ஆடுகளத்திற்கு விடை கொடுத்தார் சைமன் டாபெல்
சர்வதேச கிரிக்கெட்டுலகில் பல நடுவர்கள் உருவாகினாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடிப்பர்.அப்படிப்பட்ட நடுவர்களிலொருவர் சைமன் டாபெல்(Simon Taufel).ஆடுகளத்தில் துணிகரமாக வழங்கும் சரியான தீர்ப்புகள்,ஆடுகளத்தில் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் நடு நிலைமை வகிப்பது என்பன இவருக்கேயுரிய தனிச் சிறப்பு.இவையே கிரிக்கெட் ரசிகர்கள் இவர் மீது அதிக மதிப்பைக் கொண்டுள்ளமைக்கான காரணமெனலாம்.கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து நாட்டு வீரர்களிடத்திலும் அதிக மரியாதையைப் பெற்ற நடுவர் டாபெல் என்றும் கூறலாம்.

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவின் சைமன் டாபெல் கடந்த 7ஆம் திகதி நிறைவடைந்த T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டுலகில் நடுவர் பணிக்கு விடை கொடுத்தார்.
41 வயதான டாபெல் தனது 27ஆவது வயதில் 1999 ஆம் ஆண்டு சிட்னியில் அவுஸ்ரேலிய-இலங்கை அணிகளுக்கிடையேயான ஒருநாள் சர்வதேச தொடரில் நடுவராக அறிமுகமானார்.2000ஆம் ஆண்டு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில்(அவுஸ்ரேலிய - மேற்கிந்தியத் தீவுகள்) மெல்பேர்னில் தனது முதல் டெஸ்ட் நடுவர் பொறுப்பை ஏற்றார்.2007 ஆம் ஆண்டு கென்ய,நியூசிலாந்து அணிகளுக்கிடையே தென்னாபிரிக்காவின் டேர்பனில் நடைபெற்ற T 20 போட்டியே இவர் நடுவராக செயற்பட் முதல் T20 போட்டி.
13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் 74 டெஸ்ட்,174 ஒரு நாள் சர்வதேச போட்டிகள்,34 T20 போட்டிகளில் நடுவராக செயற்பட்டிருக்கிறார். 2004 முதல் 2008 வரை தொடர்ந்து 5 முறை சர்வதேச கிரிகெட் பேரவையின் சிறந்த நடுவருக்கான விருதை பெற்றிருக்கிறார். இது அவரது நடு நிலைமைக்குக் கிடைத்த உயரிய கௌரவம்.
2011ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் 2007 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நடந்த T20 உலகக்கிண்ண தொடர்களிலும் 2004 ஆம் ஆண்டு ஐ.சி.சி யின் சாம்பியன் கிண்ண இறுதிப் போட்டியிலும் நடுவராக செயற்பட்டுள்ளார்.
சிட்னியில் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த டாபெல் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்தார்.ஆனால் இவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.இவருக்கு ஏற்பட்ட முதுகு வலி இவரது கிரிக்கெட் கனவை தகர்த்தது.கிரிக்கெட் விளையாட்டை தொடர முடியாமல் இளம் வயதிலேயே நடுவராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.மைக்கல் ஸ்லேட்டர்,அடம் கில்கிறிஸ்ட் உட்பட்ட முன்னணி வீரர்களுடன் அவுஸ்ரேலிய பிராந்திய அணிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த நடுவர் குழுவில் (எலைட் பேனல்) இடம் பெற்றிருந்த சைமன் டாபெல் நடுவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஐ.சி.சி புதிதாக உருவாக்கியுள்ள ஐ.சி.சி நடுவர் பயிற்சிக்குழுவில் நடுவர் செயற்திறன் மற்றும் பயிற்சி முகாமையாளராக செயலாற்றவுள்ளார்.
தன் கிரிக்கெட் வாழ்கையில் சிறந்த முடிவுகளை வழங்கிய இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்.இவரைப் போன்ற சிறந்த நடுவர்களை இனி ஆடுகளங்களில் நமக்குக் காணக் கிடைப்பது அரிதாகவே இருக்கும்.
வாழ்த்துக்கூறி வழியனுப்பி வைப்போம்..
0 comments:
Post a Comment