Pages

Wednesday, November 4, 2009

என்றும் NO1


நீண்ட நாட்களின் பின் இந்தப் பதிவு. இவரைப்பற்றி பதிவிட வேண்டுமென மனம் துடித்தது.ஆனால் நேரம் கிடைப்பது குறைவு. இன்று எப்படியாயினும் இந்தப் பதிவை பதிவிடவேண்டுமேன்ற முனைப்புடன் தருகிறேன். எனக்குப்பிடித்த முதன்மையான நடுவர். இவரைப் பற்றிப் பதிவிடாமல் எப்படி இருப்பது.


சர்வதேச கிரிக்கெட்டுலகில் "ஷெப்" என்று அனைவராலும் அழைக்கப்பட்ட தலை சிறந்த கிரிக்கெட் நடுவராகக் கருதப்பட்ட இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பர்ட் நீண்ட நாட்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு,தனது 68ஆவது வயதில் அக்டோபர் 28 ஆம் திகதி காலமானார்.
இவர் நடுவர் பொறுப்பாற்றும் விதம் ஒரு தனி அழகு. இதைப் பார்க்கவே பல கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புவர்.இங்கிலாந்தின் முன்னாள் புகழ் பெற்ற நடுவர் டிக்கி பேர்டிற்கு பிறகு சிறந்த நடுவர் என்று கிரிக்கெட் ரசிகர்களாலும், பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் என பலதரப்பட்டவர்களாலும் போற்றப்பட்டவர் டேவிட் ஷெப்பர்ட்.


1940 ௦டிசம்பர் 27 ஆம் திகதி பிறந்த டேவிட் ஷெப்பர்ட், குளொஸ்டர்ஷயர் அணிக்காக முதன் முதலாக 1965 ஆம் ஆண்டு போட்டிகளில் பங்குபற்றியதன் மூலம் கிரிக்கெட்டுலகுக்குள் நுழைந்தார்.1965 முதல் 1979 வரை குளொஸ்டர்ஷயர் அணிக்காக 282 முதல்தர போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
வலது கைத் துடுப்பாட்ட வீரரான ஷெப்பர்ட்,12 சதங்கள்,55 அரைச்சதங்கள் அடங்கலாக 10672 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 95 பிடிகளைப் பிடித்துள்ள இவர் 106 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு முதல்தரப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தாலும் சர்வதேச அளவில்
1983 இல் உலகக் கிண்ணப் போட்டியின்போது நடுவராக முதல் முறையாக களம் கண்ட இவர்,6 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர்களில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். 1996 ,1999,2003ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய சிறப்புப் பெற்றவர்.


1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியே இவர் டெஸ்ட் நடுவராக கடமையாற்றிய முதலாவது சந்தர்ப்பம்.
2005 இல் பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்குகெதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக நடுவராக இருந்தார். அந்த போட்டி முடிந்த பிறகு பிரைன் லாரா, ஷெப்பர்ட்டின் சேவைகளை கௌரவிக்குமுகமாக அவருடைய துடுப்பை நினைவுச் சின்னமாகப் பரிசளித்தார்.


1983 முதல் 2005 வரை 92 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 172 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் நடுவராக ஷெப்பர்ட் செயற்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பல விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளன.


கிரிக்கெட்டில் நெல்சன் இலக்கத்தில் (111) ஒரு அணியின் ஓட்ட எண்ணிக்கை (ஸ்கோர்) ராசியில்லாததாகக் கருதப்படும். இந்தத் தருணங்களிலெல்லாம் தனது ஒரு காலை மடக்கி மறு காலில் நிற்பது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது. இதை சிறு பிள்ளை முதல் பெரியோர் வரை ரசித்தனர்.


கிரிக்கெட்டில் இவ்வளவு ஆர்வமாகவிருந்த ஷெப்பர்ட், முத்திரை சேகரிக்கும் பழக்கமுள்ளவர் என்பது பலருக்குத் தெரியாது. கிரிக்கெட் போட்டிகள் இல்லாதபோது இதுவே இவரது பொழுதுபோக்கு.


தனது வாழ் நாளில் ஒரு நடுவராக மட்டுமன்றி நட்பில் சிறந்த மனிதராகவும் விளங்கினார் ஷெப்பர்ட்.

கிரிக்கெட்டுலகம் ஒரு தலைசிறந்த நடுவரை இழந்தாலும்.இவரது சைகைகள் என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் அகங்களில் நிலைத்திருக்கும்.

0 comments:

Post a Comment

 
Free Website templatesSEO Web Design AgencyMusic Videos Onlinefreethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesFree Soccer VideosFree Wordpress ThemesFree Web Templates