Pages

Saturday, July 10, 2010

பந்து பறக்குது

கடந்த ஜூன் 11ஆம் திகதி ஆரம்பித்த உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் ஜூலை 11 நிறைவுக்கு வரவுள்ளன. . பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் உலகக் கிண்ணம் எந்த அணியிடம் முத்தம் பெற ஆசைப்படுகிறதோ....

32 அணிகள் பங்குபற்றும் உலகக் கிண்ண போட்டிகளில்,கடந்த முறை இறுதிப் போட்டி வரை முனேறிய பிரான்ஸ்,இத்தாலி அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியமை இம்முறை கால்பந்தாட்ட ரசிகர்களுக்குக் கிடைத்த முதல் அதிர்ச்சியாகும்.


பலம் பொருந்திய அணிகளான பிரேசில், இத்தாலி, ஜேர்மனி,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஆர்ஜென்ரினா ஆகியவை இறுதிப் போட்டிவரை முன்னேறுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அந்த அணிகள் சறுக்கலை சந்திக்க,நெதர்லாந்து, ஸ்பெயின் அணிகள் இறுதிக்கு முன்னேறி சாதித்தன.ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் இம்முறை உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ள இப்போது வாய்ப்புக்கள் அதிகம்.

கணனியில் ஏற்பட்ட கோளாறால் போட்டிகள் பற்றிய விபரங்களை உடனடியாக பதிவிட முடியவில்லை. காலிறுதிப் போட்டிகளிலிருந்து ஒரு சுருக்கமான பார்வை...

முதல் காலிறுதி:
உலக கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் காலிறுதியின் முதல் போட்டியில் உருகுவே, கானா அணிகள் மோதின ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை.இருந்தாலும் போட்டியின் முதல் பகுதியின் (47வது நிமிடம்) கானாவின் முன்ட்டாரி அடித்த கோல் மூலம் கானா 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பகுதியில் உருகுவே அணிக்கு 55ஆவது நிமிடத்தில் 'பிரி-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை போர்லன் சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார்.இதனால் 1-1 என சமனானது. இறுதி வரை இரு அணியினரும் மேலும் கோல் எதுவும் அடிக்காத நிலையில், 1-1 என போட்டி சமனானது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.அந்த நேரத்திலும் இருஅணியினரும் கோலடிக்காத காரணத்தால் 'பெனால்டி ஷூட்' முறையில் போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட வேண்டியதாயிற்று. இதில் கானா வீரர்கள் கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட, உருகுவே 5-3 என வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேற, கானா வெளியேறியது.

இம்முறை பங்கேற்ற 06ஆபிரிக்க நாடுகளில் லீக் சுற்றுகளைக் கடந்து காலிறுதி வரை முன்னேறிய ஒரே அணியென்ற பெருமை கானாக்கு சொந்தமானது.



இரண்டாவது காலிறுதி:
பரபரப்பான இரண்டாவது காலிறுதிப் போட்டியில்,5 முறை சாம்பியன் பட்டம் வென்ற,பிரேசில்,நெதர்லாந்து அணிகள் மோதின. ரொபின்ஹோ அடித்த கோல் மூலம் போட்டி ஆரம்பித்த சில நிமிடத்திலே பிரேசில்அணி முன்னிலை பெற, போட்டி விறுவிறுப்பானது.முதல் பகுதியில் நெதர்லாந்து அணியால் கோல் எதையும் பெற முடியவில்லை. இதனால் பிரேசில் முதல் பகுதியில் 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பகுதியில் நெதர்லாந்து வீரர்கள் துடிப்புடன் செயற்பட்டனர். 53ஆவது நிமிடத்தில் அர்ஜென் ராபென் அடித்த பந்தை,கோல் கம்பத்தை நோக்கி ஸ்னைடர் அடிக்க அங்கிருந்த பிரேசில் கோல் காப்பாளர் ஜூலியோ சீசர் பந்தைப் பிடிக்கத் தவற, பிரேசில் வீரர் பெலிப் மெலோவின் தலையில் பட்டு, 'சேம் சைட்' கோலாக மாறியது.80ஆண்டு கால வரலாற்றில் பிரேசில் முதன் முறையாக சேம் சைட் கோல் அடித்து எதிர்பாராத சாதனை புரிந்தது.
68ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு 'கார்னர்-கிக்' வாய்ப்பு கிடைத்தது. இதை ராபென் அடிக்க, நெதர்லாந்தின் ஸ்னைடர் கோலாக மாற்றினார். இதையடுத்து நெதர்லாந்து அணியினர் வசம் ஆட்டம் திரும்பியது.
73 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஸ்னைடரை,பிரேசிலின் பிலிப் மெலோ கீழே தள்ளிவிட, நடுவர் சிவப்பு அட்டை காட்டி பிலிப் மெலோவை வெளியேற்ற,பிரேசில் 10 வீரர்களுடன் விளையாட நேர்ந்தது.

இறுதியில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது முறையாக (1974,1978,1998) அரையிறுதிக்கு முன்னேற, பிரேசில்எதிர்பாராத அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியது.

1994 இல் பிரேசில் அணித் தலைவராக இருந்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த 'டுங்கா' இம்முறை பயற்சியாளராக இருந்து அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 'டுங்கா'வின் உத்திகளும் இம்முறை பலனளிக்கவில்லை.

மூன்றாவது காலிறுதி:
மூன்றாவது காலிறுதியில், ஸ்பெயின், பராகுவே அணிகள் களம் கண்டன.போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயின் அணியினர் சிறப்பாக விளையாடினாலும் முதல் பகுதியில் இரு அணியினராலும் கோல் எதையும் பெற முடியவில்லை.

இரண்டாவது பகுதியில், 57ஆவது நிமிடத்தில் பராகுவேக்கு 'பெனால்டி-கிக்' வாய்ப்பு கிடைத்தது.ஆனால்,ஸ்பெயின் கோல் காப்பாளர் சிறப்பாகத் தடுத்து நிறுத்தினார். இதன் பின் சில நிமிடத்தில் ஸ்பெயினுக்கு 'பெனால்டி-கிக்' கிடைத்தது. இதை அலோன்ஸ்கா கோலாக மாற்றினார்.ஆனால் சரியான இடத்தில் வைத்து பந்தை அடிக்கவில்லை என நடுவர் மறுத்து, மீண்டும் வாய்ப்புக் கொடுத்தார்.ஆனால் பராகுவே கோல் காப்பாளர் பந்தை தடுத்ததால் கோல் வாய்ப்பு வீணாகிப் போனது.
83ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் பெட்ரா, தனக்கு கிடைத்த வாய்ப்பில்அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்ப, டேவிட் வில்லா, மீண்டும் திருப்பி அடிக்க இம்முறையும் பந்து கோல் கம்பத்தில் பட்டு கோலாக மாற,ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இது டேவிட் வில்லா இத்தொடரில் அடித்த ஐந்தாவது கோல். பராகுவே வீரர்கள் பல முறை முயன்றும் பலனில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.

ஸ்பெயின் அணி கடைசியாக கடந்த 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த தொடரில் அரையிறுதிக்கு முன்னேறி நான்காமிடம் பிடித்திருந்தது. தற்போது 60 ஆண்டுகளுக்கு பின், அரையிறுதிக்கு முன்னேறி இப்போது இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.

நான்காவது காலிறுதி:
கால்பந்தாட்ட ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்காவது காலிறுதியில் ஜேர்மனி,ஆர்ஜென்ரின அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஜேர்மனி ஆதிக்கம் செலுத்தியது.3ஆவது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ-கிக்' வாய்ப்பில் ஸ்கீவன்ஸ்டீகர் அடித்த பந்தை தலையால் முட்டி முல்லர் கோல் அடிக்க,ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. ஆர்ஜென்ரின அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகள் வீணாகிப் போக, முதல் பகுதியில் ஜேர்மனி 1-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பகுதியில் ஆர்ஜென்ரின வீரர்கள் போராடினர். ஆனாலும் கோலடிக்க முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி ஏமாற்றமளித்தார்.இவரால் இம் முறை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
68 ஆவது நிமிடத்தில் குளோஸ் கோல் அடிக்க,ஜேர்மனி 2-0 என முன்னிலை பெற்றது. இந்த அதிர்ச்சியிலிருந்து ஆர்ஜென்ரினா மீள்வதற்குள் அடுத்த கோலும் அடிக்கப்பட, ஜேர்மனி 3-0 என முன்னிலை பெற்றது.
89ஆவது நிமிடத்தில் குளோஸ் தனது இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் ஜேர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரினாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
1986 இல் மரடோனா தலைவராக இருந்து பெற்றுக் கொடுத்த வெற்றியை இம்முறை பயிற்சியாளராக இருந்து பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

அடுத்த பதிவில் அரையிறுதிப் போட்டிகளின் தொகுப்பு.....

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates