Pages

Thursday, September 20, 2012

                                          
                                      T20 திருவிழா

 20 - 20 போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது அதுவும் உலகக் கிண்ணப் போட்டிகள் என்றால் இன்னும் விறுவிறுப்பாய்  இருக்கும்.நான்காவது  T20 உலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டிகள்  இம்மாதம் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் 7ஆம் திகதி  வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன.முதன்முறையாய் ஆசிய நாடொன்றில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் என்ற பெருமை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்குண்டு.அந்தப் பெருமை நம் நாட்டிற்குக் கிடைத்தமை இலங்கை ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியே.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற்தடவை.முதன் முறையாய் இலங்கையில் அனைத்துப் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.அதுவும் ஆடவர்,மகளிர் T20 உலகக்கிண்ண    போட்டிகள் ஒரே நாட்டில் நடைபெறுவது இன்னும் சிறப்பு.


 2007ஆம் ஆண்டு,T20 உலக உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது T20 உலகக்கிண்ணத்தை,பாகிஸ்தானைத் தோற்கடித்து வென்றது.2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2ஆவது T20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து பாகிஸ்தானும்,2010ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த 3ஆவது உலகக்கிண்ண போட்டியில்  அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்தும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றின.


இம்முறை போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு  அணிகள்
A        இந்தியா,இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான்.
B       அவுஸ்திரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,அயர்லாந்து.
C       இலங்கை,தென்னாபிரிக்கா, சிம்பாபே.
D     பாகிஸ்தான், நியூசிலாந்து,பங்களாதேஷ்.

குழு நிலைப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

 இலங்கை
மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் புதுமுக வீரர்களாக 19 வயது சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய,ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் SLPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்,உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உபாதை காரணமாக கடந்த 7 மாதமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிசும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவுடனான ஒருநாள் தொடரின்போது காயமடைந்த சங்ககாரா,நுவன் குலசேகர ஆகியோர் உடற் தகுதியோடு மீண்டும் அணியில் இடம்பெறுவது இலங்கைக்கு பலமே.திசர பெரேரா,அஞ்சலோ மத்தியுஸ்,ஜீவன் மென்டிஸ் ஆகிய சகலதுறை வீரர்கள் எதிரணிக்கு சவால் விடுவார்கள்.வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்க எதிரணியை நிலை குலைய வைத்தால் குறைவான ஓட்டங்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.ஆனால் அண்மைக் காலமாக இவரது பந்து வீச்சு ஓவரில் எதிரணி அதிக ஓட்டங்களைக் குவிக்கிறது.லஹிரு திரிமானே  தினேஷ் சந்திமால் ஆகியோர் மத்திய வரிசையில் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.டில்ஷான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக  களமிறங்கி அதிரடியாய் ஓட்டங்களைப் பெற வேண்டும்.சொந்த நாட்டில் அதிகம் பரீட்சயமான மைதானங்களில் விளையாடுவதால் அதிகம் சாதிக்கலாம்.   

 பாகிஸ்தான்
T20  உலகக்கிண்ண பாகிஸ்தான் அணி  திறமை வாய்ந்தது.இம்ரான் நசிர்,அப்துல் ரசாக் கம்ரன் -உமர் அக்மல் சகோதரர்கள் ஆகியோர் ஆட்டத்தின் தன்மையை மாற்றக் கூடியவர்கள்.அணித் தலைவர் முஹட் ஹபீசின் சகலதுறை ஆட்டம் அணிக்கு திருப்புமுனையாக இருக்கும்.அஃப்ரீடியின் ஆட்டம் சூடு பிடித்தால் எதிரணியின் நிலைமை கவலைக்கிடம்.சரிவை எதிர்நோக்கும் அணியை மீட்டு,வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை படைத்தவர்அப்துல் ரசாக்.வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல்,சொஹைல் தன்வீர்,அப்துல் ரசாக்,சுழற்பந்து வீச்சாளர்கள் அஃப்ரீடி,அஜ்மல்,என்று தரமான பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எதிரணிக்கு சிக்கல் இருக்கும்.மனம் வைத்து விளையாடினால் பாகிஸ்தான் அதிகம் சாதிக்கலாம்.
  நியூசிலாந்து
ரோஸ் ரெய்லர்  தலைமையில் நியூசிலாந்து களமிறங்குகிறது.அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கலமும்,ரோஸ் ரெய்லரும் அணியின் பலங்கள்.சகலதுறை வீரர்களான,ஜேகப் ஓரம்,ஜேம்ஸ் பிராங்ளின் ஆகியோரின் சகலதுறை ஆட்டமும் கைல் மில்ஸ்,டிம் சௌதி ஆகியோரின் வேகமும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.அனுபவ வீரரான வெட்டோரியின் சுழற்பந்தில் அதிக விக்கெட்டுகள் வீழுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.மார்டின் கப்தில்,வில்லியம்ஸன் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து விளையாடினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் அணியாக மாறும் நியூசிலாந்து.

மேற்கிந்தியத்தீவுகள்
டரன் சமியின் தலைமைத்துவத்தில் இறுதிவரை முன்னேறும் அணியாக எதிர்பார்க்கப்படுகிறது.அதிரடி மன்னன் கிரிஸ் கெய்ல்,இம்முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்.இவரது அதிரடியை நினைத்தே இப்போதே பல அணிகள் கலங்கிப் போயுள்ளன.கெய்ரன் போலார்ட்,டுவைன் ஸ்மித்,மார்லன் சாமுவெல்ஸ்,டரன் பிராவோ,ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் சகலதுறை ஆட்டம்அணிக்கு முக்கிய பலம்.சுனில் நரைனின் சுழல் பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைக்கும் என்றே தோன்றுகிறது.சகலதுறை வீரர்கள் பலர் அணியில் இருப்பதால் இந்த அணி அரை இறுதி வரை முன்னேறும்.  
 
  தென்னாபிரிக்கா
அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வீரர்களிலொருவர் ஹஷிம் அம்லா.அண்மைக்காலமாக டெஸ்ட்,ஒருநாள்,T20 கிரிக்கெட்டில் அபார திறமையை வெளிக்காட்டி வருகிறார்.அணியின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் இன்னொருவர் ஜாக் கலிஸ்.இவரது அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டம் அணிக்குப் பலம் சேர்க்கும்.பந்துவீச்சிலும் இவர் கில்லாடி.
துடுப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஏ.பி.டீ.விலியர்ஸ்,டுமினி,ரிச்சர்ட் லீவி ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள்.இது அணிக்குக் கூடுதல் பலம்.வேகப்பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கெல்,சொட்சொபே,வெய்ன் பார்னல் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைப்பர்.சுழலில் ஜோஹன் போத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவாரென்றே எதிர்பார்க்கலாம்.சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத்தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.

  இந்தியா
இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்.இந்திய அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் ஷேவாக்,கம்பிர்,விராத் ஹோலி,டோனி  இருப்பதால் அதிகம் சாதிக்கலாம்.புற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ள யுவராஜின் வருகை இந்தியாவுக்கு மேலதிக பலமே.மிகுந்த உற்சாகத்தோடு அதே அதிரடியை யுவராஜிடம் காண முடிகிறது.ரெய்னாவின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்.இதைவிட இர்பான் பத்தான் இலங்கை ஆடுகளங்களில் அதிகம் சாதிக்கக் கூடிய வீரர்.இர்பான் பத்தான்,மனோஜ் திவாரி போன்ற சகலதுறை வீரர்களின் பங்களிப்பு சிறப்பாய் இருந்தால் அணி முன்னோக்கி செல்வது இலகு.வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீர் கான்,லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோர் இலங்கை ஆடுகளங்களில் திறமையை நீருபிப்பர்.ஹர்பஜன் சிங் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு வந்தாலும் அஷ்வினை டோனி அதிகம் நம்பியுள்ளதால் இறுதி அணியில் ஹர்பஜன் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்பது கேள்விக்குறியே.


  இங்கிலாந்து
இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் ப்ரோட் தலைமையில் களமிறங்குகின்றது.அதிரடி வீரரான கெவின் பீட்டர்சன் அணியிலில்லை.கடந்த 2010ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை  இங்கிலாந்து கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர்சன்.தொடர்நாயகன் விருதும் பெற்றிருந்தார்.இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவரான ஸ்ட்ராசை விமர்சித்து,தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் சர்ச்சையால் தேர்வுக்குழுவினர் உலகக்கிண்ண அணியில் பீட்டர்சனை சேர்க்கவில்லை.கடந்த முறை இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை  வென்றபோது,அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் தற்போதைய அணியிலும் உள்ளனர்.எனினும் T20  போட்டிகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆணிவேராக விளங்கிவந்த பீட்டர்சன் உலகக்கிண்ண அணியில் இல்லாமை அந்த அணியின் வெற்றியைப் பாதிக்கலாம்.பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் சுழல் இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும்.டிம் பிரெஸ்னன்,ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசத்துவர்.அது மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்ப்பார்கள்.லூக் ரைட்,கிரேக் கீஸ் வெட்டர்,ரவி போபார,மோர்கன் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்கள் துடுப்பாட்டத்தில் சாதிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

 அவுஸ்ரேலியா
இம்முறை அவுஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரரான ஜோர்ஜ்  பெய்லி தலைமையில் களமிறங்குகின்றது.அண்மைக் கால தோல்விகளால் தரவரிசையிலும் பின் நோக்கி நகர்ந்துள்ள அவுஸ்திரேலிய அணியில் அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெமரூன் வைட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.டானியல் கிரிஸ்டியன்,மைக்கல் - டேவிட் ஹசி சகோதரர்களின்  பொறுப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கியம்.டேவிட் வோர்னர்,ஷேன் வாட்சன் ஆகியோரின் அதிரடியை அதிகம் நம்பியுள்ளது அவுஸ்திரேலியா.இவர்களது இணைப்பாட்டத்தை எதிரணி விரைவாக தகர்த்தால் எதிரணியின் வெற்றி வாய்ப்பு சுலபமாகும். 41வயதுடைய பிரட் ஹொக் அணியில் இருப்பது அணிக்கு சாதகமே.இளம்,அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியிலிருப்பது ஆரோக்கியமாக இருக்கும்.


பங்களாதேஷ்
முஷ்பிகுர் ரகீம் தலைமையில் களமிறங்கும் பங்களாதேஷ்,அதிக அனுபவமில்லாத அணியென்று சொல்லப்பட்டாலும் அதிரடியாய் விளையாடும்.இந்த அணியில் துடுப்பாட்டத்தில் அதிகம் சாதிக்கத் தவறும் அஷ்ரபுல் இன்னும் அணிக்குள் இருப்பது மாயமே.அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி தொடர்ந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் அதிகரிக்கும்.ஷாகிப் அல் ஹசன் சகல துறை வீரராக சாதிப்பார்.அதிரடியாய் ஆடக் கூடிய பல வீரர்கள் இருந்தாலும் இவர்கள் அவசரப்படாமல் நிதானமாய் விளையாடினால் எதிரணிக்கு சிக்கலைக் கொடுக்கலாம்.

சிம்பாபே
சிம்பாப்வே அணி பிரெண்டன் ரெய்லர் தலைமையில் களம் காண்கிறது.எல்டன் சிக்கும்புரா,ஹமில்டன் மசகட்சா,பிரெண்டன் ரெய்லர் போன்ற வீரர்கள் துடுபாட்டத்தில் அணிக்குப் பலமாய் இருப்பர்.உட்செயா,ரேய் ப்ரைஸ்,மற்றும் ஏனைய வீரர்களின் பங்களிப்புடன் விக்கெட் வேட்டை தொடரும்.முதல் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பலர் விளையாடுவதால் அழுத்தங்கள் அதிகம்.அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும்.

அயர்லாந்து
வில்லியம் போர்ட்டர் பீல்ட் தலைமையில் களம் காணும் அணி அயர்லாந்து.எட் ஜோய்ஸ்,கெவின் ஒ பிரைன்,ரங்கின்,ட்ரென்ட் ஜோன்ஸ்டன் ஆகியோர் அனுபவ வீரர்கள்.இந்த அணி பலம் பொருந்திய அணிகளுக்கு சவால் விடும் அணியாக மாறும் என்றே தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தான்

நவ்ரொஸ் மங்கல் தலைமையிலான  ஆப்கானிஸ்தானில் அதிகம் அறிமுகமில்லாத வீரர்கள் உள்ளனர்.இந்த உலகக் கிண்ணத் தொடர்தான் மூன்று வீரர்களுக்கு அறிமுகப் போட்டிகளாக அமையவுள்ளது.இவர்கள் சாதிப்பார்களா என்பதே கேள்விக்குறி.பயிற்சிப் போட்டியில் இலங்கை A அணியைத் தோற்கடித்துள்ளது.ஓட்டங்களை வேகமாகக் குவிக்க முனைப்புக் காட்டும் வீரர்களின் தன்னம்பிக்கை சிறப்பானதே. 

 இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் பெரும்பாலும் இந்தியா,இங்கிலாந்து அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,இலங்கை,தென்னாபிரிக்கா,பாகிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து,சிம்பாபே, பங்களாதேஷ் அணிகள் T20 போட்டிகளில் அனுபவம் குறைந்த அணிகளாகத் தென்பட்டாலும் அண்மைக் கால இவர்களது பயிற்சிகள் எதிரணிகளுக்கு கடும் சவாலைக் கொடுக்கும் என்றே தோன்றுகிறது.
பன்னிரண்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப்போகிறது.கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.பல அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் இம்முறையும் அரங்கேறும்.


 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates