பாகிஸ்தானிடம் சுருண்ட இலங்கை
கொழும்பில் நடந்த 20௦-20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அஃப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையை 52 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான்.
நேற்று நடந்த போட்டியில்,பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல், குலசேகர வீசிய முதல் பந்திலே வெளியேறினார்.எனினும் இம்ரான் நசீர் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்தார். அணித்தலைவர் அஃப்ரிடி அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.இதில் 2 சிக்ஸரும் 4 பவுண்டரிகளும் அடங்கும்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களைக் குவித்தது. பந்துவீச்சில் திலான் துஷாரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
173 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கையணியின் சனத் ஜெயசூர்யா 23 , சங்ககார 38 ஓட்டங்கள்.ஏனைய வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமாக இலங்கை அணி 18.1 ஓவர்களில் 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சயீத் அஜ்மல்,நவீத் உல்ஹசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச தொடர்களில் தோல்வியடைந்த பாகிஸ்தான் 20௦-20 ௦போட்டியில் அஃப்ரிடி தலைமையில் வெற்றி வாகை சூடியது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக அஃப்ரிடி தெரிவானார்.
இதேவேளை,இந்தப் போட்டியில் சங்ககாரவின் விக்கெட்டைக் கைப்பற்றிய சயீத் அஜ்மல், சங்ககாரவைப் பார்த்து ஆடுகளத்தை விட்டு செல்லுமாறு சைகை செய்ததால் அவரது போட்டித் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
எது எப்படியாயினும் பாகிஸ்தான் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இலங்கை அணியின் பலவீனம் மத்திய வரிசை துடுப்பாட்டமே. மத்திய வரிசையில் துடுப்பெடுத்தாடும் வீரர்கள் வேகமாக ஆட்டமிழந்தமையே இலங்கை அணியின் தோல்விக்குக் காரணமெனலாம்.
சரியான தலைமைத்துவத்தை நிறைவேற்றிக் காட்டினார் அஃப்ரிடி.
0 comments:
Post a Comment