ஜஸ்டின் ஹெனின்
சர்வதேச டென்னிஸ் அரங்கில் முதல் நிலை வீராங்கனையாக இருந்தபோது திடீரென கடந்த 2008, மே மாதம் ஓய்வை அறிவித்து டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனின்.சுமார் 20 மாதங்களுக்குப் பின் மீண்டும் (ஜன. 2010) டென்னிஸ் அரங்கில் காலடி வைத்து, தனது மீள் வருகையை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளார்.
7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஹெனின். பிரெஞ்ச் பகிரங்கப் போட்டியில் மட்டும் 4 முறை (2003, 2005, 2006, 2007)சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். அவுஸ்ரேலிய பகிரங்கப் போட்டியில் 1 தடவையும் (2004), அமெரிக்க பகிரங்க போட்டியில் 2 தடவையும் (2003, 2007) பட்டம் வென்றுள்ளார். புகழின் உச்சத்தில் இருந்தபோதே இவர், திடீரென ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் ஓய்வு பெற்ற சகவீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் டென்னிஸ் அரங்கில் மீண்டும் காலடி வைத்து அமெரிக்க பகிரங்க பட்டம் வென்றார். இது ஹெனின் மனதிலும் டென்னிஸ் ஆர்வத்தை மீண்டும் ஏற்படுத்த, இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் மீண்டும் களம் புகுந்தார். வந்த வேகத்திலே சமீபத்தில் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சக வீராங்கனை கிளைஸ்டர்சிடம் தோல்வியடைந்தாலும் அவுஸ்ரேலிய பகிரங்க தொடரை வெற்றியுடன்ஆரம்பித்து இறுதி வரை முன்னேறினார். 3ஆவது முறையாக (2004, 2006, 2010) இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான செரினா வில்லியம்ஸ்(அமெரிக்கா), பெல்ஜியத்தின் ஜஸ்டின் ஹெனினை ஹார்டீனை எதிர்கொண்டார்.ஆரம்பமுதலே தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த செரினா வில்லியம்ஸ்,முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட ஹெனின், இரண்டாவது செட்டை 6-3 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செரினா 6-2 என கைப்பற்றினார்.
பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் ஹெனினை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் செரினா. இதன் மூலம் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் செரினா ஐந்தாவது முறையாக (2003,2005, 2007,2009, 2010)சாம்பியனானார்.
இது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் போட்டிகளில் இவரது 12ஆவது பட்டம். (அவுஸ்ரேலிய -5, பிரெஞ்ச் -1, விம்பிள்டன்-3,அமெரிக்க- 3) இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில்,சக நாட்டு வீராங்கனை பில்லி ஜீன் கிங்குடன் (12 பட்டம்) இணைந்து 6ஆவது இடத்தைப் பிடித்ததுடன், பில்லி ஜீன் கிங்கின் 35 ஆண்டுகள் சாதனையை, செரீனா சமப்படுத்தியுள்ளார்.
சீன வீராங்கனைகள் அசத்தல்
அவுஸ்ரேலிய பகிரங்க கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு சீன வீராங்கனைகள் (லி-னா,ஷெங்-ஜி ) முன்னேறியது இதுவே முதல் முறை.ஆனாலும் , இருவருமே அரையிறுதிச் சுற்றில் வெளியேறியதால் சீன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆண்கள் ஒற்றையர்
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்,உலகின் முதல் நிலை வீரரான ரொஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), இங்கிலாந்தின் அன்டி முரேயை (Andy Murray) சந்தித்தார். விறுவிறுப்பான போட்டியில் முதலிரண்டு செட்டை பெடரர் 6-3, 6-4 என கைப்பற்றினார். மூன்றாவது செட்டை கைப்பற்ற இருவரும் முனைந்தனர். இருப்பினும் பெடரர், மூன்றாவது செட்டை 7-6 என, தன் வசப்படுத்தி, 6-3, 6-4, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று,அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் நான்காவது பட்டத்தை (2004, 2006, 2007, 2010) வென்றார்.
74 ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் பட்டம் பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெறுவதற்காக, போட்டியின் ஆரம்பமுதலே அன்டி முரே கடுமையாகப் போராடினார்.எனினும் அனுபவ வீரரான பெடரரின் ஆதிக்கத்தை முறியடிக்க முடியவில்லை.
அன்டி முரே , பெடரர் இருவரும் இதுவரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர் . இதில் அன்டி முரே 6 முறையும் பெடரர் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் அன்டி முரேயை வீழ்த்தியே பெடரர் பட்டத்தை வென்றார்.
2008ஆம் ஆண்டு அரையிறுதிலும், 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டியிலும் வெற்றியை இழந்த பெடரர், இம்முறை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார்.
இது ஒற்றையர் பிரிவில் பெடரரின் 16ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதனடிப்படையில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் தொடர்ந்து சாதனை வீரனாக தொடர்கிறார் பெடரர். இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் (அவுஸ்ரேலிய-4, பிரெஞ்ச் -1, விம்பிள்டன்-6, அமெரிக்க -5) சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் (அவுஸ்ரேலிய- 5, பிரெஞ்ச் -4, விம்பிள்டன்-7,அமெரிக்க -6) தொடர்களில் 22 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ள பெடரர், தொடர்ந்து 8 ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடர்களின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதோடு ,22 கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிகளில், 16 முறை சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.
மகளிர் இரட்டையர்
மகளிர்இரட்டையர் இறுதிப் போட்டியில், தர வரிசையில் இரண்டாமிடத்திலுள்ள அமெரிக்காவின் செரினா -வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் ஜோடி, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்திலுள்ள சிம்பாப்வேயின் காராபிளாக், அமெரிக்காவின் லீஷெல் ஹியுபர் ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் 11 முறை இரட்டையர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளனர் வில்லியம்ஸ் ஜோடி.
ஆண்கள் இரட்டையர்
ஆண்கள்இரட்டையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் பாப், மைக் பிரையன் ஜோடி, கனடாவின் டானியல் நெஸ்டர், செர்பியாவின் நெனாட் சிமோன்ஜிக் ஜோடியை 6-3, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, நான்காவது முறையாக (2006-07, 2009-2010) சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவு
கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, ரஷ்யாவின் காத்ரீனா மக்ரோவா , செக்குடியரசின் ஜராஸ்லேவ் ஜோடியை எதிர்கொண்டது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பயஸ் -காரா பிளாக் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.
இதுவே பயஸ்-காரா பிளாக் ஜோடி, முதன்முறையாக அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற சந்தர்ப்பமாகும் .இது அவுஸ்ரேலிய பகிரங்க கலப்பு இரட்டையரில் பயஸ் பெற்ற இரண்டாவது பட்டமாகும்.இதற்கு முன்னர் கடந்த 2003 இல் பயஸ், அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவாவுடன் இணைந்து பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் லியாண்டர் பயஸ் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை(இரட்டையர்-6, கலப்பு இரட்டையர்-5). வென்றுள்ளார். கடைசியாக இரு முறை நடந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி வரை வந்து வெற்றியை நழுவிவிட்டது பயஸ் ஜோடி.
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இந்தியர்கள் வரிசையில், சகவீரர் மகேஷ் பூபதியின் 11 கிராண்ட்ஸ்லாம் (இரட்டையர்-4, கலப்பு இரட்டையர்-7) சாதனையை இந்த வெற்றியின் மூலம் சமப்படுத்திக் கொண்டார் பயஸ்.
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர். டென்னிஸ் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு.
0 comments:
Post a Comment