Pages

Saturday, December 29, 2012

கிரிக்கெட்டின் குரல் ஓய்ந்தது...


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டொனி கிரெய்க் தனது 66ஆவது வயதில் இன்று காலமானார்.சில மாதங்களுக்கு முன்னர் நுரையீரல் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை காலமானார்.  

1946 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த டொனி கிரெய்க்,தனது முதலாவது சர்வதேச போட்டியில் இங்கிலாந்து சார்பாக 1972ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடினார்.
தனது அறிமுகப் போட்டியின் முதல் இனிங்சில் 57 ஒட்டங்களையும் இரண்டாம் இனிங்சில் 62 ஒட்டங்களையும் பெற்றுக் கொண்ட இவர்  அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வீரரொருவர் இரண்டு இனிங்சிலும் பெற்றுக் கொண்ட அதிக ஓட்டங்களாகவும் அது அமைந்தது.அது மட்டுமன்றி அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தனது திறமையை கிரிக்கெட் உலகுக்கு வெளிக்காட்டி இங்கிலாந்தையும்  அந்தப் போட்டியில் அபார  வெற்றி பெற வைத்தார். 
1970 களின் நடுப்பகுதியில் இவரது சகலதுறை ஆற்றல் காரணமாய் இங்கிலாந்து பல வெற்றிகளைப் பெற்றது.

1973 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இந்தியாவில்  நடைபெற்ற போட்டியில் கன்னி (148) சதத்தைப் பெற்றார்.

 1974 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டத்தில் சாதிக்கத் தவறிய இவர்,பந்துவீச்சில் அசத்தினார்.முதல் இனிங்சில்  86 ஓட்டங்களைக் கொடுத்து  8 விக்கெட்டுகளையும் இரண்டாம் இனிங்சில் 70 ஓட்டங்களைக் கொடுத்து  5 விக்கெட்டுகளையும்  வீழ்த்தினார்.இவரின் துல்லியமான பந்துவீச்சில் சரிந்த  மேற்கிந்தியத்தீவுகள் 26 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

1972 - 1977 வரையான காலப் பகுதியில் 58 டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்களுடன் 3599 ஓட்டங்களையும் 141 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ள   டொனி கிரெய்க்,22 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 269 ஒட்டங்களைப் பெற்றுள்ளதோடு  19 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

1975 ஆண்டு விஸ்டனின் சிறந்த வீரராகவும் தெரிவானார்.
ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி சர்வதேச அளவில் பல கோடிக்கணக்கான கிரிகெட் ரசிகர்கள் மனதில் தனது தனித்துவமான சிறப்பான  கிரிக்கெட் வர்ணனையால் இடம்பிடித்துக் கொண்டார் டொனி கிரெய்க்.
சில போட்டிகளைப் பார்க்கும்போது சலிப்பாக இருந்தாலும் இவரின் தனித்துவமான கம்பீரமான  வர்ணனைக்காக பல போட்டிகளைக் பார்த்திருக்கிறோம்.போட்டிகள் ஆரம்பிக்கும்போது நாணய சுழற்சிக்காக இவர் ஆடுகளத்தில் இறங்கினால் ரசிகர்களின் உற்சாகம் வானைப் பிளக்கும்.

ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரனை,வர்ணனையாளரை இன்று கிரிக்கெட் உலகம் இழந்துள்ளது.டொனி கிரெய்க்கின் இடத்தை யாராலும் நிரப்பவோ நெருங்கவோ முடியாது.டொனி கிரெய்க் எம்மை விட்டுச்சென்றாலும் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளங்களில் என்றும் அவர் குரல் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.
தன்னலமற்ற ஒரு சிறந்த மனிதரை அதுவும் யாழ் மண்ணிலே கடைசியாக கடந்த வருடம் சந்திக்க முடிந்தது எனக்கு என்றுமே ஒரு மறக்கமுடியாத  நாளாகவே அமைந்தது. 
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates