Pages

Sunday, August 30, 2009

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று.....

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று......

அள்ளிக் கொடுத்த வள்ளலாக நகைச்சுவைப் பேராசானாக சிந்தனைத் தென்றலாக தமிழ் திரையுலகில் மகுடம் சூடி வாழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்.நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிரிப்பு,சிந்தனை இரண்டின் சங்கமமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவரிவர்.

அப்படிப்பட்ட உன்னத கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று...... அவருக்காக இந்தப் பதிவு. கலைவாணர் பற்றிய சில தெரிந்த தவல்களோடு.......
நாகர்கோவில் சுடலைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட கிருஷ்ணன் (என்.எஸ்.கே) கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி என்ற இடத்தில். சுடலையாண்டி பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக1908 நவ.29 இல் பிறந்தார்.

17 வயதில் நாடகக் கம்பனியில் நடிகராக இணைந்து கொண்டார்.நாடகங்களில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே.நாடகங்களில் கலைவாணர் படைத்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்.

என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் படம், "சதிலீலாவதி'. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமல்லாது பல பிரபலங்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்,எம்.ஜி.சக்கரபாணி, எம்.கே.ராதா,டி.எஸ்.பாலையா, கே.வி.தங்கவேலு,எம்.வி.மணி,ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.என்றாலும், முதலில் வெளியான படம், டி.கே.எஸ்.சகோதரர்களின், "மேனகா' படம் தான்.

நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப்பறந்த கலைவாணர் நடித்த படங்கள், சமூக கருத்துக்களை பரப்பின. சிந்தனையைத் தூண்டின.


தனது திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை தானே எழுதி இயக்கிய சந்தர்ப்பங்கள் பல.என்.எஸ்.கிருஸ்ண நடித்த அநேக படங்கள் வெற்றி பெற்றன. வசந்தசேனா,திருநீலகண்டர், சதிலீலாவதி,பூலோக ரம்பை,ரம்பையின் காதல், தாஸி அபரஞ்சி, ஹரிதாஸ்,ஆர்யமாலா,பவளக்கொடி,வனசுந்தரி,யார் பையன்,மதுரை வீரன்,நல்லதம்பி போன்றன சில.தமிழில் மட்டுமன்றி கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. என்.எஸ்.கிருஸ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த காலகட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமாகக் கனிந்தது. டி.ஆர்.ஏ.மதுரத்தை இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார்.தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம்.தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்புப் பெறாததை உணர்ந்து மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.பின்னர் மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

1944 ஆம் ஆண்டு நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சிறைவாசமும் அனுபவித்ததார்.


சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். கூத்தாடிகள்' என்ற வார்த்தையை ஒழித்து, "கலைஞர்கள்' என்ற சொல்லை உருவாக்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்ட சொத்துக்களை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். தனது இறுதிக் காலத்தில் வறுமையில் இவர் வாடியபோது இவருக்குக் கை கொடுக்க யாருமில்லை.
1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

கலைவாணர் மறைந்தாலும் அவரது சிரிப்பு இன்னும் எம் மனதிற்குள் நிழலாடுகிறது

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates