Pages

Monday, July 12, 2010

ஸ்பெயினை முத்தமிட்ட உலகக் கிண்ணம்

கடந்த ஜூன் 11ஆம் திகதி ஆரம்பித்த 19 ஆவது உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட போட்டிகள் கோலாகலமாக வண்ண மயமான கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவுக்கு வந்தன.

பல எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் உலகக் கிண்ணம் ஸ்பெயின் அணியிடம் முத்தம் பெற ஆசைப்பட்டது போல், ஸ்பெயின் வசமானது.முதன்முறையாக உலகக் கிண்ணக் கனவை நிறைவேற்றிக் கொண்டது ஸ்பெயின். 1982ஆம்ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்திய பெருமையைக் கொண்ட ஸ்பெயினுக்கு இப்போது கிடைத்திருப்பது மகத்தான பெருமை. வரலாற்றுப் பெருமை.

பலம் பொருந்திய அணிகளான பிரேசில்,ஆர்ஜென்ரினா, இத்தாலி, ஜேர்மனி,இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை இறுதிப் போட்டிவரை முன்னேறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும் அந்த அணிகள் சறுக்கலை சந்திக்க நெதர்லாந்து,ஸ்பெயின் அணிகள் இறுதிக்கு முன்னேறி சாதித்தன.

ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின், நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.

ஜோகனஸ்பார்க்கின் 'சாக்கர் சிட்டி'(soccer city) மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின்,நெதர்லாந்து அணிகள்,முதன் முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றும் முனைப்பில் பலம் காண,களம் கண்டன.

போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஸ்பெயினின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோலடிக்க முயன்றும் பலனில்லை. நெதர்லாந்து வீரர்கள் முரட்டுத் தனமாக விளையாட பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் முரட்டுத் தனமாக விளையாட நடுவர் அடிக்கடி மஞ்சள் அட்டையைக் காண்பிக்க வேண்டிய நிலைக்குள்ளானார்.

பந்தை உதைக்க வேண்டிய வீரர்கள், வீரர்களை உதைத்துத் தள்ளி மோசமாக விளையாடினர். இதன் உச்சக் கட்டமாக 29ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்க் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார். முதல் பகுதியில் இரு அணியினராலும் கோலெதையும் பெற முடியவில்லை.

இரண்டாவது பகுதியில் 54ஆவது,62ஆவது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன்,அடித்த பந்தை ஸ்பெயின் கோல் காப்பாளர் கேசில்லாஸ் அபாரமாக தடுக்க,ராபன் கோலடிக்க முனைந்த வாய்ப்பு வீணாகியது. இத்தொடரில் 5 கோலடித்த ஸ்பெயினின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா 69,76வது நிமிடத்தில் கிடைத்த கோலடிக்கும் வாய்ப்பை வீணாக்கினார். அதே போல் இத்தொடரில் 5 கோல டித்த நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டமும் சிறப்பாக அமையவில்லை.

இரண்டாவது பகுதியின் மேலதிக நேரத்திலாவது கோல் அடிக்கப்படுமாவென ரசிகர்கள் எதிர்பார்க்க,118 ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் 'இனியஸ்டா' லாவகமாக கோலடிக்க ஸ்பெயின் பக்கம் வெற்றி அலை வீசத் தொடங்கியது.நெதர்லாந்து அணியால் எந்தவித கோலையும் அடிக்க முடியாமல் போக, இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி, முதன்முறையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.
கடந்த 1974,1978 ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது போன்று நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக உலக கிண்ணத்தைக் கைப்பற்ற முடியாமல் இரண்டாமிடத்தையே பெற முடிந்தது.


இந்த வெற்றியின் மூலம் பல சாதனைகளையும் ஸ்பெயின் படைத்தது.
ஆரம்பப் போட்டியில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தை வென்ற முதல் அணி.
ஐரோப்பியக் கிண்ணம், உலகக் கிண்ணம் இரண்டையும் ஒரே சமயம் வென்ற மூன்றாவது அணி.

19 ஆவது உலகக் கிண்ணப் போட்டிகளை சிறப்பாக, பிரம்மாண்டமாக நடத்தி முடித்த தென்னாபிரிக்கவுக்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் சார்பில் வாழ்த்துவோம் நாம்...........

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates