Pages

Friday, July 17, 2009

இசையுலகின் சகா‌ப்த‌ம் மறைந்தது

மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்ற க‌ர்நாடக இசை‌ப் பாடக‌ி யார் என்று கேட்டால் டி.கே.ப‌ட்ட‌ம்மா‌ள் என்று அனைவரும் சொல்வார்கள். டி.கே.ப‌ட்ட‌ம்மா‌ள் நேற்று இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இறக்கும்போது வயது 90. இறு‌தி‌ச் சட‌ங்குக‌ள் நிறைவு பெற்றுள்ளன.

பட்டம்மா‌ளி‌ன் இசை வாழ்வை பற்றிய சிறப்பான விடயங்களை உடனடியாக தர முடியவில்லை. காரணம் பதிவிட நேரம் கிடைக்கவில்லை. நானும் 8 வருடங்கள் சங்கீதம் பயின்றவன் என்ற வகையில் பட்டம்மாள் பற்றி அறிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்......

ப‌ட்ட‌ம்மா‌ளி‌ன் இசை வரலாறு

கர்நாடக இசைமேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி காஞ்சிபுரத்தில் தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டினர். அவருடைய தந்தையார் பட்டு என்று செ‌ல்லமாகஅழைத்ததே பின்னர் பட்டம்மாள் என்ற பெயராக நிலைத்தது.


ஆரம்பத்தில் பக்திப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பட்டம்மாள் பின்னர் முறையாக இசையைக் கற்றார். தனது 10ஆ‌ம் வயதிலேயே இந்திய வானொலியில் க‌ர்நாடக இசை‌ப் பாடலை‌ப் பாடி ர‌சிக‌ர்களை‌க் கவ‌ர்‌ந்தா‌ர்.1932ஆம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏ‌றிய ப‌ட்ட‌ம்மா‌ள் கைத‌ட்ட‌ல்களை வா‌ரி‌க் கு‌வி‌த்தா‌ர். இதுவே இவரது இசை அரங்கேற்றம். ஆரம்பமே அசத்தலாக இருந்தது.

பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைக‌ளிட‌ம் இசை பயின்ற ப‌ட்ட‌ம்மா‌ள் ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரிகள் செய்துள்ளார். "பைரவி" ராகத்தில் இவரைப் போல் பாட யாருமில்லை என்ற அளவிற்கு தனிப்புகழ் பெற்றார்.

பாபநாசம் சிவன் மூல‌ம் டி.கே.பட்டம்மா‌ள் ‌திரை‌யிசை‌ப் பாட‌ல்களு‌க்கு அ‌றிமுகமானா‌ர்.தியாகபூமி என்ற ‌திரை‌ப்பட‌த்‌தி‌ல் அவ‌ர் பாடகியானா‌ர். இவரது பாட‌ல்க‌ள் அனேகமாக பாரதியாரின் பாடல்களாகவு‌ம் தேசபக்தி பாடல்களாகவு‌மே இரு‌ந்தன.

இ‌ந்‌தியா சுத‌ந்‌திர‌ம் பெற முன்னரே இசை உல‌கி‌ல் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். ஆ‌ங்‌கிலேய‌ர் ஆ‌ட்‌சிக்கால‌த்‌தி‌ல் பார‌தியா‌ரி‌ன் எழு‌ச்‌சி‌ப் பாட‌ல்களை‌ப் பாடி ம‌க்க‌ளிடையே சுத‌ந்‌திர உண‌ர்வை‌‌த் தூ‌ண்டிய பெருமையு‌ம் இவருக்குண்டு. மகாத்மா காந்தி,ஜவகர்லால் நேரு போன்ற பல தேசியத் தலைவர்களை நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்துப் பாராட்டுகளையு‌ம் வா‌ழ்‌த்துகளையு‌ம் பெற்றுக்கொண்டார்.

இந்தியா 1947 ஆகஸ்டு 15ஆம் திகதி சுதந்திரம் அடைந்தது.சுதந்திரம‌டையும் சமயத்தில்,ஆகஸ்டு 14 இரவு பட்டம்மாள் இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேசபக்திப் பாடலை பாடினார்.இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்திப் பாடல்களை பாடினார்.

இவர் பாடிய தேசபக்திப் பாடல்களும் கர்நாடக இசைப்பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்தது.

பட்டம்மாளை தேடி வந்த விருதுகள்

கர்நாடக இசைக்கு பட்டம்மாள் அளித்த பங்கை கெளரவிக்கும் வகையில் அவருக்கு 1971ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் 1998ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் வழங்கி இந்திய அரசு கெளரவித்துள்ளது. இதை விட கலைமாமணி,கான சரஸ்வதி, சங்கீத சாகரரத்னா,சங்கீத கலாநிதி என 60 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை,கனடா,அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்‌ஸ்,சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த இவர் சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார். அன்றைய காலகட்டத்தில் இந்த மூவரும் சங்கீத பெண் மும்மூர்த்திகளாகப் போற்றப்பட்டார்கள்.

பல திரைப்படங்களில் சிறப்பான பல பாடல்களைப் பாடியுள்ளார்.பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசை மேதை பட்டம்மாளின் மறைவு இசையுல‌கி‌ற்கு மிகப்பெரும் இழப்பு....

பட்டம்மாள் மறைந்தாலும் அவரது பாடல்கள் பார் முழுவதும் ஒலித்து அவர் நாமத்தை கூறிக்கொண்டேயிருக்கும் .............

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates