பத்தாவது உலகக் கிண்ணக் கிரிகெட் போட்டிகள் ஆரம்பிக்க இருக்கின்ற நிலையில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டு செல்கிறது.ஆசிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுவதால் ஆசிய அணிகள் அதிகம் சாதிக்கும் என்ற நிலை வலுவாகவுள்ளது.ஆனாலும் இங்கிலாந்து,அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்கா நியூசிலாந்து போன்ற அணிகளும் எழுச்சி காணலாம்.பலம் பொருந்திய அணிகளுக்கு சில அதிர்ச்சிகளும் காத்திருக்கிறது.
இலங்கை,இந்திய அணிகளில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதால் இந்த அணிகள் எதிரணிகளுக்கு கடும் சவாலாக விளங்குமென்றும் எதிர்பார்க்கலாம்.
உலகக் கிண்ணப் போட்டியில் 14 அணிகள் களம் காண்கின்றன.இரு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரிவிலும் 7 அணிகள்.இதில் ஐந்து அணிகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் மற்றைய இரண்டும் டெஸ்ட் அங்கீகாரம் பெறாத சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணைப்பு அங்கீகாரம் பெற்றவை.இவை ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடும் அணிகள்.
A பிரிவு :அவுஸ்ரேலியா,கனடா,சிம்பாப்வே,இலங்கை,நியூசிலாந்து,கென்யா,பாகிஸ்தான்.
B பிரிவு : இந்தியா, இங்கிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள்,தென்னாபிரிக்கா,பங்களாதேஷ்,அயர்லாந்து,நெதர்லாந்து
14அணிகள் பற்றிய எனது பார்வை :
இலங்கை
உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடு உலகக்கிண்ணத்தை வென்றதில்லை என்ற நிலையை 1996ஆம் ஆண்டு மாற்றி புதிய வரலாறு படைத்தது இலங்கை.சொந்த மண்ணிலே இலங்கை அதிக போட்டிகளை விளையாடவுள்ளதால் அணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.உலகக் கிண்ணத்தை வெல்லக் கூடிய அணிகளுள் ஒன்றாக விளங்கும் இலங்கை அணியை அனுபவமிக்க சிறந்த தலைவர் குமார் சங்ககார சிறப்பாக வழிநடத்துவார்.
துடுப்பாட்டம்:ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் டில்ஷான்,உபுல் தரங்க ஆகியோர் அதிரடியைக் காட்டினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோரின் அனுபவம் வாய்ந்த துடுப்பாட்டம் அணிக்குப் பெரிய பலம்.
பின் களத்தில் அஞ்சேலோ மெத்யூஸ், கப்புகெதர,திசர பெரெரா போன்ற போன்ற இளமையான சகலதுறை வீரர்கள் கை கொடுத்தால் இலங்கை 300 ஓட்டங்களைப் பெறலாம்.
பந்து வீச்சு:பந்துவீச்சில் உலக சாதனையாளர் முத்தையா முரளிதரன் தனது இறுதி சர்வதேசஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறார்.எனவே எதிர்பார்ப்புகள் அதிகம்.இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைக்கும் அதேவேளை,அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற் பந்து வீச்சாளர் என்ற பெருமையும் கிடைக்கும்.
முரளிக்கு பக்க பலமாக ரங்கன ஹேரத்,அஜந்த மென்டிஸ் ஆகியோர் சுழலில் அசத்தலாம்.வேகப் பந்து வீச்சில் மலிங்கா,நுவன் குலசேகர,டில்கார பெர்னான்டோ,திசர பெரெராஆகியோர் மிரட்டுவர்.
இலங்கையின் பலவீனம் மத்திய அல்லது நடுவரிசை வீரர்களின் துடுப்பாட்டமே.இலங்கையின் மத்திய வரிசையை (மிடில் ஓர்டர்) தகர்த்தால் எதிரணி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
1996 இல் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை,57 போட்டிகளில் 25 வெற்றி ,30 தோல்வி, ஒரு போட்டிசமநிலை.ஒரு போட்டி முடிவில்லை.
அனுபவமும் இளமையும் கலந்த வீரர்களுடன் சம பலத்துடன் களமிறங்கும் இலங்கை இம்முறை சாம்பியனாவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.
பாகிஸ்தான்
சர்ச்சைகளும் குழப்பங்களும் நிறைந்த அணியென்றால்,அது பாகிஸ்தான் அணியாக மட்டுமே இருக்கும்.அனுபவ வீரர்களின் ஒழுக்கமின்மையால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது பாகிஸ்தான்.அண்மையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தடை செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக அணியின் ஏனைய வீரர்களுக்குள் உள ரீதியாக சில குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.இருந்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து சாதித்து அந்தக் கறைகளை அகற்றவேண்டிய நிலைமையில் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
துடுப்பாட்டம்: அனுபவ வீரர்கள் யூனிஸ் கான்,மிஸ்பா உல் ஹக்,ஹஃபீஸ்,புதுமுக வீரர் ஷேஜாத் ஆகியோரின் துடுப்பாட்டம் அணிக்குப் பலமே.அஃப்ரீடியின் ஆட்டம் சூடு பிடித்தால் எதிரணியின் நிலைமை கவலைக்கிடம்.சரிவை எதிர்நோக்கும் அணியை மீட்டு,வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை படைத்தவர்அப்துல் ரசாக்.உமர் - கம்ரன் அக்மல் சகோதரர்கள் மனம் வைத்து விளையாடினால் பாகிஸ்தான் அதிகம் சாதிக்கலாம்.அணியை வெற்றி பெற வைக்கவும் முடியும்.
பந்து வீச்சு: வேகப்பந்து வீச்சாளர்கள் அக்தார்,உமர் குல்,அப்துல் ரசாக்,சுழற்பந்து வீச்சாளர்கள் அஃப்ரீடி,அஜ்மல்,வஹாப் ரியாஸ் என்று தரமான பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எதிரணிக்கு சிக்கல் இருக்கும்.சிம்பாப்வே,நியூஸீலாந்து அணிகளை வீழ்த்த வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்ற போதும் அவுஸ்ரேலியா,இலங்கை அணிகளிடம் கடும் சவாலை எதிர்நோக்க வேண்டி வரும்.
ஒரு முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பாகிஸ்தான் 56 போட்டிகளில் 30 இல் வென்று, 24இல் தோற்றுள்ளது 2 போட்டிகள் முடிவேதும் தெரியாமல் கைவிடப்பட்டுள்ளன.
எழுச்சி கொண்டால் எழுச்சியும் வீழ்ச்சி கண்டால் வீழ்ச்சியும் அடையும் ஒரே அணி பாகிஸ்தான்.எப்படி விளையாடுமென்று இறுதிவரை கணிக்க முடியாத அணியும் இதுவே.
இந்த அணியின் பலமும் பலவீனமும் ஒன்றேயொன்றுதான்.அதுதான் அணி ஒற்றுமை. எழுச்சி கண்டால் இறுதி வரை முன்னேறும் பாகிஸ்தான்.
தென்னாபிரிக்கா
இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் கிண்ணம் வெல்லுமென்று எதிர்பார்க்கப்படும் அணிகளிலொன்றான தென்னாபிரிக்கா பலமான அணியாகக் களமிறங்குகிறது.
களத் தடுப்பு உத்தி,பந்து வீச்சு மாற்றம் ஆகியவற்றில் திறமை படைத்த தலைவர் கிரஹம் ஸ்மித் தனது நிதானமான அதிரடியைக் காட்டினால் தென்னாபிரிக்கா இலகுவாக அடுத்த கட்டங்களுக்கு முன்னேறலாம்.
துடுப்பாட்டம்:அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வீரர்களிலொருவர் ஹஷிம் அம்லா.அண்மைக்கால டெஸ்ட்,ஒருநாள் கிரிக்கெட்டில் அபார திறமையை வெளிக்காட்டி வருமிவர் ஒருநாள் கிரிகிக்கெட்டில் அதிக (59.88)சராசரியுடன் களமிறங்குகிறார்.
அணியின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் இன்னொருவர் ஜாக் கலிஸ்.இவரது அனுபவம் வாய்ந்த அதிரடிஆட்டம் அணிக்குப் பலம் சேர்க்கும்.பந்து வீச்சிலும் இவர் கில்லாடி.259 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ள கலிஸ் மொத்தத்தில் தலை சிறந்த சகலதுறை வீரர்.
துடுப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஏ.பி.டீ.விலியர்ஸ்,டுமினி ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள்.இது அணிக்குக் கூடுதல் பலம்.
பந்து வீச்சு:வேகப் பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கெல்,சொட்சோபே ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைக்கின்றனர்.சுழலில் ஜோஹன் போத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவாரென்றே எதிர்பார்க்கலாம்.
சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத் தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.
சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத் தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.
அணியின் பலவீனம் மிகவும் நெருக்கடியான தருணங்களில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடுவது.இதை பல போட்டிகளில் கண்டிருக்கிறோம்.
இதுவரை உலகக் கிண்ணத்தை வெல்லாத தென்னாபிரிக்கா 40 போட்டிகளில் 25 போட்டிகளில் வென்று 13 போட்டிகளில் தோல்வியுற்றுள்ளது.2 போட்டிகள் சமநிலை.
பி-பிரிவிலுள்ள தென்னாபிரிக்கா,இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள்,இங்கிலாந்து நாடுகளிடம் கடும் சவால்களை எதிர்நோக்க வேண்டிவரும்.காலிறுதியில் இலங்கை, அவுஸ்ரேலியா,பாகிஸ்தான் நாடுகளிலொன்றை எதிர்கொள்ள நேரிட்டால் கடும் சவாலை சந்திக்க வேண்டியிருக்கும்.ஆனாலும் அரையிறுதி வரை இந்த அணி முன்னேற வாய்ப்புண்டு
இங்கிலாந்து
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் தலைமையில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள்,பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகத் திரண்டு எழுந்து அவுஸ்ரேலியாவை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய பலத்துடனிருக்கிறது இங்கிலாந்து. இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்றும் கருதப்படுகிறது.
ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின் தலைமையில் திறமையான துடுப்பாட்ட வீரர்கள்,பந்து வீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகத் திரண்டு எழுந்து அவுஸ்ரேலியாவை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வீழ்த்திய பலத்துடனிருக்கிறது இங்கிலாந்து. இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல சாதகமான அணி என்றும் கருதப்படுகிறது.
துடுப்பாட்டம்: ஜொனதன் டிராட்டின் சமீபத்தியஅதிரடியான துடுப்பாட்டம்,கெவின் பீட்டர்சனின்,ஸ்ட்ராஸின் அதிரடி,இயன் பெல்,காலிங்வுட் ஆகியோரது துடுப்பாட்டம் என்று இங்கிலாந்து துடுப்பாட்டம் பலமாகவுள்ளது. மொத்தத்தில் ஓரிருவரைத் தவிர ஏனைய அனைவரும் துடுப்பாட்டத்தில் கலக்குவர்.
பந்து வீச்சு: பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் சுழல் இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும்.டிம் பிரெஸ்னன்,ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசத்துவர்.அது மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்ப்பார்கள்.லூ க் ரைட்,யார்டி சகலதுறை வீரர்கள் பலர் இருப்பதால் ஜேம்ஸ் அண்டர்சன் அணிக்குள் வருவாரா என்பது கேள்விக்குறியே.விக்கெட் காப்பாளர் மேட் பிரையரை பின் வரிசையில் களமிறக்கினால் அதிக நன்மைகளை பெறலாம்.
இந்தப் பிரிவில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா,மேற்கிந்தியத் தீவுகள்,தென்னாபிரிக்க அணிகள் சவாலாக இருக்கும்.காலிறுதியில் இலங்கையை எதிர்கொண்டால் அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும். 59 போட்டிகளில் 36இல் வென்று, 22 போட்டிகளில் தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லை
இங்கிலாந்தின் பலம் அணியிலுள்ள சகலதுறை வீரர்கள்.
காலிறுதியைக் கடந்தால் இறுதிப் போட்டி வரை முன்னேறி முதன் முறையாக உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் இங்கிலாந்து.
அடுத்த பதிவில் மிகுதி அணிகள்..................
5 comments:
really good writting but when will tell abt the champions?
really good writting when will u write abt the champoions?
அணிகள் பற்றிய கருத்துக்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும் நீங்கள் வெற்றிபெறும் என்று வெளிப்படையாக எந்த அணியையும் சொல்லாதவரை
இலங்கை அணிக்கு பலம் தான் he he he he
உங்கள் பதிவில் உலகக் கிண்ண சுவாரஷ்யங்களை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்
அணிகள் பற்றிய கருத்துக்கள் விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும் நீங்கள் வெற்றிபெறும் என்று வெளிப்படையாக எந்த அணியையும் சொல்லாதவரை
இலங்கை அணிக்கு பலம் தான்
உங்கள் பதிவில் உலகக் கிண்ண சுவாரஷ்யங்களை தொடர்ந்து எதிர் பார்க்கிறோம்
great...
nice writing ..
Post a Comment