Wednesday, March 13, 2013
வடக்கின் சமர்...
வடக்கின் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும்,யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இது இரு அணிகளும் மோதிக்கொள்ளும் 107ஆவது போட்டியாகும்.இலங்கையில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறும் மூன்றாவது மிகப் பழமையான மாபெரும் கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி...
இதுவரை நடைபெற்ற 106 போட்டிகளில்,சென்.ஜோன்ஸ் கல்லூரி 33 போட்டிகளிலும்,யாழ் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.38 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவடைந்துள்ளன.1 போட்டி மழையினால் கைவிடப்பட்ட அதேவேளை,7போட்டிகள் முடிவுகளின்றியும் நிறைவடைந்துள்ளன.
இம்முறை யாழ் மத்திய கல்லூரிக்கு பூபாலசிங்கம் டார்வினும்,சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கு ஜெயக்குமார் அமிடஜனும் தலைமை வகிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி...
இம்முறை பருவகாலத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 14 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன்,3 போட்டிகள் வெற்றி தோல்வியற்ற நிலையிலும் 2 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளை வெற்றி தோல்வியற்ற நிலையிலும் முடித்துள்ளது.
வழமைபோல் இம்முறையும் இரண்டு அணிகளின் பழைய மாணவர்கள் ஆதரவாளர்கள் அதிகம் பேர் போட்டிகளைக் காணவருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு அணி வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்...
Tuesday, March 12, 2013
இரட்டைச் சதமடித்த வங்கப்புலி..
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷ் அணி சார்பாக முதல் இரட்டைச் சதமடித்த வீரராக வரலாற்று சாதனை படைத்தார் முஷ்பிகுர் ரஹீம்.இலங்கையுடன் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலே இந்த அரிய சாதனையை அவர் நிலை நாட்டினார்.
2005 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹீம் தனது பதினேழாவது போட்டியில் முதல் சதத்தை 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சிட்டஹொங்கில் பெற்றார்.இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் 31.91 என்ற சராசரியில் 1787 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.இதில் 9 அரைச் சதங்களும் அடங்கும்.
மிக இள வயதில் அணியின் உப தலைவரான முஷ்பிகுர் ரஹீம் 23 வயதில் அணித் தலைவரானார்.பின் வரிசையில் களமிறங்கும் இவர் தோற்றத்தில் உயரம் குறைந்தவராய் இருந்தாலும் விக்கெட்டுகளுக்கிடையே ஓட்டங்களை வேகமாய்ப் பெறக்கூடியவர்.அணியின் விக்கெட் காப்பாளராகவும் சிறப்பாக செயற்படுகிறார்.
இலங்கை அணிக்கெதிராக 13 போட்டிகளில் பகுபற்றியுள்ள பங்களாதேஷ் முஷ்பிகுர் ரஹீம் தலைமையில் முதன் முறையாய் தோல்வியைத் தவிர்த்து வெற்றி தோல்வியற்ற முடிவைப் பெற்றுள்ளது.இதற்கு ரஹீமின் அபாரமான துடுப்பாட்டமே காரணம்.
இள வயதில் பல போட்டிகளில் சாதித்த இவர் இன்னும் அதிகம் சாதிக்க வாழ்த்துகிறோம்.



Wednesday, March 6, 2013
இந்திய அணியின் NO:1 தலைவர் டோனி
இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் அணித் தலைவர் என்ற பெருமை சௌரவ் கங்குலி வசமே இருந்தது.தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்று டோனி அவரது சாதனையை முறியடித்துள்ளார்.முன்னாள் தலைவரான சௌரவ் கங்குலி 49 டெஸ்ட் போட்டிகளில் 21 வெற்றிகளைப் பெற்றிருந்தார்.டோனி 45 டெஸ்ட் போட்டிகளில் 22 வெற்றிகளைப்பெற்று கங்குலியின் சாதனையைக் கடந்தார்.
T20 உலகக் கிண்ணம்,2011 உலகக் கிண்ணம்,ஐ.பி.எல் சம்பியன் பட்டம்,சம்பியன்ஸ் லீக் சம்பியன் பட்டம் என பல தொடர்களில் தனது தலைமையில் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ள டோனி.சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணியை முதலிடத்துக்கு கொண்டு வந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டோனியை நீக்க வேண்டும்.அணித் தலைமையை மாற்ற வேண்டுமென பலத்த விமர்சனங்கள் எழுந்த நேரத்தில் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதலிரு போட்டிகளிலும் அணியை வெற்றி பெற வைத்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.அது மட்டுமன்றி துடுப்பாட்ட வீரராக தனது நிலையை உணர்ந்து முதல் போட்டியில் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.இந்த இரட்டைச் சதம் பல சாதனைகளுடன் கூடிய இரட்டைச் சதம்:
*டெஸ்ட் போட்டியில் அதிக(224)ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணித் தலைவர்.
*டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த விக்கெட் காப்பாளர் வரிசையில் மூன்றாமிடம்.முதலிரண்டு இடங்களில் சிம்பாப்வேயின் அண்டி பிளவர்(224)இலங்கையின் சங்ககரா(230)
*அவுஸ்ரேலியாவுக்கெதிராக அதிக ஓட்டங்களைப் பெற்ற விக்கெட் காப்பாளர் வரிசையில் முதலிடம்.
டோனியின் இந்த இரட்டைச் சத சாதனையும்,அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற சிறந்த தலைவர் என்ற பெருமையும் இந்திய கிரிக்கெட்டிற்கு தற்போது சிறப்பென்றே சொல்லலாம்.
டோனியின் பக்கம் வீசும் அதிஷ்டக் காற்று இன்னும் சில வருடங்கள் தொடரும் போலே உள்ளது.வாழ்த்துக்கள் டோனி....


Friday, February 8, 2013
சச்சின்,81
கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சச்சின் முதல் தரப் போட்டிகளிலும் தனது சாதனைகளைத் தொடர்கிறார்.
சச்சின்,முதல் தர போட்டிகளில் 81ஆவது சதம் அடித்து,முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.சர்வதேச அளவில் முதல்தர போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜாக் ஹோப்ஸ் (834 போட்டி - 199 சதம்) முதலிடத்தில் உள்ளார்.
303 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையைப் படைத்துள்ள சச்சின் 25000 ஓட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.1988 ஆம் ஆண்டு மும்பை, வான்கடே மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிரான முதல் தர போட்டியில்,முதன்முதலில் சதம் அடித்த சச்சின், இப்போது அதே மைதானத்தில் 81ஆவது சதத்தை அடித்துள்ளமை சிறப்பென்றே சொல்லலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (51)ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் (49)என சர்வதேச போட்டிகளில் மொத்தம் நூறு சதங்களைப் பெற்ற வீரராகத் திகழும் சச்சின் இன்னும் சாதிப்பார்.சச்சினின் சாதனைகளை இனி வரும் காலங்களில் முறியடிப்பது கடினமே.