Pages

Wednesday, March 10, 2010

கரை சேருமா பாகிஸ்தான்......

"20-20" சம்பியனான பாகிஸ்தான் அணி இம்முறை பல குழப்பங்களோடு '20-20' உலகக் கிண்ணத் தொடருக்குத் தயாராகிறது. முன்னனி வீரர்கள் சிலர் தண்டனைக்குள்ளகியதால் இம்முறை '20-20' உலகக் கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியன் என்ற பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே இம்முறை '20-20' உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் அணிக்கு பெரும் சிக்கலுடனே ஆரம்பமாகிறது.

அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டிகளில் பாகிஸ்தான், என்றுமில்லாத அளவு படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்விகளுக்கு பாகிஸ்தான் வீரர்களான கம்ரன் அக்மல் - உமர் அக்மல் சகோதரர்கள், ஷொகைப் மாலிக்,ஷாகித் அஃப்ரீடி, ரானா நவீத் உல் ஹசன் ஆகியோரே காரணமென்றும் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படவேண்டுமென்ற கருத்துக்களும் வலுப் பெற்றன. இதனால் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட்,அதிரடியாக யாரும் எதிர்பாராத தண்டனைகளையும் விதித்துள்ளது.




சிட்னியில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பலஆட்டமிழப்பு வாய்ப்புகளைத் தவற விட்டு அணியை தோல்விப் பாதைக்கு இட்டுச் சென்றவர் விக்கெட்காப்பாளர் கம்ரன் அக்மல். இவர் அடுத்த போட்டியில் விளையாட மாட்டாரென பாகிஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்தபோது, தான் அணியில் இடம்பெறுவேனெனக் கூறியதால் அப்போதே விமர்சிக்கப்பட்டவர். இதைவிட இவரது சகோதரரான உமர் அக்மல், தன் சகோதரை நீக்கினால் தானும் விளையாடுவது சந்தேகமென பொய்க்காயத்தை காரணம் காட்டிக் கூறிய கருத்துக்களென இந்த சகோதரர்களின் வாய்ப் பேச்சுக்கள்(அவுஸ்ரேலியத் தொடரில் இவர்கள் துடுப்பால் சாதித்ததை விட)அதிகம். அப்போது பேசிய இந்த வாய்ப்பேச்சுக்களுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறார்கள். பல லட்சம் ரூபாய்கள் (25,000 முதல் 30,000 டொலர் ) அக்மல் சகோதரர்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.




இதேவளை, ஷொகைப் மாலிக், ரானா நவீத் உல் ஹசன் இருவரும் அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வீரர்களாக இருந்துள்ளதால் இவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களிருவரும் 20 லட்சம் அபராதத்துடன் ஓராண்டு தடைக்குமுள்ளாகியுள்ளனர். அதைப்போல் '20-20' அணித் தலைவரான அஃப்ரீடி பந்தைக் கடித்து சேதப்படுத்தியிருந்தார்.இது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கே அவப்பெயரை ஏற்படுத்தியது.பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் காரணமாக இவரும் தண்டனைக்குள்ளாகியுள்ளார்.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அஃப்ரீடிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே.
கம்ரன் அக்மல் - உமர் அக்மல் சகோதரர்கள்,அஃப்ரீடி ஆகியோரின் செயற்பாடுகள் எதிர்வரும் 6 மாதங்களுக்குக் கவனிக்கப்படும்.அந்தக் காலப் பகுதியில் ஏதாவது சிக்கல்களில் மாட்டிக் கொண்டால் இவர்களின் கிரிக்கெட் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

இந்தத் தண்டனை அறிவிப்புகளால் ' 20-20' அணித் தலைமைப் பொறுப்பும் அஃப்ரீடியிடமிருந்து பறிபோகலாம்.சகலதுறை வீரரான அப்துர் ரசாக் அணித் தலைவராகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன

இதைவிட முன்னாள் அணித் தலைவர் யூனிஸ்கான்,அவுஸ்ரேலிய தொடரில் டெஸ்ட் ,ஒருநாள் அணித் தலைவராக செயற்பட்ட முகமது யூசூப் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாட முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர்.(இதை ஆயுட்காலம் என்றே எடுத்துக் கொள்ளலாம்) இவர்கள் அடிக்கடி அணி வீரர்களுடன் முரண்பட்டுக் கொள்வதால் இந்தத் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள்,20-20 போட்டிகள் பலவற்றில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்திருந்த இவர்களுக்கு இப்படியான தண்டனை விதிக்கப்படுமென யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.இனி இவர்களின் நிலை மிகப் பரிதாபமே.


கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் மீது ஒரே சமயத்தில் இவ்வளவு கடுமையான நடவடிக்கையை எந்தவொரு கிரிக்கெட் சபையும் இதுவரை எடுத்ததில்லை. இது கிரிக்கெட்டுலகில் முக்கிய திருப்புமுனை என்றே சொல்லலாம்.பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்திருக்கும் இந்த அதிரடி முடிவுகள் கிரிக்கெட் போட்டிகளில் நடத்தை விதிகளை மீறி நடக்கும் வீரர்களுக்கு நல்ல படிப்பினையே.
இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ஓய்வுபெற்ற வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக் காலமாக இன்திகாப் ஆலமின் பயிற்சியின் கீழ், பாகிஸ்தான் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய காடயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் இருந்தது. பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தபோதும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட்.இதற்கும் பல எதிர்ப்புகள் வந்தபோதும் அவற்றைக் கணக்கெடுக்காமல்,எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் வரை வக்கார் பயிற்சியாளராக செயற்படுவாரென பாகிஸ்தான் கிரிக்கெட்சபை அறிவித்துள்ளது. பாக் அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருமுறை பணியாற்றிய அனுபவத்துடன் தனது இரண்டாம் இனிங்சை ஆரம்பிக்கவுள்ளார் வக்கார்.
இந்த இனிங்ஸ் வக்காருக்கு கடினமான இனிங்சாகவே இருக்கப் போகிறது. பாகிஸ்தான் வீரர்களை ஒரு கட்டுக்கோப்பான அணியாக உருவாக்கவே அதிகம் போராடவேண்டிய நிலை இப்போது இவருக்கு.

பாகிஸ்தான் கிரிக்கெட் எடுத்திருக்கும் இந்த அதிரடித் தண்டனை வக்காரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

87 டெஸ்ட் போட்டிகளில் 373 விக்கெடுகளையும் 262 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 416 விக்கெடுகளையும் கைப் பற்றி, பாகிஸ்தான் அணிக்காக தனது பந்துவீச்சின் வேகத்தால் பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த வக்கார், இனி பயிற்சியாளர் உருவத்தில் அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பாரா....
வக்காரின் பயிற்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் கரை சேருமா

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates