பாப் சூப்பர் ஸ்டார் மரணம்!

தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட பாப் இசையுலகின் சூப்பர் ஸ்டார்,நடனப்புயல் மைக்கேல் ஜாக்ஸன் இன்றுஅதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 50.
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட வர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-இல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-இல் அந்தக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் அறியப்பட்டார். அப்போது அவரது வயது 12 மட்டுமே.
1972-ஆம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.
1979-இல் ஆஃப் தி வால் மற்றும் 1982-இல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்று உலகையே வியக்க வைத்த சாதனையாக அமைந்தது.
த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.
த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்பனை ஆனது. பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே இன்றும் த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள்
* ஆகஸ்ட் 29,1958இல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.
* 1962இல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.
* 1969இல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது.
* 1970இல் மைக்கேல் ஜாக்சன் தனியாகப் பாட ஆரம்பித்தார்.
* 1979இல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1982இல் திரில்லர் ஆல்பம் வெளியானது. 5.4 கோடி ஆல்பங்கள் விற்பனையாகி அவரை இசையுலகின் மன்னராக்கியது.
* 1984இல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
* 1985இல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு 'வி ஆர் த வேர்ல்டு' எனும் பாடலை ஆபிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.
* 1987இல் 'பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1988இல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.
* 1990இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.
* 1992இல் 'டேஞ்சரஸ்' ஆல்பம் வெளியானது.
* 1992இல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
* 1994இல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார்.
* 1995இல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.
* 1996இல் லிசடா மேரியுடன் விவாகரத்து.
* 1996இல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.
* 2001இல் 'இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.
* 2002இல் இசைத் தட்டு நிறுவனங்கள் குறிப்பாக கறுப்பினப் பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டதில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
* 2003இல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.
* இதே ஆண்டு பெப்ரவரி மாதம் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப் படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள மீதிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் தேடுதல் நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது பிடிவிர்ராந்து பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.
* 2004இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.
* 2005இல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
* 2007-ஆம் ஆண்டு அவரது த்ரில்லர் ஆல்பம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு ஆல்பம் வெளியிடப்பட்டது.
* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். 'இறுதித் திரை' எனும் பெயரில் அந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் மரணமடைந்தார்.
இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.
பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.....
0 comments:
Post a Comment