Pages

Friday, February 5, 2010


பாகிஸ்தான் கிரிக்கெட் மீண்டும் எழுச்சி பெறுமா?

உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகளுள் பாகிஸ்தானும் ஒன்று. ஆனால் இன்று அந்த அணி, வீழ்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது. பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும் இன்னும் அணிக்குள் நிலவும் குளறுபடிகளே பாகிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்குக் காரணம்.

கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கெதிராக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்ற இலங்கை அணி வீரர்கள், லாகூரில் தாக்குதலுக்கு உள்ளாகினர். அதன் பின் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி ஆரம்பமானது. பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க எந்த ஒரு சர்வதேச அணியும் முன்வரவில்லை. இதனால் தமது நாட்டில் நடைபெற வேண்டிய கிரிக்கெட் போட்டிகளை டுபாயில் நடத்தி வருகிறது பாகிஸ்தான்.இதனால் பாக். கிரிக்கெட் சபை வருமானமின்றித் தவிக்கிறது. இதைவிட 2010 உலக கிண்ணப் போட்டிகளை நடத்தும் நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தானை, சர்வதேச கிரிக்கெட்பேரவை நீக்கியதும் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானின் பெருமையைக் குறைத்து விட்டதெனலாம்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்கு பின் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான விரிசல் அதிகரிக்க, இரு நாட்டு அணிகளுக்குமிடையிலான போட்டிகளும் ரத்து செய்யப்பட்ட்டன. இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இ ல்லை. பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள், பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.இதனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு, ஐ.பி.எல் மூலம் கிடைக்கவிருந்த வருமானமுமில்லை.

பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட்சபை. இதனால் அணியில் அடிக்கடி பிளவுகள்.

யூனிஸ் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி, கடந்த ஆண்டு "20-20" உலக கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. அதன் பின் சூதாட்ட புகாரில் சிக்கிய யூனிஸ் கான்,அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது முகமது யூசுப் அணித் தலைவர் .இவரது தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடுமென எதிர்பார்க்கப்பட்டபோதும் ஏமாற்றமே மிஞ்சியது. அவுஸ்ரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ,20-20தொடர்களை இழந்துள்ளது. வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லை என ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகள் தொடர, அணித் தலைவரையும் பாக் கிரிக்கெட் சபையையும் மாற்ற வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்கூறுகின்றனர்.

கில்லாடி அப்ரிடி
பேர்த்தில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணித் தலைவர் ஷாகித் அஃப்ரிடி, இரண்டு முறை பந்தை தனது பற்களால் கடித்து சேதப்படுத்தியதை கண்ட தொலைக்காட்சி நடுவர், கள நடுவருக்குத் தெரியப்படுத்தினார்.அதன்பின்போட்டித் தீர்ப்பாளர் ரஞ்சன் மடுகல்ல நடத்திய விசாரணையில் , தனது செயலுக்கு அஃப்ரிடி வருத்தம் தெரிவித்தார். இருந்தாலும் இரண்டு "20-20" போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தவறு செய்ததை ஒப்புக் கொண்ட அஃப்ரிடி, அனைத்து அணிகளும் பந்தை சேதம் செய்வதாகவும் குழப்பமான மனநிலையில் இருந்ததால் தான் பந்தை சேதப்படுத்தியதாகவும், இது தவறு தான். இனிமேல் இது போன்ற முட்டாள்தனமான செயலை செய்ய மாட்டேன், இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்என்றும் கூறினார்.

பந்தைப் பதம் பார்க்கும் அஃப்ரிடி

அஃப்ரிடி,கடந்த காலங்களில்.....
* 2005 இல் இங்கிலாந்துக்கெதிரான பைசலாபாத் டெஸ்டில், தனது ஷூவில் உள்ள கூரிய ஆணியால், ஆடுகளத்தை சேதப்படுத்தினார். இதனால்,ஒரு டெஸ்ட் , இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.

* 2007 இல் தென்னாபிரிக்காவுக்கெதிரான ஒருநாள் போட்டியின் போது (செஞ்சூரியன் பார்க்) ஆட்டமிழந்து சென்ற இவர், ரசிகரை தனது துடுப்பினால் தாக்கியமை.

* இந்தியாவுக்கெதிராக நாக்பூரில் நடந்த (2007) ஒருநாள் போட்டியின் போது, காம்பிருடன் தகராறு.

* பேர்த்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பந்தைக் கடித்து சேதப்படுத்தியதால், இரண்டு "20-20" போட்டிகளில் பங்கேற்க தடை.

பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்துவது ஒன்றும் புதிதான விடயமல்ல. இதற்கு முன் கடந்த 2000 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ், போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இம்ரான் கான், இன்சமாம் போன்ற வீரர்களும் இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியவர்கள்.
கடந்த செப்டெம்பர் 2009 இல் பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த "20-20' உள்ளூர் போட்டியில் சொகைல் தன்வீர், சொகைல் கான் உள்ளிட்ட ஆறு வீரர்கள் இந்த பிரச்சினையில் சிக்கி தடையை எதிர்நோக்கினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் அணித் தலைவர், பயிற்சியாளர்,தெரிவுக் குழுவினர் என அடிக்கடி மாற்றங்கள் தொடர்வதால் வீரர்கள் மத்தியில் குழப்பம் தொடர்கிறது.

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடர், ஒருநாள் கிரிக்கெட்தொடர்,20-20கிரிக்கெட் தொடர் ஆகிய மூன்று தொடர்களிலும் படு தோல்வியடைந்து தாயகம் திரும்புகிறது பாகிஸ்தான் அணி.

மூன்று தலைவர்களின் கீழ் விளையாடியும் ஒரு போட்டியில் கூட பாகிஸ்தானால் வெல்லமுடியாமல் போய்விட்டதே
எதிர் காலத்தில் பாகிஸ்தான் அணிக்குள் பல மாற்றங்கள் நிகழும் என்பதே என் கணிப்பு.
பாகிஸ்தான் கிரிக்கெட், வீழ்ச்சியிலிருந்து எழுச்சி பெற வேண்டுமானால்அணிக்குள் நிலவும் பிளவுகளை நீக்கி போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates