஆம் ஆண்டுகளில் இப் பட்டத்தை வென்றுள்ளார் செரீனா.இது இவரது பதினோராவது கிராண்ட்ஸ்லாம் (விம்பிள்டன்-3,ஆஸி-4,பிரெஞ்ச்-1,யு.எஸ்-3) பட்டம்.

கடந்த ஆண்டும் இவர்களே இறுதிப் போட்டியில் மோதினர். ஆனால் தங்கை செரீனா தோல்வியைத் தழுவினார். இப் பட்டத்தை ஏற்கெனவே 5 முறை வென்றுள்ள வீனஸ் இம்முறையும் வெல்வதன் மூலம் பில்லி ஜீன் கிங்கின் சாதனையை சமன் செய்ய இருந்தார். எனினும் தங்கையின் அபாரமான ஆட்டத்தால் அக்காவின் சாதனைக் கனவு கலைந்தது.

எது எப்படியோ வில்லியம்ஸ் குடும்பம் வசம் விம்பிள்டன்....

வாழ்த்துக்கள் சகோதரிகளே.................

விரக்தியின் முடிவா ?
இலங்கை அணியின் இடது கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக இலங்கைக் கிரிக்கெட் அணயின் தலைமைத் தேர்வாளர் அஸந்த டிமெலிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி பல போட்டிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்த ஒரு சகல துறை வீரர் என்று கூறினால் மிகப்பொருத்தம்.
இது வரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வாஸ் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அணியில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த விரக்திதான் அவரது ஓய்வுக்குக் காரணமாக இருக்கலாமென்பது எனது கருத்து .........
110 டெஸ்ட் போட்டிகளில் 354 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.துடுப்பாட்டத்தில் 1 சதமுட்பட 3085 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 322 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளதோடு 2025 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் கவனத்தை செலுத்துங்கள் வாஸ் ......

Thursday, July 2, 2009

இறுதியில் சகோதரிகள்


விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் பட்டம் வில்லியம்ஸ் குடும்பத்துக்கு கிடைப்பது உறுதி. இறுதி ஆட்டத்தில் வீனஸ்,செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கப்போகின்றனர். இவர்கள் இருவரும் இதற்கு 20 முறை மோதியுள்ளனர். தலா 10 முறை ஒருவரை ஒருவர் வென்றுள்ளனர். எனவே இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருக்கப்போகிறது.
விம்பிள்டன் பட்டம் அக்காவுக்கா தங்கைக்கா.......

Wednesday, July 1, 2009

டயானாவின் 48ஆவது ஜனன தினம்
இளவரசி என்றதும் டயானா என்று சிறு மழலையும் சொல்லும். சிரிப்பாலும் அழகாலும் உலகையே கட்டிப் போட்டவர் டயானா.
டயானா மரணமடைந்து 11 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் என்றும் பலரது அகங்களில் புன்னகையுடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
தனது திருமணத்திற்குப் பின்னர் பொது வாழ்வில் ஒரு சிறந்த பிரபலமாக விளங்கினார். பல நாட்டு ஊடகங்களால் அதிகம் பேசப்பட்டவர்.
1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா பலியானார்.
வில்லியம், ஹென்றி ஆகியோர் இவரது குழந்தைகள்.
வேல்ஸ் இளவரசி டயானாவின் 48ஆவது ஜனன தினத்தை ஒவ்வொரு உள்ளங்களும் இன்று நினைத்துப் பார்த்திருக்கும்....
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates