Pages

Monday, August 10, 2009

எகிப்து நாட்டு இளவரசியின் மறுபிறவியா மைக்கேல் ஜாக்சன்

ஜாக்சன் உயிருடன் இருந்தபோது அவரைப் பற்றியும் ஏகப்பட்ட சர்ச்சைகள். ஜாக்சன் இறந்த பின்னரும் அது ஓயவில்லை. நாள் தோறும் புதிய புதிய தகவல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன.

இன்று புதிய பரபரப்புத் தகவல் ...............
ஜாக்சன், எகிப்து நாட்டு இளவரசியின் மறு பிறவி என்பதே அந்த தகவல்.இது ரசிகரகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தி்ல எகிப்து நாட்டு இளவரசியின் புராதன சிலை உள்ளது. இந்த சிலையைப் பார்த்தவர்கள் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றனர்.ஏன் தெரியுமா? இந்த சிலை ஜாக்சனைப் போல அசலாக இருக்கிறதாம். அந்த சிலையின் படத்தை நீங்களும் பாருங்கள். உங்களுக்குளே விடை தேடிக்கொள்ளுங்கள்.
என்ன உங்களுக்கும் குழப்பமா....சரி இன்னுமொருமுறை நன்றாக உற்றுப் பாருங்கள். உங்கள் மனம் என்ன சொல்கிறது? படத்தைப் பார்த்த உங்களுக்கே இப்படிக் குழப்பமென்றால் சிலையை நேரில் பார்த்தோருக்கு எப்படியிருக்கும்?

இந்த சிலையை நேரில் பார்த்த ஜாக்சன் ரசிகர்கள் எகிப்து இளவரசியின் மறு பிறவிதான் ஜாக்சன் என்று புதிய தகவலைப் பரப்பி வருகின்றனர்.சுண்ணாம்புக் கல்லினால் செய்யப்பட்ட இந்த சிலை 3000 ஆண்டுகள் பழமையானது.

இதனால் இந்த அருங்காட்சியகத்திற்கு ரசிகர்கள் குவிந்தவண்ணமுள்ளனர். சிலையைப் பார்க்கும் அவர்கள், ஜாக்சன் இந்த இளவரசியின் மறு பிறவிதான் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

கல்லறையில் தூங்கும் ஜாக்சன் இதைக் கேட்டால்.......
தொடரை வென்றது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில்,பாகிஸ்தான் அணி132 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆறுதலை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிது.


இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவது போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ஓட்டங்களை எடுத்தது. இம்ரான் நசீர் 35,முகமது யூசுப் 43,யூனிஸ் கான் 76,மிஸ்பா 73*
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளையிழந்து தடுமாறியது.
மகேல 31,கண்டம்பி 42*,மலிங்க பண்டாரா 31. இவர்களைத் தவிர ஏனைய வீரர்களனைவரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 34.2 ஒவரில் சகல விக்கெட்டுகளையுமிழந்து 147 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், நவீத்-உல்-ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஆட்டநாயகனாக பாகிஸ்தானின் நவீதும், தொடர் நாயகனாக இலங்கையின் திலன் துஷாராவும் தெரிவாகினர். முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் தொடர்களை பாகிஸ்தான் அணிக்கெதிராக இலங்கை வெற்றி கொண்டுள்ளது.

Sunday, August 9, 2009

தடுமாறிய அவுஸ்ரேலியா தலை நிமிர்கிறது

இங்கிலாந்து,அவுஸ்ரேலிய அணிகள் வரலாற்று சிறப்புமிக்க 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றன.

நான்காவது டெஸ்ட் போட்டி ஹெடிங்லியில் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்102ஓட்டங்கள்,அவுஸ்ரேலியா 445 ஓட்டங்கள். பின்னர் இரண்டாம் இன்னிங்சிலும் இங்கிலாந்து அணி தடுமாறியது. ஸ்டூவர்ட் பிராட்,ஸ்வான் இணைந்து அதிரடியாக ஆடினர். இவர்களது துடுப்பாட்டத்தால் அவுஸ்ரேலிய அணியின் வெற்றி கொஞ்சம் தாமதமானது.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 263 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.அவுஸ்ரேலிய அணி ஒரு இன்னிங்சினாலும் 80 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. மூன்று நாட்களுக்குள் இந்தப் போட்டி முடிவடைந்தது.

ஆஷஸ் தொடர் 1-1 என சமநிலையிலுள்ளதால் 20ஆம் திகதி ஓவலில் ஆரம்பமாகும் 5வது டெஸ்ட் முக்கியத்துவம் பெறப்போகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஆஷஸ் தொடரைக் கைப்பற்றலாம். அவுஸ்ரேலியாவா, இங்கிலாந்தா அசதப்போகிறது?

Friday, August 7, 2009

இந்தப் பதிவு வித்தியாசமானது

இந்தப் பதிவு வித்தியாசமானது.இருவரைப் பாராட்டி விருது கொடுக்கப்போகிறேன்....அவர்கள் யார்?தொடர்ந்து வாசியுங்கள்..........

தற்போது உலகெங்கிலும் இருக்கும் நண்பர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர வலைப்பதிவுகள் துணை நிற்கின்றன.அந்த வகையில் நாள்தோறும் புதிய புதிய வலைப்பதிவுகள் அறிமுகமாகின்றது. தங்கள் சொந்தக் கருத்துக்களை சுயமாக வெளியிடுகிறார்கள். இது எதிர்காலத்தில் தமிழ் வலைப்பதிவுகள் சாதனை படைக்கப்போகின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. வாசிப்புக் குறைந்துவரும் இக்காலகட்டத்தில் இந்த வலைப்பதிவுகள்மூலமாக வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது எனது கருத்து.

வலைப்பதிவுகளில் தற்போது உலவிவரும் "சுவாரஷ்யபதிவர் விருது" விடிவெள்ளி என்ற வலைப்பதிவை வைத்திருக்கும் பதிவுலக நண்பரான கார்த்திகன் கோபாலசிங்கம் மூலம் கடந்த ஜூலை கடைசி வாரம் எனது வலைப்பதிவுக்குக் கிடைத்திருந்தது. அந்த விருதினை 6 பேருக்குக் கொடுக்க வேண்டுமென்ற எழுதாத விதி ஒன்று இருக்கிறது. அந்த"சுவாரஷ்யபதிவர் விருதினை" 2 பதிவாளர்களுக்கு நான் கொடுக்கப்போகிறேன்.(எனக்கு வீசப்பட்ட பந்தினை இவர்களுக்கு நான் வீசப் போகிறேன்)

முதலாமவர் 'டயானா'.என்னுடன் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகப் பணி புரிபவர். இவர் இசை சம்பந்தமான பல பதிவுகளைத் தந்துள்ளார்.யாரும் அதிகம் தெரிந்திராத விடயங்களைத் தேடி அறிந்து பதிவுகளைத் தருவதில் வல்லவர். இவரது வலைப்பதிவு முகவரி http://wisdomblabla.blogspot.com/ நான் வலைப்பதிவில் பதிவுகளை பதிவிட முக்கிய காரணமாக அமைந்தவர் டயானா.எனக்கு "சுவாரஷ்யபதிவர் விருது" கிடைக்க முன்னர் இவருக்குக் கிடைத்திருக்க வேண்டும்.

இரண்டாமவர் 'ரமணன் சந்திரசேகரமூர்த்தி'. இவரும் ஊடகத்துறையோடு சம்பந்தப்பட்டவர்.ஒலிபரப்புத் துறையில் அறிவிப்பாளராக பணி புரிந்தவர்.தனது ஒலிபரப்புத் துறையில் ஏற்பட்ட அனுபவங்களை மட்டுமன்றி சிறந்த பதிவுகளைத் தனக்கேயுரிய மொழி நடையில் ஆழமாக சிந்திக்க வைக்கும வகையில் தருபவர். இவரது வலைப்பதிவு முகவரி http://ramanansblog.blogspot.com/. நல்ல பதிவுகளை தரும் ரமணன் இன்னும் பல பதிவுகளைத் தரவேண்டும்.

இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். (பந்து வீசியாச்சு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்) உங்கள் பதிவுகள் தொடரட்டும். அனைத்து வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Wednesday, August 5, 2009

மர்லின் மன்றோ

கடந்த இரண்டு நாட்களாக விளையாட்டுலகில் பெரிதாக ஒன்றுமில்லை.நொறுக்குத் தீனி போல பதிவுகள் தந்து பழக்கப்பட்ட எனக்கு பதிவொன்று தர மனம் துடித்தது. இன்று ஓய்வு நாள்(எனக்கு வேலை) உங்களுக்கு. எண்ணங்கள் சிறகடித்தன. என்ன பதிவை கொடுக்கலாம் சரி வாசித்தே பாருங்கள் புரியும்.


உலகிலேயே கவர்ச்சியின் மூலம் சினிமா உலகில் புகழின் உச்சியைத் தொட்டவர் மர்லின் மன்றோ.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ.
உலக இளைஞர்களின் கவர்ச்சிக் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம்,இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.


மர்லினின் அபிரிதமான அழகும்,பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும்,36 வயதில் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்த அவரின் மன நெருக்கடியை,ஆழமான சோகத்தை மறைக்கும் கடினமான திரைச்சீலையாகவே இன்றும் உள்ளது.


மர்லினின் இளமைப் பருவம் கொடியது.பிறந்த பன்னிரெண்டாவது நாளே வறுமை காரணமாக வளர்ப்புப் பெற்றோர்களிடம் அவள் தாரை வார்க்கப்பட்டாள்.பதினாறு வயது வரை வெவ்வேறு இடங்கள்,வெவ்வேறு வளர்ப்புப் பெற்றோர்கள் என அனாதைத்தனமான வாழ்க்கை. இடையில் மர்லினின் தாயார் மனச்சிதைவுக்கு உள்ளாகி மனநல காப்பாகத்தில் சேர்க்கப்பட,அவள், தான் ஒருபோதும் விரும்பாத அனாதை வாழ்க்கைக்கே திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவர்
அனாதை விடுதியில்தான் வளர்ந்தார் என்பது வியப்புக்குரிய செய்தி.


ஆரம்பத்தில் தனது 16ஆவது வயதில் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்கும் மாடல் அழகியாகத்தான் பணி புரிந்தார். இவரது படங்கள் சில பத்திரிகைகளில் பிரசுரமாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் புகைப்படங்கள்தான் அவருக்கு சினிமா வாய்ப்புக்களை ஏற்படுத்தின.ஆரம்பத்தில் 125 டாலரை சம்பளமாகப் பெற்ற மர்லின் மன்றோ பின்னர் 3500 டாலர்கள் வரை சம்பளத்தைப் பெற்றார்.


உலக ரசிகர்களின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த இவர் பல படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.


தனது 16 ஆவது வயதில் 1942ஆம் ஆண்டு திருமணம் புரிந்து கொண்டார்.
முதல் திருமணமும் மகிழ்ச்சியானதாக இல்லை.வளர்ப்பு பெற்றோர்களால் நடத்தி வைக்கப்பட்ட அவசர திருமணம் அது. 4ஆண்டுகளின் பின்னர் விவாகரத்து செய்து கொண்டார். அதன் பின் இரண்டாவது திருமணம்.
இரண்டாவது திருமணமும் மன நிறைவானதாக அமையவில்லை.

இந்த காலகட்டத்தில் மதுவும் நோயும் மர்லினை வாட்டி எடுத்தன. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடியுடனான அறிமுகம் மர்லினுக்கு கிடைத்தது. ஜனாதிபதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவர் பாடியது,அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. மர்லின் ஒரு உளவாளி.ஜான் கென்னடி மூலம் அமெரிக்காவின் ரகசியங்கள் தெரிந்துகொள்கிறார் என்று பலராலும் கூறப்பட்டது.


இறுதியில் 1962 ஆகஸ்ட் 5 தனது அறையில் இறந்து காணப்பட்டார். அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இவரது உடலைப் பெற்றுக்கொள்ள கணவனோ,காதலனோ,உறவினர்களோ யாருமில்லை.இருந்த ஒரே உறவான மர்லினின் தாயோ மகளின் மரணத்தை உணர முடியாத மனச்சிதைவுடன் மனநல காப்பாகத்தில் இருந்தார்.


மர்லின் சிறந்த பாடகி."லேடீஸ் ஆ·ப் தி கோரஸ்" படத்தில் மூன்று பாடல்கள் பாடியிருக்கிறார். மொத்தமாக ௩௦ இற்கும் மேற்ப்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. இதைவிட 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


என்றென்றும் சர்வதேச திரைப்பட ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த இந்தக் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோ, தனது 36ஆவது வயதில் மரணத்தை அணைத்துக்கொண்டார். இவரது மரணம் இன்னும் மர்மமே.........


இன்று இவரது 47 ஆவது நினைவு தினம்.

Monday, August 3, 2009

பாகிஸ்தானின் பரிதாபம்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இலங்கை தொடரை தன் வசப்படுத்தியுள்ளது.

தம்புள்ளையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. கம்ரான் அக்மல் 45, யூனிஸ் கான் 44, உமர் அக்மல் 66 ,அப்ரிதி 32.
289 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு இலங்கையணி துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்தது.உபுல் தரங்க, மகேல ஜோடி அதிரடியைக் கொடுக்க இலங்கையணி இலகுவாக வெற்றி பெற்றது. மகேல 123,தரங்க 76, சங்ககரா37*
இலங்கை அணி 46.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.

முரளியின் மோசமான பந்துவீச்சு
முரளி 10 ஓவர்கள் பந்து வீசி 64 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.இலங்கை ஆடுகளத்தில் பந்துவீசி கூடுதல் ஓட்டங்களைக் கொடுத்த 2ஆவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. இதற்கு முதல் 2009 ஆம் ஆண்டு இந்தியாவிற்கெதிராக கொழும்பில் நடைபெற்ற போட்டியில்10 ஓவர்கள் பந்து வீசி 66 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.



ஒரே நாளில் தம்புள்ளையில் சாதனைமிகு ஓட்டங்கள்

தம்புள்ளை மைதானத்தில் பாகிஸ்தான் அணி கூடுதல் ஓட்டங்களைப்(288)பெற்ற அணியாக மாறி சாதனை படைக்க,சில மணித்தியாலங்களில் இலங்கை அந்த சாதனையை(289 ஓட்டங்கள்) முறியடித்தது. இதற்கு முதல் இந்த மைதானத்தில் இலங்கையணி இந்தியாவுக்கெதிராக 2004 ஆம் ஆண்டு 282 ஓட்டங்களைப் பெற்றிருந்ததே கூடுதல் ஓட்டங்களாக இருந்தது.

மகேல அசத்தல்
மகேல, உபுல் தரங்கவுடன் இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கி அதிரடியாக சதமடித்தார். 2 ஆண்டுகளின் பின்னர் மகேல பெற்ற முதல் சதமிது. இது அவரது 11ஆவது சதம். மகேல 123ஓட்டங்களைக் குவித்தார். இது தம்புள்ளை மைதானத்தில் ஒரு வீரர் எடுத்த கூடுதலான ஓட்டங்களாகும். ஆட்ட நாயகன் விருதும் மகேல வசமானது.



சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரையும் தன் வசப்படுத்திய குமார் சங்ககார தலைமயிலான இலங்கை அணி,சொந்த மண்ணில் முதன்முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரையும் வென்று வரலாறு படைத்துள்ளது.கடந்த 1985/86,1994,2005/06இல் நடந்த தொடர்களில் தோல்வியடைந்த இலங்கை அணி இம்முறை சாதித்துள்ளது.
குமார் சங்ககார தலைமயிலான இலங்கையணி இன்னும் சாதிக்கும்.....

Sunday, August 2, 2009

நட்புக்கு ஒருநாள் போதுமா

உலகில் உன்னதமான உறவு எது என்று கேட்டால் நட்பு என்பார்கள் பலர். உணர்வுகளோடு சங்கமிக்கும் உன்னதமான உறவு இது.
உலகில் தாய் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன் அல்லது நண்பி காட்டும் தூய்மையான அன்புதான். அன்று முதல் இன்று வரை விலைமதிப்பற்ற சொத்தாக நட்பு போற்றப்பட்டு வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் சொந்த உறவுகளே நம்மை வெறுக்கும்போது நட்புள்ளம் கொண்ட நண்பர்களே எம்மை அரவணைக்கிறார்கள்.


ஒவ்வொரு தினத்தைக் கொண்டாடவும் ஒரு காரணம் இருக்கும். அதற்கு இந்த நட்பு தினமும் விதிவிலக்கல்ல.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு ந‌ட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில்,ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து,அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்றிலிருந்து அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும்,நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல
வரவேற்பிருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ மாட்டார்கள். ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது.

ஒ‌‌‌‌வ்வொரு மனிதனுக்கும் அவனது வா‌ழ்‌க்கை‌யி‌ல் நண்பர்களின் தேவை அவசியமாகிறது. பெற்றோருக்கு அடுத்ததாக மகிழ்ச்சி, துக்கம் இவற்றில் நண்பர்களின் பங்குபற்றல் அதிகமாகவே உள்ளது. பெற்றோரிடம் கூற முடியாத விடயங்களை நண்பர்களிடம் கூறி தீர்வுகளைக் கண்டவர்கள் நம்மில் பலர்.

இ‌ன‌‌ம்,மொ‌ழி,பால் பாகுபாடின்றி அன்பின் அடையாளமாக மலர வேண்டும் நட்பு. நட்பு விசித்திரமானது.விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது.

நட்பு உன்னதமானது.அதனை மதித்து அதனை கௌரவித்து நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவோம்.

"எனக்கு முன்னால் நடந்து செல்லாதீர்கள்.உங்களைப் பின்பற்றி வர நான் விரும்பவில்லை.என் பின்னால் நடந்து வராதீர்கள்.உங்களுக்கு முன்னோடியாக இருக்க நான் விரும்பவில்லை.என்னுடனே நடந்து வாருங்கள் என் ந‌ண்ப‌ர்களாக‌"


 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates