Pages

Tuesday, June 30, 2009

சனத்துக்கு வயது 40
எனக்கு கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தவர் சனத் ஜெயசூரிய. தனது அதிரடியால் பல சாதனைகளைப் படைத்த சாதனை நாயகனுக்கு இன்று 40 ஆவது பிறந்த நாள்.வாழ்த்துக்கள் சனத்...
சாதனை நாயகனுக்காக இந்தப் பதிவு..............

சனத்தின் பெயரைக் கேட்டாலே எனக்குள் ஒரு உற்சாகம். ஆனால் எதிரணி வீரர்களுக்கு இவர் பெயரைக் கேட்டால் கதி கலங்கும்.

இலங்கையின் தென் பகுதியில் உள்ள மாத்தறை பகுதியில் 30.06.1969 இல் பிறந்தவர் சனத். இவரது முழுப் பெயர் சனத் டேரன் ஜெயசூரிய. 1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த சனத் 20 வருடங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் பின் வரிசை துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய சனத் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி தனது அதிரடியால் கிரிக்கெட் உலகைக் கலக்கியவர். ஒரு வீரராக மட்டுமன்றி தலைவராகவும் சில காலம் அணியை வழிநடத்திய பெருமையும் இவருக்குண்டு.

சனத்தின் உலக சாதனைகள் சில.............

*அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியமை (432 போட்டிகள்)*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தமை (270 )

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில்13000 ஓட்டங்களையும் 300 விக்கெட்களையும் கடந்த வீரர் (13151 ஓட்டங்கள், 313 விக்கெட்டுகள்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக அரைச் சதம் அடித்தமை (17 பந்துகளில்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக வயதான வீரராக இருந்த சமயத்தில் சதம் அடித்தமை.( 39 வருடங்கள் 212 நாட்கள்)

*தலைவராக இருந்த நேரம் ஒரு நாள் சர்வதேச போட்டி ஒன்றில் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றமை (189 ஓட்டங்கள்)

*ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் அதிக தடவைகள் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை ( 33 தடவைகள்)

இன்னும் இவரது சாதனைகள் பல....சனத்தின் சாதனைகளுக்கு ஒரு பதிவு போதாது. 2011ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது கனவு. அந்தக் கனவு நனவாகவேண்டும் என்பதே என் விருப்பமும். உங்கள் விமர்சனங்களையும் குறிப்பிடுங்கள்.

சாதனை நாயகன் சனத்துக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள்.....அறுபதிலும் அதிரடி தொடரட்டும்.............

Monday, June 29, 2009

பாப் இசை மன்னனின் மரண பரிசோதனையில் அதிர்ச்சிகள்

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் பிரேத பரிசோதனையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின்போது, அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன.
கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக 'விக்' பயன்படுத்தி வந்துள்ளார்.
அவரது தொடை,இடுப்பு மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் பல காணப்பட்டன.அவர் தினமும் 3 முறை போதைத்தன்மை உடைய வலிநிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளைவாக அந்த அடையாளங்கள் ஏற்பட்டுள்ளன.
அவரது உடலில் அறுவைச் சிகிச்சைத் தழும்புகளும் அதிகம் இருந்துள்ளன. அவர் மொத்தம் 13 முறை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
அவரது உடலை ஆராய்ந்ததில் ஆரோக்கியமானவராக அவர் இருந்திருக்கவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
1984இல் ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது அவரது தலைமுடி தீப்பிடித்தது.அதன் அடையாளம் இடது காதோரம் காணப்பட்டது.

கடைசி நேரத்தில் ஜாக்சனின் இருதயத்தை செயற்பட வைக்க 4 ஊசிகள் அவரது இருதயத்திற்கு மேலே மற்றும் அருகே போடப்பட்டுள்ளன. இதில் 3 ஊசிகள் இருதயத்தை மூடியிருக்கும் தசைப் பகுதியை சேதப்படுத்தியுள்ளன. மற்றொன்று நரம்புப் பகுதியை சேதப்படுத்தியுள்ளது.
அவரது முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தழும்புகள் இருந்தன. மேலும், மூக்கின் வலதுபுறம் சற்று தொய்ந்து காணப்பட்டது.

முதுகுப்புறத்தில் வெட்டுக் காயங்கள் இருந்தன. சமீபத்தில் அவர் கீழே விழுந்ததால் இது ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜாக்சனின் மூட்டுப் பகுதிகளில் தோலின் நிறம் மாறியிருந்ததாகவும் இது எதனால் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பிரச்சினைகளுடன் மைக்கேல் ஜாக்சன் வாழ்ந்து வந்துள்ளது அவரது பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. அவரது உடலில் இப்படி பல தழும்புகள்.....அவரது வாழ்விலும் பல தடைகளைக் கடந்தே இசயுலகிலும் பல திருப்பங்களையும் உருவாக்கினார் ......

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் மறைந்தாலும் அவரது இசை என்றும் எங்கள் அகங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கும் ......

Sunday, June 28, 2009

சாதனைக் கனவுடன் ஆன்டி முரே
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திங்கட்கிழமை 4ஆம் சுற்றுகள் தொடங்கவுள்ளன.
ஆடவர் பிரிவில் பல்வேறு வீரர்கள் பட்டம் வெல்ல முனைந்துள்ள நிலையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முரே,73 ஆண்டு வரட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க முனைந்துள்ளார். அதாவது 1936-ஆம் ஆண்டு பிரெட் பெரிக்குப் பிறகு எந்த பிரிட்டன் வீரரும் பட்டம் வெல்லவில்லை.
திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்காவுடன் விளையாட உள்ளார் முரே.
இவரது சாதனைக் கனவு நனவாகுமா......

Friday, June 26, 2009

பாப் சூப்பர் ஸ்டார் மரணம்!
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட பாப் இசையுலகின் சூப்பர் ஸ்டார்,நடனப்புயல் மைக்கேல் ஜாக்ஸன் இன்றுஅதிகாலை லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 50.
தனது இனிய இசையால் உலகையே கட்டிப் போட்ட வர் மைக்கேல் ஜாக்ஸன். 1958-இல் அமெரிக்காவின் இந்தியானாவில் பிறந்தார். தனது 9 வயதிலேயே இசைத்துறையில் கால் பதித்த ஜாக்ஸன், வெற்றிகரமான பாப் பாடகராக மேடைகளைக் கலக்க ஆரம்பித்தார். தி ஜாக்ஸன் 5 எனும் பெயரில் தனி இசைக் குழுவைத் தொடங்கிய ஜாக்ஸன், 1970-இல் அந்தக் குழுவின் சூப்பர் ஸ்டாராகவும், உலக பாப் இசையின் மிகச் சிறந்த பாடகராகவும் அறியப்பட்டார். அப்போது அவரது வயது 12 மட்டுமே.

1972-ஆம் ஆண்டு 'பென்' எனும் பெயரில் தனது தனி ஆல்பத்தை வெளியிட்டார். 6 வருடங்களுக்குப் பின் தனது முதல் திரைப்படமான 'தி விஸ்'ஸில் நடித்தார்.
1979-இல் ஆஃப் தி வால் மற்றும் 1982-இல் த்ரில்லர் ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன. ஆஃப் தி வால் ஆல்பம்தான் டிஸ்கோ இசையை உலகம் எங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுகள் விற்பனையாகின. அன்று உலகையே வியக்க வைத்த சாதனையாக அமைந்தது.
த்ரில்லருக்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார். உலகமே இனம் மொழி நாடு என்ற எல்லைகளைக் கடந்து அவரது இசைக்காக உருகியது.

த்ரில்லர் ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்பனை ஆனது. பாப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே இன்றும் த்ரில்லர் திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.
பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் இசை வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகள்
* ஆகஸ்ட் 29,1958இல் அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள கேரியில் பிறந்தார்.
* 1962இல் தன்னுடைய 4 சகோதரர்களோடு இணைந்து ஜாக்சன்5 எனும் இசைக்குழு மூலம் அறிமுகமானார்.
* 1969இல் ஜாக்சன் குழுவுக்கு டெட்ராய்ட் நகரை சேர்ந்த இசைத்தட்டு நிறுவனத்திடமிருந்து முதல் ஒப்பந்தம் கிடைத்தது.
* 1970இல் மைக்கேல் ஜாக்சன் தனியாகப் பாட ஆரம்பித்தார்.
* 1979இல் குவின்சி ஜோன்ஸ் தயாரிப்பில் "ஆப் தி வால்' ஆல்பம் வெளியாகி ஒரு கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1982இல் திரில்லர் ஆல்பம் வெளியானது. 5.4 கோடி ஆல்பங்கள் விற்பனையாகி அவரை இசையுலகின் மன்னராக்கியது.
* 1984இல் பெப்சி விளம்பரத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அவருடைய முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. இதே ஆண்டில் 8 கிராமிய விருதுகளை வென்று சாதனை படைத்தார்.
* 1985இல் ஏடிவி மியூசிக் எனும் இசை நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதே ஆண்டு 'வி ஆர் த வேர்ல்டு' எனும் பாடலை ஆபிரிக்க வறுமையை போக்குவதற்காக எழுதினார்.
* 1987இல் 'பேட்' எனும் ஆல்பம் வெளியானது. 2.60 கோடிக்கு மேல் விற்பனையானது.
* 1988இல் மைக்கேல் ஜாக்சனின் சுயசரிதை "மூன் வாக்' வெளியானது.
* 1990இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக அறுவை சிகிச்சை முகமூடி அணிந்து காணப்பட தொடங்கினார்.
* 1992இல் 'டேஞ்சரஸ்' ஆல்பம் வெளியானது.
* 1992இல் 13வது சிறுவனின் தந்தை ஜாக்சன் தன்னுடைய மகனை பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
* 1994இல் மைக்கேல் ஜாக்சன் புகழ் பெற்ற பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் மகள் லிசா மேரியை மணந்து கொண்டார்.
* 1995இல் ஹிஸ்டரி ஆல்பம் வெளியானது.
* 1996இல் லிசடா மேரியுடன் விவாகரத்து.
* 1996இல் டெபி ரோ எனும் நர்சை மணந்து கொண்டார். 3 ஆண்டுகள் கழித்து அவரையும் விவாகரத்து செய்தார்.
* 2001இல் 'இன்வின்சிபில்' ஆல்பம் வெளியானது.
* 2002இல் இசைத் தட்டு நிறுவனங்கள் குறிப்பாக கறுப்பினப் பாடகர்களை சுரண்டுவதாக மைக்கேல் ஜாக்சன் போர்க்கொடி எழுப்பினார்.
* அதே ஆண்டு நவம்பர் மாதம் மைக்கேல் ஜாக்சன் ஜெர்மனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது தன்னுடைய 9 மாத குழந்தை பிரின்ஸ் மைக்கேலை தலைகீழாக தொங்கவிட்டதில் பெரும் சர்ச்சைக்கு ஆளானார்.
* 2003இல் ஏல நிறுவனம் ஒன்று அவர் வாங்கிய ஓவியங்களுக்கான தொகையை கொடுக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.
* இதே ஆண்டு பெப்ரவரி மாதம் மைக்கேல் ஜாக்சன் தொடர்பான செய்திப் படம் வெளியானது. அவருடைய மேலாளர் சம்பள மீதிக்காக வழக்கு தொடர்ந்தார். நவம்பர் மாதம் ஜாக்சனின் கலிபோர்னியா பண்ணை வீட்டில் தேடுதல் நடைபெற்றது. சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் ஜாக்சன் மீது பிடிவிர்ராந்து பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். டிசம்பர் மாதம் அவர் மீது இந்த வழக்கில் அதிகாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டது.
* 2004இல் மைக்கேல் ஜாக்சன் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மீதான புகாரை மறுத்தார்.
* 2005இல் ஜாக்சன் வழக்கில் விசாரணை தொடங்கியது. அனைத்து புகாரிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
* 2007-ஆம் ஆண்டு அவரது த்ரில்லர் ஆல்பம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சிறப்பு ஆல்பம் வெளியிடப்பட்டது.
* இந்த ஆண்டு மார்ச் மாதம் மைக்கேல் ஜாக்சன் மீண்டும் இசை நிகழ்ச்சி நடத்தப் போவதாக அறிவித்தார். 'இறுதித் திரை' எனும் பெயரில் அந்த இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில் மரணமடைந்தார்.

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையை தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன். பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துச் சொன்னது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார் மறைந்தாலும் அவரது பாடல்கள் என்றும் எம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.....

Wednesday, June 24, 2009


என்றும் எம்முடன் 'கவியரசர்'

தமிழர்கள் மரபில் எத்தனையோ கவிஞர்கள் தோன்றி மறைந்திருக்கின்றர்கள்.ஆனாலும் தமிழர்கள் எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தன்னுடைய எழுத்துக்களை,பாடல்களை,படைப்புகளை வழங்கியவர்'கவியரசர்' கண்ணதாசன்.

உலகத் தமிழர்களின் அகங்களில் அமர்ந்திருக்கும் கவியரசர் கண்ணதாசனின் 82 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

தமிழுலகில் ஆரம்பித்து திரையுலகில் புகுந்து மக்கள் மனங்களை வென்ற ஒரே கவிஞர் 'கவியரசர்' கண்ணதாசன். இவரின் வருகைக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகில் பாடல்கள் சிறப்புப் பெற்றன.

தனது சிறந்த சொல்லாட்சி,உவமை,சந்தங்கள்,இலக்கிய நயம்,பொருள் நயம் ஆகியவற்றால் சுமார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தந்தவர் இவர். இன்பம்,துன்பம்,காதல்,பிரிவு,கடமை,சோதனகள்,வேதனைகள் என பல பொருளில் பாடல்களை தந்தமை கண்ணதாசனின் சிறப்பு.

இவரது முதற் பாடல்: 'கன்னியின் காதலி' திரைப்படத்தில் 'கலங்காதிரு மனமே...'

இறுதிப் பாடல் :மூன்றாம் பிறை திரைப்படத்தில் 'கண்ணே கலை மானே....'

கவியரசன் கண்ணதாசன் மறைந்தாலும் அவர் தந்த தமிழ் நயமும் இசை நயமும் திரையிசை வரலாற்றில் தருவது ஒரு தனி நயம்!


Tuesday, June 23, 2009

யூசுபின் 2ஆவது இன்னிங்ஸ்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியிலும் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் மீண்டும் முகமது யூசுப் சேர்க்கப்பட்டுள்ளார்.டெஸ்ட் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.எல் போட்டியில் விளையாடியதால் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்பட்ட முகமது யூசுப் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யூசுப் 79 டெஸ்ட் போட்டிகளில் 6770 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 23 சதங்கள்,28 அரைச் சதங்கள் அடங்கும். 269 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 9242 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 15 சதங்கள்,62 அரைச் சதங்கள்.
யூசுபின் 2 ஆம் இன்னிங்ஸ் இனிதாய் அமையட்டும்.

Monday, June 22, 2009

ICC "20- 20"

இங்கிலாந்தில் இரண்டாவது "20-20"உலகக் கிண்ணப் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உலக "20-20" அணியை அறிவித்துள்ளது. இதில், "சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறிய முன்னாள் சாம்பியனான இந்திய அணியிலிருந்து ஒரு வீரர் கூட தெரிவாகவில்லை. இந்த அணிக்கு பாகிஸ்தானின் யூனிஸ் கான் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து 4 வீரர்களும் இலங்கை மற்றும தென்னாபிரிக்காவிலிருந்து தலா 3 வீரர்களும் மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து 2 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

ஐ.சி.சி." 20-20" அணி : ஜாக் காலிஸ்,ஏ.பி.டி.வில்லியர்ஸ்,அஃப்ரிடி,கம்ரான் அக்மல்,கெய்ல்,தில்ஷான்,யூனிஸ் கான் (அணித்தலைவர்) பிராவோ, வெய்னி பர்னெல்,உமர் குல்,அஜந்த மென்டிஸ்,மாலிங்க.
எங்கள் மனதிலும் இவர்கள்தான்.....
சாதனையை நோக்கி....

புற்றரையில் விளையாடப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள விம்பிள்டனில் இன்று ஆரம்பமாகிறது.நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரஃபேல் நடால், மூட்டு வலி காரணமாக திடீரென போட்டியிலிருந்து விலகியதால் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

2003 முதல் 2007 வரை தொடர்ந்து விம்பிள்டனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபெடரருக்கு, 12 மாதங்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் பரமவைரி நடால் சோதனை அளித்தார். விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் நடந்த இறுதிப் போட்டியில் 5 செட்களில் ஃபெடரரைத் தோற்கடித்து தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடால். இம்முறை நடால் திடீரென விலகிக் கொண்டுள்ளதால் ஃபெடரருக்கு எதிர்பார்த்த போட்டி இல்லாமல் போயுள்ளது. இதனால் 6ஆவது முறையாக பட்டம் வெல்வது மட்டுமல்லாமல்,15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைக் கைப்பற்றிய சாதனையாளராகவும் மாறும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஃபெடரர்.

5மாதங்களுக்கு முன்பு நடந்த அவுஸ்ரேலிய பகிரங்கப் போட்டியில் நடாலிடம் தோல்வியுற்றதால் ஃபெடரரின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என்ற கருத்து பரவலாக எழுந்தது. என்றாலும், நடாலுக்கு சாதகமான களிமண் தரையிலேயே தோற்கடித்து பிரெஞ்ச் பகிரங்கப் பட்டத்தை 2 வாரங்களுக்கு முன்பு முதன்முதலாகக் கைப்பற்றி எழுச்சியடைந்தார் ஃபெடரர். அத்துடன் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்தார்.

பிரிட்டன் வீரர் ஆன்டி முரே, ஆன்டி ராடிக் மற்றும் நோவக் ஜோகோவிக் ஆகியோர் ஃபெடரருக்கு இம்முறை சவாலாகத் திகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை நாயகனே சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

மகுடம் சூடியது பாகிஸ்தான்

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து முதலாவது 20-20' உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவிடம் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெற்ற ஏமாற்றத்துக்கு ஆறுதல் தேடிக்கொண்டது பாகிஸ்தான் அணி.

இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.17 ஓவர்களிலேயே இலங்கை அணி 100ஓட்டங்களைக் கடந்தது. முதல்வரிசை வீரர்கள் ஏமாற்றம் அளித்ததை உணர்ந்த தலைவர் சங்கக்கரா பொறுமையாக விளையாடி அணியைச் சரிவிலிருந்து மீட்டார். சங்கக்கரா 64 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல்பெற்றார். நாம் எதிர்பார்த்த சனத், தில்ஷான் ஆகியோர் சோபிக்கத் தவறினர்.

139 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்139 ஓட்டங்களை 18.4 ஆவது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 139ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதில் நான் முதல் பதிவில் எதிர்வு கூறிய அஃப்ரிடி அதிரடியாக அசத்தினார்.இவர் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

அஃப்ரிடி ஆட்டநாயகன் விருதினையும் இத் தொடரில் 219 பந்துகளில் 317 ஓட்டங்களைப் பெற்ற தில்ஷான் தொடர் நாயகன் விருதினையும் பெற்றனர்.இவர், மொத்தமாக 7 போட்டிகளில் 46 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.

கடந்த 2007இல் நடந்த முதலாவது '20-20' உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணியிடம் கிண்ணத்தை பறிகொடுத்த பாகிஸ்தான், இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட பல விடயங்கள் இறுதிப் போட்டியில் நடந்தது ஆனால் இலங்கை அணி வெற்றி அடையும் என குறிப்பிட்டேன் அது மட்டுமே நிகழவில்லை.....

Saturday, June 20, 2009

வெற்றி யாருக்கு

இரண்டாவது '20-20' உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்த்து பாகிஸ்தான் களம் காண்கிறது. புகழ்வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் இப் போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகிறது.கடந்த முறை தென்னாபிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிடம் 5ஓட்டங்களால் தோல்வியுற்று, கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான் அணி, இம்முறை வலுவான இலங்கையுடன் அதற்கான பலப்பரீட்சையில் குதிக்கிறது.

குமார சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றக்கூடிய அனைத்து அம்சங்களுடன் திகழ்ந்தாலும் பாகிஸ்தான் அணி சில அதிர்ச்சிகளையும் கொடுக்கலாம். இத் தொடரின் சூப்பர்-8 சுற்றில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு சில நேரம் பாகிஸ்தான் பதிலடியும் கொடுக்கலாம். (கிரிக்கெட்டில் இது சகஜம்)இலங்கை:துடுப்பாட்டம்,பந்துவீச்சு,களத்தடுப்பு என அனைத்திலும் குறைசொல்ல முடியாத அணியாக இத் தொடரில் தோல்வியே காணாமல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அதே வேகத்தில் இறுதிப் போட்டியிலும் வாகைசூட ஆயத்தமாகியுள்ளது. அணியின் வெற்றி நாயகனாக ஜொலிக்கிறார் தில்ஷான். தொடரில் இதுவரை 3 அரை சதம் உட்பட 317 ஓட்டங்களைக் குவித்து அசத்தியுள்ள இவரது அபார ஆட்டம் தொடர்ந்தால், இலங்கை அணி அதிக ஓட்டங்களைப் பெறலாம். இவருடன் இணைந்து அதிரடி வீரர் ஜெயசூர்யா வாணவேடிக்கை நிகழ்த்தினால், இலங்கையின் வெற்றி உறுதி. இதேவேளை இலங்கை அணியின் பந்து வீச்சும் மிரட்டலாகவே உள்ளது. மலிங்கா,முரளிதரன், மெண்டிஸ் கூட்டணி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்ய முனைப்புக் காட்டுவர்.

பாகிஸ்தான்:மோசமானஆரம்பத் துடுப்பாட்டம்,வலுவற்ற களத்தடுப்பு ஆகியவற்றை மேம்படுத்தினால் உலகக் கிண்ணக் கனவை அவர்கள் ஒருவேளை நனவாக்கலாம். துடுப்பாட்டத்தில் பலவீனமாக இருந்தாலும் சுழலில் அப்ரிடி,அஜ்மல்,மாலிக் நம்பிக்கை அளிக்க வேகப்புயலாக அசத்துகிறார் உமர்குல். எதிரணியைத் தடுமாறச் செய்யும் இவரது பந்து வீச்சு இன்றும் தொடரும் என எதிர் பார்க்கலாம். சகல துறை வீரராக அசத்தி வரும்அப்ரிடி இன்றும் கலக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

20-20' அரங்கில் இலங்கை,பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியை பதிவு செய்துள்ளன. தவிர "டுவென்டி-20' உலக கோப்பை வரலாற்றில் இரண்டு முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய போட்டியில் வெற்றி பெற இரண்டு அணிகளும் தீவிரமாக விளையாடும். முதலில் துடுப்பெடுத்தாடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இது என் கருத்து.....

சனத், அப்ரிடி இருவரும் அதிரடியாக ஆடினால் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.அதிரடி,வேகம்,சுழல் மூன்றும் அசத்தும் ஒரு சிறந்த போட்டியாக இறுதிப் போட்டி அமையுமா?

இறுதிப் போட்டியில் இலங்கைக்கே அதிக வெற்றி வாய்ப்பு.

இரண்டு அணிகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

நடால் அவுட் திங்களன்று ஆரம்பிக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களிலிருந்து ஸ்பெயின் நட்சத்திர வீரரும் தர வரிசையில் முதலாம் இடத்தில் இருப்பவருமான ரஃபேல் நடால் முழங்கால் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விம்பிள்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை 5 செட்களில் வீழ்த்திய நடால், இந்த முறை விம்பிள்டன் போன்ற மிகப்பெரிய தொடரிலிருந்து விலகுவது கடினமான முடிவாக இருந்தாலும் உடல்,உள ரீதியாக இவ்வளவு பெரிய தொடரை அணுக தான் தயாராக இல்லையாம்.
பிரெஞ்ச் பகிரங்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் ராபின் சோடர்லிங்கிடம் இவர் தோல்வியடைந்த போதும் காயத்தினால் சரியாக விளையாட முடியாமல் போனது.

ரஃபேல் நடால் விம்பிள்டன் போட்டியில் இல்லாததால் பெடரர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.... எனவே ரோஜர் ஃபெடரர் உலக சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இறுதியில் ஆசிய அணிகள்

20-20' உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை,பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.தில்ஷானின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க,மேற்கிந்தியத்‌தீவுகளுக்கு எதிரான நேற்றைய அரையிறுதியில் 57 ஓட்டங்களால் இலங்கை அபார வெற்றி பெற்றது.

நேற்று நடந்த தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணிக்கு தில்ஷானின் அதிரடி காட்ட ஜெயசூர்யா அடக்கி வாசித்தார். முதல் விக்கெட்டுக்காக இந்த ஜோடி 73ஓட்டங்களைப் பெற்றது.ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தில்ஷான் அதிரடியில் மிரட்டினார்.மேற்கிந்தியத்‌தீவுகளின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த தில்ஷான் ஆட்டமிழக்காமல் 96ஓட்டங்களை விளாச, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது. 4 ஓட்டங்களால் தில்ஷான் சதம் அடிக்க செய்யமுடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றம்....

இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் வீசிய முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்த மேற்கிந்தியத்‌தீவுகள் அணிக்கு கிறிஸ் கெயிலின் ஆட்டம் மட்டுமே பாலைவனச் சோலையாகக் காட்சியளித்தது.மேற்கிந்தியத்‌தீவுகளின் துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டும் பெற்று இலங்கை சுழலில் ஆட்டம் கண்டனர். தனி ஆளாகப் போராடிய கெய்ல், 63 ஓட்டங்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மேற்கிந்தியத்‌தீவுகள் அணி 101 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட சில விடயங்கள் இந்த அரையிறுதிப் போட்டியில் நடந்தேறியது (சனத், தில்ஷான்,கெய்ல்) இந்த மூவரும்தான்அரையிறுதிப் போட்டியின் கதாநாயகர்கள்

நான் எதிர்வு கூறியது நிஜமாகியமை எனக்கும் மகிழ்ச்சிதான்........

Friday, June 19, 2009

அதிக வயதானவர் மரணம்
உலகிலே அதிக வயதானவர் என்று கருதப்பட்டடோமோஜி தனபி வெள்ளிக்கிழமை காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 113. ஜப்பானின் தென்பகுதி தீவான கியூஷு பகுதியில் உள்ள மியாகோனஜோ(Miyakonojo) நகரைச் சேர்ந்தவர் டோமோஜி தனபி (Tomoji Tanabe) 1895ஆம் ஆண்டு செப்டெம்பர் 18ஆம் திகதி பிறந்தார். இவருக்கு 111 வயதானபோது இவரை உலகிலேயே வயதானவர் என்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் பதிவு செய்தது.இவருக்கு 5 மகன்மார்,3 மகள்மார், 25 பேரன்கள், 53 கொள்ளுப் பேரன்கள், 6 எள்ளுப் பேரன்கள் உள்ளனர்.
இவர் விரும்பி சாப்பிடும் உணவுகள் சோறு,மரக்கறி வகைகள்,சூப்,பால்.மது, புகைபிடிக்கும் பழக்கம் இல்லவே இல்லையாம்.ஆனால்நன்றாக பத்திரிகை வாசிப்பாராம்.
நீங்களும் முயன்று பாருங்க அதிக காலம் வாழலாம்...........
இலங்கை vs மேற்கிந்தியத்‌தீவுகள்






'20-20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் இலங்கை, மேற்கிந்தியத்‌தீவுகள் அணிகள் மோத உள்ளன. வலுவான சுழற்பந்து வீச்சாளர்களை உள்ளடக்கிய இலங்கை அணியை சமாளிக்க மேற்கிந்தியத்‌தீவுகள் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
இலங்கை அணியைப் பொறுத்தவரை, லீக் மற்றும் "சூப்பர்-8' சுற்றுகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்துள்ளது. இதுவரை தோல்வி அடையவில்லை. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜெயசூர்யா, தில்ஷன் ஜோடி நிலைத்து நின்று ஆடினால், மேற்கிந்தியத்‌தீவுகளுக்கு சிக்கல் தான்.
மேற்கிந்தியத்‌தீவுகளின் முக்கிய பலமே தலைவர் கெய்ல் தான். இவர் வாணவேடிக்கை காட்டினால் இலங்கை அணிக்கு திண்டாட்டம் தான்.
இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் ரசிகர்கள் விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.
எனது பார்வையில் இலங்கைக்கே வெற்றி.........
இலங்கையின் வெற்றி சனத்,தில்ஷன் துடுப்பில்....

Thursday, June 18, 2009

ஸ்டீவ் வாக் பயிற்சியாளராக

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜான் புக்கானன் அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்)இரண்டாவது "20-20' தொடரில் சாதிக்கத் தவறிய கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி இறுதி இடத்தைப் பெற்றது. இதற்கு பயிற்சியாளர் ஜான் புக்கானனின் தவறான அணுகுமுறை முக்கிய காரணமாக அமைந்தது.

சுழற்சி முறையில் தலைவர் என்ற முறையை அறிமுகப்படுத்தினார் ஜான் புக்கானன் . இதன்படி தலைவர் பதவியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டு புதிய தலைவராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டார். மெக்கலம் தலைமையில் அணி தோல்வி மேல் தோல்வியை சந்திக்க உரிமையாளரான நடிகர் ஷாருக் கான் மிகுந்த அதிருப்தியடைந்தார். அணிக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் முதல் கட்டம்தான் இந்த அதிரடி முடிவு.(கிரிக்கெட் என்றால் அதிரடி இருக்கத்தானே வேண்டும்) புக்கானன் நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி. இலங்கையின் முன்னாள் பயிற்சியாளர் டேவ் வாட்மோர், அவுஸ்ரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் ஆகியோரின் பெயர் பரிசீலனையில்...பெரும்பாலும் புதிய பயிற்சியாளராக ஸ்டீவ் வாக் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.........

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்குள் அதிரடி மட்டுமல்ல பவுன்சர்களும் வீசப்படலாம்.....

பாகிஸ்தான் vs தென்னாபிரிக்கா






" 20-20" உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த தென்னாபிரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் இன்று களமிறங்குகிறது.இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடும் அணி என பலராலும் கூறப்படும் தென்னாபிரிக்கா ஆரம்பத்திலிருந்தே இத்தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அசத்தி வருகிறது. தென்னாபிரிக்கா துடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் வலுவாக திகழ்கிறது.

இத்தொடரின் ஆரம்பத்தில் கண்டுகொள்ளப்படாத அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது அரையிறுதி வரை முன்னேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர் உமர்குல், நியூசிலாந்துக்கு எதிரான சூப்பர்-8 சுற்றில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் இதுவரை 11 விக்கெட்டுகள் கைப்பற்றி வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். பாகிஸ்தானின் உண்மையான பலமாக பந்துவீச்சு உள்ளது.

தென்னாபிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஒரே ஒரு 20-20 ஓவர் சர்வதேச போட்டியில் சந்தித்து உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடந்த அந்த போட்டியில் தென்னாபிரிக்கா10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தானுக்கே அதிக வெற்றி வாய்ப்‌பு அதிகம்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போகும் அணி எது?

Tuesday, June 16, 2009

நகத்திலும் சாதனை

சாதனைகள் நாள் தோறும் புதிப்பிக்கப்படும்.இந்தப் பெண்ணின் சாதனை கொஞ்சம் கடினமானது.என்ன யோசனை படத்தை பாருங்கள் நகத்தின் நீளத்தை...................
இந்த சாதனையை நிலைநாட்ட இவர் தன் வாழ்நாள் முழுவதையும் சாதனைக்காக அர்ப்பணித்துள்ளார்.........


உங்களால் முடியுமா? முயன்று பாருங்கள்..
அரையிறுதியில் இலங்கை "20-20" உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு சங்கக்கரா தலைமையிலான இலங்கை அணி முன்னேறியது. இதனால் நியூஸிலாந்தின் அரையிறுதிக் கனவு தகர்ந்தது.
முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் சனத் ஓட்டம் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டம் இழந்தார்.அதன் பின் மகேல,தில்ஷான்,சங்கக்கரா ஆகியோரது பங்களிப்பில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைக் குவித்தது.159 ஓட்டங்களைப் பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 17 ஓவர்களில் 110ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.
"20-20" உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிப் போட்டிகளில் பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை,மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதப்போகின்றன.
விறுவிறுப்பாக நகருமா "20-20" அரையிறுதிப் போட்டிகள்?

Monday, June 15, 2009

நான்காவது .....




20-20' உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளாக தென்னாபிரிக்கா,பாகிஸ்தான், மேற்கிந்தியத்‌தீவுகள் உள்ளன.சொந்த நாட்டு ஆடுகளங்களில் இங்கிலாந்து அணியால் அதிகம் சாதிக்க முடியவில்லை. "சூப்பர்-8' சுற்றுப் போட்டியில் மேற்கிந்தியத்‌தீவுகள் அணியிடம் தோல்வி கண்டது.இந்த நிலையில் இலங்கை,நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் வெற்றி பெறும் அணி 4ஆவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அதிரடியும் அதிஷ்டமும் இணைந்தால் வெற்றி கிடைக்கும்.....

Sunday, June 14, 2009

இந்தியாவுக்கு மரண அடி

இங்கிலாந்தில் நடக்கும் 20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சூப்பர்-8 போட்டியில் இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியன் இந்திய அணியை மண் கவ்வ வைத்தது.இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா.முக்கியமான "சூப்பர்-8' போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 3 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இந்தியா இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விசனத்தை உருவாக்கி உள்ளது.

நடப்பு சாம்பியன் இந்தியா இம்முறை இறுதிப்போட்டிக்கு செல்லும் என எதிர்பார்த்த பலர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ம்...ம்....ம்... இந்திய இந்திய அணியே கதி கலங்கி நிற்கிறது.

தோனிக்கு கஷ்ட காலம் தொடங்கிவிட்டது.இந்திய வீரர்கள் தனி தனியாகத்தான் நாட்டுக்கு போக வேண்டிய நிலை வரும்போல இருக்கு. விரிவான தகவல்களோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்...........

Thursday, June 11, 2009

வசூல் ராஜா

இங்கிலாந்து கால்பந்தாட்ட கழகமான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடும் போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை தங்கள் அணிக்கு கொடுத்து விடுமாறு கோரி ஐரோப்பிய கால்பந்தாட்ட கழகமான ரியால் மேட்ரிட் மிகப் பெரும் பணத் தொகையை கொடுக்கவுள்ளது.

கால்பந்தாட்ட உலகில் மிகப்பெரிய வீரராக கருதப்படும், மான்செஸ்டர் யுனைடெட் சாதனை வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவை 80 மில்லியன் பவுண்டுகள் தொகை கொடுத்து வாங்க ரியால் மேட்ரிட் முடிவு செய்துள்ளது.ரொனால்டோ கடந்த 2003ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ரொனால்டோவை தற்போது 80 மில்லியன் பவுண்டுகள் தொகைக்கு விற்கப் போவது மான்செஸ்டர் அணி தான். இதனால் அவர்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்.

சாதனை தொகைக்கு விலை போகும் ரொனால்டோ சாதிப்பாரா

Sunday, June 7, 2009

நிறைவேறிய கனவு
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரெஞ்ச்பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறி ஸ்பெயின் வீரர் நடாலிடம் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை தவறவிட்ட பெடரர் இம்முறை நடால் வெளியேறிவிட்ட நிலையில் முதன் முறையாக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஸ்வீடன் வீரர் ராபின் சோடர்லிங்கை 6-1, 7-6, 6-4 என தோற்கடித்தார் பெடரர்.(பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி ஆரம்பிக்கும்போது ரோஜர் பெடரருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என பதிவில் குறிப்பிடிருந்தேன் அது நிஜமானதில் எனக்கும் கொஞ்சம் மகிழ்ச்சி) கிராண்ட்ஸ்லாம் போட்டிங்கள் அனைத்திலும் பட்டம் வென்றுள்ள ஃபெடரருக்கு, பிரெஞ்ச்பகிரங்க பட்டம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்தது. தற்போது அதுவும் நிறைவேறியுள்ளது. அவருக்கு இது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் அமெரிக்க வீரர் பீட் சாம்ப்ராஸின் 14 கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனையை சமன் செய்துள்ளார்.
சாதனை வீரனுக்கு வாழ்த்துக்கள்....சாதனைகள் தொடரட்டும்......

Saturday, June 6, 2009

குஸ்னெட்சோவா சம்பியன்
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனை தினாரா சஃபீனாவை, சக ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா 6- 4, 6- 2 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று சம்பியன் பட்டதை சுவீகரித்தார். இதன் மூலம் சஃபீனாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டக் கனவு தக்ர்ந்தது.மிகவும் கவலையுடன் காணப்படார் சஃபீனா.குஸ்னெட்சோவா வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது.
"இறுதிவரை முன்னேறி சாதித்த ரஷ்ய தோழிகளுக்கு வாழ்த்துக்கள்"

Friday, June 5, 2009

எடை 7.5 கி.கி
இங்கிலாந்தில் இன்றுஆரம்பமாகும் இரண்டாவது "20-20' உலகக் கிண்ணத்தொடரில்,சம்பியன் பட்டம் வெல்லப்போகும் அணி 7.5 கி.கி எடையுள்ள உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கப் போகிறது.இது 51 செ.மீ., நீளம் உடையது. இதன் மேற்பகுதி 19 செ.மீ., அகலமும், அடிப்பகுதி 14 செ.மீ., அகலமும் கொண்டது. பிளாட்டினம் மற்றும் வெள்ளியால் உருவான இந்த கிண்ணத்தை அவுஸ்ரேலியா தயாரித்துள்ளது. கடந்த 2007ஆ ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடந்த முதல் உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் உலகக் கிண்ணம் 12.5 கி.கி எடை கொண்டதாக உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
7.5 கி.கிராமை தூக்கப் போகும் தலைவன் யார்?
20-20 ஆரம்பம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட"20-20' உலகக் கிண்ண அதிரடித் தொடர் இன்று இங்கிலாந்தில் அமர்க்களமாக ஆரம்பமாகிறது. விண்ணைத் தொடும் சிக்சர்கள், எல்லையைக் கடக்கும் பவுண்டரிகள், "திரில்' வெற்றிகளை மீண்டும் ரசிக்க ரசிகர்கள் தயார். இன்று முதல் 17 நாட்களுக்கு "சூப்பர்' விருந்து.

2ஆவது "20-20' உலகக் கிண்ண தொடரில் மொத்தம் 12 அணிகள் மோத உள்ளன. இந்தியா,அவுஸ்ரேலியா,இலங்கை, தென்னாபிரிக்கா,மேற்கிந்தியத்‌தீவுகள்,பங்களாதேஷ்,இங்கிலாந்து, நியூசிலாந்து,பாகிஸ்தான் ஆகிய 9 அணிகள் நேரடியாக தொடருக்கு தகுதி பெற்று விட்டன. கடந்த 2008 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளும் இத்தொடருக்கு தேர்வாயின. ஜிம்பாப்வே உலககோப்பை தொடரிலிருந்து தாமாகவே விலகிக் கொண்டது. இதனால் தகுதி சுற்றில் மூன்றாவது இடம் பெற்ற ஸ்கொட்லாந்துக்கு அதிர்ஷ்டம் அடித்தது. மொத்தம் உள்ள 12 அணிகள் "ஏ', "பி' "சி' "டி' என நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இடம் பெற்ற மற்ற இரண்டு அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடத்தில் வரும் அணிகள், "சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும்.அதன் பின் இந்த அணிகள் தமது பிரிவில் இடம் பெற்ற மற்ற 3 அணிகளுடன் தலா ஒரு முறை போதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் வரும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில், வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் சந்திக்கும்.

இம்முறை இந்தியா,அவுஸ்ரேலியா,இலங்கை, தென்னாபிரிக்கா,மேற்கிந்தியத்‌தீவுகள்,இங்கிலாந்து, நியூசிலாந்து,பாகிஸ்தான் அணிகள் பலத்துடன் களமிறங்கினாலும் பங்களாதேஷ், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து அணிகள் அதிர்ச்சி கொடுக்க காத்திருக்கின்றன. "20-20' போட்டிகளை பொறுத்த வரை எதுவும் நடக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட 120 பந்துகளில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தாலே போதும்.

ஆனைக்கும் அடி சறுக்கும்..... இது கிரிக்கெட்டில் அடிக்கடி நிகழும்.....

கங்குலி வழியில் கும்ப்ளே
கங்குலியை தொடர்ந்து அவர் வழியில் சுழல் நாயகன் கும்ப்ளே தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார். இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வர்ணனையாளர்கள் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் கும்ப்ளே.
பல முன்னணி துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கும்ப்ளே, தனது வர்ணனை மூலம் தற்போது விளையாடும் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வாரா
ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்!
திரைப் படங்களில் மரணித்தவர் போல் நடித்த ஹாலிவுட் நடிகர் டேவிட் கேரடின் நிஜமாகவே மரணித்து விட்டார்.ஆனால் மர்ம மரணம்!
எழுபதுகளில் வெளியான குங்பூ என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான கேரடின், பின்னர் ஏராளமான படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியாகி வசூலில் பெரும் வெற்றி பெற்ற 'கில்பில்' என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இரு பாகங்களிலும் நடித்துள்ளார். இவரது பெயர் நான்கு முறை கோல்டன் குளோப் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது.
இவரது உடல் இன்று அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கண்டெடுத்துள்ளனர்.
இது கொலையா, தற்கொலையா....மர்மமான மரணம்!

Thursday, June 4, 2009

மதுவால் தடுமாறும்' சைமண்ட்ஸ்'
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அணியிலிருந்து நீக்கப்பட்டும், மீண்டும் தேர்வு செய்யப்பட்டும் வரும்அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கடந்த இரண்டு நாட்களில் அணியின் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இதனால் அவர் 20-20 உலகக்க் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமல்லாது கிரிக்கெட் அவுஸ்ரேலிய ஒப்பந்தத்தையும் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கை வசை பாடி, பின்பு குற்றச்சாட்டை ஹர்பஜன் மீது திருப்பி விட்டமை, நியூஸிலாந்து விக்கெட் கீப்பர் பிரெண்டன் மெக்கல்லம் குறித்து குடிபோதையில் தரக் குறைவாக பேசியது உட்பட, அணிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் குடித்து விட்டு மீன் பிடிக்கச் சென்றது என இப்படி பல பல.... அவுஸ்ரேலிய அணியின் சிறந்த சகலதுறை வீரரான இவர் குழப்படியிலும் கில்லாடிதான்....இனி இவரது கிரிக்கெட் எதிர்காலம் கேள்விக்குறிதான்.................
கங்குலியின் 2ஆம் இன்னிங்ஸ்

இந்தியாவின் சிறந்த அணித் தலைவரான சௌரவ் கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய இன்னிங்ஸை ஆரம்பிக்கிறார். ஐ.சி.சி.20- 20 உலகக் கோப்பை போட்டிகளின் போது அரையிறுதி ஆட்டம் முதல் கங்குலியின் வர்ணனையை நாம் ஈ.எஸ்.பி.என்.-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கேட்கலாம்.
இது குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள கங்குலி, "இது நாள் வரை மற்ற வர்ணனையாளர்கள் என்னைப்பற்றி பேசி வந்தனர், தற்போது எனது முன்னாள் சக வீரர்களை பேட்டி எடுக்கும் வாய்ப்பை எதிர் நோக்கி எனது முன்னாள் சக வீரர்களுடன் கைகுலுக்கும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
ஒரு வீரராக,தலைவராக இருந்து சாதித்த கங்குலி கிரிக்கெட் வர்ணனையாளராக சாதிப்பாரா? காலம் பதில் சொல்லும்....
பாடும் நிலாவுக்கு இன்று பிறந்தநாள்

நிலாவை விரும்பாதவர்கள் எவரும் இந்த உலகில் இல்லை. அதேபோல் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடலை விரும்பாதவர்கள் எவருமே இந்த உலகில் இல்லை. மொழி, இனம், மதம், பேதம் எல்லாவற்றையும் கடந்து பாலுவின் பாடல்கள் அனைவராலும் விமொழிகளிலும்ரும்பி ரசிக்கப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பாடல் பாடிய பெருமை எஸ்.பி.பிக்கு உண்டு.

ஏழு ஸ்வரங்களில் எவ்வளவு பாடல்களை வேண்டுமானலும் உருவாக்க முடியும். ஆனால் ஏழு ஜென்மங்கள் எடுத்தாலும் எஸ்.பி.பியின் குரல் இனிமைக்கு ஈடாக ஒரு குரல் இருக்குமா என்று ரசிகர்கள் வியக்கும் வண்ணம், திக்கெட்டும் எஸ்.பி.பியின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எஸ்.பி.பி தமிழில் முதலில் பாடிய பாடல் "இயற்கையென்னும் இளைய கன்னி" என்ற டூயட். இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல். ஆனால் எஸ்.பி.பியை , தமிழ்த் திரையிசையில் உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாடல் ஆயிரம் நிலவே வா என்று அடிமை பெண்ணில் ஒலித்த பாடல்தான். இந்தப் பாடலை எஸ்.பி.பி பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இந்தப் பாடல் அவருக்குப் புகழை ஈட்டிக் கொடுத்தது.

எஸ்.பி.பி ஒரே பார்வையில்

01) முழுப்பெயர்: ஸ்ரீபதி பண்டித ரதயுல பாலசுப்பிரமணியம்

02) பிறந்த திகதி: 1946 ஜூன் 4

03) பாடிய மொழிகள்: தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பெங்காளி,இந்தி, ஒரியா மற்றும் துளு

04) சாதனைகள்: 40 ஆண்டுகளில் 36,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி உலக சாதனை, 12 மணி நேரத்தில் 17 பாடல்களை பாடியமை

26 வினாடிகளில் மூச்சுவிடாமல் பாடலின் சரணத்தை பாடியமை

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 55 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்

6 முறை தேசிய விருது பெற்றமை

05) தேசிய விருது: 1. 1979 - சங்கராபரணம்
2. 1981 - ஏக் துஜே கே லிய
3. 1983 - சாகர சங்கமம
4. 1989 - ருத்ர வீண
5. 1995 - கானசாகர கானயோகி பஞ்சாக்ஷ்ராகவாய
6. 1996 - மின்சாரக் கனவு

இவை மட்டுமா.......இன்னும் பல........... இசைத் துறையில் தன் கொடியைப் பறக்கவிட்ட எஸ்.பி.பி. திரையில் நடிகராகி தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 68 படங்கள் நடித்துள்ளார். தன்னுடைய முன்னோடியாக கருதும் -திரு. கண்டசாலாவிற்கு, 1990 ஆண்டு, ஹைதராபாத்தில் சிலை ஒன்றை திறந்து வைத்தார்.நவீன கருவிகளை நிறுவி எஸ்.பி.பி. ரிக்கார்டிங் தியேட்டர்கட்டி, அதற்கு தன் சினிமாவுலக குருவான கோதண்டபாணியின் பெயரைச் சூட்டினார்.

63 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் எஸ்.பி.பிக்கு இனிய வாழ்த்துக்கள்....

Wednesday, June 3, 2009

பாடும் நிலாவுக்கு இனிய வாழ்த்துக்கள்
பல இனியஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்துள்ள எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. அடுத்த பதிவில் எஸ்.பி.பி திரையிசைப் பயணம் ...........

Tuesday, June 2, 2009

"இசை ராஜாவுக்கு அகவை 66! தமிழ்த் திரையிசைத் துறையின் இசையாகவே வாழ்ந்து கொண்டு இருப்பவர் இசைஞானி இளையராஜா. இசை உலகில் ராஜாங்கம் நடத்தும் இளையராஜாவுக்கு இன்று 66ஆவது பிறந்தநாள்!
இந்தியாவின் தேனி மாவட்டம் பண்ணப்புரத்தில் பிறந்த இசைஞானியின் இயற்பெயர் ஞானதேசிகன் என்ற ராசையா. ஜூன் மாதம் 2ஆம் திகதி 1943 ஆம் ஆண்டு பிறந்தார்.இளம் வயதிலேயே ஆர்மோனியத்தை வாழ்க்கைத் துணையாக ஏற்று,இன்றுவரை இசையை ஒரு தவமாகக் கருதி, அந்த இசை உலகிலேயே வாழ்ந்து வருகிறார் ராஜா.
இளையராஜாவின் இசையில் வெளிவந்த முதல் படம் அன்னக்கிளி.
பல்வேறு மொழி படங்களிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது.
பல பாடகர்களை, பாடலாசிரியர்களை, கலைஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்கு மட்டுமே உண்டு.
கிராமத்து மண் வாசனையை திரையிசையில் வீசச் செய்தார் இளையராஜா.
மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் இசைஞானி.
1) 1985இல் - சாகர சங்கமம் - தெலுங்கு
2) 1987இல் - சிந்து பைரவி - தமிழ்
3) 1989இல் - ருத்ர வீணை - தெலுங்கு
இவருக்கு மட்டும் தேசிய விருதுகள் கிடைக்கவில்லை. இவர் அறிமுகப்படுத்திய பல பாடக பாடகிகளும் தேசிய விருதுகளைப் பல்வேறு காலகட்டத்தில் பெற்றுள்ளனர்.
சர்வதேச அளவில் சிம்பனி இசைக் கோர்வைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரே இந்திய இசைமேதை இளையராஜாதான். இது மட்டுமா....இல்லை....
மணிவாசகர் தந்த திருவாசகத்திற்கு இசை கொடுத்து உயிர் கொடுத்த இசை மேதை இவர். இசையமைப்புடன் மட்டும் நின்றுவிடவில்லை ராஜா............
இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் ஆவார். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி. இது மட்டுமா பல கவிதைப் புத்தகங்களையும் தந்துள்ளார். பல இசைத் தொகுப்புக்களையும் தந்துள்ளார். இப்படி இளையராஜாவின் சாதனைகளை பதிவிட பல பதிவுகள் தேவை.
'இசைக்கு இன்னொரு பெயர் இளையராஜா'
" இசை ராஜாவுக்கு இனிய வாழ்த்துக்கள்"
'இன்னும் தேவை உங்கள் இசை இது எங்கள் ஆசை'

Monday, June 1, 2009

இசை ராஜாக்கு பிறந்த நாள்





தமிழ் திரை உலகில் இசை அவதாரமாக உதித்த இளையராஜாவுக்கு நாளை பிறந்த நாள்.பல ஆயிரக் கணக்கான பாடல்களை தந்து இசை ரசிகர்களை மகிழ்விக்கும் இளையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த பதிவில் இளையராஜாவின் சாதனைகள்...... நாளை......
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates