Pages

Wednesday, March 24, 2010

தடுமாறும் அணிகள்
வீரர்களின் தொடர் காயங்களால் ஐ.பி.எல் அணிகள் தடுமாற்றத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதைவிட டில்லி டேர் டெவில்ஸ் அணியும் தடுமாற்றத்துடனே போட்டிகளில் விளையாடுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்களான கிரஹம் ஸ்மித்,மஸ்கரன்ஹாஸ் ஆகியோர் காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரை விட்டு விலகியுள்ள நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி, டில்லி டேர் டெவில்ஸ் அணித் தலைவர் கம்பிர், வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா, வெய்ன் பார்னெல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் டில்லி அணியும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ளப்போகிறது.

மூன்றாவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பித்த ஒரிரு வாரத்திற்குள் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இது அடுத்த மாதம் நடைபெறவுள்ள "20-20" உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

ஐ.பி.எல். தொடரில் 19 லீக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அணிகளின் தற்போதைய நிலை

பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ்:
துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என சகல துறைகளிலும் சாதிக்கும் பலம் வாய்ந்த பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ் அணி இம்முறை மாபெரும் எழுச்சி கண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் அசைக்க முடியாத அணியாகவுள்ளது. தொடர்ந்து 4 போட்டிகளில் ஆடமிழக்காத நாயகன் காலிஸ், களத்தில் கடைசிவரை இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மனிஷ் பாண்டே, உத்தப்பா ஆகியோரும் அதிரடியைக் காட்டுகிறார்கள். இந்த அதிரடி தொடரும் பட்சத்தில்,பெங்களூர் அணி விரைவாக அரையிறுதிக்குள் முன்னேறிவிடும். பந்துவீச்சாளர்களின் பங்கும் அசத்தலாகவே உள்ளது வினய் குமார், பிரவீன் குமார், டேல் ஸ்ரெய்ன் ஆகியோரின் பந்துவீச்சு அபாரம்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பிரவீன் குமார் ஹட்ரிக் சாதனை புரிந்தார்.2010 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் ஹட்ரிக் சாதனையாகவும் இது அமைந்தது.


சென்னை சூப்பர் கிங்க்ஸ்:
சென்னை அணிஅதிர்ச்சித் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிகளைப் பெறவேண்டுமானால் "மங்கூஸ்"ஹைடன் தனது அதிரடியைக் காட்டவேண்டும். முரளி விஜய், பத்ரிநாத், ரெய்னாஆகியோர் துடுப்பாட்டத்தில் சாதித்தால்தான் அணி வலுவான நிலையை அடையும். கோனி, பாலாஜி, மார்கல் என வேகப்பந்து வீச்ச்சில் இன்னும் கவனமெடுக்கவேண்டும்.சுழல் நாயகன் முரளி தொடர்ந்து சிறப்பாக செயற்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.டோனியின் மீள் வருகையுடன் வெற்றிகளைப் பெறுமா சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

டில்லி டேர் டெவில்ஸ்:
முதல் இரண்டு போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பித்த டில்லி அணி, கம்பிரின் காயத்துக்கு பின், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தது. ஷேவாக் விரைவாக வீழ்ந்து விட்டால், பின் தினேஷ் கார்த்திக், டிவிலியர்ஸ், தில்ஷான் போன்றோர் ஓட்டங்களைக்குவிக்கத் தவறுகின்றனர்.மஹரூப், நானஸ், பிரதீப் சங்வான் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் சாதிக்க வேண்டும். நெஹ்ரா, வெய்ன் பார்னெல் ஆகியோர் காயமடைந்துள்ளதால் வேகப் பந்துவீச்சிலும் பின்னடைவே.

டெக்கான் சார்ஜர்ஸ்:
டெக்கான் அணியில் அணித் தலைவர் அடம் கில்கிறிஸ்ட்,ஹேர்ஷல் கிப்ஸ், சைமண்ட்ஸ் என துடுப்பாட்ட வரிசை பலமாகவுள்ளது. வேகப்பந்து வீச்சில் வாஸ், ஆரம்பத்திலே விக்கெட்டுகளை வீழ்த்த, பிரக்யான் ஓஜா, ரோகித் சர்மா ஆகியோர் சிக்கனமாகப் பந்து வீசுவதால் டெக்கான் அணியை எதிரணிகள்வீழ்த்துவது எளிதான விடயமல்ல. அணி வீரர்களின் கூட்டு முயற்சி தொடருமானால் இலகுவாக அரையிறுதிக்குள் நுழைந்து கொள்ளும் டெக்கான் சார்ஜர்ஸ்.

கொல்கட்டா நைட் ரைடர்ஸ்:
ஆரம்பப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுவந்த கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியால் தொடர்ந்து வெற்றிகளைப் பெற முடியாமைக்குக் காரணம் சரிந்த துடுப்பாட்டமே. கங்குலி இம்முறையும் சாதிக்கத் தவறுகிறார். மெத்தியூஸ் தனக்கு வழங்கப்படும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்துகின்றார். அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட ஷேன் பொன்ட் அணிக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறார். பந்துவீச்சு துடுப்பாட்டம் ஆகிய துறைகளில் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும்.


மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் சச்சினை மட்டுமே நம்பியிருக்கிறது. சச்சின் விரைவாக வீழ்ந்தால் மும்பை அணியின் நிலைமையும் பரிதாபமே.சனத் இன்னும் தனது அதிரடியை காட்டவில்லை .கடந்த முறை சகலதுறைகளிலும் சாதித்த ப்ராவோ இம்முறை இன்னும் பெரிதாக பிரகாசிக்கவில்லை.அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட பொல்லார்ட் எதிர்பார்த்தளவு எதுவுமே சாதிக்கவில்லை. பந்து வீச்சாளர்களில் மலிங்கா, ஹர்பஜன், சாகீர்கான் ஆகியோர் இன்னும் சாதித்தால் மாபெரும் எழுச்சி பெறலாம்.அறையிறுதிக்குள்ளும் நுழையலாம்.

ராஜஸ்தான் ரோயல்ஸ்:
ஷேன் வோர்ன் தலைமைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ஷேன் வாட்சன், தடை செய்யப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாட முடியாத காரணத்தினால் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தென்னாபிரிக்க அணித் தலைவர் கிரஹம் ஸ்மித்தின் விரலில் காயம் ஏற்பட்டதால் மீதிப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை. மஸ்கரன்ஹாஸ் ஆகியோரும் காயமடைந்திருப்பதால் ராயல்ஸ் அணியால் சிறப்பாகப் பிரகாசிக்க முடியவில்லை. யூசுப் பத்தானை நம்பியே இருக்கிறது ராஜஸ்தான் ரோயல்ஸ்.ஆரம்பத்தில் அதிரடியாய் சதமடித்த இவரின் அதிரடியை இப்போது காணவில்லை

கிங்க்ஸ்11 பஞ்சாப்:
குமார் சங்ககார தலைமையிலான கிங்க்ஸ்11 பஞ்சாப் இதுவரை ஒரேயொருபோட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அணித் தலைமைப் பொறுப்பை மாற்றியும் அந்த அணியால் மீள முடியவில்லை. இந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்களே காரணம். மஹேல,சங்ககார,யுவராஜ் ஆகியோர் ஏமாற்றுவதால் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே. பந்து வீச்சு எதிரணி துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் வகையிலில்லை.கடந்தமுறை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அசத்திய ஷோன் மார்ஷ் இன்னும் அணியில் இணைந்து கொள்ளவில்லை இவரது வருகையின் பின் அசத்துமா கிங்க்ஸ்11 பஞ்சாப்.

இதுவரை நடைபெற்றுள்ள (மார்ச்-24 வரை ) போட்டிகளின் அடிப்படையில் பெங்களூர் ரோயல் சலஞ்சேர்ஸ், மும்பை இந்தியன்ஸ் டெக்கான் அணிகள் முன்னிலையில். கிங்க்ஸ்11 பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் நிலை பரிதாபமான நிலையே.

அரையிறுதிக்குள் நுழையப் போகும் அணிகள் அடுத்த வாரத்திற்குள் உறுதியாகிவிடும்.


ஐ.பி.எல் ஆடுகளங்கள் சூடு பிடிக்க அதிரடிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறும்

Wednesday, March 10, 2010

கரை சேருமா பாகிஸ்தான்......

"20-20" சம்பியனான பாகிஸ்தான் அணி இம்முறை பல குழப்பங்களோடு '20-20' உலகக் கிண்ணத் தொடருக்குத் தயாராகிறது. முன்னனி வீரர்கள் சிலர் தண்டனைக்குள்ளகியதால் இம்முறை '20-20' உலகக் கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியன் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இம்முறை '20-20' உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் அணிக்கு பெரும் சிக்கலுடனே ஆரம்பமாகிறது.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் பாகிஸ்தான், என்றுமில்லாத அளவு படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்விகளுக்கு பாகிஸ்தான் வீரர்களான கம்ரன் அக்மல் - உமர் அக்மல் சகோதரர்கள், ஷொகைப் மாலிக்,ஷாகித் அஃப்ரீடி, ரானா நவீத் உல் ஹசன் ஆகியோரே காரணமென்றும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டுமென்ற கருத்துக்களும் வலுப் பெற்றன. இதனால் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட்,அதிரடியாக யாரும் எதிர்பாராத தண்டனைகளையும் விதித்துள்ளது.
சிட்னியில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பலஆட்டமிழப்பு வாய்ப்புகளைத் தவற விட்டு அணியை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றவர் விக்கெட்காப்பாளர் கம்ரன் அக்மல். இவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டாரென பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்தபோது, தான் அணியில் இடம்பெறுவேனெனக் கூறியதால் அப்போதே விமர்சிக்கப்பட்டவர். இதைவிட இவரது சகோதரரான உமர் அக்மல், தன் சகோதரை நீக்கினால் தானும் விளையாடுவது சந்தேகமென பொய்க்காயத்தை காரணம் காட்டிக் கூறிய கருத்துக்களென இந்த சகோதரர்களின் வாய்ப் பேச்சுக்கள்(அவுஸ்ரேலியத் தொடரில் இவர்கள் துடுப்பால் சாதித்ததை விட)அதிகம். அப்போது பேசிய இந்த வாய்ப்பேச்சுக்களுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறார்கள். பல லட்சம் ரூபாய்கள் (25,000 முதல் 30,000 டொலர் ) அக்மல் சகோதரர்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதேவளை, ஷொகைப் மாலிக், ரானா நவீத் உல் ஹசன் இருவரும் அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வீரர்களாக இருந்துள்ளதால் இவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் 20 லட்சம் அபராதத்துடன் ஓராண்டு தடைக்குமுள்ளாகியுள்ளனர். அதைப்போல் '20-20' அணித் தலைவரான அஃப்ரீடி பந்தைக் கடித்து சேதப்படுத்தியிருந்தார்.இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கே அவப்பெயரை ஏற்படுத்தியது.பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக இவரும் தண்டனைக்குள்ளாகியுள்ளார்.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அஃப்ரீடிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.
கம்ரன் அக்மல் - உமர் அக்மல் சகோதரர்கள்,அஃப்ரீடி ஆகியோரின் செயற்பாடுகள் எதிர்வரும் 6 மாதங்களுக்குக் கவனிக்கப்படும்.அந்தக் காலப் பகுதியில் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக் கொண்டால் இவர்களின் கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

இந்தத் தண்டனை அறிவிப்புகளால் ' 20-20' அணித் தலைமைப் பொறுப்பும் அஃப்ரீடியிடமிருந்து பறிபோகலாம்.சகலதுறை வீரரான அப்துர் ரசாக் அணித் தலைவராகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன

இதைவிட முன்னாள் அணித் தலைவர் யூனிஸ்கான்,அவுஸ்ரேலிய தொடரில் டெஸ்ட் ,ஒருநாள் அணித் தலைவராக செயற்பட்ட முகமது யூசூப் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாட முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர்.(இதை ஆயுட்காலம் என்றே எடுத்துக் கொள்ளலாம்) இவர்கள் அடிக்கடி அணி வீரர்களுடன் முரண்பட்டுக் கொள்வதால் இந்தத் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்,20-20 போட்டிகள் பலவற்றில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்த இவர்களுக்கு இப்படியான தண்டனை விதிக்கப்படுமென யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.இனி இவர்களின் நிலை மிகப் பரிதாபமே.


கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரே சமயத்தில் இவ்வளவு கடுமையான நடவடிக்கையை எந்தவொரு கிரிக்கெட் சபையும் இதுவரை எடுத்ததில்லை. இது கிரிக்கெட்டுலகில் முக்கிய திருப்புமுனை என்றே சொல்லலாம்.பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவுகள் கிரிக்கெட் போட்டிகளில் நடத்தை விதிகளை மீறி நடக்கும் வீரர்களுக்கு நல்ல படிப்பினையே.
இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக் காலமாக இன்திகாப் ஆலமின் பயிற்சியின் கீழ், பாகிஸ்தான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய காடயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் இருந்தது. பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோதும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட்.இதற்கும் பல எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றைக் கணக்கெடுக்காமல்,எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வக்கார் பயிற்சியாளராக செயற்படுவாரென பாகிஸ்தான் கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. பாக் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருமுறை பணியாற்றிய அனுபவத்துடன் தனது இரண்டாம் இனிங்சை ஆரம்பிக்கவுள்ளார் வக்கார்.
இந்த இனிங்ஸ் வக்காருக்கு கடினமான இனிங்சாகவே இருக்கப் போகிறது. பாகிஸ்தான் வீரர்களை ஒரு கட்டுக்கோப்பான அணியாக உருவாக்கவே அதிகம் போராடவேண்டிய நிலை இப்போது இவருக்கு.

பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்திருக்கும் இந்த அதிரடித் தண்டனை வக்காரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

87 டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெடுகளையும் 262 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 416 விக்கெடுகளையும் கைப் பற்றி, பாகிஸ்தான் அணிக்காக தனது பந்துவீச்சின் வேகத்தால் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த வக்கார், இனி பயிற்சியாளர் உருவத்தில் அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பாரா....
வக்காரின் பயிற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் கரை சேருமா

Friday, March 5, 2010

இதோ வருகிறேன்

என்னை கிரிக்கெட் தொடர் பதிவுக்கு அழைத்த பதிவர் லோஷனின் பதிவுக்கு பதில் பதிவு இதோ....எனது பார்வையில் எனக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்களை குறிப்பிடுகிறேன்( திறமையின் அடிப்படையில்) அண்மைக் காலமாக அதிக நேரம் வலைப் பதிவில் உலா வர நேரம் கிடைப்பது குறைவு. அதனால் உடனடியாக பதிவிட முடியவில்லை. கொஞ்சம் காலதாமதமான பதிவு.


1. பிடித்த வீரர்கள்: குமார் சங்கக்கார,சேர் டொனல்ட் பிராட்மன்,சனத்.
2. பிடிக்காத வீரர்கள்: நடத்தை விதிகளை மீறி நடக்கும் வீரர்கள்.
3 .பிடித்த வேகப்பந்துவீச்சாளர்கள்: வசீம் அக்ரம்,பிரெட் லீ, டேல் ஸ்டெய்ன், மைக்கேல் ஹோல்டிங்(தடகள வீரராக இருந்ததால் அசுர வேகத்துடன் ஓடி வந்து பந்துவீசி துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலையச் செய்வதில் வல்லவரிவர்)
4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்கள்: சஹீர்கான், அன்ட்ரே நெல்(அடிக்கடி துடுப்பாட்ட வீரர்களுடன் மைதானத்தில் மோதுவதால்)
5. பிடித்த சுழற்பந்துவீச்சாளர்கள்: முரளி,ஷேன் வோர்ன்.(சுழலின் சிகரங்கள்)
6. பிடிக்காத சுழற்பந்துவீச்சாளர்: ஹர்பஜன் (தலைக் கணம் அதிகம்)
7. பிடித்த வலதுகைத் துடுப்பாட்டவீரர்கள்: அரவிந்த, சச்சின் ,மஹேல ,ட்ராவிட், மார்வன்,ரிக்கி பொன்டிங் (நேர்த்தியான நிதானமான துடுப்பாட்டம்)
8. பிடிக்காத வலதுகைத் துடுப்பாட்டவீரர்கள்: மகேந்திர சிங் டோனி(மைதானத்தில் அதிக படம் காட்டுவதால்) இன்சமாம்.
9. பிடித்த இடதுகைத் துடுப்பாட்டவீரர்கள்: குமார் சங்கக்கார, மைக் ஹசி,ப்ரையன் லாரா (வெற்றிக்காகப் போராடும் துடுப்பாட்டம் ) சனத்,ஹெய்டன், அடம் கில்ஹிரிஸ்ட் (அதிரடிமூர்த்திகள்.நிலைத்து நின்று விளையாடினால் முடிவே இவர்கள் கையில்)
10.பிடிக்காத இடதுகைத்துடுப்பாட்டவீரர்: யுவராஜ்(பல சந்தர்ப்பகளில் அணிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தவர்)

11.பிடித்த களத்தடுப்பாளர்கள்: ஜொன்டி ரோட்ஸ்,ரிக்கி பொண்டிங்,ரொஷான் மகாநாம( பாயும் வேகமே தனி)டில்ஷான்,சனத் ( கண்களே நம்ப மறுக்கும் பிடிகள்,பாய்ச்சல்)
12.பிடிக்காத களத்தடுப்பாளர்: குனித்து நிமிர முடியாத பலர்.
13. பிடித்த சகல துறை வீரர்கள் : இயன் பொத்தம்( பல சந்தர்ப்பங்களில் அணியைக் காப்பாற்றிய சாதனை வீரர்) கபில் தேவ், சேர் ரிச்சர்ட் ஹாட்லி (1980களில் தலைசிறந்த சகல துறை வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்,சாதாரண அணியாக இருந்த நியூஸிலாந்துக்கு தனது அபாரமான வேகப் பந்துவீச்சால் ஏராளமான வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர்)ஷேன் வொட்சன்.
14.பிடித்த நடுவர்: காலஞ் சென்ற டேவிட் ஷேப்பெர்ட், சைமன் டௌபல் (நடுநிலையான தீர்ப்பு, சைகைகள் தனி ரகம்)
15.பிடிக்காத நடுவர்: அவுஸ்ரேலியாவின் டரல் ஹெயார், புதிய நடுவர்கள் பலர்.
16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்: டோனி கிரெய்க், ரவி சாஸ்திரி, மைக்கல் ஹோல்டிங், ஹர்ஷா போக்லே
16. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்: அமீர் சொஹைல்.
18.பிடித்த அணிகள்: இலங்கை,அவுஸ்ரேலியா.
18.பிடிக்காத அணி: கென்யா.
20.விரும்பிப்பார்க்கும் போட்டிகள்: அவுஸ்ரேலியா எதிர் இலங்கை. இந்தியா எதிர் பாகிஸ்தான்.
21.பிடிக்காத அணிகளுக்கிடையிலான போட்டி:சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தாத அணிகள்.
22.பிடித்த அணித்தலைவர்கள்: ரிக்கி பொன்டிங், அர்ஜுன ரணதுங்க( 1996 உலகக் கிண்ணத்தை வெல்லும் அளவுக்கு பலம் வாய்ந்த அணியாக மாற்றிய பெருமை) மஹேல ஜெயவர்த்தன,
23.பிடிக்காத அணித்தலைவர்கள்: மேற்கிந்தியத் தீவுகளின் தலைவர் க்றிஸ் கெய்ல் (பொறுப்பற்ற ஆட்டம்) மற்றும் பாகிஸ்தானின் யூனிஸ் கான்
24. பிடித்த போட்டிவகை: அனைத்து வித போட்டிகளும்.
25.பிடித்த ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடிகள்: டெஸ்ட்- மத்தியூ ஹெய்டன் & ஜஸ்டின் லங்கர்,சனத் & மார்வன்.
ஒருநாள்- சனத் & களு, ஹெய்டன் & கில்ஹிரிஸ்ட், கங்குலி& சச்சின்.
26.பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி:சோபிக்காத பல ஜோடிகள்
27.எனது பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்கள்: முரளி,சச்சின்,லாரா.
28. வாழ்நாள் சாதனையாளர்கள் (எனது பார்வையில்) : முரளி, சச்சின்,கவாஸ்கர்(எதிரணி வீரர்களுக்கு சிக்கலைக் கொடுத்த சாதனை நாயகர்கள்)
29. சிறந்த கனவான் வீரர் : ரொஷான் மகாநாம,முரளி(தன்னடக்கமான வீரர்கள் )
30. நான் பார்த்து வியந்த வீரர்கள்: சனத், முரளி, சச்சின், ஜொண்டி ரோட்ஸ், ஹெய்டன்,சந்தர்போல்.

மேலதிகமாக சில....
31.பிடித்த போட்டித் தீர்ப்பாளர்: ரஞ்சன் மடுகல்ல (சிறந்த மனிதர், நடுநிலையான முடிவுகளை எடுக்கும் விதம்)
32.பிடிக்காத போட்டித் தீர்ப்பாளர்: க்ரிஸ் ப்ரோட் (தலைக்கணம் அதிகம் )
33.பிடித்த விக்கெட் காப்பாளர்கள்: குமார் சங்கக்கார,மார்க் பௌச்சர் (விக்கட் காப்பின் தனித்துவம் )


நான் யாரையும் தொடர் பதிவுக்கு அழைக்கவில்லை.விளையாட்டின் மீது ஆர்வமுள்ள பதிவர்களே உங்கள் கருத்துக்களும் பதிவுகளும் தொடரட்டும் நண்பர்களே.....
தொடர் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தாச்சு....

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates