இலங்கை வலைப் பதிவர்கள் சந்திப்பு கொழும்பில் இன்று இனிதே நடந்தேறியது.தமது மொழி நடையால் பலரது மனங்களைத் தொட்ட பதிவர்கள் பலரின் தெரியாமலிருந்த முகங்களைப் பலரும் தெரிந்து கொண்டனர்.
பல நிகழ்ச்சிகள் பல இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் இடம்பெறுவது அரிது.ஆனால் இந்த ஒன்றுகூடல் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பமானது.ஏற்பாட்டுக் குழுவினருக்கு ஒரு சபாஷ்.
சிறுவன் முதல் பெரியோர் வரை பதிவிடும் நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். புல்லட் அறிமுகவுரை நிகழ்த்த,அதன் பின் சுபானு, ஆதிரை என உரைகள் தொடர்ந்தன.
Blogger ஆரம்பித்து 10 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி இலங்கைப் பதிவர்கள் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டுக் குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியமையும் சிறப்பானது.முதன் முதலில் இப்படி
கொண்டாடிய பெருமையும் நமது இலங்கைப் பதிவர்களையே சேரும்.
இந்த ஒனறுகூடலில் சில மூத்த எழுத்தாளர்களும்(அந்தனி ஜீவா,கவிஞர் மேமன் கவி) கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.எழில்வேந்தன் கலந்து கொண்டார்.
ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அனைவரும் தமது அறிமுகத்தை தாமே மிகவும் விரைவாகவும் சிறப்பாகவும் கொடுத்தனர்.
எஸ்.எழில்வேந்தனின் சிறப்புரை,மருதமூரான்,சேரன்கிரிஷ்,லோஷன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து சூடான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்ந்தன.
புனைபெயர்களில் எழுதுவது,இலங்கையில் பயன்பாட்டில் இல்லாத சொற்களைப் பயன்படுத்துவது,இந்திய மொழி நடையைக் கையாள்வது, தமிழில் தட்டச்சு செய்யும் கீ-போட்வகை,Unicode முறை,எழுத்துப் பிழைகள்,யாழ்தேவி என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திரட்டி பற்றி காரசாரமான கருத்துக்கள் ஒன்றுகூடலில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.
புல்லட்டின் குறும்புத்தனமான பேச்சு எல்லோரையும் துளைத்தெடுத்தது.4 மணித்தியாலங்களை எடுத்துக்கொண்டது இந்த ஒன்றுகூடல்.
'கௌபாய்மது' என்ற பதிவரால் இணையத்தில் இந்த ஒன்றுகூடல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.இதை வெளிநாடுகளில் இருந்து பார்த்த பல பதிவர்கள் தமது வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
பதிவர்கள் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.சில ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.
இறுதியாக வந்தியத்தேவனின் நன்றியுரையோடு ஒன்றுகூடல் இனிதாய் நிறைவேறியது.
சொன்னதைப்போல சிற்றுண்டிகளும் நெஸ்கபேயும் கொடுத்தனர்.
இவைதான் என் நினைவுக்குள் நிழலாடுபவை. ஏதாவது குறிப்பிடாமல் விட்டிருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே.
இலங்கைப் பதிவர் ஒன்றுகூடலில் நானும் இணைந்து கொண்டதில் மகிழ்ச்சி.இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
இலங்கைப் பதிவர்களின் ஆரம்பமே அசத்தல்தான்.இலங்கைப் பதிவர்களின் சாதனைப் பயணம் தொடரும்.........
6 comments:
உங்களை எல்லாம் சந்திக்க கிடைத்த அனுபவம் ரொம்பவே சிறப்பாக இருந்தது.. வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றிகள் மயூரன் சந்திப்பின் இன்னொரு பிரச்சனையான மயூரன் என்ற பெயர்களில் எழுதுபவர்கள் பற்றி விட்டுவிட்டீர்கள்(ஹிஹிஹி சும்மா).
மிக்க நன்றிகள் மயூரன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
நண்பர்களே உங்களுக்கும் நன்றிகள்..வந்தியத்தேவன்...... அடுத்த ஒன்றுகூடல் பற்றிய பதிவில் கவனிக்கிறேன்.
ஆரம்பமே அட்டகாசம் என்றால் இனி சொல்லவேண்டுமா
மிக்க நன்றிகள் மயூரன். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..
Post a Comment