Pages

Thursday, November 1, 2012


                    ஆடுகளத்திற்கு விடை கொடுத்தார்  சைமன் டாபெல்


சர்வதேச கிரிக்கெட்டுலகில் பல நடுவர்கள் உருவாகினாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடிப்பர்.அப்படிப்பட்ட நடுவர்களிலொருவர் சைமன் டாபெல்(Simon Taufel).ஆடுகளத்தில் துணிகரமாக வழங்கும் சரியான தீர்ப்புகள்,ஆடுகளத்தில் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் நடு நிலைமை வகிப்பது என்பன இவருக்கேயுரிய தனிச் சிறப்பு.இவையே கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளமைக்கான காரணமெனலாம்.கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களிடத்திலும் அதிக மரியாதையைப்  பெற்ற நடுவர் டாபெல் என்றும் கூறலாம்.

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான  அவுஸ்ரேலியாவின் சைமன் டாபெல் கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்த T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டுலகில் நடுவர் பணிக்கு விடை கொடுத்தார்.

41 வயதான டாபெல் தனது 27ஆவது வயதில் 1999 ஆம் ஆண்டு சிட்னியில்  அவுஸ்ரேலிய-இலங்கை அணிகளுக்கிடையேயான ஒருநாள் சர்வதேச தொடரில் நடுவராக அறிமுகமானார்.2000ஆம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில்(அவுஸ்ரேலிய - மேற்கிந்தியத் தீவுகள்) மெல்பேர்னில் தனது முதல் டெஸ்ட் நடுவர் பொறுப்பை ஏற்றார்.2007 ஆம் ஆண்டு கென்ய,நியூசிலாந்து  அணிகளுக்கிடையே தென்னாபிரிக்காவின் டேர்பனில் நடைபெற்ற T 20 போட்டியே இவர் நடுவராக செயற்பட் முதல் T20 போட்டி.

13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 74 டெஸ்ட்,174 ஒரு நாள் சர்வதேச போட்டிகள்,34 T20 போட்டிகளில் நடுவராக செயற்பட்டிருக்கிறார். 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 முறை சர்வதேச கிரிகெட் பேரவையின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றிருக்கிறார். இது அவரது நடு நிலைமைக்குக் கிடைத்த உயரிய கௌரவம்.

2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த T20  உலகக்கிண்ண தொடர்களிலும் 2004 ஆம் ஆண்டு ஐ.சி.சி யின் சாம்பியன் கிண்ண இறுதிப் போட்டியிலும் நடுவராக செயற்பட்டுள்ளார்.

சிட்னியில் சிறந்த பாடசாலை  கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த டாபெல் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்தார்.ஆனால் இவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.இவருக்கு ஏற்பட்ட முதுகு வலி இவரது கிரிக்கெட் கனவை தகர்த்தது.கிரிக்கெட் விளையாட்டை தொடர முடியாமல் இளம் வயதிலேயே நடுவராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மைக்கல் ஸ்லேட்டர்,அடம் கில்கிறிஸ்ட் உட்பட்ட முன்னணி வீரர்களுடன் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில்  விளையாடியுள்ளார்.
 சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  சிறந்த நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இடம் பெற்றிருந்த சைமன் டாபெல் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.சி.சி புதிதாக உருவாக்கியுள்ள ஐ.சி.சி நடுவர் பயிற்சிக்குழுவில் நடுவர் செயற்திறன் மற்றும் பயிற்சி முகாமையாளராக செயலாற்றவுள்ளார்.

தன் கிரிக்கெட் வாழ்கையில் சிறந்த முடிவுகளை வழங்கிய இவர் தனது தனிப்பட்ட  வாழ்க்கையிலும் சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்.இவரைப் போன்ற சிறந்த நடுவர்களை இனி ஆடுகளங்களில் நமக்குக் காணக் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.

வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைப்போம்..

Thursday, September 20, 2012

                                          
                                      T20 திருவிழா

 20 - 20 போட்டிகள் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது அதுவும் உலகக் கிண்ணப் போட்டிகள் என்றால் இன்னும் விறுவிறுப்பாய்  இருக்கும்.நான்காவது  T20 உலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டிகள்  இம்மாதம் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் 7ஆம் திகதி  வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.
இதில் 12 நாடுகள் பங்கேற்கின்றன.முதன்முறையாய் ஆசிய நாடொன்றில் இடம்பெறும் T20 உலகக் கிண்ணப் போட்டிகள் என்ற பெருமை இந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்குண்டு.அந்தப் பெருமை நம் நாட்டிற்குக் கிடைத்தமை இலங்கை ரசிகர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியே.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று இலங்கையில் நடைபெறுவது இதுவே முதற்தடவை.முதன் முறையாய் இலங்கையில் அனைத்துப் போட்டிகளும் இடம்பெறவுள்ளது.அதுவும் ஆடவர்,மகளிர் T20 உலகக்கிண்ண    போட்டிகள் ஒரே நாட்டில் நடைபெறுவது இன்னும் சிறப்பு.


 2007ஆம் ஆண்டு,T20 உலக உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தென்னாபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது.மஹேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது T20 உலகக்கிண்ணத்தை,பாகிஸ்தானைத் தோற்கடித்து வென்றது.2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 2ஆவது T20 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து பாகிஸ்தானும்,2010ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த 3ஆவது உலகக்கிண்ண போட்டியில்  அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்தும் உலகக்கிண்ணத்தை கைப்பற்றின.


இம்முறை போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு  அணிகள்
A        இந்தியா,இங்கிலாந்து,ஆப்கானிஸ்தான்.
B       அவுஸ்திரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,அயர்லாந்து.
C       இலங்கை,தென்னாபிரிக்கா, சிம்பாபே.
D     பாகிஸ்தான், நியூசிலாந்து,பங்களாதேஷ்.

குழு நிலைப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

 இலங்கை
மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை அணியில் புதுமுக வீரர்களாக 19 வயது சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சய,ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான டில்ஷான் முனவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் SLPL போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்,உலகக்கிண்ண அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உபாதை காரணமாக கடந்த 7 மாதமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிசும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தியாவுடனான ஒருநாள் தொடரின்போது காயமடைந்த சங்ககாரா,நுவன் குலசேகர ஆகியோர் உடற் தகுதியோடு மீண்டும் அணியில் இடம்பெறுவது இலங்கைக்கு பலமே.திசர பெரேரா,அஞ்சலோ மத்தியுஸ்,ஜீவன் மென்டிஸ் ஆகிய சகலதுறை வீரர்கள் எதிரணிக்கு சவால் விடுவார்கள்.வேகப்பந்து வீச்சில் லசித் மலிங்க எதிரணியை நிலை குலைய வைத்தால் குறைவான ஓட்டங்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்.ஆனால் அண்மைக் காலமாக இவரது பந்து வீச்சு ஓவரில் எதிரணி அதிக ஓட்டங்களைக் குவிக்கிறது.லஹிரு திரிமானே  தினேஷ் சந்திமால் ஆகியோர் மத்திய வரிசையில் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்.டில்ஷான் ஜோடி ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக  களமிறங்கி அதிரடியாய் ஓட்டங்களைப் பெற வேண்டும்.சொந்த நாட்டில் அதிகம் பரீட்சயமான மைதானங்களில் விளையாடுவதால் அதிகம் சாதிக்கலாம்.   

 பாகிஸ்தான்
T20  உலகக்கிண்ண பாகிஸ்தான் அணி  திறமை வாய்ந்தது.இம்ரான் நசிர்,அப்துல் ரசாக் கம்ரன் -உமர் அக்மல் சகோதரர்கள் ஆகியோர் ஆட்டத்தின் தன்மையை மாற்றக் கூடியவர்கள்.அணித் தலைவர் முஹட் ஹபீசின் சகலதுறை ஆட்டம் அணிக்கு திருப்புமுனையாக இருக்கும்.அஃப்ரீடியின் ஆட்டம் சூடு பிடித்தால் எதிரணியின் நிலைமை கவலைக்கிடம்.சரிவை எதிர்நோக்கும் அணியை மீட்டு,வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய திறமை படைத்தவர்அப்துல் ரசாக்.வேகப்பந்து வீச்சாளர்கள் உமர் குல்,சொஹைல் தன்வீர்,அப்துல் ரசாக்,சுழற்பந்து வீச்சாளர்கள் அஃப்ரீடி,அஜ்மல்,என்று தரமான பந்து வீச்சாளர்கள் இருப்பதால் எதிரணிக்கு சிக்கல் இருக்கும்.மனம் வைத்து விளையாடினால் பாகிஸ்தான் அதிகம் சாதிக்கலாம்.
  நியூசிலாந்து
ரோஸ் ரெய்லர்  தலைமையில் நியூசிலாந்து களமிறங்குகிறது.அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கலமும்,ரோஸ் ரெய்லரும் அணியின் பலங்கள்.சகலதுறை வீரர்களான,ஜேகப் ஓரம்,ஜேம்ஸ் பிராங்ளின் ஆகியோரின் சகலதுறை ஆட்டமும் கைல் மில்ஸ்,டிம் சௌதி ஆகியோரின் வேகமும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.அனுபவ வீரரான வெட்டோரியின் சுழற்பந்தில் அதிக விக்கெட்டுகள் வீழுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது.மார்டின் கப்தில்,வில்லியம்ஸன் ஆகிய துடுப்பாட்ட வீரர்கள் நிலைத்து விளையாடினால் அதிக ஓட்டங்களைப் பெறலாம்.எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தும் அணியாக மாறும் நியூசிலாந்து.

மேற்கிந்தியத்தீவுகள்
டரன் சமியின் தலைமைத்துவத்தில் இறுதிவரை முன்னேறும் அணியாக எதிர்பார்க்கப்படுகிறது.அதிரடி மன்னன் கிரிஸ் கெய்ல்,இம்முறை அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்.இவரது அதிரடியை நினைத்தே இப்போதே பல அணிகள் கலங்கிப் போயுள்ளன.கெய்ரன் போலார்ட்,டுவைன் ஸ்மித்,மார்லன் சாமுவெல்ஸ்,டரன் பிராவோ,ஆண்ட்ரே ரசல் ஆகியோரின் சகலதுறை ஆட்டம்அணிக்கு முக்கிய பலம்.சுனில் நரைனின் சுழல் பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைக்கும் என்றே தோன்றுகிறது.சகலதுறை வீரர்கள் பலர் அணியில் இருப்பதால் இந்த அணி அரை இறுதி வரை முன்னேறும்.  
 
  தென்னாபிரிக்கா
அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய வீரர்களிலொருவர் ஹஷிம் அம்லா.அண்மைக்காலமாக டெஸ்ட்,ஒருநாள்,T20 கிரிக்கெட்டில் அபார திறமையை வெளிக்காட்டி வருகிறார்.அணியின் வெற்றி தோல்விகளை தனி நபராகத் தீர்மானிக்கும் இன்னொருவர் ஜாக் கலிஸ்.இவரது அனுபவம் வாய்ந்த அதிரடி ஆட்டம் அணிக்குப் பலம் சேர்க்கும்.பந்துவீச்சிலும் இவர் கில்லாடி.
துடுப்பாட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் ஏ.பி.டீ.விலியர்ஸ்,டுமினி,ரிச்சர்ட் லீவி ஆகியோர் விரைவாக ஓட்டங்களைக் குவிக்கக் கூடியவர்கள்.இது அணிக்குக் கூடுதல் பலம்.வேகப்பந்துவீச்சாளர்கள் டேல் ஸ்டெய்ன்,மோர்னி மோர்கெல்,சொட்சொபே,வெய்ன் பார்னல் ஆகியோர் சிறப்பாகப் பந்து வீசி துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைப்பர்.சுழலில் ஜோஹன் போத்தா துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக விளங்குவாரென்றே எதிர்பார்க்கலாம்.சிறந்த துடுப்பாட்டம்,பந்து வீச்சு,களத்தடுப்பு என சகல துறைகளிலும் திறமையான அணியாகவே களமிறங்குகிறது தென்னாபிரிக்கா.

  இந்தியா
இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்.இந்திய அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் ஷேவாக்,கம்பிர்,விராத் ஹோலி,டோனி  இருப்பதால் அதிகம் சாதிக்கலாம்.புற்றுநோய் தாக்கத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பியுள்ள யுவராஜின் வருகை இந்தியாவுக்கு மேலதிக பலமே.மிகுந்த உற்சாகத்தோடு அதே அதிரடியை யுவராஜிடம் காண முடிகிறது.ரெய்னாவின் மத்திய வரிசை துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் வேண்டும்.இதைவிட இர்பான் பத்தான் இலங்கை ஆடுகளங்களில் அதிகம் சாதிக்கக் கூடிய வீரர்.இர்பான் பத்தான்,மனோஜ் திவாரி போன்ற சகலதுறை வீரர்களின் பங்களிப்பு சிறப்பாய் இருந்தால் அணி முன்னோக்கி செல்வது இலகு.வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீர் கான்,லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோர் இலங்கை ஆடுகளங்களில் திறமையை நீருபிப்பர்.ஹர்பஜன் சிங் நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு வந்தாலும் அஷ்வினை டோனி அதிகம் நம்பியுள்ளதால் இறுதி அணியில் ஹர்பஜன் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்பது கேள்விக்குறியே.


  இங்கிலாந்து
இங்கிலாந்து அணி ஸ்டூவர்ட் ப்ரோட் தலைமையில் களமிறங்குகின்றது.அதிரடி வீரரான கெவின் பீட்டர்சன் அணியிலில்லை.கடந்த 2010ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணத்தை  இங்கிலாந்து கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தவர் பீட்டர்சன்.தொடர்நாயகன் விருதும் பெற்றிருந்தார்.இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவரான ஸ்ட்ராசை விமர்சித்து,தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ் சர்ச்சையால் தேர்வுக்குழுவினர் உலகக்கிண்ண அணியில் பீட்டர்சனை சேர்க்கவில்லை.கடந்த முறை இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத்தை  வென்றபோது,அணியில் இடம்பெற்றிருந்த பல வீரர்கள் தற்போதைய அணியிலும் உள்ளனர்.எனினும் T20  போட்டிகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஆணிவேராக விளங்கிவந்த பீட்டர்சன் உலகக்கிண்ண அணியில் இல்லாமை அந்த அணியின் வெற்றியைப் பாதிக்கலாம்.பந்து வீச்சில் கிரேம் ஸ்வானின் சுழல் இங்கிலாந்துக்குக் கைகொடுக்கும்.டிம் பிரெஸ்னன்,ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் அசத்துவர்.அது மட்டுமன்றி துடுப்பாட்டத்திலும் இறுதிக் கட்டத்தில் ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலு சேர்ப்பார்கள்.லூக் ரைட்,கிரேக் கீஸ் வெட்டர்,ரவி போபார,மோர்கன் போன்ற வீரர்கள் இருந்தாலும் இவர்கள் துடுப்பாட்டத்தில் சாதிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

 அவுஸ்ரேலியா
இம்முறை அவுஸ்திரேலிய அணி அனுபவம் குறைந்த வீரரான ஜோர்ஜ்  பெய்லி தலைமையில் களமிறங்குகின்றது.அண்மைக் கால தோல்விகளால் தரவரிசையிலும் பின் நோக்கி நகர்ந்துள்ள அவுஸ்திரேலிய அணியில் அதிக வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளடங்கியுள்ளனர்.T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கெமரூன் வைட் மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார்.டானியல் கிரிஸ்டியன்,மைக்கல் - டேவிட் ஹசி சகோதரர்களின்  பொறுப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு முக்கியம்.டேவிட் வோர்னர்,ஷேன் வாட்சன் ஆகியோரின் அதிரடியை அதிகம் நம்பியுள்ளது அவுஸ்திரேலியா.இவர்களது இணைப்பாட்டத்தை எதிரணி விரைவாக தகர்த்தால் எதிரணியின் வெற்றி வாய்ப்பு சுலபமாகும். 41வயதுடைய பிரட் ஹொக் அணியில் இருப்பது அணிக்கு சாதகமே.இளம்,அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியிலிருப்பது ஆரோக்கியமாக இருக்கும்.


பங்களாதேஷ்
முஷ்பிகுர் ரகீம் தலைமையில் களமிறங்கும் பங்களாதேஷ்,அதிக அனுபவமில்லாத அணியென்று சொல்லப்பட்டாலும் அதிரடியாய் விளையாடும்.இந்த அணியில் துடுப்பாட்டத்தில் அதிகம் சாதிக்கத் தவறும் அஷ்ரபுல் இன்னும் அணிக்குள் இருப்பது மாயமே.அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலின் அதிரடி தொடர்ந்தால் அணியின் ஓட்ட எண்ணிக்கையும் அதிகரிக்கும்.ஷாகிப் அல் ஹசன் சகல துறை வீரராக சாதிப்பார்.அதிரடியாய் ஆடக் கூடிய பல வீரர்கள் இருந்தாலும் இவர்கள் அவசரப்படாமல் நிதானமாய் விளையாடினால் எதிரணிக்கு சிக்கலைக் கொடுக்கலாம்.

சிம்பாபே
சிம்பாப்வே அணி பிரெண்டன் ரெய்லர் தலைமையில் களம் காண்கிறது.எல்டன் சிக்கும்புரா,ஹமில்டன் மசகட்சா,பிரெண்டன் ரெய்லர் போன்ற வீரர்கள் துடுபாட்டத்தில் அணிக்குப் பலமாய் இருப்பர்.உட்செயா,ரேய் ப்ரைஸ்,மற்றும் ஏனைய வீரர்களின் பங்களிப்புடன் விக்கெட் வேட்டை தொடரும்.முதல் T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பலர் விளையாடுவதால் அழுத்தங்கள் அதிகம்.அதிக சவாலை எதிர்கொள்ளவேண்டி வரும்.

அயர்லாந்து
வில்லியம் போர்ட்டர் பீல்ட் தலைமையில் களம் காணும் அணி அயர்லாந்து.எட் ஜோய்ஸ்,கெவின் ஒ பிரைன்,ரங்கின்,ட்ரென்ட் ஜோன்ஸ்டன் ஆகியோர் அனுபவ வீரர்கள்.இந்த அணி பலம் பொருந்திய அணிகளுக்கு சவால் விடும் அணியாக மாறும் என்றே தோன்றுகிறது.

ஆப்கானிஸ்தான்

நவ்ரொஸ் மங்கல் தலைமையிலான  ஆப்கானிஸ்தானில் அதிகம் அறிமுகமில்லாத வீரர்கள் உள்ளனர்.இந்த உலகக் கிண்ணத் தொடர்தான் மூன்று வீரர்களுக்கு அறிமுகப் போட்டிகளாக அமையவுள்ளது.இவர்கள் சாதிப்பார்களா என்பதே கேள்விக்குறி.பயிற்சிப் போட்டியில் இலங்கை A அணியைத் தோற்கடித்துள்ளது.ஓட்டங்களை வேகமாகக் குவிக்க முனைப்புக் காட்டும் வீரர்களின் தன்னம்பிக்கை சிறப்பானதே. 

 இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் பெரும்பாலும் இந்தியா,இங்கிலாந்து அவுஸ்ரேலியா,மேற்கிந்தியத்தீவுகள்,இலங்கை,தென்னாபிரிக்கா,பாகிஸ்தான்,நியூசிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.ஆப்கானிஸ்தான்,அயர்லாந்து,சிம்பாபே, பங்களாதேஷ் அணிகள் T20 போட்டிகளில் அனுபவம் குறைந்த அணிகளாகத் தென்பட்டாலும் அண்மைக் கால இவர்களது பயிற்சிகள் எதிரணிகளுக்கு கடும் சவாலைக் கொடுக்கும் என்றே தோன்றுகிறது.
பன்னிரண்டு அணிகளும் அட்டகாசமாய் அசத்தக் காத்திருக்கின்றன.விறுவிறுப்பான போட்டிகள் இனி கிரிக்கெட் ரசிகர்களைப் பரவசப்படுத்தப்போகிறது.கிரிக்கெட் கொண்டாட்டத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.பல அதிர்ச்சிகள்,ஆச்சரியங்கள் இம்முறையும் அரங்கேறும்.


Sunday, July 8, 2012

      சாதனையுடன் சாம்பியன் பட்டம்  பெடரர் வசம்......

 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர்,இங்கிலாந்து வீரர் அன்டி முரே ஆகியோர் மோதினர் இதில் 4-6, 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அன்டி முரேயை தோற்கடித்து பெடரர் சாம்பியன் ஆனார்.இது இவரது 7 ஆவது விம்பிள்டன் பட்டமாகும்.இதன் மூலம் விம்பிள்டன் பட்டத்தை அதிக (7) முறை வென்ற அமெரிக்காவின்  பீட் சாம்ராஸின்  சாதனையை சமன் செய்தார்  பெடரர்.

 
 விம்பிள்டன் பட்டத்தை 7 முறையும் (2003,2004,2005,2006,2007,2009,2011) அமெரிக்கா பகிரங்க  பட்டத்தை 5 முறையும் (2004,2005,2006,2007,2008) அவுஸ்ரேலிய பகிரங்க  பட்டத்தை 4 முறையும் (2004,2006,2007,2010) பிரெஞ் பகிரங்க பட்டத்தை ஒரு முறையும் (2009) கைப்பற்றியுள்ளார்.இதுவரை  டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் (17) பட்டம் பெற்ற சாதனை வீரராகவும்  பெடரர் உள்ளார்.

பெடரர் கடைசியாக 2010ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க பட்டத்தை பெற்றிருந்தார்.

முரே இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதுமில்லை.4 முறையும்  இறுதிப் போட்டியில் தோற்றுள்ளார்.

  இந்த வெற்றியின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.

 பெண்கள்ஒற்றையர் பிரிவு

  பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும்,போலந்தின் அக்னீஸ்கா ராத்வன்ஸ்காவும் மோதினர்

 முதல் செட்டை 6-1 என்ற நேர் செட்டில் தனதாக்கிய செரீனா 2ஆவது செட்டிலும் ஒரு கட்டத்தில் 4-2 என்று முன்னிலை பெற்றார்  அதன் பின் செய்த தவறுகள் ராத்வன்ஸ்காவுக்கு சாதகமாக மாறியது.18 முறை செரீனா தவறுகள் செய்து ராத்வன்ஸ்காவுக்கு  புள்ளிகளை தாராளமாய்க் கொடுத்ததால்  இந்த செட்டை 5-7 என்ற கணக்கில் இழக்க நேரிட்டது.வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி செட்டை தன்வசமாக்கி,விம்பிள்டன் மகுடத்தை 5வது முறையாக சொந்தமாக்கினார். 6-1, 5-7, 6-2 என்ற நேர் செட்டில் ராத்வன்ஸ்காவை தோற்கடித்து சாம்பியனானார் செரீனா. 


 செரீனாவுக்கு இது 14ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் 6ஆவது இடத்தில் இருக்கிறார்.1990ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை தனது 33 வயதில் மார்ட்டினா நவரத்திலோவோ கைப்பற்றிய பின் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற பெருமையும் 30 வயதான செரீனாவுக்கு கிடைத்துள்ளது.

                      இருவருக்கும் வாழ்த்துக்கள்.......

Monday, June 11, 2012


      சாதனையுடன் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்... 

ஆண்கள் ஒற்றையர்:

கிராண்ட்ஸ்லாம்  போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிக் (செர்பியா) இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்) மோதினர். அபாரமாக ஆடிய நடால்,6-4,6-3,2-6,7-5 என அசத்தி பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை வென்றார்.

இதன்மூலம் 7ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையையும் நடால் பெற்றார்.6 முறை பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை வென்ற பிஜோர்ன் போர்க் என்பவரது சாதனையையும் நடால் முறியடித்தார்.மொத்தத்தில் இது அவரது 11ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.


 இதற்கு முதல் பிரெஞ்ச் பகிரங்க பட்டத்தை 6 முறை (2005,2006,2007,2008,2010,2011) நடால் வென்றுள்ளார்.
விம்பிள்டன் பட்டத்தை 2 முறை (2008,2010),அமெரிக்க பகிரங்கபட்டத்தை ஒரு முறை (2010),அவுஸ்ரேலிய பகிரங்க பட்டத்தை ஒரு முறை
(2009) வென்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர்:

 பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2ஆம் நிலை வீராங்கனை ரஷ்யாவின் மரிய ஷரபோவாவும்,24ஆம் நிலை வீராங்கனை இத்தாலியின் சாரா இரானியும் மோதினார்கள்.எதிர்பார்த்தது போலவே அனுபவம் வாய்ந்த ஷரபோவா,வழக்கமான ஸ்டைலில் ஆக்ரோஷமாக அசத்தினார்.


 
ஒன்றரை மணி நேரம் நடந்த போட்டியின்  முடிவில் ஷரபோவா 6-3,6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை பெற்று சாம்பியன் பட்டத்தை சூடினார்.2003 ஆம்ஆண்டு முதல் பிரெஞ்ச் பகிரங்க போட்டியில் விளையாடி வரும் ஷரபோவா பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும்.மொத்தத்தில் இது அவரது 4ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்.முன்னதாக விம்பிள்டன் (2004),அமெரிக்க பகிரங்க (2006),அவுஸ்ரேலிய பகிரங்க (2008) கோப்பை வென்றார். இதன்மூலம் ஷரபோவா,4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் பத்தாவது இடம் பிடித்தார்.


இந்த வெற்றியின் மூலம் ஷரபோவா,2008ஆம் ஆண்டு ஜூனுக்கு பிறகு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Saturday, March 10, 2012

கிரிக்கட்டில் தனிரகம்....

கிரிக்கெட்டில் தனி ரகம்

கிரிக்கெட்டுலகில் அநேகரின் மனங்களில் இடம் பிடித்த வீரர்களில் ஒருவர் குமார் சங்ககார.

கிரிக்கெட் வீரர்களில் இவர் தனி ரகம்.ஒரு வீரராக மட்டுமன்றி ஒரு மனிதாபிமானம் மிக்கவராகவும் விளங்குகிறார்.போட்டிகளில் தான் ஆட்டமிழந்ததை தனக்குள் உணர்ந்து கொண்டால் நடுவரின் முடிவை எதிர்பாராது தானாகவே ஆடுகளம் விட்டு அகல்வது இவரின் தனிச் சிறப்பு.இது ஆட்டமிழந்தும் ஆடுகளம் விட்டகலாத ஏனைய வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரராய் அறிமுகமாகி பின் விக்கெட் காப்பாளராயும் செயற்பட்டு குறுகிய காலத்தில் அணித் தலைவராகவும் மாறினார்.2009-2011வரை அணித் தலைவராக செயற்பட்டார்.இக் காலப் பகுதியில் இலங்கை அணி பல வெற்றிகளை பெற்று வந்தது.பல அழுத்தங்களுக்கு மத்தியில் அணியை சிறப்பாக வழிநடத்திய இவர்,2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகளின் பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

2009 -2011வரை அணித் தலைவராக செயற்பட்ட காலத்தில் 47.45 என்ற சராசரியில் 1756 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 10000 ஓட்டங்களைக் கடந்த10 ஆவது வீரராகவும் 3ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார் குமார் சங்ககார. அதேவேளை குறைவான (315) போட்டிகளில்10000 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை வீரராகவும் பெருமை பெற்றார்.


பாகிஸ்தான் அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளின் 2000 ஆம் ஆண்டு அறிமுகமான சங்ககார முதல் போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்றார்.தனது கன்னி சதத்தைப் பெற மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது 85 போட்டிகளின் பின்னரே 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக ஷார்ஜாவில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.அந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதையும் பெற்றார்.

34 வயதான சங்ககார இதுவரை 322 போட்டிகளில் விளையாடி 13 சதங்கள்,69 அரைச் சதங்கள் உட்பட 10330 ஓட்டங்களைப் பெற்றுள்ள சங்ககார,315 பிடிகளையும் 80 ஸ்டம்பிங்களையும் மேற்கொண்டு 395 வீரர்களை ஆட்டமிழப்பு செய்துள்ளார். வாழ்த்துக்கள் சங்ககார...
உங்கள் ரன் வேட்டை தொடரட்டும்..
ஆசியக் கிண்ணத் தொடரிலும் அசத்துங்கள்............

Monday, November 7, 2011

வேகத்தின் வடிவம் லீ

வேகத்தின் வடிவம் லீ

லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு

கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில், தலைசிறந்த வீரர்களிலொருவராக அனைவராலும் போற்றப்பபடுபவர் பிரட் லீ.சர்ச்சைகளில் சிக்காமல் வேகத்தால் சாதித்து அவுஸ்ரேலிய அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர்.அவுஸ்ரேலிய அணியில் கடந்த 12 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் பிரட் லீ, பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவர் என்றே சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக காலம் விளையாடவும்,உடல் நலனைக் கருத்திற் கொண்டும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 2008 இல் ஓய்வு பெற்றார் அவுஸ்ரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ.கடைசியாக கடந்த 2008 இல்,மெல்ர்பேனில் நடந்த தென்னாபிரிக்காவுக்கெதிரான போட்டியே இவரின் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

1999 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியாவுக்கெதிராக அறிமுக வீரராகக் களமிறங்கிய பிரட் லீ, மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில், முதல் டெஸ்டிலே முதல் இனிங்சில் 47 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் போட்டியிலே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார். இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஆடுகளத்திலிருந்து விரைவாக வெளியேற்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டார்


டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்ரேலிய வீரர்கள் வரிசையில்,ஷேன் வோர்ன் (708), க்ளென் மெக்ராத் (563),டெனிஸ் லில்லி (355) ஆகியோரைத் தொடர்ந்து நான்காமிடத்திலுள்ளார்.
அதிவேகமாக (160.8 கி.மீ./மணி) பந்துவீசிய முதல் அவுஸ்ரேலிய வீரர், இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.

டிசம்பர் 2008 இல் தென்னாபிரிக்காவுடனான தொடரில் காலில் காயம் ஏற்பட்ட பிரட் லீ அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.மீண்டும் ஆஷஸ் தொடருக்கு முன் கடும் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளூர் அணிக்கெதிரான போட்டியில் 158 கி.மீ வேகத்தில் பந்து வீசி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரட் லீ, மீண்டும் காயமடைந்தார். இதனால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பையிழந்தார்.அதன் பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பல தொடர்களில் பங்குபற்ற முடியாமல் போனது.


அவுஸ்ரேலிய அணிக்கு, நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை மிகப் பெரும் கௌரவமாக கருதும் பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட்போட்டிகளில் 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள்.ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, ஒரு தடவையேனும் ஒரு போட்டியில்கூட 10 விக்கெட்டுகளை கைப்பற்றவில்லையென்பதும் ஆச்சரியமே.பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 1451 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில்,தென்னாபிரிக்க அணிக்கெதிராக 14 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 18 போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 12 போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 8 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான்,பங்களாதேஷ், சிம்பாப்வேஅணிகளுக்கெதிராக பிரட் லீயால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

அவுஸ்ரேலிய மண்ணில் 41 போட்டிகளில் 186 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 35 போட்டிகளில் 124 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
லீ விளையாடியுள்ள போட்டிகளின் அடிப்படையில் 20 இனிங்சில் விக்கெட் எதனையும் கைப்பற்ற முடியவில்லை.அத்துடன் 2 தடவைகள் டெஸ்ட் போட்டியின் 2 இனிங்சிலும் விக்கெட் எதனையும் வீழ்த்தவும் முடியவில்லை.2002 இல் பாகிஸ்தான் அணிக்கெதிராக ஷார்ஜா மைதானத்திலும் 2008 இல் தென்னாபிரிக்க அணிக்கெதிராக மெல்பேர்ன் மைதானத்திலும் ஒரு விக்கெட்டைக் கூடக் கைப்பற்ற முடியவில்லை.இது லீயின் கிரிக்கெட் வாழ்வில் கொஞ்சம் கசப்பானதாகவே இருந்திருக்கும்.

26 டிசம்பர் 1999 இல் ஆரம்பித்த டெஸ்ட் வாழ்வு அதே திகதி அதே மாதத்தில் (26 டிசம்பர்) 2009 அதே மைதானத்தில் (மெல்பேர்ன்) நிறைவுக்கு வந்திருக்கிறது.என்ன ஒரு அதிசயம்.


205 ஒருநாள்போட்டிகளில் 357 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள லீயின், சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள். 5 விக்கெட்டுகளை 9 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, துடுப்பாட்டத்தில் 2 அரைச் சதங்கள் அடங்கலாக 957 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிரட் லீ, கிரிக்கெட் வீரனாக மட்டுமன்றி ஒரு இசைக்கலைஞனாகவும் பரிணமிக்கிறார். கிரிக்கெட் மீது எவ்வளவு பற்று வைதுள்ளாரோ அதேபோல் கிட்டார் மீது காதல் கொண்ட இசை ரசிகன் லீ.

வேகத்தின் நாயகனின் விக்கெட் வேட்டை இன்னும் தொடரும்.....

வாழ்த்துக்கள் லீ ...............

Tuesday, September 20, 2011

இந்திய அணியின் சுவர் ட்ராவிட்


இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படுபம் ராகுல் ட்ராவிட் கடந்த 1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி,கடந்த 16 திகதி இங்கிலாந்துடனான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.
ஆரம்ப காலங்களில் ட்ராவிட்டின் ஆட்டம் ரசிகர்களை வெறுப்படைய வைத்தது.அதிரடி என்பதையே அவரிடம் பார்க்க முடியவில்லை. 3,4,3,11,13 இவை தான் முதல் 5 ஒரு நாள் போட்டிகளில் அவர் எடுத்த ஓட்டங்கள்.

1998 ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 21 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மட்டுமே பெற்றார்.மந்தமான துடுப்பாட்ட வீரரென்ற கூறப்பட்டு அணியிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டார்.ஆனாலும் ட்ராவிட் மனம் தளராமல் தனது துடுப்பாட்டத் திறன் மேம்பட போராடினார்.உலகிற்கு சிறந்த நேர்த்தியான துடுப்பாட்ட வீரரென்பதை நிரூபித்தார்.


1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கிரிக்கெட் வாழ்க்கையில் 210 போட்டிகளில் பங்கேற்று 10 சதங்கள்,53அரைச்சதங்கள் அடங்கலாக 7134 ஓட்டங்களைக் குவித்தார்.1999 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளில் 461 ஓட்டங்களை குவித்தார்.துடுப்பாட்டத் திறன் மேம்பட அவருக்கு அணித் தலைமைப் பொறுப்பு தேடி வந்தது.79 ஒரு நாள் போட்டிகளில் தலைவராக பணியாற்றியுள்ளார். இதில் இந்திய அணி 42 வெற்றிகளையும் 33 தோல்விகளையும் பெற்றது.4 போட்டிகளில் முடிவுகளில்லை.

இதுவரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் 83 அரைச்சதங்கள் அடங்கலாக 10,889 ஓட்டங்களைப் பெற்றுளார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் ஏழாமிடத்திலுள்ள ட்ராவிட், பத்தாயிரம் ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் எட்டாமிடத்திலுள்ளார்


முதன்முதலில் முகமட் அசாருதினின் தலைமையின் கீழ் விளையாடிய இவர்,அதன்பின் அஜய் ஜடேஜா,சச்சின்,கங்குலி,டோனி ஆகியோரின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளார்.2005 இல் ஐ.சி.சி உலக அணியில் மூன்று போட்டிகளில் தென்னாபிரிக்க வீரர் பொலக்கின் கீழ் விளையாடியுள்ளார் ட்ராவிட்.

ஆறு அணிகளுக்கு எதிராக தலா ஆயிரம் ஓட்டங்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் (58 போட்டிகள் 1899 ஓட்டங்கள்).இலங்கை (46 போட்டிகள் 1662 ஓட்டங்ககள்),மேற்கிந்தியத் தீவுகள் (40 போட்டிகள் 1348 ஓட்டங்கள்),தென்னாபிரிக்கா (36 போட்டிகள் 1309 ஓட்டங்கள்),நியூசிலாந்து (31 போட்டிகள் 1032 ஓட்டங்கள்) இங்கிலாந்துக்கு (30 போட்டிகள் 1082 ஓட்டங்கள்)

இதுவரை 73 போட்டிகளில் விக்கெட் காப்பாளராக செயற்பட்டு 71 பிடிகளைப் பிடித்துள்ள அதேவேளை,14 ஸ்டம்பிங் உட்பட 84 ஆட்டமிழப்புக்களை மேற்கொன்டுள்ளார்.

ட்ராவிட்,இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராக மட்டுமன்றி சிறந்த களத்தடுப்பாளராகவும் சாதித்ததுள்ளார்.இதுவரை 196 பிடிகளைப் பிடித்துள்ளார்.இதில் விக்கெட் காப்பாளராக 71 பிடிகளையும் களத்தடுப்பாளராக 125 பிடிகளையும் பிடித்துள்ளார்.

துடுப்பாட்டம்,களத்தடுப்பில் அசத்திய ட்ராவிட் சுழல் பந்துவீச்சிலும் நான்கு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.1999ஆம் ஆண்டு,ஜெய்ப்பூரில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் தனது முதலாவது விக்கெட்டை பதிவு செய்தார்.அதன்பின்,தென்னாபிரிக்காவுக்கு எதிராக (2000), மூன்று விக்கெட்டைக் கைப்பற்றினார்.கொச்சியில் நடந்த போட்டியில் 43 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.இதுவே அவரது சிறந்த பந்துவீசுப் பெறுதி.


1999 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிராக ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் ட்ராவிட் (153) சச்சின் (186) சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்காக 331 ஓட்டங்களை சேர்த்தனர்.இதன்மூலம் ஒருநாள் அரங்கில்,எந்த ஒரு விக்கெட்டுக்குமான அதிக ஓட்டங்களை சேர்த்த ஜோடி வரிசையில் சச்சின்-ட்ராவிட் ஜோடி முன்னிலை வகிக்கிறது.

1999 ஆம் ஆண்டு இலங்கைக்கெதிராக நடந்த உலக கிண்ண லீக் போட்டியில்,கங்குலியுடன் (183) சேர்ந்து 2ஆவது விக்கெட்டுக்காக 318 ஓட்டங்களை சேர்த்தார் ட்ராவிட் (145).

1997இல் சென்னையில் நடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கெதிராக தனது முதல் சதத்தைப் பதிவு செய்த ட்ராவிட்,கடைசியாக 2006 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக கிங்ஸ்டனில் நடந்த போட்டியில் சதமடித்தார்.இதுவரை 12 சதங்களைப் பெற்றுள்ள ட்ராவிட் 1999 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கெதிராக ஹைதராபாத்தில் 153 ஓட்டங்களைப் பெற்று தனது அதிகபட்ச ஓட்டங்களாகப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 2003இல், நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் 22 பந்தில் அரைச்சதம் அடித்த ட்ராவிட்,அதிவேக அரைச்சதமடித்த இந்திய வீரர்கள் வரிசையில், இரண்டாவது இடத்தை கபில்தேவ், ஷேவாக் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் மூவரும் தலா 22 பந்தில் அரைச்சதம் அடித்துள்ளனர்.

இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாய் அமைந்த ட்ராவிட் ஒருநாள் போட்டிகளிலிருந்து விடை பெற்று இனி வரும் காலங்களில் டெஸ்டில் மட்டுமே பங்கேற்கவுள்ள நிலையில் ட்ராவிட்டுக்கு வாழ்த்துகள்....
 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates