அமெரிக்காவில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
டென்னிஸ் தொடர்களில் அவுஸ்ரேலிய, பிரெஞ்ச்,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடர்கள் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்தைப் பெற்றவை. இதில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் உள்ள மெடோஸ் பார்க்கில் இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
ஆண்கள் பிரிவு
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர்,5 முறை(2004-2008) பட்டம் வென்றுள்ளார். இவர் 6ஆவது முறையாக பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகமுள்ளது. இதைவிட,16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்புமுண்டு.அண்மையில் "நம்பர்-2' இடத்தை பிடித்த இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பெடரருக்கு கடும் போட்டியைக் கொடுக்கலாம். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பெடரரிடம் வீழ்ந்த முர்ரே, இம்முறை பெடரரை வீழ்த்தக் காத்திருக்கிறார்.
காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் முதன் முறையாக அமெரிக்க பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.இவர்களைவிட செர்பியாவின் ஜோகோவிக்,அமெரிக்காவின் அன்டி ரொடிக்,ஆர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்டோ,ரஷ்யாவின் டேவிடென்கோ, பிரான்ஸ் வீரர் வில்ஃப்ரெட்சொங்கா ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களத்தில்.
பெண்கள் பிரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,12 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங் சாதனையை சமன் செய்வார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாமல் "நம்பர்-1' இடத்திலுள்ள ரஷ்யாவின் டினாரா சபினா, இம்முறை பட்டம் வெல்ல சிறப்பாகப் போராடுவார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,செர்பியாவின் ஜான்கோவிக், இவானோவிக்,ரஷ்யாவின் மரியா ஷரபோவா,குஸ்னட்சோவா,எலீனா டெமன்டிவா,பிரான்சின் அமலி மொரிஸ்மோ, பெலாரசின் விக்டோரியா அஸரென்கா போன்றோர் ஏனைய வீராங்கனைகளுக்குக் கடும் சவாலைக் கொடுப்பார்கள்.
கடந்த 2 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகுக்குத் திரும்பியிருக்கும்,2005ஆம் ஆண்டு சாம்பியன் பெல்ஜியத்தின் கிம்கிளைஸ்டர்ஸ், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா பெரிதாக சாதிக்க வாய்ப்புக்கள் குறைவு.இரண்டாம் சுற்று வரை முன்னேறலாம்.
கடந்த 7 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சுற்றில் நுழையும் முதல் இந்தியர் என்ற பெருமையை சோம்தேவ் பெறுகிறார்.இதற்கு முதல் 2002ஆம் ஆண்டு இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடியிருந்தார்.
உலகின் முன்னணி வீர,வீராங்கனைகள் இம்முறை இப்போட்டியில் பங்கேற்றுள்ளதால் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
அதிர்ச்சிகளும் உண்டு.......ஆச்சரியங்களுமுண்டு.....
0 comments:
Post a Comment