Pages

Saturday, July 25, 2009

டெஸ்டுக்கு விடை கொடுத்த வாஸ்

இலங்கையணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளரான சமிந்த வாஸ்,பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணித் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிக்கலைக் கொடுக்கக்கூடியவர்.அதிக வருடங்கள் இலங்கை அணியின் ஆரம்ப,வேகப் பந்துவீச்சாளராகப் பந்து வீசி தனது முதலாவது பந்துவீச்சிலே பல விக்கெட்டுகளைப் பதம் பார்த்தவர்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 2தடவைகள் ஹட்ரிக் சாதனை படைத்தவர்.2001இல் சிம்பாபே அணிக்கெதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டியில் ஹட்ரிக் உட்பட வாஸ்19 ஓட்டங்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதுதான் ஒருநாள் சரவதேச போட்டி ஒன்றில் பெறப்பட்ட சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. அதன் பின்னர் 2003 இல் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் அணிக்கெதிராக மீண்டும் ஹட்ரிக் சாதனை.முதல் மூன்று பந்துவீச்சுகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4ஆவது பந்துவீச்சாளர் வாஸ்.

வாஸின் சாதனைப் பக்கங்கள்
1993 : இலங்கையில் இடம்பெற்ற பி.சரவணமுத்து வெற்றிக்கிண்ண உள்ளூர் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிரிக்கெட் தேர்வாளர்களின் கவனத்தை தன் பக்கம் திரும்ப வைத்தார்.

1993 : மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை அணி சார்பாக விளையாடும் வாய்ப்பு.

1994 : சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகம்.கண்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் வாஸ் விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

1995 : நியூஸிலாந்து கிரிக்கெட் பயணத்தின்போது இலங்கை அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்ட வாஸ்,அந்நிய மண்ணில் இலங்கை அணிமுதல் டெஸ்ட் வெற்றியைப் பெறக் காரணகர்த்தாவானார்.2 இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி,முதன் முதலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் முதலாவது பந்துவீச்சாளரானார்.இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார் வாஸ்.

2001 : இலங்கையில் நடைபெற்ற மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில்,இலங்கை அணி3-0 என்ற அடிப்படையில் டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள சிறப்பாக செயற்பட்டார்.ஒரு போட்டியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வாஸ் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தமாக 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2004 : இலங்கையணி,தென்னாபிரிக்க அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெறக் காரணமாக அமைந்தார்.

2004 : சர்வதேச கிரிக்கெட் பேரவையால் நடாத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில்,சர்வதேச டெஸ்ட்,ஒருநாள் சர்வதேச அணிகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டார்.

2005 : இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 300ஆவது விக்கெட்டை வீழ்த்தி,300 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் இரண்டாவது பந்துவீச்சாளரானார்.

2007 : தனது 97ஆவது போட்டியில் கன்னி டெஸ்ட் சதத்தை பங்களாதேஷ் அணிக்கெதிராகப் பெற்றார்.

2007 : இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டியில் நடந்த போட்டியில் வாஸ் தனது100ஆவது போட்டியில் விளையாடினார். இதன் மூலம் 100 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது இலங்கை வீரரானார்.

2008 : மேற்கிந்தியத்‌தீவுகள் மண்ணில் இலங்கை அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போட்டியில் வாஸ் துடுப்பாட்டத்தில் 67 ஓட்டங்களைப் பெற்றதோடு 8 விக்கெடுகளையும் வீழ்த்தினார்.

2009 : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

டெஸ்ட் கிரிக்கெட்டில்,இலங்கை ஆடுகளங்களில்180 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு ஆடுகளங்களில் 175 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 12 தடவைகள் கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் மொத்தமாக 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 2 சந்தர்ப்பங்களில் கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 12 போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்டுகளையும், பங்களாதேஷ் அணிக்கெதிராக 7 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கெதிராக 15 போட்டிகளில் 49 விக்கெட்டுகளையும், இந்திய அணிக்கெதிராக 14 போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும், நியூசிலாந்து அணிக்கெதிராக 10போட்டிகளில் 42 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 18 போட்டிகளில் 47 விக்கெட்டுகளையும், தென்னாபிரிக்க அணிக்கெதிராக 11 போட்டிகளில் 27 விக்கெட்டுகளையும், மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கெதிராக 9 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், சிம்பாப்வே அணிக்கெதிராக 15 போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார், வாஸ்.

பந்துவீச்சு மட்டுமன்றி தனது சிறப்பான துடுப்பாட்டத்தால் இலங்கை அணிக்குப் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்துள்ளார்.111டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 3089ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 1சதம்,13 அரைச் சதங்கள். மொத்தத்தில் சமிந்த வாஸ் இலங்கையணிக்குக் கிடைத்த தலைசிறந்த சகலதுறை வீரர். வாஸ் போன்ற சகலதுறை வீரரை இலங்கையணி பெறுமா என்பது கேள்விக்குறியே.....

வாஸ் நீங்கள் கிரிக்கெட்டில் போஸ்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates