Pages

Sunday, February 28, 2010

உலகக் கிண்ண ஹாக்கி

வழமையாக கிரிக்கெட் பதிவுகளைத் தந்த நான் உலகக் கிண்ண ஹாக்கி தொடர் இன்று ஆரம்பிப்பதால் நான் அறிந்த, தெரிந்த விடயங்களை பகிர்கிறேன் உங்களோடு........
பதிவுகளை விரிவாகத் தரவேண்டுமென்பது என் எண்ணம் ஆனால் நேரம் ....
உலகக் கிண்ண ஹாக்கி தொடர் பற்றிய சிறிய பதிவு............
உலகக் கிண்ண ஹாக்கி தொடர் இன்றுமுதல் எதிர்வரும் மார்ச் 13 வரை இந்தியாவின் டில்லியில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் ஜெர்மனி,அவுஸ்ரேலியா,நெதர்லாந்து,ஆர்ஜென்டினா, கனடா, கொரியா, நியூசிலாந்துஇந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் களத்தில்.இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லக்கூடிய அணிகளின் வரிசையில் ஜெர்மனி முன்னிலையில். கடந்த இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி மீண்டும் சாதித்தால் "ஹாட்ரிக்"வெற்றியாக மாறும்.

ஒரு காலத்தில் சர்வதேச ஹாக்கி அரங்கில் கொடிகட்டிப்பறந்த இந்திய அணி, 8 ஒலிம்பிக் தங்கம் வென்று அசத்தியது.ஆனால், கடந்த 2008 பீஜிங்க் ஒலிம்பிக் போட்டிக்குக் கூட தகுதியைப் பெற முடியவில்லை.அண்மைக் காலமாக சறுக்கிவரும் இந்திய அணி, சொந்த மண்ணில் சாதிக்க வேண்டிய நிலையில் களமிறங்குகிறது.1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 28 ஆண்டுகளின் பின், இத்தொடர் மீண்டும் இந்தியாவில் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இந்திய அணிக்கு சாதகமான தன்மைகளுமுண்டு
இதுவரை நடந்துள்ள உலகக் கிண்ண ஹாக்கி தொடரில், பாகிஸ்தான் அணி அதிகமாக நான்கு முறை (1971,1978,1982, 1994) உலகக் கிண்ணத்தை வென்று சாதித்தது. நெதர்லாந்து அணி மூன்று முறையும் (1973, 1990, 1998), ஜெர்மனி அணி இரண்டு முறையும் (2002, 2006) அவுஸ்ரேலியா (1986), இந்தியா (1975) தலா ஒரு முறையும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளன


உலகக் கிண்ணத்தை வென்ற நாடுகள் :

ஆண்டு சாம்பியன்

1971 பாகிஸ்தான்

1973 நெதர்லாந்து

1975 இந்தியா

1978 பாகிஸ்தான்

1982 பாகிஸ்தான்

1986 அவுஸ்ரேலியா

1990 நெதர்லாந்து

1994 பாகிஸ்தான்

1998 நெதர்லாந்து

2002 ஜெர்மனி

2006 ஜெர்மனி

2010 ??????????????

உலகக் கிண்ணத் தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற அணிகள் வரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. பாகிஸ்தான் அணி, 79 போட்டிகளில் விளையாடி 52 போட்டியில் வெற்றி. 20 போட்டிகளில் தோல்வி.


அதிக கோல் அடித்த அணிகள் வரிசையிலும் பாகிஸ்தான் முதலிடத்தில். 79 போட்டியில், 221 கோல்களை அடித்துள்ளது பாகிஸ்தான் .கடந்த 1982ல் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, 12-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. மொத்தமாக 15 கோல்கள் அடிக்கப்பட்ட இப்போட்டி, உலக வரலாற்றில் அதிக கோல் அடிக்கப்பட்ட போட்டி என்ற பெருமையினையும் பெற்றது.

2010 இல் சாதிக்கப் போகும் அணி எது காத்திருப்போம் முடிவுக்காக .

Wednesday, February 24, 2010

200*

ஒரு சில நாட்கள் பதிவு எதையும் எழுதாமல் இருப்பம் என்ற ஆசைக்கு இடியாய் அமைந்தது சச்சினின் இரடைச்சதம். இந்த இரட்டை சதத்தால் இந்தப் பதிவு.சச்சின் கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் பல. அவற்றுக்காக பல பதிவுகளைத் தந்ததால் இதுவொரு சிறிய பதிவு.
இது எனது150ஆவது பதிவு.
பெப்ரவரி 24, 2010, சச்சின் டெண்டுல்கரின் தினம்.ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் உலகின் தலை சிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் யாரும் சாதிக்க முடியாதென்று கருதிய இரட்டைச் சதத்தை எடுத்து வரலாறு படைத்த நாள். இந்த நாள் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் மறக்க முடியாதநாள்.அதுவும் சச்சினுக்கு என்றுமே மறக்கமுடியாதநாள்.

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியிலே குவாலியரில் இந்த சாதனையைப் படைத்தார் சச்சின்.

தென்னாபிரிக்க பந்து வீச்சை லாவகமாக எதிர்கொண்ட சச்சின் ,90 பந்துகளில் சதத்தை எடுத்து, அடுத்த 57 பந்துகளில் இன்னொரு சதம் எடுத்து, இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார். இனி இந்த சாதனையை இப்போதைக்கு யாராலும் முறியடிக்க முடியாதென்பதே எனது கணிப்பு.

இதற்கு முன், சிம்பாப்வே வீரர் சார்ள்ஸ் கவுண்ட்ரி(194*), பாகிஸ்தானின் சயீத் அன்வர் (194) ஆகியோரே அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களாகவிருந்தனர். இந்த வரலாற்றுச் சாதனையை 20 ஆண்டுகாலமாக தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு அர்ப்பணிப்பதாகக் குறிப்பிடுகிறார் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற சச்சின்.

சச்சினின் இரட்டை சதத்தால்,குவாலியர் கிரிக்கெட் சங்கம் இந்த மைதானத்தின் பெவ்லியனுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டவிருப்பதாக அறிவித்துள்ளது.
அண்மைக் காலமாக சதம் குவிக்கும் வீரராக மாறிவரும் சச்சின் இன்னும் பல சாதனைகளை விரைவில் படைப்பார் என்றே தோன்றுகிறது

பிரெட் லீ பற்றிய பதிவை விரைவில் எதிர்பாருங்கள்

Thursday, February 18, 2010

முதலிடத்தில் இந்தியா


இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் நிலையில் நீடிக்கிறது.
2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடரில் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் இந்தத் தொடர்,1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.

5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்குபற்றுவதாகவே ஆரம்பத்தில் கூறப்பட்டது.திடீரென இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக முதலிடத்திற்கு வந்ததும் இந்தத் தொடரை இந்திய கிரிக்கெட்சபை 2 டெஸ்ட்கள், 3 ஒரு நாள் போட்டிகள் என மாற்றியது. இதற்கு ஆரம்பத்தில் மறுத்தபோதும் பின்னர் சம்மதித்தது தென்னாபிரிக்கா.


முதலாவது டெஸ்ட்
நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டோனியின் தலைமையின் கீழ் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அது இனிங்ஸ் தோல்வியாக அமைந்தது.தொடர்ந்து டெஸ்ட் வெற்றிகளை அணிக்குப் பெற்றுக் கொடுத்த டோனியை பெரிதும் கலக்கமடைய வைத்தது இந்தத் தோல்வி.அணியில் 3 முக்கிய வீரர்களின்றியே ( ட்ராவிட், லக்ஷ்மண், யுவராஜ் சிங்) களமிறங்கியது இந்தியா.

ஹாசிம் அம்லா(253*),ஜாக்ஸ் கலிஸ் (173) ஆகியோரின் அபாரமான துடுப்பாட்ட உதவியுடன் முதல் இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 558 ஓட்டங்களைக் குவித்து தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது தென்னாபிரிக்கா.டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் வேகமாக சரிய, இந்தியா முதல் இனிங்ஸில் 233 ஓட்டங்களையும்,2ஆவது இனிங்ஸில் 319 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றது. முதல் இனிங்ஸில் ஷேவாக், இரண்டாவது இனிங்ஸில் சச்சின் சதமடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் முதலிடம் பறிபோகும் நிலை. எனவே இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றேயாகவேண்டுமென்ற நிலை இந்தியாவுக்கு. உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத லக்ஷ்மண் மீண்டும் அணிக்குள் வந்தார்.வந்த வேகத்தில் சதமடித்து அசத்தினார்.

2ஆவது டெஸ்ட்
முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் சாதித்த தென்னாபிரிக்கா 2ஆவது டெஸ்டில் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியது.ஹாசிம் அம்லா(114),அல்விரோ பீட்டர்சன்(100) ஆகியோரைத் தவிர ஏனையோர் சோபிக்கத் தவறினர். தென்னாபிரிக்கா முதல் இனிங்ஸில் 296 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
ஷேவாக் (165 ), சச்சின் (106 ), லக்ஷ்மண் (143 *),டோனி (132*) ஆகிய நான்கு வீரர்களின் சதத்துடன் இந்தியா முதல் இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 643 ஓட்டங்களைப் பெற்றது. இதுவே தென்னாபிரிக்க அணிக்கெதிராக இந்திய அணி பெற்றுள்ள அதிகபட்ச ஓட்டங்கள். தென்னாபிரிக்க களத் தடுப்பாளர்கள் பிடிகளைப் பிடிக்கத் தவறியதும் இந்த ஓட்ட எண்ணிகையை இந்தியா பெற இன்னொரு காரணமாக அமைந்தது.

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் 4 வீரர்கள் ஒரு இனிங்ஸில் சதம் பெற்றமை இது 2ஆவது முறையாகும். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு, பங்களாதேஷ் அணிக்கெதிராக மிர்பூர் டெஸ்டில், தினேஷ் கார்த்திக் (129 ), வாசிம் ஜாபர் (139 ), ட்ராவிட் (129 ), சச்சின் (122 *) ஆகியோர் சதமடித்திருந்தனர்.

இறுதி நாளில் சஹீர் கான் உபாதைக்குள்ளானதால் பந்துவீச முடியாமல் ஆடுகளம் விட்டகன்றார்.இதனால் இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன்,அமித் மிஸ்ராஆகியோரின் பந்துவீச்சிலே இந்தியாவின் வெற்றி தங்கியிருந்தது. அம்லாவின் நிதானமான,பொறுப்பான துடுப்பாட்டம் மூலம் இந்திய அணியின் வெற்றி தாமதமாகிக் கொண்டே போனது.இறுதிக் கட்டத்தில் ஹர்பஜன் வீழ்த்திய விக்கெட் மூலமே இந்தியா, இந்தப் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றது.

தென்னாபிரிக்கா 2ஆவது இனிங்ஸில்அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது.போட்டியில் மிகச் சிறப்பாக அம்லா இரண்டு இனிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். இந்தத் தொடரில் ஒரு இரட்டைச் சதம், 2 சதங்கள் அடங்கலாக 490 ஓட்டங்களைக் குவித்ததார் அம்லா.இதன் மூலம் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க வீரரென்ற சாதனையும் அம்லா வசமானது. போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.தனியொருவராக நிலைத்து நின்று அசத்திய அம்லா பாராட்டப்படவேண்டியவரே.

இத் தொடரில் படைக்கப்பட்ட சாதனைகள் சில :
*கோல்கட்டா டெஸ்டின் முதல் இனிங்ஸில் சச்சின்,ஷேவாக் ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 249 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 16ஆவது முறையாக,இன்னொரு வீரருடன் இணைந்து 200 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்து, அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங்கின் (15 முறை) உலக சாதனையை முறியடித்தார் சச்சின்.

* சொந்த மண்ணில் தனது 21ஆவது சதத்தை பெற்ற சச்சின்,அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங், ஹைடன் ஆகியோரின் சாதனையை சமப்படுத்தினார். இவர்களிருவரும் தமது சொந்த மண்ணில் 21 சதங்களைப் பெற்றுள்ளனர்.

* கடைசியாக பங்கேற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதம் அடித்துள்ள சச்சின், ட்ராவிட் (4 சதம்), கவாஸ்கர் (4) சாதனையை சமன் செய்தார்.

*லக்ஷ்மண் 7 ஓட்டங்களைப் பெற்றபோது ,டெஸ்ட் அரங்கில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.இதன் மூலம் 7000 ஓட்டங்களைக் கடந்த 5ஆவது இந்திய வீரரானார்.

102 ஓட்டங்களைப் பெற்றபோது, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.9 போட்டிகளில் விளையாடியுள்ள லக்ஷ்மண், 4 சதங்கள், 3அரை சதங்கள் அடங்கலாக 1047 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.2001ஆம் ஆண்டு இந்த மைதானத்தில்தான் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 281 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

*இந்திய அணித் தலைவர் டோனி, (132*) தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது முதல் சதத்தைப் பெற்றதுடன் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இவர் அடித்த முதல் சதமாகவும் இது அமைந்தது. அத்துடன் இந்தியா சார்பில் டெஸ்ட் அரங்கில் 4 சதங்களைப் பெற்ற விக்கெட் காப்பாளர் என்ற பெருமையினையும் பெற்றார் டோனி.

* லக்ஷ்மண்-டோனி ஜோடி 7ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 259 ஓட்டங்களைப் பெற்று புதிய இந்திய சாதனையைப் படைத்தது.

*ஹர்பஜன் சிங் தனது 350 ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியதுடன்,ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளைக்(40) கைப்பற்றிய கும்ப்ளேயின் சாதனையையும் முறியடித்தார்.

*அம்லா டெஸ்ட் கிரிகெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப்(253*) பெற்றுக்கொண்டார்.

*அறிமுகப் போட்டியில்அல்விரோ பீட்டர்சன் சதமடித்தார்.
*டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில், இனிங்ஸ் ஒன்றில் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை(7/51) பெற்றுக்கொண்டார்.

சாதிக்ககத் தவறியோர்
அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி,தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதமடித்து அசத்திய கெளதம் கம்பிர் இந்தத் தொடரில் சாதிக்கத் தவறினார். 3 இனிங்ஸில் 38 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். பத்ரிநாத்,முரளி விஜய் ஆகியோரும் சாதிக்கத் தவறினர்.பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

தென்னாபிரிக்க அணியின் தலைவர் கிரஹம் ஸ்மித், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ்,ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இளைய பந்துவீச்சாளர் வெய்ன் பார்னெல் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பைக் கொடுத்த தொடராக மட்டுமன்றி தரவரிசையில் முதலிடத்திற்கான போட்டியாகவும் அமைந்தது. இந்தியா முதலிடத்திலும் தென்னாபிரிக்கா இரண்டாமிடத்திலும் தொடர்கின்றன.

இதன் மூலம் வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் பணப் பரிசையும் முதன் முறையாக பெற உள்ளது இந்தியா. கடந்த 2003 ஆம் ஆண்டு தரவரிசை அறிமுகமானதிலிருந்து, இவ்விருதை அவுஸ்ரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியாவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Friday, February 5, 2010


பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் எழுச்சி பெறுமா?

உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளுள் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால் இன்று அந்த அணி, வீழ்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் இன்னும் அணிக்குள் நிலவும் குளறுபடிகளே பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்குக் காரணம்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்ற இலங்கை அணி வீரர்கள், லாகூரில் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது. பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்த ஒரு சர்வதேச அணியும் முன்வரவில்லை. இதனால் தமது நாட்டில் நடைபெற வேண்டிய கிரிக்கெட் போட்டிகளை டுபாயில் நடத்தி வருகிறது பாகிஸ்தான்.இதனால் பாக். கிரிக்கெட் சபை வருமானமின்றித் தவிக்கிறது. இதைவிட 2010 உலக கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை, சர்வதேச கிரிக்கெட்பேரவை நீக்கியதும் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானின் பெருமையைக் குறைத்து விட்டதெனலாம்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்கு பின் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான விரிசல் அதிகரிக்க, இரு நாட்டு அணிகளுக்குமிடையிலான போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட்டன. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இ ல்லை. பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள், பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.இதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு, ஐ.பி.எல் மூலம் கிடைக்கவிருந்த வருமானமுமில்லை.

பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட்சபை. இதனால் அணியில் அடிக்கடி பிளவுகள்.

யூனிஸ் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, கடந்த ஆண்டு "20-20" உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. அதன் பின் சூதாட்ட புகாரில் சிக்கிய யூனிஸ் கான்,அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது முகமது யூசுப் அணித் தலைவர் .இவரது தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் ஏமாற்றமே மிஞ்சியது. அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ,20-20தொடர்களை இழந்துள்ளது. வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகள் தொடர, அணித் தலைவரையும் பாக் கிரிக்கெட் சபையையும் மாற்ற வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்கூறுகின்றனர்.

கில்லாடி அப்ரிடி
பேர்த்தில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணித் தலைவர் ஷாகித் அஃப்ரிடி, இரண்டு முறை பந்தை தனது பற்களால் கடித்து சேதப்படுத்தியதை கண்ட தொலைக்காட்சி நடுவர், கள நடுவருக்குத் தெரியப்படுத்தினார்.அதன்பின்போட்டித் தீர்ப்பாளர் ரஞ்சன் மடுகல்ல நடத்திய விசாரணையில் , தனது செயலுக்கு அஃப்ரிடி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் இரண்டு "20-20" போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தவறு செய்ததை ஒப்புக் கொண்ட அஃப்ரிடி, அனைத்து அணிகளும் பந்தை சேதம் செய்வதாகவும் குழப்பமான மனநிலையில் இருந்ததால் தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், இது தவறு தான். இனிமேல் இது போன்ற முட்டாள்தனமான செயலை செய்ய மாட்டேன், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்என்றும் கூறினார்.

பந்தைப் பதம் பார்க்கும் அஃப்ரிடி

அஃப்ரிடி,கடந்த காலங்களில்.....
* 2005 இல் இங்கிலாந்துக்கெதிரான பைசலாபாத் டெஸ்டில், தனது ஷூவில் உள்ள கூரிய ஆணியால், ஆடுகளத்தை சேதப்படுத்தினார். இதனால்,ஒரு டெஸ்ட் , இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

* 2007 இல் தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது (செஞ்சூரியன் பார்க்) ஆட்டமிழந்து சென்ற இவர், ரசிகரை தனது துடுப்பினால் தாக்கியமை.

* இந்தியாவுக்கெதிராக நாக்பூரில் நடந்த (2007) ஒருநாள் போட்டியின் போது, காம்பிருடன் தகராறு.

* பேர்த்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பந்தைக் கடித்து சேதப்படுத்தியதால், இரண்டு "20-20" போட்டிகளில் பங்கேற்க தடை.

பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல. இதற்கு முன் கடந்த 2000 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ், போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கான், இன்சமாம் போன்ற வீரர்களும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர்கள்.
கடந்த செப்டெம்பர் 2009 இல் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த "20-20' உள்ளூர் போட்டியில் சொகைல் தன்வீர், சொகைல் கான் உள்ளிட்ட ஆறு வீரர்கள் இந்த பிரச்சினையில் சிக்கி தடையை எதிர்நோக்கினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் அணித் தலைவர், பயிற்சியாளர்,தெரிவுக் குழுவினர் என அடிக்கடி மாற்றங்கள் தொடர்வதால் வீரர்கள் மத்தியில் குழப்பம் தொடர்கிறது.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர், ஒருநாள் கிரிக்கெட்தொடர்,20-20கிரிக்கெட் தொடர் ஆகிய மூன்று தொடர்களிலும் படு தோல்வியடைந்து தாயகம் திரும்புகிறது பாகிஸ்தான் அணி.

மூன்று தலைவர்களின் கீழ் விளையாடியும் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தானால் வெல்லமுடியாமல் போய்விட்டதே
எதிர் காலத்தில் பாகிஸ்தான் அணிக்குள் பல மாற்றங்கள் நிகழும் என்பதே என் கணிப்பு.
பாகிஸ்தான் கிரிக்கெட், வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற வேண்டுமானால்அணிக்குள் நிலவும் பிளவுகளை நீக்கி போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

Wednesday, February 3, 2010

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்றது. பல முன்னணி வீர வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்குபற்றியதால் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.முக்கியமாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் மீள் வரவு இன்னும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. வழமைபோல் இந்தத் தொடரில் சில வீர வீராங்கனைகளுக்கு அதிர்ச்சிகளும் காத்திருந்தது.


ஜஸ்டின் ஹெனின்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் முதல் நிலை வீராங்கனையாக இருந்தபோது திடீரென கடந்த 2008, மே மாதம் ஓய்வை அறிவித்து டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின்.சுமார் 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் (ஜன. 2010) டென்னிஸ் அரங்கில் காலடி வைத்து, தனது மீள் வருகையை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.
7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஹெனின். பிரெஞ்ச் பகிரங்கப் போட்டியில் மட்டும் 4 முறை (2003, 2005, 2006, 2007)சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அவுஸ்ரேலிய பகிரங்கப் போட்டியில் 1 தடவையும் (2004), அமெரிக்க பகிரங்க போட்டியில் 2 தடவையும் (2003, 2007) பட்டம் வென்றுள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே இவர், திடீரென ஓய்வு பெற்றார்.



இந்நிலையில் ஓய்வு பெற்ற சகவீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டென்னிஸ் அரங்கில் மீண்டும் காலடி வைத்து அமெரிக்க பகிரங்க பட்டம் வென்றார். இது ஹெனின் மனதிலும் டென்னிஸ் ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்த, இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் மீண்டும் களம் புகுந்தார். வந்த வேகத்திலே சமீபத்தில் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சக வீராங்கனை கிளைஸ்டர்சிடம் தோல்வியடைந்தாலும் அவுஸ்ரேலிய பகிரங்க தொடரை வெற்றியுடன்ஆரம்பித்து இறுதி வரை முன்னேறினார். 3ஆவது முறையாக (2004, 2006, 2010) இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.


மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான செரினா வில்லியம்ஸ்(அமெரிக்கா), பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனினை ஹார்டீனை எதிர்கொண்டார்.ஆரம்பமுதலே தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த செரினா வில்லியம்ஸ்,முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட ஹெனின், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா 6-2 என கைப்பற்றினார்.



பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் ஹெனினை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் செரினா. இதன் மூலம் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் செரினா ஐந்தாவது முறையாக (2003,2005, 2007,2009, 2010)சாம்பியனானார்.

இது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் இவரது 12ஆவது பட்டம். (அவுஸ்ரேலிய -5, பிரெஞ்ச் -1, விம்பிள்டன்-3,அமெரிக்க- 3) இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில்,சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங்குடன் (12 பட்டம்) இணைந்து 6ஆவது இடத்தைப் பிடித்ததுடன், பில்லி ஜீன் கிங்கின் 35 ஆண்டுகள் சாதனையை, செரீனா சமப்படுத்தியுள்ளார்.

சீன வீராங்கனைகள் அசத்தல்
அவுஸ்ரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு சீன வீராங்கனைகள் (லி-னா,ஷெங்-ஜி ) முன்னேறியது இதுவே முதல் முறை.ஆனாலும் , இருவருமே அரையிறுதிச் சுற்றில் வெளியேறியதால் சீன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



ஆண்கள் ஒற்றையர்
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்,உலகின் முதல் நிலை வீரரான ரொஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), இங்கிலாந்தின் அன்டி முரேயை (Andy Murray) சந்தித்தார். விறுவிறுப்பான போட்டியில் முதலிரண்டு செட்டை பெடரர் 6-3, 6-4 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கைப்பற்ற இருவரும் முனைந்தனர். இருப்பினும் பெடரர், மூன்றாவது செட்டை 7-6 என, தன் வசப்படுத்தி, 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் நான்காவது பட்டத்தை (2004, 2006, 2007, 2010) வென்றார்.

74 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பட்டம் பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெறுவதற்காக, போட்டியின் ஆரம்பமுதலே அன்டி முரே கடுமையாகப் போராடினார்.எனினும் அனுபவ வீரரான பெடரரின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை.


அன்டி முரே , பெடரர் இருவரும் இதுவரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர் . இதில் அன்டி முரே 6 முறையும் பெடரர் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.


கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அன்டி முரேயை வீழ்த்தியே பெடரர் பட்டத்தை வென்றார்.
2008ஆம் ஆண்டு அரையிறுதிலும், 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் வெற்றியை இழந்த பெடரர், இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.


இது ஒற்றையர் பிரிவில் பெடரரின் 16ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதனடிப்படையில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் தொடர்ந்து சாதனை வீரனாக தொடர்கிறார் பெடரர். இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் (அவுஸ்ரேலிய-4, பிரெஞ்ச் -1, விம்பிள்டன்-6, அமெரிக்க -5) சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.


கிராண்ட்ஸ்லாம் (அவுஸ்ரேலிய- 5, பிரெஞ்ச் -4, விம்பிள்டன்-7,அமெரிக்க -6) தொடர்களில் 22 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ள பெடரர், தொடர்ந்து 8 ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதோடு ,22 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில், 16 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.


மகளிர் இரட்டையர்

மகளிர்இரட்டையர் இறுதிப் போட்டியில், தர வரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அமெரிக்காவின் செரினா -வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்திலுள்ள சிம்பாப்வேயின் காராபிளாக், அமெரிக்காவின் லீஷெல் ஹியுபர் ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 11 முறை இரட்டையர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர் வில்லியம்ஸ் ஜோடி.


ஆண்கள் இரட்டையர்

ஆண்கள்இரட்டையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் ஜோடி, கனடாவின் டானியல் நெஸ்டர், செர்பியாவின் நெனாட் சிமோன்ஜிக் ஜோடியை 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, நான்காவது முறையாக (2006-07, 2009-2010) சாம்பியன் பட்டத்தை வென்றனர்.


கலப்பு இரட்டையர் பிரிவு
கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் காத்ரீனா மக்ரோவா , செக்குடியரசின் ஜராஸ்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பயஸ் -காரா பிளாக் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.


இதுவே பயஸ்-காரா பிளாக் ஜோடி, முதன்முறையாக அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சந்தர்ப்பமாகும் .இது அவுஸ்ரேலிய பகிரங்க கலப்பு இரட்டையரில் பயஸ் பெற்ற இரண்டாவது பட்டமாகும்.இதற்கு முன்னர் கடந்த 2003 இல் பயஸ், அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவாவுடன் இணைந்து பட்டம் வென்றார்.


இந்த வெற்றியின் மூலம் லியாண்டர் பயஸ் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை(இரட்டையர்-6, கலப்பு இரட்டையர்-5). வென்றுள்ளார். கடைசியாக இரு முறை நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை வந்து வெற்றியை நழுவிவிட்டது பயஸ் ஜோடி.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்தியர்கள் வரிசையில், சகவீரர் மகேஷ் பூபதியின் 11 கிராண்ட்ஸ்லாம் (இரட்டையர்-4, கலப்பு இரட்டையர்-7) சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமப்படுத்திக் கொண்டார் பயஸ்.

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர். டென்னிஸ் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு.

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates