லீயின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு
கிரிக்கெட்டுலகம் உருவாக்கிய வேகப்பந்துவீச்சாளர்களில், தலைசிறந்த வீரர்களிலொருவராக அனைவராலும் போற்றப்பபடுபவர் பிரட் லீ.சர்ச்சைகளில் சிக்காமல் வேகத்தால் சாதித்து அவுஸ்ரேலிய அணிக்குப் பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த சாதனை வீரர்.அவுஸ்ரேலிய அணியில் கடந்த 12 வருடங்களாக இடம்பிடித்திருக்கும் பிரட் லீ, பல துடுப்பாட்ட வீரர்களை நிலை குலைய வைத்தவர் என்றே சொல்லலாம்.

1999 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியாவுக்கெதிராக அறிமுக வீரராகக் களமிறங்கிய பிரட் லீ, மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில், முதல் டெஸ்டிலே முதல் இனிங்சில் 47 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் போட்டியிலே 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முத்திரை பதித்தார். இந்தியத் துடுப்பாட்ட வீரர்களை ஆடுகளத்திலிருந்து விரைவாக வெளியேற்றி, சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தன்னை கிரிக்கெட்டுலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டார்
டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்ரேலிய வீரர்கள் வரிசையில்,ஷேன் வோர்ன் (708), க்ளென் மெக்ராத் (563),டெனிஸ் லில்லி (355) ஆகியோரைத் தொடர்ந்து நான்காமிடத்திலுள்ளார்.
அதிவேகமாக (160.8 கி.மீ./மணி) பந்துவீசிய முதல் அவுஸ்ரேலிய வீரர், இரண்டாவது சர்வதேச வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.

அவுஸ்ரேலிய அணிக்கு, நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடியதை மிகப் பெரும் கௌரவமாக கருதும் பிரட் லீ, இதுவரை 76 டெஸ்ட்போட்டிகளில் 310 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள்.ஒரு இனிங்சில் 5 விக்கெட்டுகளை 10 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, ஒரு தடவையேனும் ஒரு போட்டியில்கூட 10 விக்கெட்டுகளை கைப்பற்றவில்லையென்பதும் ஆச்சரியமே.பந்துவீச்சு மட்டுமன்றி தன்னால் இயன்றளவு துடுப்பாட்டத்தில் 5 அரைச் சதங்கள் அடங்கலாக 1451 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில்,தென்னாபிரிக்க அணிக்கெதிராக 14 போட்டிகளில் 50 விக்கெட்டுகளையும் பங்களாதேஷ் அணிக்கெதிராக 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணிக்கெதிராக 18 போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்கெதிராக 12 போட்டிகளில் 53 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணிக்கெதிராக 8 போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் இலங்கை அணிக்கெதிராக 2 போட்டிகளில் 16 விக்கெட்டுகளையும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக 12 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் சிம்பாப்வே அணிக்கெதிராக 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தான்,பங்களாதேஷ், சிம்பாப்வேஅணிகளுக்கெதிராக பிரட் லீயால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
அவுஸ்ரேலிய மண்ணில் 41 போட்டிகளில் 186 விக்கெட்டுகளையும் வெளிநாட்டு மண்ணில் 35 போட்டிகளில் 124 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

26 டிசம்பர் 1999 இல் ஆரம்பித்த டெஸ்ட் வாழ்வு அதே திகதி அதே மாதத்தில் (26 டிசம்பர்) 2009 அதே மைதானத்தில் (மெல்பேர்ன்) நிறைவுக்கு வந்திருக்கிறது.என்ன ஒரு அதிசயம்.
205 ஒருநாள்போட்டிகளில் 357 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள லீயின், சிறந்த பந்துவீச்சுப் பெறுதி 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள். 5 விக்கெட்டுகளை 9 தடவைகள் கைப்பற்றியுள்ள லீ, துடுப்பாட்டத்தில் 2 அரைச் சதங்கள் அடங்கலாக 957 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

வேகத்தின் நாயகனின் விக்கெட் வேட்டை இன்னும் தொடரும்.....
வாழ்த்துக்கள் லீ ...............