Pages

Thursday, December 31, 2009

24 தொடர்ச்சி..........


இன்று 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2010 ஆம் ஆண்டை வரவேற்கவுள்ள நிலையில் முன்னைய பதிவின் தொடர்ச்சி இது....

நவம்பர் 18. காலை 10 மணி முதல் ஒருமணி வரையான நிகழ்ச்சி நேயர்களின் பங்களிப்புடன் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகமான இசையமைப்பாளர்களில் யாரது இசையமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலம் நடத்தினேன். அமோகமான நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹரிஷ் ஜெயராஜ் தெரிவானார் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க உதவிய டயானாவுக்கும் நன்றிகள்.

பிற்பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை எமது அறிவிப்பாளர்களை வானலையில் தேடிப்பர்ர்தேன். காரணம் அன்று அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமையால் ஓய்வாக இருந்தார்கள்.
அன்று அவர்களை சிறப்பு விருந்தினர்களாக சில நிமிடங்கள் பேச அழைத்தபொழுது அவர்கள் தந்த உற்சாகம் என்னை சோர்வின்றி நிகழ்ச்சிகளைப் படைக்க உறுதுணையாக இருந்தது. மாயா ,ஷங்கர் ,கஜமுகன் ,ரவூப்,குணா,கணா ,ஷெல்ரன்,டயானா,ஹோஷியா,கவிதா,ராஜ்,ஆரணி,பிரசாந்த்,மோகன்,மற்றும் தயாரிப்பாளர் பிரஜீவ் ,அலுவலக உதவியாளர்கள் ஆஷா ,கௌரி ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானது.


மாலை மூன்று மணிக்கு எமது சந்தைப்படுத்தல்,விரிவாக்கல் பிரிவு நண்பர்களுடன் ஒரு விறு விறுப்பான கலக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நகர்ந்தது .மாலை 5 மணிமுதல் நேயர்களோடு உரையாடி பாடல்களை கொடுத்தேன்.

இரவு 9.30 மணிக்கு நிலாச்சோறு நிகழ்ச்சியில் சக்தி என்றால் உங்கள் எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளை கவிதைகளாகக் கூறுங்கள் எனக் கூறியதும் எமது நேயர்கள் பல சிறப்பான கவிதைகளைக் கூறி பரிசில்களையும் வென்றெடுத்தனர். அந்த நேரத்தில் எமது சக வானொலியான வெளிச்சம் fm இல் நிகழ்ச்சி படைக்க வந்த ரவூப் என்னை பார்க்க சக்தி fm கலையகம் வந்தார்.கலையகம் வந்த ரவூப் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சிரித்தபடி.என்னவென்று கேட்டபோது கவிதை என்றார். சக்திக்கா என்று கேட்க தலையசைத்தபடி புன்முறுவலுடன் எழுதிக்கொண்டே இருந்தார்.

ஆரம்ப காலங்களில் ரவூபின் கவிதை சொல்லும் தன்மையால் கவரப்பட்டவன் என்ற வகையில்,சக்திக்கு ரவூப் எழுதிய கவிதையை அவரது குரலில்ஆவலோடு எதிர்பார்த்தேன்.ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அவரது கவிதை இப்படி அமைந்தது.....

11 ஆண்டுகளில் சாதனைகள் படைக்கின்ற சக்தியில் தானுமொரு சிறு சாதனைதான் என்பதை நிரூபிக்க ஈரம் காயாத இந்தக் குரலோடு 24 மணி நேர முழு அறிவிப்பாளராக கடமையில் கண்ணியம் காக்கின்ற கனிவான எங்கள் மயூரனுக்கு இந்த இதமான இரவுப் பொழுதில் என் இனிய இதயராக வாழ்த்துக்களை நிலாச்சோறாக வழங்கி வாழ்த்துகிறேன்.....
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. காரணம் சக்தி பற்றிய கவிதை தான் என்று நான் நினைத்திருந்தேன்.இப்படி எழுதியதை முன்னரே தெரிந்திருந்தால் ஒலிவாங்கியைக் கொடுத்திருக்கமாட்டேன்.




மதியப் பொழுதில் ஒரு சிலர் என்னிடம் வந்து மயூரன், 18 மணித்தியாலங்களை 24 மணித்தியாலங்களாக தொடருங்கள் அது நல்லா இருக்கும் என்றனர். நானோ இல்லை என்று மறுத்து விட்டேன்.இருந்தாலும் நேயர்களின் அதிக விருப்புகளும் இதே மாதிரி அமைய, எனது முடிவைத் தளர்த்தி 24 மணித்தியாலங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி படைக்க உடன்பட்டேன்.

நேரம் 12 மணியைக் கடந்து நவம்பர் 19 ஆம் திகதி ஆனது.தொடர்ந்து நான் மட்டுமே கலையகத்தில் தனியே. என்னோடு நேயர்கள் துணையாக வீடுகளில் வானொலிப்பெட்டிக்கருகில். காலை 6 மணிவரை இலங்கையிலிருந்து மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பல நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் நேயர்கள் தந்த ஆதரவு சொல்லிலடங்காது.

காலை 6 மணிக்கு வழமையாக நிகழ்ச்சி படைக்க வரும்கணா,ஹோஷியாவிடம் நவம்பர்,19 கலையகத்தை ஒப்படைத்துவிட்டு எனது 24 மணி நேர தொடர் அறிவிப்புக்கு ஓய்வு கொடுத்தேன்.



இந்த 24 மணி நேர சாதனைப் பயணத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த பயணம் முடிந்து 1 மாதம் கடந்த நிலையிலும் என்னைக் காணும் நேயர்கள் அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்கிறார்கள்.

நான் அறிவிப்புத்துறைக்குள் நுழைந்து 11 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த நவம்பர் 18, 19 ஆம் திகதிகளில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சி செய்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தனியார் தமிழ் வானொலியொன்றில் தொடர்ந்து 24 மணிநேரம் ஒரு அறிவிப்பாளர் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது இதுதான் முதல் சந்தர்ப்பமென பலர் கூறினார்.நான் அறிந்தவரையிலும் அது சரி.

இதற்கு சந்தர்ப்பத்தை வழங்கிய எமது முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். இத்தனைக்கும் மேலாக உறுதுனையாகவிருந்த நேயர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விரிவாக விபரமாக இந்தப் பதிவைத் தரவேண்டுமென எண்ணினேன் ஆனால் நேரம் என்னுடன் வில்லத்தனம் புரிவதால் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.நன்றி.

Wednesday, December 2, 2009

24

நவம்பர் 18, 19 என் வாழ்நாளில் வழக்கத்திற்கு மாறான நாட்கள்.வித்தியாசமான நாட்கள்.எனது 11 வருட ஊடகத்துறை வாழ்வில் முக்கியமான நாட்கள்.இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறேன். கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம். தொடர்ந்து 105 மணித்தியாலங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க வேண்டுமென்பது.ஆனால் அப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை.அந்த எண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இந்த18,19 ஆம் திகதிகளில் நிறைவேறியது. விரிவாக சொல்லப்போனால் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளை தனி ஒருவனாகத் தொகுத்து வழங்கினேன். இது இலங்கை தனியார் தமிழ் வானொலித்துறையில் முதன் முதல் கூடுதல் நேரம் ஒரு அறிவிப்பாளர், நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய முதல் சந்தர்ப்பமென நினைக்கிறேன்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணத்தின் சில பகுதியை நிறைவேற்றிக்கொண்ட மகிழ்ச்சி இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்க தொடர்கிறது விரிவாக எனது அனுபவப் பதிவு........ இந்தப் பதிவு தேவைதானா என சிலர் கேட்கலாம். என்ன செய்வது என் வாழ்நாளில் மறக்க முடியாத விடயங்களைப் பதிவிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.

நேயர்கள் மனதில் என்றுமே முதற்தரமாய் விளங்கும் சக்தி fm இன் 11 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 11 நாட்களும் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில் நிகழ்ச்சிகளை வடிவமைத்து நேயர்களுக்கு வழங்கவேண்டுமென்பது நியதி.ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில், தமக்கு வழங்கப்பட்ட நாட்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.எனக்கான நாள் பத்தாவது நாள்.எனக்குத் தயாரிப்புப் பணியில் அதிக நேரத்தை செலவிட முடியாத நிலை.காரணம் இதைவிட முக்கியமான இன்னொரு நிகழ்ச்சித் தயாரிப்புப் பணி வேறு இருக்கிறது.அதுதான் "சக்தி சூப்பர் ஸ்டார்".எனது நாளுக்கான நிகழ்ச்சிகளை சிறப்பாக வடிவமைத்து வழங்க முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றியது.சரி நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நானே தொடர்ந்து தொகுத்து வழங்கினால் எப்படியிருக்கும்..........
என் எண்ணத்தை செயற்படுத்த விளைந்தேன்.எமது நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி மாயாவிடம் சென்று கூறினேன்.'என்ன மயூ தனியாவா' என்று கேட்ட மறு வினாடி' ஓகே செய்யலாமே 'என்றதும் எனது எண்ணம் செயல் வடிவம் பெறப்போகுதே என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏனைய அறிவிப்பாளர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டேன். பலரும் ஆதரவாக எனக்கு அப்போதே வாழ்த்துக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தபோதும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது வீட்டில்.அம்மா இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.ஒருமாதிரிஅம்மாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டுத் தயாரானேன். அப்போது இன்னொரு தடையும் காத்திருந்தது. அதுதான் திடீர் காய்ச்சல்.என்ன செய்வது.... மனம் தளரவில்லை.எடுத்த முடிவில் மாற்றமில்லை. நிகழ்ச்சி முன்னோட்டம் '18 மணித்தியாலங்கள் உங்களோடு நான்' என ஒலிபரப்பானது.


காய்ச்சல் குறையவேயில்லை. ஒருநாள் ஓய்விலிருந்துவிட்டு, நவம்பர் 18, காலை 6 மணிக்கு எனது பயணம் வணக்கம் தாயகத்துடன் ஆரம்பமானது .காலை 6 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலநூறுக்கணக்கான நேயர்கள் குறுஞ்செய்தி(sms) மூலமும் தொலைபேசி மூலமும் தமது வாழ்த்துக்களை பரிமாறத் தொடங்கினர்.அந்த வாழ்த்துக்கள் காலைப் பொழுதில் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

காலை 8 மணி முதல்" நம் நாட்டுக் கலைஞர்கள் வாழ்வில் சக்தி fm "என்ற கருப்பொருளில் நம்நாட்டுக் கலைஞர்கள் தம் வாழ்த்துக்களையும் தமது வாழ்க்கையில் சக்தியின் பங்கு எப்படி அமைந்தது பற்றியும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பாடகர் T.S.முருகேஷ் ,K.மகிந்தகுமார்,நம் நாட்டின் மிகச்சிறந்த தாள வாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

4 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன இன்னும் 14 மணித்தியாலங்கள்... எதிர்பார்ப்போடிருங்கள்


மிகுதி விரைவில்.... நேரம் கிடைக்கும்போது தொடரும்


Friday, November 20, 2009

இவனது சேவை.... இலங்கைக்குத் தேவை......

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 9000 ஓட்டங்களைக் கடந்த முதல் இலங்கை வீரரானார் மஹேல.

இந்திய அணிக்கெதிராக நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்த சாதனை மஹேல வசமானது.இந்தப் போட்டியில் மஹேல 275 ஓட்டங்களைக் குவித்தார்.

இலங்கை டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான, வலது கைத் துடுப்பாட்ட வீரரான இவர், இலங்கையணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தவரென்றே சொல்லலாம் . 108 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 178 இனிங்சில் துடுப்பெடுத்தாடி 27 சதங்கள்,35 அரைச்சதங்கள் அடங்கலாக 9022 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.சராசரி 54.67. 151 பிடிகளைப் பிடித்துள்ள மஹேல 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்திய,தென்னாபிரிக்க அணிகளுக்கெதிராக தலா 2 தடவைகள் இரட்டைச்சதமடித்துள்ள மஹேல,பாகிஸ்தான்,இங்கிலாந்து அணிகளுக்கெதிராக தலா ஒருதடவை இரட்டைச்சதமடித்துள்ளார்.இலங்கை மண்ணில் 4 தடவைகளும் இந்திய,பாகிஸ்தான் மண்ணில் தலா1 தடவையும் இரட்டைச் சதமடித்துள்ளார்.


1997 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட இவர், 1998 ஆம் ஆண்டு தனது 4ஆவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக கன்னி சதத்தைப் (167 ஓட்டங்கள்) பெற்றார். 1999 ஆம் ஆண்டு தனது 7 ஆவது போட்டியில் முதலாவது இரட்டைச் சதத்தை (242 ஓட்டங்கள்) இந்திய அணிக்கெதிராகப் பெற்றார்.


டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள அணிகளுக்கெதிராக சதமடித்த பெருமையும் இவருக்குண்டு.

இங்கிலாந்து, இந்திய, பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கெதிராக ஆயிரத்துக்கதிகமான ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கை மைதானங்களில், 61 போட்டிகளில் 5663 ஓட்டங்களையும் வெளிநாட்டு மைதானங்களில் 3359ஓட்டங்களையும் பெற்றுள்ள மஹேல, 2001ஆம் ஆண்டு 13 போட்டிகளில் 1053 ஓட்டங்களையும் இந்த வருடம் (2009) 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி 2 இரட்டை சதங்கள்அடங்கலாக 1096 ஓட்டங்களையும் அதிரடியாகக் குவித்துள்ளார்.


இந்திய மண்ணில் அதிக ஓட்டங்களைக் குவித்த அய‌ல்நாட்டு வீரர் என்ற பெருமையும் மஹேலவுக்கே உண்டு 2005ஆம் ஆண்டு பெங்களூ‌ரில் இந்தியாவுக்கெதிரான டெஸ்டில் பாகிஸ்தானின் யூனிஸ்கான் 267 ஓட்டங்களை பெற்றதே அய‌ல்நாட்டு வீரரொருவர் இந்திய மண்ணில் பெற்ற அதிக ஓட்டங்களாக அமைந்திருந்தது.


டெஸ்ட் கிரிக்கெட்டில் மஹேலவின் சில சாதனைகள்......

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 9 ஆவது இடம் (9022 ஓட்டங்கள் )
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக இரட்டைச் சதங்கள்பெற்றவர்கள் வரிசையில் 4 ஆவது இடம் (6 இரட்டைச் சதங்கள்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் 9ஆவது இடம் (27 சதங்கள்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மைதானத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றமை (2467 ஓட்டங்கள் -கொழும்பு.எஸ்.எஸ்.சி மை தானம்)

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி நபராக சாதனைகள் படைத்தது மட்டுமன்றி இணைப்பாட்டத்திலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரன் மஹேல .

மஹேல, பிரசன்ன ஜயவர்தனவுடன் இணைந்து இந்திய அணிக்கெதிராக நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6ஆவது விக்கெட்டுக்காக 351 ஓட்டங்களைக் குவித்து 72 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்தார். 1937ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கெதிராக அவுஸ்ரேலியாவின் ஜேக் பிங்கில்டன் - பிராட்மேன் ஜோடி 346 ஓட்டங்களைப் பெற்றதே சாதனையாக இருந்தது.



டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்தவொரு விக்கெட்டுக்குமான அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற ஜோடி என்ற சாதனையிலும் மஹேலவின் பங்கு முக்கியமானது. 2006 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக இலங்கை மண்ணில் குமார் சங்ககாரவுடன் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்காக 624 ஓட்டங்களைப் பெற்றார்.



இந்த வருடம் பாகிஸ்தான் அணிக்கெதிராக கராச்சியில் நடைபெற்ற போட்டியில் திலான் சமரவீரவுடன் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்காக 437 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சிறந்த பங்களிப்பை இலங்கையணிக்கு மஹேல வழங்கியுள்ளார்.
310௦ சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 சதங்கள்,51 அரைச் சதங்கள் அடங்கலாக 8441 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். களத்தடுப்பில் 165 பிடிகளைப் பிடித்து அதிக பிடிகளைப் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் அடுத்த வருடம் 10000ஓட்டங்களைக் கடக்கக் கூடிய வாய்ப்பு இவருக்கு அதிகமாகவே உண்டு.


மஹேலவின் சேவை இலங்கைக்குத் தேவை......

Sunday, November 15, 2009

சாதனை நாயகன்


கிரிக்கெட்டுலகில் வீரர்கள் வருவதும் மறைவதுமான சூழலில் இருபது ஆண்டுகள் நிலைத்திருப்பது மிக மிகக் கடினம்.ஆனால் தனது அர்ப்பணிப்பான துடுப்பாட்டம் மூலம் சாதனைகள் பல நிலைநாட்டி இன்று சர்வதேச கிரிக்கெட்டுலகில் சாதனை நாயகனாக,இருபதாவது ஆண்டை நிறைவு செய்கிறார் சச்சின்.

இந்திய அணியின் பல வெற்றிகளுக்குக் காரணமான இவர் 1989ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 16 வயது சிறுவனாக அறிமுகமானார். அன்று முதல் இன்று வரை இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம் அதிகமென்றே கூறலாம்.

சாதனைகள் படைப்பது இவருக்குப் புதிதல்ல.சச்சினின் சாதனைகளை இனிமேல் முறியடிப்பது மிகக் கடினம்.

சச்சினின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.

சச்சினின் சாதனைகள்
டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்
அதிக ஓட்டங்கள் ( 12,773 )
அதிக சதங்கள் ( 42 சதங்கள்)
ஒரு ஆண்டில் 1000 ஓட்டங்களைக் கடந்தமை (5 முறை)


ஒருநாள் சர்வதேச போட்டி சாதனைகள்
அதிக ஓட்டங்கள் ( 17,178 )
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (1796)
அதிக சதங்கள் ( 45 சதங்கள்)
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக அதிக சதங்கள் (9)
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் (3005)
அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் (175 )
150 ஓட்டங்களுக்கு மேல் அதிக தடவைகள்பெற்றமை (4 முறை )
அதிகமுறை ஆட்ட நாயகன் விருது (60முறை)
அதிக தடவைகள் தொடர் நாயகன் விருது (14முறை)
ஒரு ஆண்டில் கூடுதல் ஓடங்கள் பெற்றமை (1894 ஓட்டங்கள்-1998ஆம் ஆண்டு)



159 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 42 சதங்கள்,53 அரைச் சதங்கள் அடங்கலாக 12773 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 436 போட்டிகளில் 45 சதங்கள்,91அரைச் சதங்கள் அடங்கலாக 17178 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 154 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.



இவரது சாதனைகளைப் பதிவிட பல பதிவுகள் தேவை. சச்சின் பற்றிய விரிவான பதிவு விரைவில் ....
சாதனை நாயகனை வாழ்த்துவோம் .....

Wednesday, November 4, 2009

என்றும் NO1


நீண்ட நாட்களின் பின் இந்தப் பதிவு. இவரைப்பற்றி பதிவிட வேண்டுமென மனம் துடித்தது.ஆனால் நேரம் கிடைப்பது குறைவு. இன்று எப்படியாயினும் இந்தப் பதிவை பதிவிடவேண்டுமேன்ற முனைப்புடன் தருகிறேன். எனக்குப்பிடித்த முதன்மையான நடுவர். இவரைப் பற்றிப் பதிவிடாமல் எப்படி இருப்பது.


சர்வதேச கிரிக்கெட்டுலகில் "ஷெப்" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட தலை சிறந்த கிரிக்கெட் நடுவராகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட் நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு,தனது 68ஆவது வயதில் அக்டோபர் 28 ஆம் திகதி காலமானார்.
இவர் நடுவர் பொறுப்பாற்றும் விதம் ஒரு தனி அழகு. இதைப் பார்க்கவே பல கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புவர்.இங்கிலாந்தின் முன்னாள் புகழ் பெற்ற நடுவர் டிக்கி பேர்டிற்கு பிறகு சிறந்த நடுவர் என்று கிரிக்கெட் ரசிகர்களாலும், பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் என பலதரப்பட்டவர்களாலும் போற்றப்பட்டவர் டேவிட் ஷெப்பர்ட்.


1940 ௦டிசம்பர் 27 ஆம் திகதி பிறந்த டேவிட் ஷெப்பர்ட், குளொஸ்டர்ஷயர் அணிக்காக முதன் முதலாக 1965 ஆம் ஆண்டு போட்டிகளில் பங்குபற்றியதன் மூலம் கிரிக்கெட்டுலகுக்குள் நுழைந்தார்.1965 முதல் 1979 வரை குளொஸ்டர்ஷயர் அணிக்காக 282 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
வலது கைத் துடுப்பாட்ட வீரரான ஷெப்பர்ட்,12 சதங்கள்,55 அரைச்சதங்கள் அடங்கலாக 10672 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 95 பிடிகளைப் பிடித்துள்ள இவர் 106 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தாலும் சர்வதேச அளவில்
1983 இல் உலகக் கிண்ணப் போட்டியின்போது நடுவராக முதல் முறையாக களம் கண்ட இவர்,6 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். 1996 ,1999,2003ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சிறப்புப் பெற்றவர்.


1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே இவர் டெஸ்ட் நடுவராக கடமையாற்றிய முதலாவது சந்தர்ப்பம்.
2005 இல் பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்குகெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக நடுவராக இருந்தார். அந்த போட்டி முடிந்த பிறகு பிரைன் லாரா, ஷெப்பர்ட்டின் சேவைகளை கௌரவிக்குமுகமாக அவருடைய துடுப்பை நினைவுச் சின்னமாகப் பரிசளித்தார்.


1983 முதல் 2005 வரை 92 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 172 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் நடுவராக ஷெப்பர்ட் செயற்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.


கிரிக்கெட்டில் நெல்சன் இலக்கத்தில் (111) ஒரு அணியின் ஓட்ட எண்ணிக்கை (ஸ்கோர்) ராசியில்லாததாகக் கருதப்படும். இந்தத் தருணங்களிலெல்லாம் தனது ஒரு காலை மடக்கி மறு காலில் நிற்பது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது. இதை சிறு பிள்ளை முதல் பெரியோர் வரை ரசித்தனர்.


கிரிக்கெட்டில் இவ்வளவு ஆர்வமாகவிருந்த ஷெப்பர்ட், முத்திரை சேகரிக்கும் பழக்கமுள்ளவர் என்பது பலருக்குத் தெரியாது. கிரிக்கெட் போட்டிகள் இல்லாதபோது இதுவே இவரது பொழுதுபோக்கு.


தனது வாழ் நாளில் ஒரு நடுவராக மட்டுமன்றி நட்பில் சிறந்த மனிதராகவும் விளங்கினார் ஷெப்பர்ட்.

கிரிக்கெட்டுலகம் ஒரு தலைசிறந்த நடுவரை இழந்தாலும்.இவரது சைகைகள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அகங்களில் நிலைத்திருக்கும்.

Saturday, October 17, 2009



னைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

பதிவுகள் விரைவில் தொடரும்...


Tuesday, September 22, 2009


சூடு பறக்கும் தென்னாபிரிக்கா...


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டிகள் 2 ஆண்டுகளுக்கொருமுறை நடைபெற்று வருகிறது.
வில்ஸ் சர்வதேச கிண்ணம் என்ற பெயரில் 1998 ஆம் ஆண்டு இந்தப் போட்டிகள் அறிமுகமாகின.அதன் பின் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியாக மாறியது.தற்போது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட்(மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்) போட்டியாக நடைபெறுகிறது. 6 ஆவது சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. இம்முறை 8 அணிகளே களத்தில்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவாகப் பிரிகப்பட்டுளன. A பிரிவில் இந்தியா,பாகிஸ்தான் அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் B பிரிவில் இலங்கை,இங்கிலாந்து,தென்னாபிரிக்கா,நியூசிலாந்து அணிகளும் உள்ளன


ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்குமணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.


மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தவிர ஏனைய 7 அணிகளும் சமபலத்துடனே களம் காண்கின்றன.

11 வருடங்களின் பின்:

கடந்த 1998 ஆம் ஆண்டு நடந்த முதல் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்கா கிண்ணத்தை வென்று அசத்தியது.அதற்குப் பின் இத்தொடரில் சாதிக்கவில்லை.தற்போது 11 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.சொந்த மண்ணில், தென்னாபிரிக்கா சாதிக்கவில்லை என்பது கவலைதான்.


சொந்த மண்ணில் 2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ண(50 ஓவர்), 2007 இல் நடந்த '20-20' உலகக்கிண்ணத் தொடர்கள் தென்னாபிரிக்காவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தன. இம் முறை சொந்த மண், தென்னாபிரிக்காவுக்கு கைகொடுக்குமா...

தென்னாபிரிக்க ஆடுகளங்களில் ஏற்கனவே விளையாடிய வீரர்களை வைத்துப் பார்க்கும்போது டில்சான்(இலங்கை),யுவராஜ்சிங் (இந்தியா),அப்ரிடி(பாகிஸ்தான்),மைக்கேல் கிளார்க் (அவுஸ்ரேலியா), கிரகம் சிமித்(தென்னாபிரிக்கா) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஸ்டூவர்ட் பிராட்(இங்கிலாந்து), மிச்சேல் ஜான்சன் (அவுஸ்ரேலியா),டேல் ஸ்டெய்ன் (தென்னாபிரிக்கா), முரளிதரன் (இலங்கை), வெட்டோரி (நியூசிலாந்து) லசித் மாலிங்க (இலங்கை), ஆகியோர் பந்து வீச்சிலும் சாதிக்கலாமென்பது எனது எதிர்பார்ப்பு.

இறுதிவரை விறுவிறுப்போடு நகரப்போகிறது மினி உலகக் கிண்ணக் கிரிக்கெட்.....

நேரமில்லாததால் இந்தப் பதிவில் அதிக விடயங்களைத் தரமுடியவில்லை.அடுத்த பதிவில் விரிவாகத் தருகிறேன்.

Wednesday, September 16, 2009


எதிர்பார்த்தும் எதிர்பாராததும்


அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்குமுன்னரே, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் அரங்கேறும் என நான் பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.அதேபோல் நடந்தேறியிருக்கிறது.

எதிர்பார்த்த முன்னணி நட்சத்திரங்கள்,எதிர்பாராத,அதிகம் அனுபவமில்லாத நடட்சத்திரங்களிடம் வீழ்ந்தனர்.


ஆடவர் பிரிவு
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரரை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து பட்டத்தை சுவீகரித்தார் ஆர்ஜென்ரின வீரர் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோ.

டெல் போட்ரோ 3-6, 7-6 (5), 4-6, 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் பெடரரை வீழ்த்தினார்.
முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்த ஆர்ஜென்ரின வீரர் டெல் போட்ரோ.
1977 ஆம் ஆண்டின் பின்னர் ஆர்ஜென்ரினாவிலிருந்து அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முதல் வீரர் டெல் போட்ரோ என்பது குறிப்பிடத்தக்கது. 1977 இல் ஆர்ஜென்டினா வீரர் குல்லர்மோ விலாஸ் அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை வென்றிருந்தார்.

பெடரர் ஏமாற்றம்
இதற்கு முன்னர்தான் பங்கேற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில்,40 தடவைகள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த பெடரர், 41ஆவது போட்டியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதற்கு முன்னர் பெடரர் - டெல் போட்ரோ மோதிய 6 போட்டிகளில் பெடரரே வெற்றி பெற்றிருந்தார்.

1920-25ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 6 முறை அமெரிக்கப் பகிரங்கப் பட்டத்தை பில் டில்டன் வென்றிருந்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பெடரர் அமெரிக்கப் பகிரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார்.இம் முறை பெடரர் வெற்றி பெற்றிருந்தால் டில்டனின் சாதனையை அவர் சமப்படுதியிருக்கலாம். என்ன செய்வது விளையாட்டிலும் இது சகஜம்தானே......

மகளிர் பிரிவு

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பெல்ஜிய வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாகியை வீழ்த்திப் பட்டத்தை வென்றார்.

ஓய்வுக்குப் பின்னர் டென்னிஸ் போட்டிக்குத் திரும்பியுள்ள கிளைஸ்டர்ஸ் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமிது.
தனது குழந்தையுடன் கிளைஸ்டர்ஸ்

திருமணத்திற்குப் பின்னர் தாய்மையடைந்த கிளைஸ்டர்ஸ் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதன் பின் அமெரிக்கப் பகிரங்கப் தொடரில் மீண்டும் களமிறங்கி பட்டத்தைக் கைப்பற்றி தனது மீள் வருகையை உறுதி செய்துள்ளார்.

Tuesday, September 15, 2009


11 வருடங்களின் பின்


இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் பங்குபற்றிய மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை,இந்திய அணிகள் மோதின.


நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி,தனது அணி முதலில் துடுப்பெடுத்தாட விரும்பினார்.சச்சினும் ட்ராவிட்டும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் நுழைந்து ஓட்டங்களைக் குவித்தனர்.இருவரும் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களைப் பெற்றனர். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமிழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை 46.4ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதன் மூலம் இலங்கை மண்ணில் நடந்த இரு அணிகளுக்கு மேல் பங்குபற்றிய தொடர்களில், 11 வருடங்களின் பின் இந்தியா இறுதிப்போடியில் வென்று சாதித்தது.


சச்சின்
சச்சின் டெண்டுல்கர் 91 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இந்த சதம் ஒருநாள் சர்வதேச போட்டியில் இவர் அடிக்கும் 44ஆவது சதம்.அது மட்டுமன்றி இலங்கையணிக்கெதிராக 8 வது சதம்.
ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது பெற்ற சச்சின்,ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 59 முறை ஆட்டநாயகன் விருதினையும் 14 முறை தொடர் நாயகன் விருதினையும் பெற்றுள்ளார்.


ஆர்.பிரேமதாச மைதானத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் சச்சினுக்கு சொந்தமானது. இந்த மைதானத்தில் சச்சின் 27 போட்டிகளில் 4 சதமடங்கலாக 1096 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் 1998ஆம் ஆண்டு நடந்த மும்முனைப் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் சச்சின் சதமடித்திருந்தார்.அதே பாணியில் 11வருடங்களின் பின் இப்போது மீண்டும் சதமடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

சச்சின்..... சாதனை நாயகன்....

Saturday, September 12, 2009

அதிரடிக்கு சனத்...

சனத் இல்லாத இலங்கையணியை நினைத்துப் பார்த்தல் கவலைதான்.சனத்தின் அதிரடிதான் இலங்கையணியின் முதுகெலும்பு.சனத் ஓட்டங்களைக் குவிக்காத போட்டிகளில் இலங்கையணியின் நிலை நீங்கள் அனைவரும் அறிந்ததே.நான் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.


40 ௦வயதைக் கடந்தும் இன்று அதிரடியாக ஆடி 98ஓட்டங்களை வேகமாகப் பெற்றார்.இன்னும் 2 ஓட்டங்களைப் பெற்றிருந்தால்,தனது சாதனையை முறியடித்து மீண்டுமொரு சாதனை படைத்திருக்கலாம்.அது என்ன சாதனை....அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை மீண்டும் புதுப்பித்திருக்கலாம்.


இந்திய அணிக்கெதிராக தம்புள்ளையில் 28-௦01-2009 இல் நடைபெற்ற போட்டியில் சனத் (39 வருடங்களும் 212 நாட்களும்) சதமடித்தார். இதுதான் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதி கூடிய வயதில் வீரரொருவர் சதமடித்த சந்தர்ப்பம். இன்று சதமடித்திருந்தால் சனத்துக்கு வயது 40 ௦வருடங்கள்74 நாட்கள். இன்று இன்னுமொரு சாதனைக்கு உரித்தானார் சனத்.ஒரு மைதானத்தில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற சாதனையே அது.ஆர்.பிரேமதாச மைதானத்தில் சனத் இதுவரை 70 ௦போட்டிகளில் 2478 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதற்கு முதல் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இன்சமாம்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 59 போட்டிகளில் 2464 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
சாதனை நாயகனை அண்மையில் சக்தி fm கலையகத்தில் சந்தித்தபோது....

இன்றைய போட்டியின் கதாநாயகனாக இறுதியில் தனது பெயரைப் பதித்துக் கொண்டவர் மத்யூஸ்.

மத்யூஸ் துல்லியமாகப் பந்து வீசி இந்திய அணியின் 6 விக்கெட்டுகளை 20 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து சாய்த்தார். இது அவரது சிறந்த பந்துவீச்சுப்பெறுதி மட்டுமன்றி ஆர்.பிரேமதாச மைதானத்தில் பெறப்பட சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமாகும்.அத்துடன் இந்திய அணிக்கெதிராக இலங்கை வேகப்பந்துவீச்சாளரொருவர் பெற்ற சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.இது ஒருநாள் சர்வதேச போட்டியோன்றில் பெறப்பட்ட 19 ஆவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியுமானது.தனது 12 ஆவது போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்மத்யூஸ்.

முரளி,கேல,ஹ்ரூப்,மாலிங்க,மென்டிஸ் போன்ற M வரிசை வீரர்களில் இப்போது த்யூஸ்.சிறந்த சகலதுறை வீரராகப் பிரகாசிக்கும் மத்யூஸ் இனி வரும் போட்டிகளிலும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் இலங்கை அணியில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம்.


மும்முனை சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் 3 ஆவது போட்டியில் 139 ஓட்டங்களால் தோல்வி கண்டது இந்தியா.இலங்கை மண்ணில் இந்தியா சந்தித்த மிகப் பெரும் தோல்வி இது.

இறுதிப் போட்டியில் வெற்றி யாருக்கு....

Thursday, September 10, 2009

இசை இளவரசிக்கு இன்று வயது 25


சினிமாவில் பாடவேண்டுமென்பது பலரது கனவு.அப்படிப்பட்ட கனவோடு வந்து பல இனிய பாடல்களைத் தந்து இசை ரசிகர்களை தன் வசீகரக் குரலால் கவர்ந்தவர் பாடகி சின்மயி.


இன்று பாடகி சின்மயின் 25 ஆவது பிறந்த நாள்.அதற்காக இந்தப் பதிவு
முறைப்படி கர்நாடக சங்கீதமும் ஹிந்துஸ்தானி இசையும் பயின்றுள்ள சின்மயி 'சப்தஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் மூலம் தனது இசைத் திறமையை வெளிக்காட்ட இவருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பினை கொடுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடலே இவரின் முதல் பாடல்.

முதல் பாடலே இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுக்க,இன்று வரை தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களின் டைட்டில் பாடல்களையும் பாடியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் நெஞ்சில் தில் தில்...என்ற பாடல் மூலம் 2002 ஆம் ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.இதை விட இன்னும் பல விருதுகளையும் பெற்றுள்ளார் சின்மயி.

பாடகியாக மட்டுமன்றி தொலைக்காட்சி,வானொலி அறிவிப்பாளராகவும் தனது குரலால் பலரையும் கவர்ந்தவர் என்றால் மிகையில்லை.

லதா மங்கேஷ்கர்,சித்ரா,ஜானகி ஆகியோரின் பாடல்கள் அதிகம் பிடிக்கும் எனக் கூறும் சின்மயி,நல்ல பாடகியாக தனது இசைப் பயணம் தொடரவேண்டுமென்பதே இலட்சியம் எனக் கூறுகிறார்.

வாழ்த்துக்கள் சின்மயி...உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்...

Wednesday, September 9, 2009

ர்பஜனின் தூஸ்ரா விமான நிலையத்திலுமா ??????


சாதாரணமானோர் ஏதாவது சர்ச்சைகளில் சிக்கினால் அந்த விடயங்கள் வெளிலயுலகுக்கு வரவே வராது.ஆனால் பிரபலங்கள் ஏதாவது சர்ச்சைகளில் மாட்டினால் உலகெல்லாம் பரவிவிடும்.அதுவும் கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கினால் அதோ கதிதான். இப்போது புதிய சர்ச்சை ஒன்றில் வசமாய் மாட்டுப்பட்டிருகிறார் ஹர்பஜன் சிங்.
ஹர்பஜன் சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. 2007 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய வீரர் சைமன்ட்ஸை குரங்கு என திட்டி அதன் பின் விசாரணைகளை எதிர்கொண்டமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.2008ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின்போது தனது சக வீரரான ஸ்ரீசாந்த்தின் கன்னத்தில் அறைந்து,பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார்.இதற்குத் தண்டனையும் அனுபவித்தார்.


இப்போது இன்னுமொரு சர்ச்சை......இலங்கையில் நடைபெறும் மும்முனைத் தொடரில் பங்குபற்ற வருவதற்காக பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஹர்பஜன், தனது காரிலிருந்து உடைமைகளை எடுப்பதற்குள் ஒரு புகைப்படப்பிடிப்பாளரின் கேமரா அவரது தலையில் தவறுதலாக(சாதுவாக எமது பார்வையில்-காட்சியைப் பார்த்தபோது) இடித்து விட்டது. இதனால் கோபமடைந்த ஹர்பஜன் புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி விட்டார் குத்து.

ஹர்பஜனின் தூஸ்ரா புகைப்படப்பிடிப்பாளரை நோக்கி பலமாக....

ஹர்பஜனின் இந்தக் குத்து தூஸ்ராவைவிட மோசமாகவே தென்பட்டது அந்த கட்சியைப் பார்த்தபோது. இதை பார்த்த ஏனைய படப்பிடிப்பாளர்களும் புகைப்படப்பிடிப்பாளர்களும் சும்மா இருப்பார்களா?தாம் எதிர்பாராத இந்த அரிய காட்சியைத் தமது கேமராவுக்குள் பத்திரமாகப் பதித்துக்கொண்டனர். இப்போது கிரிக்கெட் உலகில் இதுதான் பரபரப்பு........ கொஞ்ச நாட்களுக்கு ஹர்பஜன் பேச்சுதான் கிரிக்கெட்டில்.


ஹர்பஜன்....அதிகம் கோபப்படாதீர்....கோபத்தால் சாதிக்க முடியாது உமக்கு.....

சர்ச்சை நாயகனுக்கு இப்போது வந்திருப்பது அணித் தலைவர் ஆசை. இப்போதைக்கு நிறைவேறாது இந்தப் பேராசை.......

Monday, September 7, 2009

மும்முனை ஆரம்பம்
இலங்கை,இந்திய,நியூஸிலாந்து அணிகள் மோதும் மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை ஆரம்பமாகிறது.ஒவ்வொரு அணியும் மற்றைய அணியுடன் தலா ஒருமுறை மோதும்.இதில் வெற்றியைப் பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள்(சனத்,டில்ஷான்)அதிரடியாக ஓட்டங்களைப் பெற்றால் இலங்கையணி கூடுதல் ஓட்டங்களைப் பெறலாம்.பந்துவீச்சில் சிறப்பாக மிளிரும் அதேவேளை,துடுப்பாட்டத்தில் நடுவரிசை வீரர்கள் விரைவாக ஆட்டமிழப்பதே இலங்கையணியின் பலவீனம்.சனத்,மஹேல,சங்ககார,டில்ஷான் இவர்கள் சாதிக்காவிட்டால் இலங்கையணியின் நிலை மோசம்தான்.

நியூஸிலாந்து

அண்மையில் நடைபெற்ற இரண்டு 20௦-20௦ போட்டிகளிலும் இலங்கையணியைத் தோற்கடித்த இளம் வீரர்களைக் கொண்ட நியூஸிலாந்து பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகிறது.அதே வேகத்தில் ஒருநாள் போட்டியிலும் தனது வெற்றியைத் தொடரலாம் நியூஸிலாந்து.டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலடைந்த தோல்விக்குப் பரிகாரம் தேடும் முனைப்போடு நியூஸிலாந்து வீறு கொண்டு எழலாம்.
இந்தியா
தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வருகிறது. இலங்கை,இங்கிலாந்து,நியூசிலாந்து,மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் தொடர்களை வென்று எழுச்சி பெற்றுள்ளது.டிராவிட் 2 வருடங்களுக்குப் பின் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.சச்சின் அணிக்கு மீண்டும் வருவது இன்னும் அணிக்குப் பலத்தைக் கொடுக்கும்.துடுப்பாட்டம் பந்துவீச்சு,களத்தடுப்பு மூன்றிலும் சிறப்பாக விளங்கும் இந்திய அணி சாதிக்க அதிக வாய்ப்புள்ளது.


கடைசியாக இந்திய அணி1998இல் நடந்த மும்முனை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.அதன் பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது.இதில் ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லை. இம்முறை வெற்றி பெற்றால் 11 ஆண்டுகளின் பின் இலங்கை மண்ணில் பெற்ற வரலாற்று வெற்றியாக மாறலாம்.

சனத் சாதனை
சனத் இந்தத் தொடரில் உலக சாதனை ஒன்றைப் படைக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.ஒரு மைதானத்தில் கூடுதல் ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற சாதனையே அது.பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான 'இன்சமாம்' தான் தற்போதுவரை இந்த சாதனைக்கு சொந்தக்காரன்.இவர் ஷார்ஜா மைதானத்தில் 2464 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இந்த சாதனயை முறியடிக்க சனத்துக்கு இன்னும் 91 ஓட்டங்கள் தேவை.

சனத் கடைசியாக விளையாடிய 19 போட்டிகளில் 514 ஓட்டங்களை மட்டுமே பெற்றுள்ளார்.சனத்தின் அதிரடி மீண்டும் தேவை.
பிரேமதாச மைதானம்
பிரேமதாச மைதானத்தில் இதுவரை 90 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்திய அணியே இலங்கை அணிக்கெதிராக கூடுதல் ஓட்டங்களைப் பெற்றுள்ளது.2009 ஆம் ஆண்டு 5 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.சனத்,மஹேல,சங்ககார ஆகியோர் இந்த மைதானத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்துள்ளனர்.பந்துவீச்சில் முரளி 69 விக்கெட்டுகளையும் சனத் 57 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணியிலுள்ளனர்.

முடிசூடப்போவது இலங்கையா,இந்தியாவா, நியூஸிலாந்தா....

Monday, August 31, 2009

அமெரிக்காவில் அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும்
டென்னிஸ் தொடர்களில் அவுஸ்ரேலிய, பிரெஞ்ச்,விம்பிள்டன்,அமெரிக்க பகிரங்க சர்வதேச டென்னிஸ் தொடர்கள் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்தைப் பெற்றவை. இதில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் உள்ள மெடோஸ் பார்க்கில் இன்று ஆரம்பமாகி செப்டெம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆண்கள் பிரிவு
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் "நம்பர்-1' வீரர் சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர்,5 முறை(2004-2008) பட்டம் வென்றுள்ளார். இவர் 6ஆவது முறையாக பட்டம் வெல்ல வாய்ப்பு அதிகமுள்ளது. இதைவிட,16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்புமுண்டு.அண்மையில் "நம்பர்-2' இடத்தை பிடித்த இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, பெடரருக்கு கடும் போட்டியைக் கொடுக்கலாம். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பெடரரிடம் வீழ்ந்த முர்ரே, இம்முறை பெடரரை வீழ்த்தக் காத்திருக்கிறார்.

காயம் காரணமாக ஓய்விலிருந்த ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலும் முதன் முறையாக அமெரிக்க பகிரங்கப் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார்.இவர்களைவிட செர்பியாவின் ஜோகோவிக்,அமெரிக்காவின் அன்டி ரொடிக்,ஆர்ஜென்டினாவின் மார்ட்டின் டெல் போட்டோ,ரஷ்யாவின் டேவிடென்கோ, பிரான்ஸ் வீரர் வில்ஃப்ரெட்சொங்கா ஆகியோரும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களத்தில்.


பெண்கள் பிரிவு
பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,12 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங் சாதனையை சமன் செய்வார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லாமல் "நம்பர்-1' இடத்திலுள்ள ரஷ்யாவின் டினாரா சபினா, இம்முறை பட்டம் வெல்ல சிறப்பாகப் போராடுவார். அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,செர்பியாவின் ஜான்கோவிக், இவானோவிக்,ரஷ்யாவின் மரியா ஷரபோவா,குஸ்னட்சோவா,எலீனா டெமன்டிவா,பிரான்சின் அமலி மொரிஸ்மோ, பெலாரசின் விக்டோரியா அஸரென்கா போன்றோர் ஏனைய வீராங்கனைகளுக்குக் கடும் சவாலைக் கொடுப்பார்கள்.


கடந்த 2 ஆண்டு குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டென்னிஸ் உலகுக்குத் திரும்பியிருக்கும்,2005ஆம் ஆண்டு சாம்பியன் பெல்ஜியத்தின் கிம்கிளைஸ்டர்ஸ், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா பெரிதாக சாதிக்க வாய்ப்புக்கள் குறைவு.இரண்டாம் சுற்று வரை முன்னேறலாம்.


கடந்த 7 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் சுற்றில் நுழையும் முதல் இந்தியர் என்ற பெருமையை சோம்தேவ் பெறுகிறார்.இதற்கு முதல் 2002ஆம் ஆண்டு இந்திய வீரர் பிரகாஷ் அமிர்தராஜ், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடியிருந்தார்.



உலகின் முன்னணி வீர,வீராங்கனைகள் இம்முறை இப்போட்டியில் பங்கேற்றுள்ளதால் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.


அதிர்ச்சிகளும் உண்டு.......ஆச்சரியங்களுமுண்டு.....

Sunday, August 30, 2009

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று.....

என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று......

அள்ளிக் கொடுத்த வள்ளலாக நகைச்சுவைப் பேராசானாக சிந்தனைத் தென்றலாக தமிழ் திரையுலகில் மகுடம் சூடி வாழ்ந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்.நகைச்சுவை நடிகராக மட்டுமன்றி சிரிப்பு,சிந்தனை இரண்டின் சங்கமமாக தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவரிவர்.

அப்படிப்பட்ட உன்னத கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 52 ஆவது நினைவு தினம் இன்று...... அவருக்காக இந்தப் பதிவு. கலைவாணர் பற்றிய சில தெரிந்த தவல்களோடு.......
நாகர்கோவில் சுடலைமுத்து என்ற இயற்பெயர் கொண்ட கிருஷ்ணன் (என்.எஸ்.கே) கன்னியாகும‌ரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள ஒழுகினசே‌ரி என்ற இடத்தில். சுடலையாண்டி பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிகளுக்கு மகனாக1908 நவ.29 இல் பிறந்தார்.

17 வயதில் நாடகக் கம்பனியில் நடிகராக இணைந்து கொண்டார்.நாடகங்களில் பல ப‌ரீட்சார்த்த முயற்சிகளை கலைவாணர் மேற்கொண்டார். வில்லு‌ப் பாட்டை நாடகத்தில் முதன் முதலாக புகுத்தியவர் இவரே.நாடகங்களில் கலைவாணர் படைத்த சாதனைகள் பல. திரைத்துறையில் காலடி வைத்த பிறகும் அவரது நாடகம் மீதான தாகம் குறையவில்லை. பிறருக்கு உதவுவதற்காகவே அவர் பலமுறை நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்.

என்.எஸ்.கிருஷ்ணன் நடித்த முதல் படம், "சதிலீலாவதி'. எஸ்.எஸ்.வாசன் எழுதி ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் கலைவாணருக்கு மட்டுமல்லாது பல பிரபலங்களுக்கு அறிமுகப் படமாக அமைந்தது. எம்.ஜி.ஆர்,எம்.ஜி.சக்கரபாணி, எம்.கே.ராதா,டி.எஸ்.பாலையா, கே.வி.தங்கவேலு,எம்.வி.மணி,ஆகியோர் இந்தப் படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்கள்.என்றாலும், முதலில் வெளியான படம், டி.கே.எஸ்.சகோதரர்களின், "மேனகா' படம் தான்.

நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப்பறந்த கலைவாணர் நடித்த படங்கள், சமூக கருத்துக்களை பரப்பின. சிந்தனையைத் தூண்டின.


தனது திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளை தானே எழுதி இயக்கிய சந்தர்ப்பங்கள் பல.என்.எஸ்.கிருஸ்ண நடித்த அநேக படங்கள் வெற்றி பெற்றன. வசந்தசேனா,திருநீலகண்டர், சதிலீலாவதி,பூலோக ரம்பை,ரம்பையின் காதல், தாஸி அபரஞ்சி, ஹரிதாஸ்,ஆர்யமாலா,பவளக்கொடி,வனசுந்தரி,யார் பையன்,மதுரை வீரன்,நல்லதம்பி போன்றன சில.தமிழில் மட்டுமன்றி கன்னடம்,தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திரைத்துறைக்கு வரும் முன்பே நாகம்மை என்பவருக்கும் கலைவாணருக்கும் திருமணம் நடந்தது. என்.எஸ்.கிருஸ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த காலகட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமாகக் கனிந்தது. டி.ஆர்.ஏ.மதுரத்தை இரண்டாவதாக மணம்பு‌ரிந்து கொண்டார்.தனது முதல் திருமணத்தை மறைத்தே மதுரத்தை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணன். இது தெ‌ரிய வந்த பிறகு கிருஷ்ணனுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்தார் மதுரம்.தியாகராஜ பாகவத‌ரின் அம்பிகாபதி படத்தில் இருவரும் நடித்திருந்தாலும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் இந்த‌ப் பி‌ரிவு அதிகநாள் நீடிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக நடித்தப் படங்கள் அவ்வளவாக வரவேற்புப் பெறாததை உணர்ந்து மீண்டும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினர்.பின்னர் மதுரத்தின் சம்மதத்துடன் அவரது தங்கை வேம்புவை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

1944 ஆம் ஆண்டு நவ. 27 கலைவாண‌ரின் இரண்டாவது கைது நடந்தது. இந்துநேசன் பத்தி‌ரிகையாசி‌ரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு தொடர்பாக கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சிறைவாசமும் அனுபவித்ததார்.


சிறைக்கு சென்றுவந்த பிறகுதான் பம்மல் சம்பந்த முதலியார் அவருக்கு கலைவாணர் என்ற பட்டத்தை அளித்தார். கூத்தாடிகள்' என்ற வார்த்தையை ஒழித்து, "கலைஞர்கள்' என்ற சொல்லை உருவாக்கியவர் என்.எஸ்.கிருஷ்ணன் தான்.

படங்களில் நடித்து சம்பாதித்துக்கொண்ட சொத்துக்களை ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்தார். தனது இறுதிக் காலத்தில் வறுமையில் இவர் வாடியபோது இவருக்குக் கை கொடுக்க யாருமில்லை.
1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் தேதி தனது 49வது வயதில் மரணத்தை தழுவினார் கலைவாணர்.

கலைவாணர் மறைந்தாலும் அவரது சிரிப்பு இன்னும் எம் மனதிற்குள் நிழலாடுகிறது

Friday, August 28, 2009

17 + முர

17 + முரளி


சுழல் நாயகன் முரளி இன்றுதான் சர்வதேச ரீதியில் கிரிக்கெட்டில் அறிமுகமான நாள்.அவுஸ்ரேலிய அணிக்கெதிராக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முரளி தனது சுழலின் தன்மையை கிரிக்கெட் உலகிற்கு உணர்த்தினார்.அறிமுகப்போடியில் முதல் இனிங்சில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார்.அந்த விக்கெட் அவுஸ்ரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான கிரேக் மக்டெர்மெட்.


முரளி சுழல் பந்துவீச்சில் குறுகிய காலத்தில் பல உலக சாதனைகளைப் படைப்பாரென்று யாருமே நினைத்திருக்கவில்லை.ஏன் முரளி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் முரளி அறிமுகமாகி இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தி.

முரளியின் கிரிக்கெட் வாழ்வில் அவர் சந்தித்த தடைகள் ஏராளம்.கிரிக்கெட் வீரர்களால்,நடுவர்களால் என பல்வேறு சந்தர்ப்பங்களில் முரளி மீது,அவரது பந்து வீச்சு மீது ஏராளமான சர்ச்சைகள்.முரளியின் அசுர வளர்ச்சியைக் கண்டு அஞ்சிய மேலை நாட்டுக் கிரிக்கெட் வீரர்கள் தான் முரளி பந்தை வீசுவதில்லை எறிகிறார் என்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.இருந்தும் அவற்றையெல்லாம் கண்டு அஞ்சாது தனது மாயாஜால சுழலினால் இவற்றுக்கு பாடம் கற்பித்தார்.


கிரிக்கெட் உலகில் முரளி பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன்.

* டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (780)
*ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (66)
*ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளுக்குமேல் அதிக தடவைகள் கைப்பற்றியமை (22)
*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓட்டமற்ற ஓவர்களை அதிகம் வீசியமை (1770)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் (161)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியமை (3 மைதானங்கள்)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வீரர்களை நேரடியாக bowld முறையில் வீழ்த்தியமை (162 )
*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் களத் தடுப்பாளர்களிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்த வீரர்கள் (376)

*டெஸ்ட் கிரிக்கெட்டில் முரளியின் பந்துவீச்சில் விக்கெட் காப்பாளரால் ஸ்ரம்பிங் முறையில் ஆட்டமிழந்த வீரர்கள் (46)

*ஒருநாள் சரவதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (511)


முரளியின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.

கிரிக்கெட் உலகில் முரளி படைத்த சாதனைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமானால் நானே நீண்ட ஒரு பதிவை தர வேண்டும்.நேரமோ இப்போது என்னோடு வில்லத்தனம் புரிவதால் இப்போதைக்கு இவ்வளவும்தான்.மிக விரைவில் முரளியைப் பற்றிய சாதனைப் பதிவை எதிர்பாருங்கள்.

சாதனை நாயகனுக்கு இனிய வாழ்த்துக்கள்.இன்னும் பல சாதனைகள் தொடரட்டும்.

Thursday, August 27, 2009

பிதாமகனுக்காக....


கிரிக்கெட்டுக்காக பல பதிவுகளைத் தந்த நான்,இன்று ஒரு பதிவு தராவிட்டால் நீங்கள் என்மீது கொஞ்சம் கோபப்படுவீர்கள். ஏன் கோபப்படவேண்டும் என ஒரு சிலர் நினைக்கலாம்....

இன்று கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்,கிரிக்கெட்டின் பிதாமகன் என அழைக்கப்படும் சார் டான் பிராட்மேன் பிறந்தநாள். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரரிவர்.கிரிக்கெட்டில் என்றென்றும் முதல்வன்.


தனது அறிமுகப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்டில் ஐந்தாவது வீரராக களமிறங்கி முதல் இனிங்ஸில் 18 ஓட்டங்களை மட்டுமே பெற்றார்.இரண்டாவது இனிங்ஸில் ஒரு ஓட்டம் மட்டுமே.


தனது 2 ஆவது போட்டியில் கவனத்துடன் விளையாடி,முதல் இனிங்ஸில் 79 ஓட்டங்களைக் குவித்தார்.2 வது இனிங்ஸில் 112 ஓட்டங்களைக் குவித்து,இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை வீரரானார்.


தனது 6 ஆவது போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு உரிமையுள்ள வீரர் பிராட்மேன்.1928 முதல்1948 வரையான காலப்பகுதியில் 52 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 6996 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிராட்மேன் கிரிக்கெட்டின் பிதாமகன்.........

Wednesday, August 26, 2009

300

நியூசிலாந்து அணித் தலைவரும் சுழற் பந்துவீச்சாளருமான டேனியல் வெட்டோரி, இலங்கை அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவர் சங்ககாரவை ஆட்டமிழக்க செய்ததன் மூலம்,டெஸ்ட் அரங்கில் தனது 300ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதன் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.


நியூசிலாந்து சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர் முன்னாள் வீரர் சேர் ரிச்சர்ட் ஹாட்லி.இவர் 431 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் மூலம் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையும் கிடைத்தது டேனியல் வெட்டோரிக்கு.இதற்கு முதல் இங்கிலாந்து இடது கை சுழற்பந்து வீச்சாளர் டெரிக் அண்டர்வூட் 86 டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் அதிகபட்சம். வெட்டோரி தனது 94ஆவது டெஸ்டில் 300ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சில் மட்டுமன்றி துடுப்பாட்டதிலும் இவர் 'கிங்' தான் டெஸ்ட் போட்டிகளில்(3 சதங்கள்,20அரைச்சதங்கள்)உட்பட 3,329 ஓடங்களையும் குவித்துள்ளார்.
இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள்,3 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 8ஆவது சகலதுறை வீரர் என்ற பெருமையைப் பெற்றார் வெட்டோரி.
இதற்கு முன் இந்தியாவின் கபில்தேவ், நியூஸிலாந்தின் சேர் ரிச்சர்ட் ஹாட்லி, அவுஸ்ரேலியாவின் ஷேன் வார்ன், இங்கிலாந்தின் இயன் பொத்தம், தென்னாபிரிக்காவின் பொலாக், பாகிஸ்தானின் இம்ரான்கான், இலங்கையின் சமிந்த வாஸ் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் 8ஆவது வீரராக தற்போது இணைந்துள்ளார் வெட்டோரி.


தனது 18ஆவது வயதில் நியூசிலாந்து அணியில் அறிமுகமான இளவயது வீரரான இவர்,1997 இல் இங்கிலாந்து அணிக்கெதிரான தனது அறிமுகப் போட்டியில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார்.
2000 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிராக ஒக்லன்டில் நடைபெற்ற போட்டியில் 87 ஓட்டங்களைக் கொடுத்து 7விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுவே இவரின் சிறந்த பந்துவீச்சுப் பெறுதி.

சிறந்த சகலதுறை வீரராக வலம் வரும் வெட்டோரி இன்னும் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் அதிகம்.

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates