Pages

Saturday, July 24, 2010

"முத்து கிரிக்கெட்டுலகின் சொத்து"

கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய சுழற்பந்துவீச்சாளர்களில்,தலைசிறந்த வீரர்களிலொருவராக அனைவராலும் போற்றப்படுபவர் முத்தையா முரளிதரன். பல சோதனைகளையும் தனது சுழலால்,சாதனைகளாக சாதித்து அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர்.இலங்கையணியில் கடந்த 18 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் முரளி, பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவரென்றே சொல்லலாம்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில்,இளைய வீரர்களுக்கு சந்தர்ப்பமளிக்கும் வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முரளி, தான் பங்கேற்ற இந்தியா அணிக்கெதிரான, இறுதிப் போட்டியில் இலங்கையணிக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்து சாதனை வீரனாக விடை பெற்றார்.

எத்தனயோ வீரர்கள் கிரிகெட்டுலகுக்கு வந்தாலும் என் மனதைக் கவர்ந்த பந்து வீச்சாளர்களில் முதன்மையானவர் முரளி.மைதானங்களில் அதிகம் கோபப்பட்டுக் கொள்ளாத முரளி,சிரித்த முகத்துடன் பந்து வீசும் தன்மை அனைவரையும் கவர்ந்தததெனலாம். எந்த ஆடுகளத்திலும் விக்கெட்டுகளை சாய்க்கும் வல்லமை கொண்ட முரளி எப்போதும் எளிமையாகவே காணப்படுவார்.இதுவே முரளியின் தனிச் சிறப்பு. அப்படிப்பட்ட முரளிக்கான ஒரு பதிவு.முரளியின் சாதனைகளைப் பதிவிட ஒரு பதிவு போதாது பல பதிவுகள் வேண்டும்.

இலங்கையின் கண்டி மாநகரில் பிறந்த முரளி, கண்டி,கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டு ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.இவரின் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோவின் அறிவுரைக்கேற்ப சுழற்பந்து வீச்சாளராக தன்னை மாற்றிக் கொண்டார். பாடசாலைக் காலத்தில் ஒரு சகலதுறை வீரராக மிளிர்ந்து பல விருதுகளை தட்டிச் சென்ற வீரரானார் முரளி.
இதன் பின்1991ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற இலங்கை A அணியில் இடம்பிடித்த முரளி,இங்கிலாந்தில் பெரிதாக சாதிக்கவில்லை.
அதன் பின்1992 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முரளி, முதல் டெஸ்டிலே முதல் இனிங்சில் 32 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியதுடன் போட்டியிலே 141 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முத்திரை பதித்து, சிறந்த சுழற்பந்துவீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டார்.

இலங்கை அணிக்கு, நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை மிகப் பெரும் கௌரவமாகக் கருதும் முரளி, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் 2011 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் தனக்கு பங்கேற்க இலங்கை கிரிக்கெட் அழைத்தால் விளையாடுவேன் எனக் கூறுகிறார்.
உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முரளி, இதுவரை 133 டெஸ்ட்போட்டிகளில் 800 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 51 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்கள். ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுக்களை 66 தடவைகள் கைப்பற்றியுள்ள முரளி,22 தடவைகள் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 1 அரைச்சதமடங்கலாக 1261 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்அதிக (515) விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள முரளியின், சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 30 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்கள். 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள முரளி, துடுப்பாட்டத்தில் 515 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
800 ஆவது விக்கெட்....
1995-1996 பருவ காலத்தில் அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின்போது முரளி பந்தை எறிவதாக நடுவர் டரல் ஹெயார் குற்றஞ்சாட்டினார்.1998-1999 பருவ காலத்தில் அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின்போது முரளி பந்தை எறிவதாக நடுவர் ரோஸ் எமர்சென் குற்றஞ்சாட்டினார்.இதனால் முரளியின் பந்துவீச்சு முறை பரிசீலிக்கப்பட்டது.ஆனால் முரளியின் பந்துவீச்சு பாணி சரியென்பதே முடிவு.அதன் பின் முரளியின் விக்கெட் வேட்டை அதிகமானது.

டெஸ்ட் போட்டிகளில்,தென்னாபிரிக்க அணிக்கெதிராக 15 போட்டிகளில் 104 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 11 போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 16 போட்டிகளில் 112 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 22 போட்டிகளில் 105 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 14 போட்டிகளில் 82 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 16 போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக 13 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் 82 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 14 போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இலங்கை மண்ணில் 73 போட்டிகளில் 493 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 60 போட்டிகளில் 307 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

28 ஆகஸ்ட் 1992 இல் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்த டெஸ்ட் வாழ்வு 22 ஜூலை 2010 திகதி காலி சர்வதேச மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

முரளியின் சாதனைகள் பல.அவற்றுள் இவை சில.
முரளியின் உலக சாதனைகள்
*அதிகடெஸ்ட் விக்கெட்டுக்களை (800) வீழ்த்திய வீரர்.
*800 டெஸ்ட் விக்கெட்டுக்களை வீழ்த்தியமுதல் வீரர்.
*அதிக பந்துகளை(44039) வீசிய வீரர்.
*அதிக ஓடமற்ற ஓவர்களை(1794) வீசிய வீரர்.
*ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுக்களை(166) வீழ்த்திய வீரர் -SSC மைதானம்
*3 மைதானங்களில் அதிக விக்கெட்டுக்களை (100 இற்கு அதிகம்) வீழ்த்திய வீரர்.
*சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுக்களை(493) வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியின் ஒரு இனிங்சில் அதிக தடவைகள் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை(67தடவைகள்) வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியின் இரு இனிங்சில் அதிக தடவைகள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை(22தடவைகள்) வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்ற அணைத்து அணிகளுக்கெதிராகவும் ஒரு போட்டியில்10 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*ஒரு போட்டியில் தலா 9 விக்கெட்டுக்களை 2 தடவைகள் வீழ்த்திய வீரர்.
*தொடர்ந்து 4 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்.
*தொடர்ந்து 4 போட்டிகளிலும்10 விக்கெட்டுக்களை 2 தடவைகள் கைப்பற்றிய வீரர்-(2001,2006)
*அதிக தடவைகள் BOWLD அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-167 தடவைகள்
*அதிக தடவைகள் தானே பந்து வீசி பிடியெடுத்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்( 35 தடவைகள்)
*அதிக தடவைகள் STUMPED அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-47 தடவைகள்
*அதிக தடவைகள் பிடியெடுப்பு (cathes) அடிப்படையில் விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-435 தடவைகள்
*விக்கெட் காப்பாளரல்லாத களத் தடுப்பாளர்களால் அதிக பிடியெடுக்கப்பட்டு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-388 தடவைகள்
*விக்கெட் காப்பாளரல்லாத களத் தடுப்பாளரால்(மஹேல) அதிக பிடியெடுக்கப்பட்டு அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்-77 தடவைகள்.
*டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் 50 இற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து நாடுகளுக்கெதிராகவும் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*இந்திய அணிகெதிராக 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2006 ஆம் ஆண்டு 11 போட்டிகளில் 90 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2001 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 80 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*2000 ஆம் ஆண்டு 10 போட்டிகளில் 75 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்.
*டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருதை அதிக 11தடவைகள் வென்ற
வீரர்.

முரளி விளையாடிய133 போட்டிகளில் இலங்கையணி வெற்றி பெற்ற 54 சந்தர்ப்பங்களில் முரளி வீழ்த்திய விக்கெட்டுகள் 438.


முரளியின் சில பதிவுகள்:
1993 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் முதன் முதலாய் 5(5/104) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1994 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக லக்னோவில் நடைபெற்ற போட்டியில் வெளிநாட்டு மண்ணில் முதன் முதலாய் 5(5/162) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1998 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக கண்டியில் நடைபெற்ற போட்டியில் முதன் முதலாய் 10(12/117) விக்கெட்டைக் கைப்பற்றினார்.

1998 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில்,ஒரு போட்டியின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியைப் (16/220) பெற்றுக்கொண்டார்

2002 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியைப் (9/51) பெற்றுக்கொண்டார்.

2004 ஆம் ஆண்டு சிம்பாபே அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் கோட்னி வால்ஷின் (519 விக்கெட்) உலகசாதனை முறியடிப்பு.

2007 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் ஷேன் வோனின் (708 விக்கெட்) உலகசாதனை முறியடிப்பு.

2010 டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.


முரளியின் விக்கெட் வேட்டை.......
01 கிரேக் மக்டமட் - அவுஸ்ரேலியா
50 நவஜோத் சிங் சித்து -இந்தியா
100 ஸ்டீபன் பிளெமிங்- நியூசிலாந்து
150 கய் விட்டல் -சிம்பாப்வே
200 பென் ஹோலியொக் -இங்கிலாந்து
250 நவீ ட் அஷ்ரப் - பாகிஸ்தான்
300 ஷோன் பொல்லாக்-தென்னாபிரிக்கா
350 மொஹமட் ஷரிப் - பங்களாதேஷ்
400 ஹென்றி ஒலங்கா-சிம்பாப்வே
450 டரல் ரபி-நியூசிலாந்து
500 மைக்கல் கஸ்ப்ரோவிக்ஸ் - அவுஸ்ரேலியா
520 என்(N)காலா -சிம்பாப்வே ( கோட்னி வால்ஷின் உலகசாதனை முறியடிப்பு)
550 காலித் மஷுத் -பங்களாதேஷ்
600 காலித் மஷுத் பங்களாதேஷ்
650 மக்காய நிடினி- தென்னாபிரிக்கா
700 சயத் ரசல் -பங்களாதேஷ்
709 போல் கோலிங்க்வூட்- இங்கிலாந்து( ஷேன் வோனின் உலகசாதனை முறியடிப்பு)
750 சௌரவ் கங்குலி - இந்தியா
800 பிரக்ஜன் ஓஜா- இந்தியா இவர்கள் தலைமையில் முரளியின் விக்கெட் வேட்டை
தலைவர்கள் போட்டிகள் விக்கெட்
அர்ஜுன ரணதுங்க- 42 - 203
சனத் ஜெயசூரிய- 35 - 230
ஹஷான் திலகரத்ன- 10 - 76
மார்வன் அத்தப்பத்து- 11 - 70
மஹேல ஜெயவர்தன- 28 - 186
குமார் சங்ககார- 6 - 30
கிரஹம் ஸ்மித்- 1 - 05 (ICC அணிக்காக விளையாடிய சந்தர்ப்பம்)

பல சோதனைகளை எதிர்கொண்டும் அவற்றையெல்லாம் முறியடித்து சாதனை நாயகனாக கிரிக்கெட் ரசிகர்கள் அகங்களில் என்றும் முரளி.முரளியின் சாதனைகள் முறியடிக்கப்படாத சாதனைகளே.எட்ட முடியாத எல்லையில் முரளி.
சாதனைகள் பல படைத்த சரித்திர நாயகனுக்கு வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates