
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் அன்ட்ரூ பிளின்டாப் சிறந்த சகல துறை வீரர். இங்கிலாந்து அணி கடந்த 2005 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். அண்மைக் காலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த பிளின்டாப் அடிக்கடி அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் பிளின்டாப் முதல் டெஸ்டில் பங்கேற்றார். இருப்பினும் மீண்டும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார் பிளின்டாப். இருந்தாலும் ஒரு நாள், "20-20" போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த 1998 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த பிளின்டாப் இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் இயன் பொத்தமுக்கு நிகராகப் போற்றப்பட்டார். மிக விரைவில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற அவருக்கு, ஏற்பட்ட காயங்கள் அவரது செயற்பாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தின.முழு உடற் தகுதியுடன் பிளின்டாப் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறைவு.
இங்கிலாந்து அணியின் சிறந்த சகலதுறை வீரரான பிளின்டாப் 76 டெஸ்ட் போட்டிகளில்,5 சதம், 25 அரைச்சதம் உட்பட 3708 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.219 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 141 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 3821 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 3 சதங்கள்,18அரைச்சதங்கள்.169 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பிளின்டாப் கிரிக்கெட்டில் தொடரும் காயங்கள்:
1999: தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதத்தில் காயம்.இதனால் தொடரின் அரைவாசியில் நாடு திரும்பினார்.
2000: பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முதுகுப் பகுதியில் காயம்.
2002: குடலிறக்கம் காரணமாக "சத்திரசிகிச்சை".
2003: தோள்பட்டை காயம் காரணமாக பங்களாதேஷ்,சிம்பாப்வே அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்.
2005: இடது கணுக்காலில் முதல் "சத்திரசிகிச்சை".
2006: இடது கணுக்காலில் "சத்திரசிகிச்சை"செய்த இடத்தில் மீண்டும் பிரச்சினை. இதனால் இரண்டாவது முறையாக அதே இடத்தில் "சத்திரசிகிச்சை'.
2007: கணுக்காலில் மீண்டும் வலி.பங்களாதேஷ்,மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களிலிருந்து விலகல்.அடுத்தடுத்து இரண்டு முறை கணுக்காலில் "சத்திரசிகிச்சை'.
2008: முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.
2009: இடுப்புப் பகுதியில் காயம்.மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரிலிருந்து விலகல்.
2009: ஆஷஸ் தொடரில் முழங்கால் காயம்.
பிளின்டாப் கிரிக்கெட் வாழ்வில் காயங்கள் ஏராளம். அந்தக் காயங்களுடன் அவர் கிரிகெட்டில் மிகக் குறைவான காலத்தில் சாதித்தவை ஏராளம்.
பிளின்டாப் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்.
0 comments:
Post a Comment