Pages

Thursday, December 31, 2009

24 தொடர்ச்சி..........


இன்று 2009 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2010 ஆம் ஆண்டை வரவேற்கவுள்ள நிலையில் முன்னைய பதிவின் தொடர்ச்சி இது....

நவம்பர் 18. காலை 10 மணி முதல் ஒருமணி வரையான நிகழ்ச்சி நேயர்களின் பங்களிப்புடன் 1998 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அறிமுகமான இசையமைப்பாளர்களில் யாரது இசையமைப்பு சிறப்பாக இருக்கிறது என்பதை வாக்கெடுப்பு மூலம் நடத்தினேன். அமோகமான நேயர்களின் வாக்குகள் அடிப்படையில் ஹரிஷ் ஜெயராஜ் தெரிவானார் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க உதவிய டயானாவுக்கும் நன்றிகள்.

பிற்பகல் ஒன்று முப்பது முதல் மூன்று மணி வரை எமது அறிவிப்பாளர்களை வானலையில் தேடிப்பர்ர்தேன். காரணம் அன்று அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க முடியாமையால் ஓய்வாக இருந்தார்கள்.
அன்று அவர்களை சிறப்பு விருந்தினர்களாக சில நிமிடங்கள் பேச அழைத்தபொழுது அவர்கள் தந்த உற்சாகம் என்னை சோர்வின்றி நிகழ்ச்சிகளைப் படைக்க உறுதுணையாக இருந்தது. மாயா ,ஷங்கர் ,கஜமுகன் ,ரவூப்,குணா,கணா ,ஷெல்ரன்,டயானா,ஹோஷியா,கவிதா,ராஜ்,ஆரணி,பிரசாந்த்,மோகன்,மற்றும் தயாரிப்பாளர் பிரஜீவ் ,அலுவலக உதவியாளர்கள் ஆஷா ,கௌரி ஆகியோரின் ஒத்துழைப்பு மிகவும் சிறப்பானது.


மாலை மூன்று மணிக்கு எமது சந்தைப்படுத்தல்,விரிவாக்கல் பிரிவு நண்பர்களுடன் ஒரு விறு விறுப்பான கலக்கல் நிகழ்ச்சி சிறப்பாக நகர்ந்தது .மாலை 5 மணிமுதல் நேயர்களோடு உரையாடி பாடல்களை கொடுத்தேன்.

இரவு 9.30 மணிக்கு நிலாச்சோறு நிகழ்ச்சியில் சக்தி என்றால் உங்கள் எண்ணத்தில் தோன்றும் உணர்வுகளை கவிதைகளாகக் கூறுங்கள் எனக் கூறியதும் எமது நேயர்கள் பல சிறப்பான கவிதைகளைக் கூறி பரிசில்களையும் வென்றெடுத்தனர். அந்த நேரத்தில் எமது சக வானொலியான வெளிச்சம் fm இல் நிகழ்ச்சி படைக்க வந்த ரவூப் என்னை பார்க்க சக்தி fm கலையகம் வந்தார்.கலையகம் வந்த ரவூப் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சிரித்தபடி.என்னவென்று கேட்டபோது கவிதை என்றார். சக்திக்கா என்று கேட்க தலையசைத்தபடி புன்முறுவலுடன் எழுதிக்கொண்டே இருந்தார்.

ஆரம்ப காலங்களில் ரவூபின் கவிதை சொல்லும் தன்மையால் கவரப்பட்டவன் என்ற வகையில்,சக்திக்கு ரவூப் எழுதிய கவிதையை அவரது குரலில்ஆவலோடு எதிர்பார்த்தேன்.ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் அவரது கவிதை இப்படி அமைந்தது.....

11 ஆண்டுகளில் சாதனைகள் படைக்கின்ற சக்தியில் தானுமொரு சிறு சாதனைதான் என்பதை நிரூபிக்க ஈரம் காயாத இந்தக் குரலோடு 24 மணி நேர முழு அறிவிப்பாளராக கடமையில் கண்ணியம் காக்கின்ற கனிவான எங்கள் மயூரனுக்கு இந்த இதமான இரவுப் பொழுதில் என் இனிய இதயராக வாழ்த்துக்களை நிலாச்சோறாக வழங்கி வாழ்த்துகிறேன்.....
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. காரணம் சக்தி பற்றிய கவிதை தான் என்று நான் நினைத்திருந்தேன்.இப்படி எழுதியதை முன்னரே தெரிந்திருந்தால் ஒலிவாங்கியைக் கொடுத்திருக்கமாட்டேன்.




மதியப் பொழுதில் ஒரு சிலர் என்னிடம் வந்து மயூரன், 18 மணித்தியாலங்களை 24 மணித்தியாலங்களாக தொடருங்கள் அது நல்லா இருக்கும் என்றனர். நானோ இல்லை என்று மறுத்து விட்டேன்.இருந்தாலும் நேயர்களின் அதிக விருப்புகளும் இதே மாதிரி அமைய, எனது முடிவைத் தளர்த்தி 24 மணித்தியாலங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி படைக்க உடன்பட்டேன்.

நேரம் 12 மணியைக் கடந்து நவம்பர் 19 ஆம் திகதி ஆனது.தொடர்ந்து நான் மட்டுமே கலையகத்தில் தனியே. என்னோடு நேயர்கள் துணையாக வீடுகளில் வானொலிப்பெட்டிக்கருகில். காலை 6 மணிவரை இலங்கையிலிருந்து மட்டுமன்றி சர்வதேச ரீதியில் பல நாடுகளிலிருந்து தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் நேயர்கள் தந்த ஆதரவு சொல்லிலடங்காது.

காலை 6 மணிக்கு வழமையாக நிகழ்ச்சி படைக்க வரும்கணா,ஹோஷியாவிடம் நவம்பர்,19 கலையகத்தை ஒப்படைத்துவிட்டு எனது 24 மணி நேர தொடர் அறிவிப்புக்கு ஓய்வு கொடுத்தேன்.



இந்த 24 மணி நேர சாதனைப் பயணத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த பயணம் முடிந்து 1 மாதம் கடந்த நிலையிலும் என்னைக் காணும் நேயர்கள் அந்த நினைவுகளை மீட்டிப்பார்க்க வைக்கிறார்கள்.

நான் அறிவிப்புத்துறைக்குள் நுழைந்து 11 வருடங்கள் கடந்த நிலையில், கடந்த நவம்பர் 18, 19 ஆம் திகதிகளில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக நிகழ்ச்சி செய்ததை என்னால் என்றுமே மறக்க முடியாது. இலங்கைத் தனியார் தமிழ் வானொலியொன்றில் தொடர்ந்து 24 மணிநேரம் ஒரு அறிவிப்பாளர் தொடர்ந்து நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது இதுதான் முதல் சந்தர்ப்பமென பலர் கூறினார்.நான் அறிந்தவரையிலும் அது சரி.

இதற்கு சந்தர்ப்பத்தை வழங்கிய எமது முகாமைத்துவ அதிகாரிகளுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். இத்தனைக்கும் மேலாக உறுதுனையாகவிருந்த நேயர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விரிவாக விபரமாக இந்தப் பதிவைத் தரவேண்டுமென எண்ணினேன் ஆனால் நேரம் என்னுடன் வில்லத்தனம் புரிவதால் முற்றுப்புள்ளி வைக்கிறேன்.நன்றி.

Wednesday, December 2, 2009

24

நவம்பர் 18, 19 என் வாழ்நாளில் வழக்கத்திற்கு மாறான நாட்கள்.வித்தியாசமான நாட்கள்.எனது 11 வருட ஊடகத்துறை வாழ்வில் முக்கியமான நாட்கள்.இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறேன். கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணம். தொடர்ந்து 105 மணித்தியாலங்கள் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க வேண்டுமென்பது.ஆனால் அப்போது சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை.அந்த எண்ணத்தின் ஒரு சிறு பகுதிதான் இந்த18,19 ஆம் திகதிகளில் நிறைவேறியது. விரிவாக சொல்லப்போனால் தொடர்ந்து 24 மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளை தனி ஒருவனாகத் தொகுத்து வழங்கினேன். இது இலங்கை தனியார் தமிழ் வானொலித்துறையில் முதன் முதல் கூடுதல் நேரம் ஒரு அறிவிப்பாளர், நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய முதல் சந்தர்ப்பமென நினைக்கிறேன்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் தோன்றிய எண்ணத்தின் சில பகுதியை நிறைவேற்றிக்கொண்ட மகிழ்ச்சி இன்னும் என் மனதில் ஓடிக்கொண்டிருக்க தொடர்கிறது விரிவாக எனது அனுபவப் பதிவு........ இந்தப் பதிவு தேவைதானா என சிலர் கேட்கலாம். என்ன செய்வது என் வாழ்நாளில் மறக்க முடியாத விடயங்களைப் பதிவிடுவது தவறில்லை என நினைக்கிறேன்.

நேயர்கள் மனதில் என்றுமே முதற்தரமாய் விளங்கும் சக்தி fm இன் 11 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 11 நாட்களும் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில் நிகழ்ச்சிகளை வடிவமைத்து நேயர்களுக்கு வழங்கவேண்டுமென்பது நியதி.ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமது எண்ணத்தில், தமக்கு வழங்கப்பட்ட நாட்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினர்.எனக்கான நாள் பத்தாவது நாள்.எனக்குத் தயாரிப்புப் பணியில் அதிக நேரத்தை செலவிட முடியாத நிலை.காரணம் இதைவிட முக்கியமான இன்னொரு நிகழ்ச்சித் தயாரிப்புப் பணி வேறு இருக்கிறது.அதுதான் "சக்தி சூப்பர் ஸ்டார்".எனது நாளுக்கான நிகழ்ச்சிகளை சிறப்பாக வடிவமைத்து வழங்க முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றியது.சரி நாள் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளையும் நானே தொடர்ந்து தொகுத்து வழங்கினால் எப்படியிருக்கும்..........
என் எண்ணத்தை செயற்படுத்த விளைந்தேன்.எமது நிகழ்ச்சிப் பொறுப்பதிகாரி மாயாவிடம் சென்று கூறினேன்.'என்ன மயூ தனியாவா' என்று கேட்ட மறு வினாடி' ஓகே செய்யலாமே 'என்றதும் எனது எண்ணம் செயல் வடிவம் பெறப்போகுதே என்பதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏனைய அறிவிப்பாளர்களுடன் இதைப் பகிர்ந்து கொண்டேன். பலரும் ஆதரவாக எனக்கு அப்போதே வாழ்த்துக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தபோதும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது வீட்டில்.அம்மா இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.ஒருமாதிரிஅம்மாவின் சம்மதத்தைப் பெற்றுவிட்டுத் தயாரானேன். அப்போது இன்னொரு தடையும் காத்திருந்தது. அதுதான் திடீர் காய்ச்சல்.என்ன செய்வது.... மனம் தளரவில்லை.எடுத்த முடிவில் மாற்றமில்லை. நிகழ்ச்சி முன்னோட்டம் '18 மணித்தியாலங்கள் உங்களோடு நான்' என ஒலிபரப்பானது.


காய்ச்சல் குறையவேயில்லை. ஒருநாள் ஓய்விலிருந்துவிட்டு, நவம்பர் 18, காலை 6 மணிக்கு எனது பயணம் வணக்கம் தாயகத்துடன் ஆரம்பமானது .காலை 6 மணி முதல் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பலநூறுக்கணக்கான நேயர்கள் குறுஞ்செய்தி(sms) மூலமும் தொலைபேசி மூலமும் தமது வாழ்த்துக்களை பரிமாறத் தொடங்கினர்.அந்த வாழ்த்துக்கள் காலைப் பொழுதில் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தன.

காலை 8 மணி முதல்" நம் நாட்டுக் கலைஞர்கள் வாழ்வில் சக்தி fm "என்ற கருப்பொருளில் நம்நாட்டுக் கலைஞர்கள் தம் வாழ்த்துக்களையும் தமது வாழ்க்கையில் சக்தியின் பங்கு எப்படி அமைந்தது பற்றியும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பாடகர் T.S.முருகேஷ் ,K.மகிந்தகுமார்,நம் நாட்டின் மிகச்சிறந்த தாள வாத்தியக் கலைஞர் ரட்ணம் ரட்ணதுரை ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

4 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன இன்னும் 14 மணித்தியாலங்கள்... எதிர்பார்ப்போடிருங்கள்


மிகுதி விரைவில்.... நேரம் கிடைக்கும்போது தொடரும்


 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates