Pages

Thursday, February 18, 2010

முதலிடத்தில் இந்தியா


இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் இந்திய அணி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரப்படுத்தலில் தொடர்ந்தும் முதல் நிலையில் நீடிக்கிறது.
2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்தொடரில் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதனால் இந்தத் தொடர்,1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.

5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்குபற்றுவதாகவே ஆரம்பத்தில் கூறப்பட்டது.திடீரென இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதன் முதலாக முதலிடத்திற்கு வந்ததும் இந்தத் தொடரை இந்திய கிரிக்கெட்சபை 2 டெஸ்ட்கள், 3 ஒரு நாள் போட்டிகள் என மாற்றியது. இதற்கு ஆரம்பத்தில் மறுத்தபோதும் பின்னர் சம்மதித்தது தென்னாபிரிக்கா.


முதலாவது டெஸ்ட்
நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் டோனியின் தலைமையின் கீழ் இந்தியா தோல்வியைச் சந்தித்தது. அது இனிங்ஸ் தோல்வியாக அமைந்தது.தொடர்ந்து டெஸ்ட் வெற்றிகளை அணிக்குப் பெற்றுக் கொடுத்த டோனியை பெரிதும் கலக்கமடைய வைத்தது இந்தத் தோல்வி.அணியில் 3 முக்கிய வீரர்களின்றியே ( ட்ராவிட், லக்ஷ்மண், யுவராஜ் சிங்) களமிறங்கியது இந்தியா.

ஹாசிம் அம்லா(253*),ஜாக்ஸ் கலிஸ் (173) ஆகியோரின் அபாரமான துடுப்பாட்ட உதவியுடன் முதல் இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 558 ஓட்டங்களைக் குவித்து தமது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது தென்னாபிரிக்கா.டேல் ஸ்டெய்னின் பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் வேகமாக சரிய, இந்தியா முதல் இனிங்ஸில் 233 ஓட்டங்களையும்,2ஆவது இனிங்ஸில் 319 ஓட்டங்களையும் மட்டுமே பெற்றது. முதல் இனிங்ஸில் ஷேவாக், இரண்டாவது இனிங்ஸில் சச்சின் சதமடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. இனிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டியிலும் தோல்வியடைந்தால் முதலிடம் பறிபோகும் நிலை. எனவே இரண்டாவது போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றேயாகவேண்டுமென்ற நிலை இந்தியாவுக்கு. உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத லக்ஷ்மண் மீண்டும் அணிக்குள் வந்தார்.வந்த வேகத்தில் சதமடித்து அசத்தினார்.

2ஆவது டெஸ்ட்
முதலாவது போட்டியில் துடுப்பாட்டத்தில் சாதித்த தென்னாபிரிக்கா 2ஆவது டெஸ்டில் ஓட்டங்களைக் குவிக்கத் தவறியது.ஹாசிம் அம்லா(114),அல்விரோ பீட்டர்சன்(100) ஆகியோரைத் தவிர ஏனையோர் சோபிக்கத் தவறினர். தென்னாபிரிக்கா முதல் இனிங்ஸில் 296 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.
ஷேவாக் (165 ), சச்சின் (106 ), லக்ஷ்மண் (143 *),டோனி (132*) ஆகிய நான்கு வீரர்களின் சதத்துடன் இந்தியா முதல் இனிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 643 ஓட்டங்களைப் பெற்றது. இதுவே தென்னாபிரிக்க அணிக்கெதிராக இந்திய அணி பெற்றுள்ள அதிகபட்ச ஓட்டங்கள். தென்னாபிரிக்க களத் தடுப்பாளர்கள் பிடிகளைப் பிடிக்கத் தவறியதும் இந்த ஓட்ட எண்ணிகையை இந்தியா பெற இன்னொரு காரணமாக அமைந்தது.

டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் 4 வீரர்கள் ஒரு இனிங்ஸில் சதம் பெற்றமை இது 2ஆவது முறையாகும். இதற்கு முன் 2007 ஆம் ஆண்டு, பங்களாதேஷ் அணிக்கெதிராக மிர்பூர் டெஸ்டில், தினேஷ் கார்த்திக் (129 ), வாசிம் ஜாபர் (139 ), ட்ராவிட் (129 ), சச்சின் (122 *) ஆகியோர் சதமடித்திருந்தனர்.

இறுதி நாளில் சஹீர் கான் உபாதைக்குள்ளானதால் பந்துவீச முடியாமல் ஆடுகளம் விட்டகன்றார்.இதனால் இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன்,அமித் மிஸ்ராஆகியோரின் பந்துவீச்சிலே இந்தியாவின் வெற்றி தங்கியிருந்தது. அம்லாவின் நிதானமான,பொறுப்பான துடுப்பாட்டம் மூலம் இந்திய அணியின் வெற்றி தாமதமாகிக் கொண்டே போனது.இறுதிக் கட்டத்தில் ஹர்பஜன் வீழ்த்திய விக்கெட் மூலமே இந்தியா, இந்தப் போட்டியில் இனிங்ஸ் மற்றும் 57 ஓட்டங்களால் வெற்றியைப் பெற்றது.

தென்னாபிரிக்கா 2ஆவது இனிங்ஸில்அனைத்து விக்கெட்டுகளையுமிழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது.போட்டியில் மிகச் சிறப்பாக அம்லா இரண்டு இனிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். இந்தத் தொடரில் ஒரு இரட்டைச் சதம், 2 சதங்கள் அடங்கலாக 490 ஓட்டங்களைக் குவித்ததார் அம்லா.இதன் மூலம் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் கொண்ட தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்க வீரரென்ற சாதனையும் அம்லா வசமானது. போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.தனியொருவராக நிலைத்து நின்று அசத்திய அம்லா பாராட்டப்படவேண்டியவரே.

இத் தொடரில் படைக்கப்பட்ட சாதனைகள் சில :
*கோல்கட்டா டெஸ்டின் முதல் இனிங்ஸில் சச்சின்,ஷேவாக் ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 249 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 16ஆவது முறையாக,இன்னொரு வீரருடன் இணைந்து 200 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்து, அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங்கின் (15 முறை) உலக சாதனையை முறியடித்தார் சச்சின்.

* சொந்த மண்ணில் தனது 21ஆவது சதத்தை பெற்ற சச்சின்,அவுஸ்ரேலியாவின் ரிக்கி பொண்டிங், ஹைடன் ஆகியோரின் சாதனையை சமப்படுத்தினார். இவர்களிருவரும் தமது சொந்த மண்ணில் 21 சதங்களைப் பெற்றுள்ளனர்.

* கடைசியாக பங்கேற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சதம் அடித்துள்ள சச்சின், ட்ராவிட் (4 சதம்), கவாஸ்கர் (4) சாதனையை சமன் செய்தார்.

*லக்ஷ்மண் 7 ஓட்டங்களைப் பெற்றபோது ,டெஸ்ட் அரங்கில் 7000 ஓட்டங்களைக் கடந்தார்.இதன் மூலம் 7000 ஓட்டங்களைக் கடந்த 5ஆவது இந்திய வீரரானார்.

102 ஓட்டங்களைப் பெற்றபோது, கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.9 போட்டிகளில் விளையாடியுள்ள லக்ஷ்மண், 4 சதங்கள், 3அரை சதங்கள் அடங்கலாக 1047 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.2001ஆம் ஆண்டு இந்த மைதானத்தில்தான் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 281 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

*இந்திய அணித் தலைவர் டோனி, (132*) தென்னாபிரிக்காவுக்கு எதிராக தனது முதல் சதத்தைப் பெற்றதுடன் கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இவர் அடித்த முதல் சதமாகவும் இது அமைந்தது. அத்துடன் இந்தியா சார்பில் டெஸ்ட் அரங்கில் 4 சதங்களைப் பெற்ற விக்கெட் காப்பாளர் என்ற பெருமையினையும் பெற்றார் டோனி.

* லக்ஷ்மண்-டோனி ஜோடி 7ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 259 ஓட்டங்களைப் பெற்று புதிய இந்திய சாதனையைப் படைத்தது.

*ஹர்பஜன் சிங் தனது 350 ஆவது விக்கெட்டைக் கைப்பற்றியதுடன்,ஈடன் கார்டன் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளைக்(40) கைப்பற்றிய கும்ப்ளேயின் சாதனையையும் முறியடித்தார்.

*அம்லா டெஸ்ட் கிரிகெட்டில் தனது முதல் இரட்டை சதத்தைப்(253*) பெற்றுக்கொண்டார்.

*அறிமுகப் போட்டியில்அல்விரோ பீட்டர்சன் சதமடித்தார்.
*டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில், இனிங்ஸ் ஒன்றில் சிறந்த பந்துவீச்சுப் பெறுதியை(7/51) பெற்றுக்கொண்டார்.

சாதிக்ககத் தவறியோர்
அண்மைக் காலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி,தொடர்ந்து 5 போட்டிகளில் 5 சதமடித்து அசத்திய கெளதம் கம்பிர் இந்தத் தொடரில் சாதிக்கத் தவறினார். 3 இனிங்ஸில் 38 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். பத்ரிநாத்,முரளி விஜய் ஆகியோரும் சாதிக்கத் தவறினர்.பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

தென்னாபிரிக்க அணியின் தலைவர் கிரஹம் ஸ்மித், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ்,ஏ.பி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் மிகக் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இளைய பந்துவீச்சாளர் வெய்ன் பார்னெல் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.

மொத்தத்தில் இந்த டெஸ்ட் தொடர் விறுவிறுப்பைக் கொடுத்த தொடராக மட்டுமன்றி தரவரிசையில் முதலிடத்திற்கான போட்டியாகவும் அமைந்தது. இந்தியா முதலிடத்திலும் தென்னாபிரிக்கா இரண்டாமிடத்திலும் தொடர்கின்றன.

இதன் மூலம் வரும் ஏப்ரல் மாதம், சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது மற்றும் பணப் பரிசையும் முதன் முறையாக பெற உள்ளது இந்தியா. கடந்த 2003 ஆம் ஆண்டு தரவரிசை அறிமுகமானதிலிருந்து, இவ்விருதை அவுஸ்ரேலியா தான் 7 முறை பெற்றது. இதற்கு இப்போது இந்தியாவால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates