Pages

Friday, May 1, 2009

உழைப்பாளர்கள் தினம்!
தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!
எல்லோரும் நினைப்பதுபோல மே தினம் என்பது முதன் முதலில் பொதுவுடமை புரட்சி நடந்த சோ‌விய‌த் ரஷ்யாவிலோ அல்லது அதன் பிறகு பொதுவுடமை நாடான சீனாவிலோ பிறக்கவில்லை. மாறாக, பொதுவுடமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டிவரும் அமெரிக்காவில்தான் முதன் முதலில் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டது. இன்றிலிருந்து 126 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் அந்த உரிமை கோரிக்கை போராட்ட வடிவத்தைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம், 12 மணிநேரம், 14 மணிநேரம் என்று உழைப்பாளர்களும், பணியாளர்களும் நேர வரையறையற்று வேலை வாங்கப்பட்டு வந்த அந்த நாளில், 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்றும், வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கோரியும் தொழிலாளர்கள் முதன் முதலாக 1880ஆம் ஆண்டு குரல் கொடுத்தனர். அந்த உரிமை கோரிக்கை அடுத்த 4 ஆண்டுகளில் மிகப்பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழிவகுத்தது. 1884ஆம் ஆண்டு, தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்ட் டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அடுத்த 2 ஆண்டுகளில் அதாவது 1886ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி முதல் அனைத்து தொழிலாளர்களும் நாள் ஒன்றிற்கு 8 மணிநேரம் மட்டுமே பணியாற்றுவோம் என்று கூறி அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது.
ஆனால், தொழிலாளர்களின் இயக்கத்தை உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்ட சிகாகோ கமர்ஷியல் கிளப் உறுப்பினர்களின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்
தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்க அனார்க்கிஸ்ட் எனும் தொழிலாளர் அமைப்பு மே 4ஆம் தேதி ஹே மார்க்கெட் ஸ்கொயர் எனுமிடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கண்டனக் கூட்டத்தில் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 180 பேர் கொண்ட இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டனர். மேடையில் பேசிக் கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கியபோது திடீரென்று தேசியப் படையினர் மீது குண்டு ஒன்று வீசப்பட்டது. அதில், ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர். கோபமுற்ற தேசியப் படையினர் தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். பலர் காயமுற்றனர். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அதை காரணமாக்கி தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இயக்கத்தை ஏற்பாடு செய்து வந்த தலைவர்களின் இல்லங்கள் சோதனை என்ற பெயரில் சிதைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எந்தக் காரணமும் கூறப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டனர். தொழிலாளர் இயக்கத்தை முன் நின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொலை சதித் திட்டம் தீட்டியதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 பேரையும் குற்றவாளிகள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. 1887ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஆல்பர்ட் பார்ஸன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், அடாஃல்ப் ஃபிஷ்ஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். லூயிஸ் லிங்க் என்பவர் சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற மூவரும் 1893ஆம் ஆண்டு மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமை கோரிக்கையும், இயக்கமும் வலிமை பெற்றது. 8 மணிநேரம் கொண்ட உழைக்கும் தினமும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் கிடைத்தது. உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் உரிமைகள் நிறைவேற, மானுடத்தை உயர்த்த அரும்பாடுபட்ட அந்த உழைக்கும் மக்கள் கூட்டத்தை மனிதாபிமானத்தோடு பார்க்க உலகம் கற்றுக்கொண்டது. அமெரிக்காவில் உருவான மே தினம் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
உழைக்கும் உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.............

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates