ஐ.பி.எல். அமைப்பின், மூன்றாவது "20-20" கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 12 முதல் ஏப்ரல் 25 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது . இத்தொடருக்கான வீரர்கள் ஏலம், கடந்த 19 ஆம் திகதி மும்பையில் நடந்தது. 8 அணிகள் ஏலத்தின் மூலம் வீரர்களை ஒப்பந்தம் செய்தன.
97 வீரர்கள், முதற் கட்டமாக ஐ.பி.எல். ஏலத்துக்கு தெரிவாகியிருந்தனர். வீரர்களின் திறமையைக் கருத்திற் கொண்டு 66 வீரர்கள் மட்டுமே இறுதியில் தேர்வாகினர். அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா,பாகிஸ்தான் நாடுகளிலிருந்து 11 வீரர்களும் மேற்கிந்தியத்தீவுகள் ,இலங்கை நாடுகளிலிருந்து 8 வீரர்களும் இங்கிலாந்திலிருந்து 9 வீரர்களும், நியூசிலாந்திலிருந்து 4 வீரர்களும் பங்களாதேஷ், கனடா, நெதர்லாந்து, சிம்பாப்வே நாடுகளிலிருந்து தலா ஒரு வீரரும் தெரிவாகியிருந்தனர். இவர்களிலிருந்து 12 வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் 11 வீரர்களுக்கு மட்டுமே அதிஷ்டம் அடித்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதலாவது ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் நடந்தது. அப்போது நடந்த ஏலத்தில் 3 ஆண்டுகளுக்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அவர்களின் ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. தற்போது 3 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள், இந்த ஆண்டு (2010) மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். இவர்களுக்கு ஒரு ஆண்டு ஒப்பந்தம் தான். இதனால் அதிக பணத்தை செலவழித்து வீரர்களை ஒப்பந்தம் செய்ய, அணிகள் தயங்கின. 66 வீரர்களில், 11வீரர்கள் மட்டுமே ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த, அதிரடியாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடிய சகலதுறை வீரரான பொல்லாட்டை ஏலத்தில் வாங்க 5 (கிங்ஸ்11 பஞ்சாப், டெக்கான் சார்ஜர்ஸ்,மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன. கடந்த ஆண்டு சாம்பியன் லீக் '20-20' போட்டியில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அணிக்காக விளையாடி தனது அதிரடியால் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவரிவர். இதனால் இவரை ஏலத்தில் எடுக்க அணி உரிமையாளர்கள் போட்டிபோட்டனர்.இவருக்கான ஏலத்தொகை அதிகரிக்க, மூன்று அணிகள் இடைநடுவே பின்வாங்க, இறுதியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் போட்டிபோட்டன. இரு அணிகளும் ஒரே அளவான தொகைக்கு ஏலம் கேட்டன. அதனால் சிக்கல் ஏற்பட, 'சைலன்ட் டைபிரேக்கர்' முறை மூலம் தீர்வு கிடைத்தது." சைலன்ட் டைபிரேக்கர்" முறை என்றால் என்னவென்று சிலர் கேட்கலாம். இரண்டு அணிகளும்ஒரு வீரரை ஏலத்தில் ஒரே தொகைக்குக் கேட்கும்போது அதன் பின் கூடுதலாக இன்னொரு விலையை ரகசியமாக ஒரு தாளில் எழுதிக் கேட்க வேண்டும்.அதில் எந்த அணி அதிக தொகையினைக் குறிப்பிட்டுள்ளதோ அந்த அணிக்கே அந்த வீரர் சொந்தம். அந்த அடிப்படையில் இரு அணிகளும் தமது அதிக தொகையைக் குறிப்பிட்டாலும் இறுதியில் மும்பை அணிக்கே உரித்தானார் பொல்லார்ட்.இவரை அதிக விலைக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.பொல்லார்ட்டின் ஏலத் தொகை 7 லட்சத்து 50 ஆயிரம் டொலர் எனக் குறிப்பிடப்பட்டாலும் எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார் என்பது இன்னும் ரகசியமே..
22 வயதையுடைய சகல துறை வீரரான பொல்லார்ட், தனது 19 ஆவது வயதில் டிரினிடாட் அன்ட் டொபாகோ அணி சார்பில் முதற் தர போட்டிகளில் பங்கேற்றார். பார்படோஸ் அணிக்கெதிரான முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்திய இவர், லீவர்ட் ஐலண்ட் அணிக்கெதிரான தனது 4 ஆவது போட்டியிலும் 6 சிக்சர்கள் உட்பட 71 பந்துகளில்
சதமடித்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் காலடி வைத்தார். இது தான் இவரது சர்வதேச அறிமுகம்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த சாம்பியன்ஸ் லீக் "20-20" தொடர், இவரைஅதிரடித் துடுப்பாட்ட வீரராக கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டியது. டிரினிடாட் அணி சார்பில் களமிறங்கிய இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கெதிரான ஒரு போட்டியில் 18 பந்துகளில் 54 ஓட்டங்களை அதிரடியாகக் குவித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். சாம்பியன்ஸ் லீக் தொடரில் அசத்திய இவர் மீது, ஐ.பி.எல். அணிகளின் பார்வை அப்போதே விழுந்தது. அதில் இப்போது வெற்றி கண்டது மும்பை இந்தியன்ஸ் .
இந்த ஏலத்தில்அதிக தொகைக்கு ஏலத்தில் விலைபோன இன்னுமொரு வீரர் அண்மையில்அவுஸ்ரேலியஅணிக்கெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணித் தலைவரான ரிக்கி பொண்டிங்கின் கையை தனது பந்துவீச்சால் பதம் பார்த்த கெமர் ரோச்.இவரை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 7 லட்சத்து 20 ஆயிரம் டாலர் கொடுத்து வாங்கியது.
அதிக தொகைக்கு ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்ப ட்ட இந்த வீரர்கள் தமது அணிகளுக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பார்களா?
ஏலத்தில் வீரர்கள் விலை :
மேற்கிந்தியத்தீவுகளின் கெய்ரான் பொல்லார்ட் (Kieron Pollard) 7 லட்சத்து 50 ஆயிரம் டொலர் (மும்பை இந்தியன்ஸ் )
நியூஸிலாந்தின் சகலதுறை வீரர் ஷேன் பொண்ட் 7 லட்சத்து 50 ஆயிரம் டொலர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் )
மேற்கிந்தியத்தீவுகளின் கெமர் ரோச்(Kemar Roach) 7 லட்சத்து 20 ஆயிரம் டொலர் ( டெக்கான் சார்ஜர்ஸ் )
தென்னாபிரிக்காவின் வெய்ன் பார்னல் 6 லட்சத்து 10 ஆயிரம் டொலர் ( டில்லி டேர்டெவில்ஸ் )
இந்தியாவின் மொஹமட் கைப் 2 லட்சத்து 50 ஆயிரம் டொலர் ( கிங்ஸ்11 பஞ்சாப் )
அவுஸ்ரேலியாவின் முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் 1லட்சம் டொலர் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
தென்னாபிரிக்காவின் ஜஸ்டின் கெம்ப் 1 லட்சம் டொலர் (சென்னை சூப்பர் கிங்ஸ் )
அவுஸ்ரேலியாவின் அடம் வொஜெஸ் 50 ஆயிரம் டொலர் ( ராஜஸ்தான் ரோயல்ஸ்)
தென்னாபிரிக்காவின் யூசுப் அப்துல்லா 50 ஆயிரம் டொலர் (கிங்ஸ்11 பஞ்சாப் )
இங்கிலாந்தின் இயோய்ன் மோர்கன் (Eoin Morgan) 2 லட்சத்து 20 ஆயிரம் டொலர் (பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ்)
இலங்கையின் திசார பெரேரா 50 ஆயிரம் டொலர் ( சென்னை சூப்பர் கிங்ஸ் )
மும்பையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. இம்முறை வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைக்குமென பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் எந்தவொரு அணியும், 20-20 உலகச் சாம்பியனான பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்காத நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இம்முறையும் போட்டிகளில் விளையாட முடியாத நிலை. இது பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டுமன்றி பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றமே. விளையாட்டிலும் அரசியல் இப்படி விளையாடுகிறதோ என்பது கிரிக்கெட் ரசிகர்களின் ஆதங்கம்.இப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தமது கண்டனங்களையும் கூறத் தொடங்கிவிட்ட நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவது எட்டாக்கனியே.
கடந்த ஐ.பி.எல் தொடரில் சாதிக்காத அணிகள் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளன. கிங்ஸ்11 பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பு யுவராஜிடமிருந்து குமார் சங்ககாராவிடம் கை மாறியுள்ளது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரானார் மீண்டும் சௌரவ் கங்குலி. எனவே இம்முறையும் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடிகளும் ஆச்சரியங்களும் காத்திருக்கின்றன.
முதலாவது ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் இரண்டாவது ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் சாம்பியன் ஆகியிருந்தன.மூன்றாவது ஐ.பி.எல் தொடரில் சாதிக்கப்போகும் அணி எது ஏப்ரல் வரை பொறுத்திருப்போம்...
0 comments:
Post a Comment