Pages

Saturday, July 24, 2010

"முத்து கிரிக்கெட்டுலகின் சொத்து"

கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய சுழற்பந்துவீச்சாளர்களில்,தலைசிறந்த வீரர்களிலொருவராக அனைவராலும் போற்றப்படுபவர் முத்தையா முரளிதரன். பல சோதனைகளையும் தனது சுழலால்,சாதனைகளாக சாதித்து அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர்.இலங்கையணியில் கடந்த 18 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் முரளி, பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவரென்றே சொல்லலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்,இளைய வீரர்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முரளி, தான் பங்கேற்ற இந்தியா அணிக்கெதிரான, இறுதிப் போட்டியில் இலங்கையணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்து சாதனை வீரனாக விடை பெற்றார்.

எத்தனயோ வீரர்கள் கிரிகெட்டுலகுக்கு வந்தாலும் என் மனதைக் கவர்ந்த பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர் முரளி.மைதானங்களில் அதிகம் கோபப்பட்டுக் கொள்ளாத முரளி,சிரித்த முகத்துடன் பந்து வீசும் தன்மை அனைவரையும் கவர்ந்தததெனலாம். எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை சாய்க்கும் வல்லமை கொண்ட முரளி எப்போதும் எளிமையாகவே காணப்படுவார்.இதுவே முரளியின் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட முரளிக்கான ஒரு பதிவு.முரளியின் சாதனைகளைப் பதிவிட ஒரு பதிவு போதாது பல பதிவுகள் வேண்டும்.

இலங்கையின் கண்டி மாநகரில் பிறந்த முரளி, கண்டி,கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.இவரின் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோவின் அறிவுரைக்கேற்ப சுழற்பந்து வீச்சாளராக தன்னை மாற்றிக் கொண்டார். பாடசாலைக் காலத்தில் ஒரு சகலதுறை வீரராக மிளிர்ந்து பல விருதுகளை தட்டிச் சென்ற வீரரானார் முரளி.
இதன் பின்1991ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இலங்கை A அணியில் இடம்பிடித்த முரளி,இங்கிலாந்தில் பெரிதாக சாதிக்கவில்லை.
அதன் பின்1992 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முரளி, முதல் டெஸ்டிலே முதல் இனிங்சில் 32 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதுடன் போட்டியிலே 141 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முத்திரை பதித்து, சிறந்த சுழற்பந்துவீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டார்.

இலங்கை அணிக்கு, நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை மிகப் பெரும் கௌரவமாகக் கருதும் முரளி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தனக்கு பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அழைத்தால் விளையாடுவேன் எனக் கூறுகிறார்.
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முரளி, இதுவரை 133 டெஸ்ட்போட்டிகளில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 51 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள். ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுக்களை 66 தடவைகள் கைப்பற்றியுள்ள முரளி,22 தடவைகள் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 1 அரைச்சதமடங்கலாக 1261 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்அதிக (515) விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள முரளியின், சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 30 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள். 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள முரளி, துடுப்பாட்டத்தில் 515 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
800 ஆவது விக்கெட்....
1995-1996 பருவ காலத்தில் அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின்போது முரளி பந்தை எறிவதாக நடுவர் டரல் ஹெயார் குற்றஞ்சாட்டினார்.1998-1999 பருவ காலத்தில் அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின்போது முரளி பந்தை எறிவதாக நடுவர் ரோஸ் எமர்சென் குற்றஞ்சாட்டினார்.இதனால் முரளியின் பந்துவீச்சு முறை பரிசீலிக்கப்பட்டது.ஆனால் முரளியின் பந்துவீச்சு பாணி சரியென்பதே முடிவு.அதன் பின் முரளியின் விக்கெட் வேட்டை அதிகமானது.

டெஸ்ட் போட்டிகளில்,தென்னாபிரிக்க அணிக்கெதிராக 15 போட்டிகளில் 104 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 11 போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 16 போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 22 போட்டிகளில் 105 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 14 போட்டிகளில் 82 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 16 போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 13 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் 82 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 14 போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை மண்ணில் 73 போட்டிகளில் 493 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 60 போட்டிகளில் 307 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

28 ஆகஸ்ட் 1992 இல் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்த டெஸ்ட் வாழ்வு 22 ஜூலை 2010 திகதி காலி சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

முரளியின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.
முரளியின் உலக சாதனைகள்
*அதிகடெஸ்ட் விக்கெட்டுக்களை (800) வீழ்த்திய வீரர்.
*800 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியமுதல் வீரர்.
*அதிக பந்துகளை(44039) வீசிய வீரர்.
*அதிக ஓடமற்ற ஓவர்களை(1794) வீசிய வீரர்.
*ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுக்களை(166) வீழ்த்திய வீரர் -SSC மைதானம்
*3 மைதானங்களில் அதிக விக்கெட்டுக்களை (100 இற்கு அதிகம்) வீழ்த்திய வீரர்.
*சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்களை(493) வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியின் ஒரு இனிங்சில் அதிக தடவைகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை(67தடவைகள்) வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியின் இரு இனிங்சில் அதிக தடவைகள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை(22தடவைகள்) வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற அணைத்து அணிகளுக்கெதிராகவும் ஒரு போட்டியில்10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியில் தலா 9 விக்கெட்டுக்களை 2 தடவைகள் வீழ்த்திய வீரர்.
*தொடர்ந்து 4 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்.
*தொடர்ந்து 4 போட்டிகளிலும்10 விக்கெட்டுக்களை 2 தடவைகள் கைப்பற்றிய வீரர்-(2001,2006)
*அதிக தடவைகள் BOWLD அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-167 தடவைகள்
*அதிக தடவைகள் தானே பந்து வீசி பிடியெடுத்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்( 35 தடவைகள்)
*அதிக தடவைகள் STUMPED அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-47 தடவைகள்
*அதிக தடவைகள் பிடியெடுப்பு (cathes) அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-435 தடவைகள்
*விக்கெட் காப்பாளரல்லாத களத் தடுப்பாளர்களால் அதிக பிடியெடுக்கப்பட்டு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-388 தடவைகள்
*விக்கெட் காப்பாளரல்லாத களத் தடுப்பாளரால்(மஹேல) அதிக பிடியெடுக்கப்பட்டு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-77 தடவைகள்.
*டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் 50 இற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*இந்திய அணிகெதிராக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2006 ஆம் ஆண்டு 11 போட்டிகளில் 90 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2001 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 80 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2000 ஆம் ஆண்டு 10 போட்டிகளில் 75 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை அதிக 11தடவைகள் வென்ற
வீரர்.

முரளி விளையாடிய133 போட்டிகளில் இலங்கையணி வெற்றி பெற்ற 54 சந்தர்ப்பங்களில் முரளி வீழ்த்திய விக்கெட்டுகள் 438.


முரளியின் சில பதிவுகள்:
1993 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் முதன் முதலாய் 5(5/104) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1994 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் வெளிநாட்டு மண்ணில் முதன் முதலாய் 5(5/162) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1998 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக கண்டியில் நடைபெற்ற போட்டியில் முதன் முதலாய் 10(12/117) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1998 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில்,ஒரு போட்டியின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியைப் (16/220) பெற்றுக்கொண்டார்

2002 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியைப் (9/51) பெற்றுக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் கோட்னி வால்ஷின் (519 விக்கெட்) உலகசாதனை முறியடிப்பு.

2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் ஷேன் வோனின் (708 விக்கெட்) உலகசாதனை முறியடிப்பு.

2010 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.


முரளியின் விக்கெட் வேட்டை.......
01 கிரேக் மக்டமட் - அவுஸ்ரேலியா
50 நவஜோத் சிங் சித்து -இந்தியா
100 ஸ்டீபன் பிளெமிங்- நியூசிலாந்து
150 கய் விட்டல் -சிம்பாப்வே
200 பென் ஹோலியொக் -இங்கிலாந்து
250 நவீ ட் அஷ்ரப் - பாகிஸ்தான்
300 ஷோன் பொல்லாக்-தென்னாபிரிக்கா
350 மொஹமட் ஷரிப் - பங்களாதேஷ்
400 ஹென்றி ஒலங்கா-சிம்பாப்வே
450 டரல் ரபி-நியூசிலாந்து
500 மைக்கல் கஸ்ப்ரோவிக்ஸ் - அவுஸ்ரேலியா
520 என்(N)காலா -சிம்பாப்வே ( கோட்னி வால்ஷின் உலகசாதனை முறியடிப்பு)
550 காலித் மஷுத் -பங்களாதேஷ்
600 காலித் மஷுத் பங்களாதேஷ்
650 மக்காய நிடினி- தென்னாபிரிக்கா
700 சயத் ரசல் -பங்களாதேஷ்
709 போல் கோலிங்க்வூட்- இங்கிலாந்து( ஷேன் வோனின் உலகசாதனை முறியடிப்பு)
750 சௌரவ் கங்குலி - இந்தியா
800 பிரக்ஜன் ஓஜா- இந்தியா இவர்கள் தலைமையில் முரளியின் விக்கெட் வேட்டை
தலைவர்கள் போட்டிகள் விக்கெட்
அர்ஜுன ரணதுங்க- 42 - 203
சனத் ஜெயசூரிய- 35 - 230
ஹஷான் திலகரத்ன- 10 - 76
மார்வன் அத்தப்பத்து- 11 - 70
மஹேல ஜெயவர்தன- 28 - 186
குமார் சங்ககார- 6 - 30
கிரஹம் ஸ்மித்- 1 - 05 (ICC அணிக்காக விளையாடிய சந்தர்ப்பம்)

பல சோதனைகளை எதிர்கொண்டும் அவற்றையெல்லாம் முறியடித்து சாதனை நாயகனாக கிரிக்கெட் ரசிகர்கள் அகங்களில் என்றும் முரளி.முரளியின் சாதனைகள் முறியடிக்கப்படாத சாதனைகளே.எட்ட முடியாத எல்லையில் முரளி.
சாதனைகள் பல படைத்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள்.

Saturday, July 17, 2010

கலகலக்குமா.... காலி.....

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. முதலாவது போட்டி காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியுடன் முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு இப்போது.
இந்தியா
சச்சின், டோனி,லக்ஷ்மன்,சேவாக்,ட்ராவிட் ஆகியோரின் துடுப்பாட்டம் மட்டுமே இந்தியாவின் பலம்.வேகப் பந்து வீச்சு பலவீனமே. அனுபவ வீரர்களான சாகிர்கான் , ஸ்ரீசாந்த் ஆகியோர் அணியில் இல்லாமை இந்தியாவுக்கு பாதகமே.பந்து வீச்சில் சுழல் பந்துவீச்சை மட்டுமே அதிகம் நம்பியுள்ளது இந்தியா.

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் அணிக்கெதிராக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில், இந்தியத் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளித்தனர். சச்சின்,டோனி,லக்ஷ்மன்,சேவாக்,ட்ராவிட் போன்ற முன்னணி வீரர்கள் பிரகாசிக்கத் தவறினர். யுவராஜ் மட்டுமே சதமடித்தார்.

சாகிர்கான், ஸ்ரீசாந்த் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்களின்றி இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சாதிக்க முடியாத நிலையில் ஓஜா,மிஸ்ரா,ஹர்பஜன் சுழலையே நம்பியுள்ளது இந்திய அணி.
இலங்கை
இலங்கை அணியின் துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டுமே பலமாகவுள்ளது. மஹேல,சங்ககார,டில்ஷான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க, மாலிங்கவின் வேகமும் முரளியின் சுழலும் இலங்கைகுக் கை கொடுக்குமென்றே தோன்றுகிறது.
இலங்கை இந்திய அணிகள் 32 போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்துள்ளன. இதில் 13 இல் இந்தியாவும் 05 இல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. 14 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
சாதனை முரளி
முதலாவது போட்டியுடன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளி ஓய்வுபெறவுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முரளியை நோக்கி.

132 டெஸ்ட் போட்டிகளில்,792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள முரளி, இன்னும் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தினால்,800 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் வீரரென்ற புதிய மைல்கல்லை எட்டலாம். இச்சாதனையை, சாதனை நாயகன் முரளி படைப்பாரா?
சாதனை நாயகன் முரளி பற்றிய சிறப்புப் பதிவை எதிர்பாருங்கள்....

Monday, July 12, 2010

ஸ்பெயினை முத்தமிட்ட உலகக் கிண்ணம்

கடந்த ஜூன் 11ஆம் திகதி ஆரம்பித்த 19 ஆவது உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் கோலாகலமாக வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுக்கு வந்தன.

பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் உலகக் கிண்ணம் ஸ்பெயின் அணியிடம் முத்தம் பெற ஆசைப்பட்டது போல், ஸ்பெயின் வசமானது.முதன்முறையாக உலகக் கிண்ணக் கனவை நிறைவேற்றிக் கொண்டது ஸ்பெயின். 1982ஆம்ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய பெருமையைக் கொண்ட ஸ்பெயினுக்கு இப்போது கிடைத்திருப்பது மகத்தான பெருமை. வரலாற்றுப் பெருமை.

பலம் பொருந்திய அணிகளான பிரேசில்,ஆர்ஜென்ரினா, இத்தாலி, ஜேர்மனி,இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இறுதிப் போட்டிவரை முன்னேறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த அணிகள் சறுக்கலை சந்திக்க நெதர்லாந்து,ஸ்பெயின் அணிகள் இறுதிக்கு முன்னேறி சாதித்தன.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

ஜோகனஸ்பார்க்கின் 'சாக்கர் சிட்டி'(soccer city) மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின்,நெதர்லாந்து அணிகள்,முதன் முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பலம் காண,களம் கண்டன.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோலடிக்க முயன்றும் பலனில்லை. நெதர்லாந்து வீரர்கள் முரட்டுத் தனமாக விளையாட பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் முரட்டுத் தனமாக விளையாட நடுவர் அடிக்கடி மஞ்சள் அட்டையைக் காண்பிக்க வேண்டிய நிலைக்குள்ளானார்.

பந்தை உதைக்க வேண்டிய வீரர்கள், வீரர்களை உதைத்துத் தள்ளி மோசமாக விளையாடினர். இதன் உச்சக் கட்டமாக 29ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்க் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார். முதல் பகுதியில் இரு அணியினராலும் கோலெதையும் பெற முடியவில்லை.

இரண்டாவது பகுதியில் 54ஆவது,62ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன்,அடித்த பந்தை ஸ்பெயின் கோல் காப்பாளர் கேசில்லாஸ் அபாரமாக தடுக்க,ராபன் கோலடிக்க முனைந்த வாய்ப்பு வீணாகியது. இத்தொடரில் 5 கோலடித்த ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா 69,76வது நிமிடத்தில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்பை வீணாக்கினார். அதே போல் இத்தொடரில் 5 கோல டித்த நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டமும் சிறப்பாக அமையவில்லை.

இரண்டாவது பகுதியின் மேலதிக நேரத்திலாவது கோல் அடிக்கப்படுமாவென ரசிகர்கள் எதிர்பார்க்க,118 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் 'இனியஸ்டா' லாவகமாக கோலடிக்க ஸ்பெயின் பக்கம் வெற்றி அலை வீசத் தொடங்கியது.நெதர்லாந்து அணியால் எந்தவித கோலையும் அடிக்க முடியாமல் போக, இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
கடந்த 1974,1978 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது போன்று நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக உலக கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் இரண்டாமிடத்தையே பெற முடிந்தது.


இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் ஸ்பெயின் படைத்தது.
ஆரம்பப் போட்டியில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தை வென்ற முதல் அணி.
ஐரோப்பியக் கிண்ணம், உலகக் கிண்ணம் இரண்டையும் ஒரே சமயம் வென்ற மூன்றாவது அணி.

19 ஆவது உலகக் கிண்ணப் போட்டிகளை சிறப்பாக, பிரம்மாண்டமாக நடத்தி முடித்த தென்னாபிரிக்கவுக்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் சார்பில் வாழ்த்துவோம் நாம்...........

Sunday, July 11, 2010


உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டி தொடர்பான பதிவை எதிர்பாருங்கள்
பந்து பறக்குது

உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வி கண்ட ஜேர்மனி மூன்றாமிடத்தைப் பெற்று ஆறுதலடைந்தது.

மூன்றாமிடத்துக்கான போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஜேர்மனி,உருகுவே அணிகள் மோதின. 19ஆவது நிமிடத்தில் முல்லர் முதலாவது கோலையடித்து ஜேர்மனியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இது முல்லர் இத்தொடரிலடித்த 5ஆவது கோல்.



இதன் பின் உருகுவே வீரர்கள் அதிரடியாக விளையாடினர். 28ஆவது நிமிடத்தில் கவானி, கோலடித்து, கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.முதல் பகுதி முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலடித்ததால் போட்டி 1-1 என சமநிலையில் காணப்பட்டது. இரண்டாவது பகுதியின் 51ஆவது நிமிடத்தில் உருகுவே அணியின் போர்லான் ஒரு கோலடித்தார். 56ஆவது நிமிடத்தில் ஜேர்மனியின் இயான்சன் ஒரு கோலடிக்க,போட்டி 2-2 என மீண்டும் சமநிலையையடைந்தது.

இதனால் மீண்டும் போட்டியில் விறுவிறுப்பேற்பட 82ஆவது நிமிடத்தில் 'கார்னர்-கிக்' வாய்ப்பில் ஓசில் பந்தை அடிக்க,கதிரா தலையால் முட்டி கோலடிக்க ஜேர்மனி 3-2 என முன்னிலை பெற்றது.உருகுவே அணிக்கு இறுதி நேரத்தில் கோலடிக்கும் வாய்ப்புக் கிடைத்தும் அது பலனளிக்கவில்லை.
இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்று மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தது.
இரண்டு முறை சாம்பியனான உருகுவே 1970ஆம் ஆண்டின் பின் அரையிறுதி வரை முன்னேறியிருந்தது.
ஜேர்மனி அணியில் முதுகு வலி காரணமாக க்ளோஸ் விளையாடவில்லை. இதனால் பிரேசில் வீரரான ரொனால்டோவின் அதிக கோல்(15) உலக சாதனையை க்ளோஸ்(14) முறியடிக்க முடியலவில்லை.
அடுத்த பதிவு இறுதிப் போட்டியின் முடிவுகளோடு ........

Saturday, July 10, 2010

பந்து பறக்குது


உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட முதலாவது அரையிறுதிப் போட்டியில் உருகுவேயும், நெதர்லாந்தும் மோதின.போட்டி ஆரம்பித்த நேரம் முதல் இரு அணி வீரர்களும் கோலடிக்கும் முனைப்புடன் விளையாடினர்.போட்டியின் 18ஆவது நிமிடத்தில் முதலாவது கோலைப் போட்டு நெதர்லாந்து முன்னிலை பெற்றது. இருந்தாலும் இந்த மகிழ்ச்சி நெதர்லாந்து வீரர்களுக்கு அதிக நேரம் நீடிக்கவில்லை. 41ஆவது நிமிடத்தில் உருகுவேயின் போர்லான் அபாரமான கோலடித்து முதல் பகுதி ஆட்டத்தை சம நிலைக்குக் கொண்டு வந்தார்.

இரண்டாவது பகுதியின் 70ஆவது நிமிடத்தில், வெஸ்லி ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலையும் 73 ஆவது நிமிடத்தில் அர்ஜன் ராபன் 3ஆவது கோலையும் போட்டு நெதர்லாந்தை முன்னிலைப்படுத்தினர்.90 நிமிட ஆட்டம் முடிந்து வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் உருகுவே அணியின் பெரைரா 2ஆவது கோலைப் போட்டார். இதனடிப்படையில் முதலாவது அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதியைப் பெற்றது நெதர்லாந்து.

அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே தென்னமெரிக்க அணியென்ற பெருமையுடன் உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஜேர்மனியை எதிர்கொள்கிறது உருகுவே .

இரண்டாவது அரையிறுதியில் ஸ்பெயின் ,ஜேர்மனியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் ஆரம்பம் முதலே, ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஸ்பெயின் அணியினருக்கு பல,கோலடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தும் அவை வீணாகின.முதல்பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 73 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினுக்கு புயோலால்அடித்தது அதிஷ்டம். ஷேவி அடித்த 'கார்னர் கிக்' பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார் கார்லஸ் புயோல்.இதனால்1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது ஸ்பெயின்.

எப்படியாவது ஒரு கோலையாவது அடித்து சமநிலைப் படுத்த ஜேர்மனி முயன்றும் பலனில்லை. முன்னணி வீரர்களான குளோஸ், பொடோல்ஸ்கி இருவரும் சாதிக்கத் தவற, இறுதியில் ஜேர்மனி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழக்க,ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று,முதன் முறையாக உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஜேர்மனி மூன்றாமிடத்துக்கான போட்டியில் போட்டியில் உருகுவேயை சந்திக்கிறது.
அடுத்த பதிவில் மூன்றாமிடத்துக்கான போட்டி முடிவுகள்.......
பந்து பறக்குது

கடந்த ஜூன் 11ஆம் திகதி ஆரம்பித்த உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் ஜூலை 11 நிறைவுக்கு வரவுள்ளன. . பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் உலகக் கிண்ணம் எந்த அணியிடம் முத்தம் பெற ஆசைப்படுகிறதோ....

32 அணிகள் பங்குபற்றும் உலகக் கிண்ண போட்டிகளில்,கடந்த முறை இறுதிப் போட்டி வரை முனேறிய பிரான்ஸ்,இத்தாலி அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியமை இம்முறை கால்பந்தாட்ட ரசிகர்களுக்குக் கிடைத்த முதல் அதிர்ச்சியாகும்.


பலம் பொருந்திய அணிகளான பிரேசில், இத்தாலி, ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஆர்ஜென்ரினா ஆகியவை இறுதிப் போட்டிவரை முன்னேறுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அந்த அணிகள் சறுக்கலை சந்திக்க,நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிக்கு முன்னேறி சாதித்தன.ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ள இப்போது வாய்ப்புக்கள் அதிகம்.

கணனியில் ஏற்பட்ட கோளாறால் போட்டிகள் பற்றிய விபரங்களை உடனடியாக பதிவிட முடியவில்லை. காலிறுதிப் போட்டிகளிலிருந்து ஒரு சுருக்கமான பார்வை...

முதல் காலிறுதி:
உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதியின் முதல் போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை.இருந்தாலும் போட்டியின் முதல் பகுதியின் (47வது நிமிடம்) கானாவின் முன்ட்டாரி அடித்த கோல் மூலம் கானா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பகுதியில் உருகுவே அணிக்கு 55ஆவது நிமிடத்தில் 'பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை போர்லன் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார்.இதனால் 1-1 என சமனானது. இறுதி வரை இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், 1-1 என போட்டி சமனானது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.அந்த நேரத்திலும் இருஅணியினரும் கோலடிக்காத காரணத்தால் 'பெனால்டி ஷூட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டியதாயிற்று. இதில் கானா வீரர்கள் கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட, உருகுவே 5-3 என வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேற, கானா வெளியேறியது.

இம்முறை பங்கேற்ற 06ஆபிரிக்க நாடுகளில் லீக் சுற்றுகளைக் கடந்து காலிறுதி வரை முன்னேறிய ஒரே அணியென்ற பெருமை கானாக்கு சொந்தமானது.



இரண்டாவது காலிறுதி:
பரபரப்பான இரண்டாவது காலிறுதிப் போட்டியில்,5 முறை சாம்பியன் பட்டம் வென்ற,பிரேசில்,நெதர்லாந்து அணிகள் மோதின. ரொபின்ஹோ அடித்த கோல் மூலம் போட்டி ஆரம்பித்த சில நிமிடத்திலே பிரேசில்அணி முன்னிலை பெற, போட்டி விறுவிறுப்பானது.முதல் பகுதியில் நெதர்லாந்து அணியால் கோல் எதையும் பெற முடியவில்லை. இதனால் பிரேசில் முதல் பகுதியில் 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பகுதியில் நெதர்லாந்து வீரர்கள் துடிப்புடன் செயற்பட்டனர். 53ஆவது நிமிடத்தில் அர்ஜென் ராபென் அடித்த பந்தை,கோல் கம்பத்தை நோக்கி ஸ்னைடர் அடிக்க அங்கிருந்த பிரேசில் கோல் காப்பாளர் ஜூலியோ சீசர் பந்தைப் பிடிக்கத் தவற, பிரேசில் வீரர் பெலிப் மெலோவின் தலையில் பட்டு, 'சேம் சைட்' கோலாக மாறியது.80ஆண்டு கால வரலாற்றில் பிரேசில் முதன் முறையாக சேம் சைட் கோல் அடித்து எதிர்பாராத சாதனை புரிந்தது.
68ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு 'கார்னர்-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை ராபென் அடிக்க, நெதர்லாந்தின் ஸ்னைடர் கோலாக மாற்றினார். இதையடுத்து நெதர்லாந்து அணியினர் வசம் ஆட்டம் திரும்பியது.
73 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஸ்னைடரை,பிரேசிலின் பிலிப் மெலோ கீழே தள்ளிவிட, நடுவர் சிவப்பு அட்டை காட்டி பிலிப் மெலோவை வெளியேற்ற,பிரேசில் 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது.

இறுதியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது முறையாக (1974,1978,1998) அரையிறுதிக்கு முன்னேற, பிரேசில்எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது.

1994 இல் பிரேசில் அணித் தலைவராக இருந்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த 'டுங்கா' இம்முறை பயற்சியாளராக இருந்து அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 'டுங்கா'வின் உத்திகளும் இம்முறை பலனளிக்கவில்லை.

மூன்றாவது காலிறுதி:
மூன்றாவது காலிறுதியில், ஸ்பெயின், பராகுவே அணிகள் களம் கண்டன.போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் அணியினர் சிறப்பாக விளையாடினாலும் முதல் பகுதியில் இரு அணியினராலும் கோல் எதையும் பெற முடியவில்லை.

இரண்டாவது பகுதியில், 57ஆவது நிமிடத்தில் பராகுவேக்கு 'பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது.ஆனால்,ஸ்பெயின் கோல் காப்பாளர் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். இதன் பின் சில நிமிடத்தில் ஸ்பெயினுக்கு 'பெனால்டி-கிக்' கிடைத்தது. இதை அலோன்ஸ்கா கோலாக மாற்றினார்.ஆனால் சரியான இடத்தில் வைத்து பந்தை அடிக்கவில்லை என நடுவர் மறுத்து, மீண்டும் வாய்ப்புக் கொடுத்தார்.ஆனால் பராகுவே கோல் காப்பாளர் பந்தை தடுத்ததால் கோல் வாய்ப்பு வீணாகிப் போனது.
83ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில்அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்ப, டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடிக்க இம்முறையும் பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலாக மாற,ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல். பராகுவே வீரர்கள் பல முறை முயன்றும் பலனில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி நான்காமிடம் பிடித்திருந்தது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறி இப்போது இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

நான்காவது காலிறுதி:
கால்பந்தாட்ட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது காலிறுதியில் ஜேர்மனி,ஆர்ஜென்ரின அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஜேர்மனி ஆதிக்கம் செலுத்தியது.3ஆவது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ-கிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் அடித்த பந்தை தலையால் முட்டி முல்லர் கோல் அடிக்க,ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஆர்ஜென்ரின அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகள் வீணாகிப் போக, முதல் பகுதியில் ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பகுதியில் ஆர்ஜென்ரின வீரர்கள் போராடினர். ஆனாலும் கோலடிக்க முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி ஏமாற்றமளித்தார்.இவரால் இம் முறை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
68 ஆவது நிமிடத்தில் குளோஸ் கோல் அடிக்க,ஜேர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியிலிருந்து ஆர்ஜென்ரினா மீள்வதற்குள் அடுத்த கோலும் அடிக்கப்பட, ஜேர்மனி 3-0 என முன்னிலை பெற்றது.
89ஆவது நிமிடத்தில் குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஜேர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
1986 இல் மரடோனா தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை இம்முறை பயிற்சியாளராக இருந்து பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

அடுத்த பதிவில் அரையிறுதிப் போட்டிகளின் தொகுப்பு.....

Tuesday, July 6, 2010


முத்து எங்கள் சொத்து

இன்று காலையில் தென்னாபிரிக்காவின் வேகப் பந்து வீச்சாளர் மக்காய நிடினியின் பிறந்த நாளுக்காக சந்தோஷத்துடன் அவரைப் பற்றி பதிவிட்ட நான், இப்போது கவலையோடு இந்த பதிவைத் தொடர்கிறேன்.

இன்று மாலை நண்பர் கனாதிபனிடமிருந்து தொலைபேசி அழைப்பு.... அண்ணா முரளி டெஸ்ட் கிரிகெட்டிலிருந்து ஓய்வாம் உண்மையா.... என்றார். எனக்கு இது புதிராகவே இருந்தது. நம்பவில்லை. அப்பிடியா.... என்று கூறியபடியே இணையத்தை பார்த்தபோது விசேட செய்தியாக காணப்பட்டது முரளியின் ஓய்வு.

ஓய்வு பெற வேண்டிய வீரர்கள் இருக்கும்போது முரளி ஓய்வா? இது எனக்குள் மட்டுமன்றி பலரது கேள்வி. என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டே முரளியின் சாதனைப் பக்கங்களை நினைத்துப் பார்த்தேன் முடியவில்லை. ஒன்றா இரண்டா சாதனைகள்? கிரிக்கெட்டில் பந்துவீச்சில் சாதனை என்ற சொல்லின் மறு பெயரே முரளி தான். சோதனைகளை சாதனைகளாக்கிய முரளியின் சாதனைகள் பல. அதை முறியடிப்பதே கடினம்.

1992 இல் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுலகில் அறிமுகமான முரளி 132 டெஸ்ட் போட்டிகளில்792 விக்கெட்டுகளையும் 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்515 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அதி கூடுதல் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தலை சிறந்த வீரராக ரசிகர்கள் மனதில் என்றும் முதல்வனாக இருக்கிறார்.

இந்தியாவுடன் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே முரளியின் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.அதிலும் விக்கெட்டுகளை சாய்த்து சாதனை வீரனாக ஓய்வு பெற வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு.

முரளியின் சாதனைகளைக் மீட்டிப்பார்த்துப் பதிவிட இப்போது மனம் ஒரு நிலையிலில்லை.
மிக விரைவில் முரளியின் சாதனைப் பக்கங்கள் விரியும்...........
முரளி என்றுமே ஹீரோதான் கிரிக்கெட்டில் .........

Monday, July 5, 2010

வேகத்தின் வயது இன்று 33.......

இன்று மக்காயாநிடினியின் 33ஆவது பிறந்த நாள்.
பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு...


சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரனதும் இலட்சியம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளயாடவேண்டுமேன்பதே.அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் வீரனது எதிர்பார்ப்பு தான் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவேண்டுமென்பது. ஆனால் பல வீரர்களுக்கு 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புகள் குறைவு.காரணம் என்னவென்றால், உடல் வலிமை,அடிக்கடி ஏற்படும் உபாதைகள்,வயது, புதிய வீரர்களின் வருகை என்பவற்றால் தொடர்ச்சியாக விளயாடமுடியாமல் போகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் தமது திறமையாலும் அனுபவத்தாலும் முறியடித்து 100௦௦ போட்டிகளைப் பூர்த்தி செய்த பல வீரர்களும் இருக்கிறார்கள்.அந்த வகையில், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது அசுர வேகப்பந்து வீச்சால் பல விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணிக்குப் பெருமை தேடிக்கொடுத்து தனது 100ஆவது போட்டியில் காலடி எடுத்து வைத்துள்ளார் மக்காயா நிடினி(Makhaya Ntini) தென்னாபிரிக்க அணியில் கடந்த 11 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் நிடினி பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவர் என்றே சொல்லலாம்

ஒரு வேகப்பந்துவீச்சளார் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதென்பது மிகப் பெரிய சாதனையே. சர்வதேச அளவில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய வேகப் பந்துவீச்சளார் வரிசையில் இவர் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். முதல் 7 இடங்களில் இருக்கும் வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள்.
சர்வதேச அளவில் 100௦௦ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 49 ஆவது வீரராகவும் 5ஆவது தென்னாபிரிக்க வீரராகவும் இடம்பிடிக்குமிவர், 100௦௦ டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய, 2 ஆவது தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் தனதாக்கியுள்ளார்



1998 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் அந்தப் போட்டியில் முதல், இரண்டாம் இனிங்சில் தலா ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.2000௦௦௦ ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கெதிராக தனது 6ஆவது போட்டியில், முதல் 5 விக்கெட்(66/6) பெறுதியைப் பெற்றார்.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 15 போட்டிகளில் 58 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 8 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 17 போட்டிகளில் 70 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 10 போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 11 போட்டிகளில் 46 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 12 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 15 போட்டிகளில் 63 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிடினி, ஒரு இனிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 18 தடவையும் ஒரு போட்டியில்10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை 4 தடவைகளும் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 37 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகள்.இது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 2005 ஆம் ஆண்டு போர்ட் ஒப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட பெறுதியாகும்.இந்தப் போட்டியில் மொத்தமாக 132 ஓட்டங்களைக் கொடுத்து 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிடினி தென்னாபிரிக்க பந்துவீச்சாளரொருவர் ஒரு போட்டியில் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதி என்ற சாதனையை தன் வசப்படுத்தினார். தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்ற அந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்




தென்னாபிரிக்கஅணி சார்பாக ஒரு போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை(4 தடவைகள் ) அதிக தடவைகள் கைப்பற்றிய வீரரும் இவரே.
1998 முதல் இன்று வரை தென்னாபிரிக்க அணி சார்பாக நிடினி விளையாடியுள்ள 100 போட்டிகளின் அடிப்படையில்,தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ள 50 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 233.தென்னாபிரிக்க அணி தோல்வியுற்ற 27 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 99 மட்டுமே. தென்னாபிரிக்க அணி வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்ற 23 சந்தர்ப்பங்களில் நிடினி வீழ்த்திய விக்கெட்டுகள் 58.
பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்டுள்ள இவர் இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கெதிராக ஒரு தடவைகூட ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை.

சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இவரது பந்துவீச்சு சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்துள்ளது.173 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
வேகத்தால் சாதிக்கும் நிடினி, இன்னும் வேகமாகப் பந்துவீசி விக்கெட்டுகளை சாய்க்க வேண்டுமென்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates